புதன், 9 செப்டம்பர், 2009

தூங்காத விழிகள் ரெண்டு




துக்கத்தில் கூட வாழ்ந்துவிடலாம் தூக்கமின்றி வாழமுடியாது.
நிறைவேறாத ஆசைகளை கனவாக நிறைவு செய்கிறது தூக்கம்.
• தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் மீதி இது தான் வாழ்க்கை.
• தூக்கம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கசக்தி.


“உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“ – குறள் 339
என்பர் வள்ளுவர்.
ஒவ்வொரு உறக்கமும் ஒரு இறப்பு
ஒவ்வொரு விழிப்பும் ஒரு பிறப்பு என்பதே இதன் பொருள்.

இப்படி தூக்கம் மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குகிறது.
“மெத்தைய வாங்கினேன்
தூக்கத்தை வாங்கல“
என்று புலம்புவோர் பலரையும் இன்று காணமுடிகிறது. பணத்துக்காக இரவுப்பணி செய்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள். பணம் வந்தபின்பு உறக்கமின்றித் தவிப்பதைப் பார்க்க முடிகிறது.
கும்பகர்ணனைப் பற்றிச் சொல்லும்போது,
தவம் செய்து “ நித்யத்தவம்“ வாங்கச் சென்றவன், நாரதரின் செயலால் “ நித்ரத்தவம்“ வாங்கி வந்தான். அதனால் தொடர்ந்து ஆறுமாதம் தூங்கினான் என்பார்கள்.

நன்றாகத் தூங்குபவர்களை, இவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று பார்ப்போர் சொல்வதுண்டு.
தூக்கம் வருதல் வரம் என்று சொல்லப்படும் அதே சூழலில்,
தூக்கமின்மை சாபம் என்றும் சொல்லப்படுகிறது.

“தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது


அக்கினி நட்சத்திரம் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை யாவரும் கேட்டிருப்பீர்கள்..

சங்கப் பாடல்களின் தாக்கம் பல திரைப்படப்பாடல்களிலும் காணமுடிகிறது. இத்திரைப்படப் பாடலில்,
இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,
மலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.

இதே உணர்வினை எடுத்தியம்பும் சங்கப் பாடல்கள் பல,
சான்றாக, குறுந்தொகையில் உறக்கம் வராத தலைவி ஒருத்தியின் புலம்பல்.

சான்று-1

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
28. பாலை - தலைவி கூற்று
-

ஔவையார்.
(வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.)
எல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள் இந்த தலைவிக்கு மட்டும் தலைவனின் நினைவால் உறக்கம் வரவி்ல்லை. இச்சூழலில் நன்றாகத் தூங்குபவர்களைப் பார்க்கிறாள் தலைவி “ தான் மட்டும் தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்க இவர்கள் எல்லாம் எந்தக் கவலையும் இன்றித் தூங்குகிறார்களே. இவர்களுக்கு என் நிலையை எப்படித் தெரிவிப்பேன்.
மூட்டுவேனா?
தாக்குவேனா?
ஆஅ ஒல்லெனக் கூவுவேனா?
என்கிறாள்.
தலைவியின் மனநிலையைப் புலவர் எவ்வளவு அழகாகப் புலப்படுத்தியிருக்கிறார்..
நமக்குத் தூக்கம் வராத சூழலில் யாராவது நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தால் நமக்கு என்ன தோன்றும்.
சிலர்...
உறங்குபவர்களைப் பார்த்து “ இவர்கள் கொடுத்துவைத்தவர்கள்”
என்று பெருமூச்சு விடுவார்கள்.
சிலர்....
உறங்குவோரின் உறக்கத்தை கலைக்க வேண்டுமே...
ஓங்கி மிதிக்கலாமா....?
ஆஆஆஆஓஓஒஒ என்று ஏதாவது கத்தி எழுப்பலாமா..?
என்றெல்லாம் தோன்றும்.
இன்றும் நமக்குத் தோன்றும் இந்த உணர்வை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் புலவர்.

சான்று-2


• ‘நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக’
கோபுர வாசலிலே என்னும் திரைப்படப் பாடலில் இடம்பெறுகிறது இப்பாடல்.
இதே உணர்வைப் பிரதிபலிக்கும் சங்கப் பாடல்...
இதோ....

கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.

30. பாலை - தலைவி கூற்று
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி ஏன் என்று வினவுகிறாள். அதற்குத் தலைவி “ யான் ஆற்றியிருப்பினும் தலைவன் கனவில் வந்து தொல்லை செய்கிறான் என்று கூறுகிறாள்)
நள்ளிரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன் ஒரு கனவு!
அதில் என் தலைவன்!
நடந்தது உண்மை என்றே எண்ணினேன்....
பொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவனான என் தலைவன் என்னிடம் இன்பம் நுகருவதற்காக இராக்காலத்தில் வந்து என்னைக் கட்டித்தழுவினான். அது கனவு என்பதை அறியாத நான் எழுந்து என் அருகே அவன் இருக்கிறானா..?
என்று தடவிப்பார்த்தேன்..
வண்டுகளால் உழக்கப்பட்ட குவளை மலர் போல நிலை குலைந்த நான் தனித்து வருந்தி நின்றேன்.. உறுதியாக நான் இரங்கத்தக்கவள் தான். என்று தோழியிடம் புலம்புகிறாள் ஒரு தலைவி.

சான்று-3

• இன்னொரு தலைவி..
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. “
6.
நெய்தல் - தலைவி கூற்று
-பதுமனார்.

தலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி
நள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். தன்னை எந்நேரமும் வைதுகொண்டிருக்கும் தாயரும் தூங்கினர். அவர்கள் தன்னைத் திட்டுவதால் மாக்கள் என்றாள்(விலங்கு) வசை மொழி கூறாது உறங்குவதால் இனிது அடங்கினர் என்றாள்.ஓர்யான் மன்றத் துஞ்சாதோளே என்றதால் தன் உயிர்த்தோழியும் தூங்கிவிட்டாள் என்பது புலனாயது. நனந்தலை உலகமும் துஞ்சும் என்றதால் உலகில் உள்ள யாவரும் இனிது உறங்கினர் என்று அறியமுடிகிறது.
இவ்வாறு பகை, நட்பு, நொதுமல் என்று யாவரும் உறங்கத் தான் மட்டும் உறங்காமல்த்தவிக்கிறேனே! என்ற ஏக்கம் இந்தப் பாடலில் தெரிகிறது.

இவ்வாறு இன்றைய திரைப்படப்பாடல்கள் பலவற்றிலும் சங்கப் பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது.

14 கருத்துகள்:

  1. உறக்கத்துக்குள் இவ்வளவு இருக்கா குணா

    //இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,
    மலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.//

    எங்க நமக்குத்தான் தூக்கம் கெட்டுப்போகுது...

    பதிலளிநீக்கு
  2. எனக்கு இன்சோமேனியா இருக்கு!

    அதை பத்தி சங்ககால பாடல்களில் எதாவது சொல்லியிருக்காங்களா?

    பதிலளிநீக்கு
  3. /உறக்கத்துக்குள் இவ்வளவு இருக்கா குணா

    //இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,
    மலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.//

    எங்க நமக்குத்தான் தூக்கம் கெட்டுப்போகுது.../

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு இன்சோமேனியா இருக்கு!

    அதை பத்தி சங்ககால பாடல்களில் எதாவது சொல்லியிருக்காங்களா?(வால்பையன்)

    நண்பரே
    இன்சோமேனியா
    பற்றி நான் இணையத்தில் கண்ட செய்தி..


    இன்சோமேனியா நோயாளிகளும் எளிய உடற்பயிற்சிகளும்!
    - எஸ்.சரவணன்

    இன்சோமேனியா நோயாளிகள் எளிய உடற்பயிற்சியை மேற்கொண்டாலே, தங்களது தூக்கப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்கிறது, மருத்துவ ஆய்வு.

    'தூக்கம் 2008' என்ற தலைப்பில் மருத்துவ ஆய்வு முடிவுகள், வெஸ்ட்செஸ்டரில் கடந்த புதன்கிழமையன்று (ஜூன் 11,2008) அசோசியேட்டட் புரோஃபஷனல் ஸ்லீப் சொசைட்டிஸ்சின் 22-வது ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

    அதன்படி, தூங்கப்போவதற்கு முன்பாக எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நல்ல தூக்கம் வரும் என்பது தெரியவந்துள்ளது.

    இரவில் தாமதமாக படுக்கைக்குச் சென்று, உரிய கால அளவில் தூங்காமல் மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்துவிடும் 'இன்சோமேனியா' என்றழைக்கப்படும் தூக்கச் சிதைவு நோய்க்கு, மருந்துகள் ஏதும் எடுத்துக்கொள்ள தேவையில்லை. மாறாக, எளிய உடற்பயிற்சிகளே போதுமானது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    உலக அளவில் நடுத்தர வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 30 சதவிகித மக்கள், 'இன்சோமேனியா'வால் அவதியுற்று வருகின்றனர்.

    இத்தகையோர், மருத்துவர்களின் ஆலோசனையுடன் தினமும் இரவில் எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது உகந்தது என மருத்துவ ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

    நிம்மதியான தூக்கத்துக்கு, அமெரிக்கன் அகாடெமி ஆஃப் ஸ்லீப் மெடிசினின் சில வழிமுறைகள்:

    * படுக்கை நேரமானது அமைதியானதாக இருக்க வேண்டும்.
    * ஒவ்வொரு இரவும் முழுமையாக தூங்க முயற்சிக்க வேண்டும்.
    * காஃபின் (காபியில் உள்ள வேதிப் பொருள்) உள்ள உணவுப் பொருட்களையும் பானங்களையும் இரவில் தவிர்க்க வேண்டும்.
    * கவலைகள் இருப்பின், அதைப் பற்றி படுக்கையறையில் யோசித்தல் கூடாது.
    * பசியுடனோ அல்லது வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டோ படுக்கைக்குச் செல்லக் கூடாது; மாறாக, மிதமான உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.
    * படுக்கையறையை வெள்ளிச்சமற்றதாகவும், சிறுது குளுமை நிறைந்ததாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
    * காலையில் குறித்த நேரத்தில் எழும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.

    (மூலம் - வெப்துனியா)

    தூக்கச் சிதைவு பற்றி சங்க இலக்கியத்தில் நிறைய குறிப்புகள் உள்ளன..
    இனி தங்களின் கேள்வி குறித்த நோக்கிலும் அப்பாடல்களைக் காண விழைகிறேன்..
    நன்றி!

    பதிலளிநீக்கு
  5. தூக்கம் பற்றி ஒரு சிறு ஆராய்ச்சியே மேற்கொண்டது போல இருக்கு குணா...பல பாடல்களை குறிப்பிட்டு தக்க விளக்கத்தையும் அதிலும் சங்ககால காதலில் தூக்கத்தின் நிலைப்பாட்டை சொல்லியிருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  6. நீங்க சொல்றதைப் பார்த்தா...
    சங்க கால பாடல்களைப் படித்தால் பாடலாசிரியராக மாறிவிடலாம் போலிருக்கு... ம்... அப்படித்தான் பொழப்பு ஓடுது போலிருக்கு...

    நல்ல விளக்கங்கள் குணா...

    பதிலளிநீக்கு
  7. நன்றி அன்பு!
    சங்கப் பாடல்களின் தாக்கமின்றி இன்றைய திரைப்படப்பாடலாசிரியர்களால் இயங்கமுடியாது நண்பரே..

    பதிலளிநீக்கு
  8. நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
    தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
    நனந்தலை உலகமும் துஞ்சும்
    ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

    பதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கான் உறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை
    நான் உறங்கவில்லை.

    மான் உறங்குது மயிலும் உறங்குது
    மனம் உறங்கவில்லை - என்
    வழி உறங்குது மொழியும் உறங்குது
    விழி உறங்கவில்லை.

    கவியரசின் இன்னொரு பாடல்:

    காட்டில் மரம் உறங்கும்
    கழனியிலே நெல் உறங்கும்
    பாட்டில் பொருள் உறங்கும்
    பாற்கடலில் மீன் உறங்கும்
    காதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்
    காதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.

    சங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களில் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.

    பதிலளிநீக்கு
  9. மூட்டுவேன் கொல் பாடலின் உணர்ச்சி வேகம் முதன்முதலில் அந்தப் பாடலைப் படித்த போது ஓங்கி அறைந்தது போல் இருந்தது. அதுவும் 'சங்க கால' ஒளவையார் பாடிய பாடல் இது என்னும் போது இன்னும் அதிர்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. அ. நம்பி said...

    நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
    தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
    நனந்தலை உலகமும் துஞ்சும்
    ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

    பதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கான் உறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை
    நான் உறங்கவில்லை.

    மான் உறங்குது மயிலும் உறங்குது
    மனம் உறங்கவில்லை - என்
    வழி உறங்குது மொழியும் உறங்குது
    விழி உறங்கவில்லை.

    கவியரசின் இன்னொரு பாடல்:

    காட்டில் மரம் உறங்கும்
    கழனியிலே நெல் உறங்கும்
    பாட்டில் பொருள் உறங்கும்
    பாற்கடலில் மீன் உறங்கும்
    காதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்
    காதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.

    சங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களில் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.//


    கருத்துரைக்கு நன்றி அன்பரே..

    பதிலளிநீக்கு
  11. நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
    தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
    நனந்தலை உலகமும் துஞ்சும்
    ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

    பதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கான் உறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை
    நான் உறங்கவில்லை.

    மான் உறங்குது மயிலும் உறங்குது
    மனம் உறங்கவில்லை - என்
    வழி உறங்குது மொழியும் உறங்குது
    விழி உறங்கவில்லை.

    கவியரசின் இன்னொரு பாடல்:

    காட்டில் மரம் உறங்கும்
    கழனியிலே நெல் உறங்கும்
    பாட்டில் பொருள் உறங்கும்
    பாற்கடலில் மீன் உறங்கும்
    காதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்
    காதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.

    சங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களில் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.

    10 September 2009 01:42
    Delete
    Blogger குமரன் (Kumaran) said...

    மூட்டுவேன் கொல் பாடலின் உணர்ச்சி வேகம் முதன்முதலில் அந்தப் பாடலைப் படித்த போது ஓங்கி அறைந்தது போல் இருந்தது. அதுவும் 'சங்க கால' ஒளவையார் பாடிய பாடல் இது என்னும் போது இன்னும் அதிர்ச்சி.//

    ஓ அப்படியா..?

    பதிலளிநீக்கு
  12. //மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
    ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
    ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
    அலமரல் அசைவளி அலைப்பவென்
    உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
    28. பாலை - தலைவி கூற்று-//
    தலைவி தூங்கியவர்களை எழுப்பிவிட்டளா? அல்லது நினைத்தது மட்டும்தானா? நினைத்தது பலன் அளிக்கும் என்றால் தானே செயல்படுத்தல்!! ஏதாவது குறிப்பு இருக்கிறதா?
    தங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.