வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 21 மார்ச், 2023

இரத்தல் அரிது! பாடல் எளிது!



அரிய செயல்களைச் செய்பவர்களைப் பெரியவர்கள் என்றும் அவ்வாறு செய்யாதவர்களைச் சிறியவர்கள் என்றும் உரைப்பார் வள்ளுவர்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.26

சொல்லுவது யாவர்க்கும் எளியது ஆனால் சொன்னவாறு செய்வது அரிது என்றும் கூறுவார் வள்ளுவர்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல் -664

செயற்கரிய செய்த பெரியவரான கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியதாக இப்புறப்பாடல் அமைகிறது. இப்பாடலில் மன்னா  “நீ பரிசில் ஈவாயாக” என்று இரப்பது கடினமான செயல். ஆனால் உனது பெருமையைப் பாடுவது எளிது எனப் பாடுகிறார் மோசிகீரனார்.

அலைகள் மோதும் கடற்கரை அருகில் சென்றாலும், தெரிந்தவர்களைக் கண்டால் தாகத்திற்கு நீர் வேண்டும் என்று கேட்பது உலக மக்களின் இயல்பு. அது போல், அரசரே பக்கத்தில் இருந்தாலும் குற்றமற்ற வள்ளல்களை நினைத்துப் புலவர் செல்வர்.

அதனால், நானும் பெற்றதைப் பயனுள்ளாதாகக்கொண்டு, பெற்ற பொருள் சிறிதாயினும், “இவன் வழங்கியது என்ன?” என்று இகழ மாட்டேன்.

வறுமை உற்றதால் உன்னை நினைத்து வந்தேன். எனக்கு , “நீ பரிசில் ஈவாயாக” என்று இரப்பது கடினமான செயல்.

நீ பரிசில் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போரில் உன்னை நோக்கி எறியப்பட்ட படைக்கலங்களுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடாத உன் ஆண்மையையும், தூய ஆடையை விரித்தது போன்ற பொலிவுடன் உச்சியிலிருந்து விழும் குளிர்ந்த அருவியையுடைய கொண்கான நாட்டையும் பாடுவது எனக்கு எளிது.

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்

அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்

சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்

அரசர் உழைய ராகவும் புரைதபு

வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்

யானும்,பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்

உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே

ஈயென இரத்தலோ அரிதே; நீஅது

நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்

எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்

தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்

தண்பல இழிதரும் அருவிநின்

கொண்பெருங் கானம் பாடல்எனக்கு எளிதே.

 

புறநானூறு – 154

பாடியவர்: மோசிகீரனார், பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

அருஞ்சொற்பொருள்:

 உழை = பக்கம், இடம்; புரை = குற்றம்; தபுதல் = கெடுதல்; புரைதபு = குற்றமற்ற.

 அறுவை = உடை, ஆடை. 11. தூ = தூய; துவன்றல் = பொலிவு; கடுப்ப = ஒப்ப;

மீமிசை = மேலுக்குமேல் (உச்சி).

 தொடர்புடைய இடுகைகள்

பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை

 

திருக்குறள் - அதிகாரம் - 106 இரவு

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக