வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 3 ஏப்ரல், 2017

ஒரு ஆசிரியரியரின் திருப்புமுனை!


133 கௌரவ டாக்டர் பட்டங்களுக்குப் பெருமை சேர்த்தவர்!
ஒரு நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் இருக்கிறது என்று நம்பியவர்!
அவர் மாணவராக இருந்தபோது, அவரிடம் ஆசிரியர்
 “நீ புத்திசாலியாக விரும்புகிறாயா?
அறிவாளியாக விரும்புகிறாயா?” என்று கேட்டபோது,
அந்த மாணவர், அறிவாளிகள் மத்தியில் புத்திசாலியாகவும்,
புத்திசாலிகள் மத்தியில் அறிவாளியாகவும் விருப்பப்படுகிறேன்
என்று சொன்னார். அவர் யார் என்று தெரியுமா?
இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர்!
இரண்டாவது குடியரசுத் தலைவர்! சிறந்த தத்துவஞானி!
பேராசிரியர்! துணை வேந்தர்! இந்திய அரசின் தூதர்! என, 
ஆசிரியராகப் பணியைத் தொடங்கி பல உயரிய பதவிகளுக்குப் புகழ்சேர்த்தவர். அவர்தான் பாரதரத்னா, சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள். அவரது பிறந்தநாளே ஆசிரியர்தினமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
     சிறுவயதிலிருந்தே விளையாட்டை விட நூல்வாசிப்பை விரும்பியவர். அவரது இளமைக் காலம் வறுமை நிறைந்ததாக இருந்தது. அவரின் சிறிய தந்தையின் மகன் பி.ஏ தத்துவம்  படித்து முடித்திருந்தார். அவரது பழைய புத்தகங்கள் தனக்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால்தான் இராதாகிருஷ்ணன் அவர்கள் பி.ஏ தத்துவப் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர். இவர் தத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தது இவர் வாழ்வின் திருப்புமுனை என்றால், விவேகானந்தரின் சிந்தனைகள் இவர் மனதில் ஆழமாக விழுந்தது அதற்கான அடிப்படை எனலாம். விவேகானந்தர் பற்றி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறும்போது,
“என்னுடைய இந்துமதப் பற்றையும், பண்பாட்டையும், மரியாதையையும் என்னோடு பழகிய பல கிறித்தவ மத போதகர்கள் அடிக்கடி சீர்குலைக்கப் பார்த்தார்கள். அவ்வேளைகளிலெல்லாம் நான் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும் கருத்துக்களையும் நினைத்துப் பார்ப்பேன்” என உரைக்கிறார்.

ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும் என உரைக்கிறார்.


செங்கல்லையும் , சுண்ணாம்பையும் கொண்டோ, சுத்தியலையும் , உளியையும் கொண்டோ தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கமுடியாது. அவை மனிதர்களின் உள்ளத்தில் ஓசைபடாமல் வளரவேண்டும். கல்வி மூலமாகத்தான் இது முடியும் என திடமாக நம்பிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்வின் வழி ஆசிரியப் பணியின் பெருமையையும், கடமையையும், அதன் வலிமையையும் நாம் உணரவேண்டும்

2 கருத்துகள்:

  1. ஆசிரியர் என்ற சொல்லுக்கு முன்பு இருந்த மரியாதையும், மதிப்பும் இப்பொழுது இருக்கிறதா என்பது சிந்திக்கத்தக்கதே.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு