வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 7 ஜூன், 2024

திருக்குறளில் தலைமைப் பண்புகள் - Leadership Qualities in Thirukkural - (1600 வது பதிவு)

(தமிழ் இலக்கியம், கணினித் தமிழ் சார்ந்து 16வது ஆண்டாக தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்து வரும் பார்வையளார்களான உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். )

 
தலைமைப் பண்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட தலைமைப் பண்பு உண்டு. ஒரு கூட்டதை வழிநடத்தக்கூடிய பண்பு தலைமைப் பண்பாகும். தலைமைப் பதவியில் இருப்பதாலேயே ஒருவர் தலைவராகிவிடுவதில்லை. தலைமைப் பண்புக்குப்  பல தகுதிகள் உண்டு.

தலைமைப் பண்புள்ளவர்களால் பதவி பெருமை பெறுகிறது. 

தலைமைப் பண்பில்லாதவர்கள் அந்தப் பதவியால் பெருமை பெறுகிறார்கள்.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற மூன்று பண்புகளும் தலைமைப் பதவிக்கான நற்தகுதிகளாகக் கருதலாம். திருக்குறளில் திருவள்ளுவர் தலைமைப் பண்பு பற்றிய பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்துள்ளார். நவில்தொறும் நூல் நயம் என்று அவர் சொல்லுவதுபோல திருக்குறளில் தலைமைப் பண்பு என்று தேடினால் தேடுவோர் அறிவுக்கேற்ப பல குறள்களை இனம்காண முடியும்.

திருவள்ளுவர் காலத்தில் தலைமை என்றால் அரச பதவியே இருந்திருக்கவேண்டும். இறைமாட்சி என்ற அதிகாரத்தில் அரசனின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். அரசனுக்கு அடுத்து அமைச்சர்களின் பெருமைகளை உரைத்துள்ளார். அரசனும் அமைச்சரும் மட்டும் தான் தலைமைப் பண்புக்குரியவர்களா… என்று சிந்தித்தால் அவர்கள் மட்டுமில்லை.. ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் தலைமைப் பண்பு உள்ளது ஆனால் அதைப் பலரும் உணர்வதில்லை. உணர்பவர்கள் யாவரும் தலைவரகலாம் என்பது புரியும்.

 தலைமைப் பண்புக்கான தகுதிகளாக திருக்குறளில் நான் உணர்ந்த பண்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

 3. நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில், (Great deeds)

 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.- 26

பண்பில் பெரியோரே அரிய செயல்களைச் செய்வர்

 

12. நடுவு நிலைமை என்ற அதிகாரத்தில், (equity)

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.- 111

 அனைவரிடமும் நடு நிலையுடன் நடப்பவரே தகுதியுடையார்


தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.-114

ஒருவரின் தகுதியை அவரது புகழால் அறியலாம்

 

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.  -  118

துலாக்கோல் போல் இருப்பது சான்றோர்க்கு அழகு

 

13. அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில், (Self Control)

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.-124

 

தன்னிலை மாறாமல் அடங்கியிருத்தல் மலையைவிடப் பெரிது

 

14. ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில், (Discipline)

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.- 131

ஒழுக்கம் சிறப்பு தருவதால், அது உயிரைவிடப் பெரிது

 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.    -  140

ஒழுக்கமுடையவர்களுடன் சேர்ந்து வாழ்வதே அறிவு

 

16. பொறையுடைமை என்ற அதிகாரத்தில், (Patience)

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.- 158

இன்னா செய்தவரையும் இனிய செய்து வென்றுவிடுக

 

24. புகழ் என்ற அதிகாரத்தில், (Renown)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.-236

எத்துறையில் தோன்றினாலும் புகழுடன் தோன்றுக

 

27. தவம் என்ற அதிகாரத்தில், (Penance)

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.  - 270

இல்லாதவர்கள் பலர் வாழக்காரணம் தவம் செய்பவர்கள் சிலரே

 

31. வெகுளாமை என்ற அதிகாரத்தில், (Restraining Anger)

செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்.- 301

எளியோரிடமும் கோபப்படாதவனே சினமற்றவன்

 

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று. - 307

நிலத்தை கையால் அடிப்பது போலக் கோபம் கொள்வது

 

39. இறைமாட்சி என்ற அதிகாரத்தில், (The pride of the king)

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

ஞ்சாமை வேந்தர்க் கியல்பு.  -  382

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் நான்கும் வேந்தர்க்கு இயல்பு

 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு. - 383

விரைவு, கல்வி, துணிவு மூன்றும் ஆளும் அரசனுக்கு வேண்டும்

 

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.- 386

எளிமையும், இன்சொல்லும் கொண்ட அரசனை உலகம் புகழும்

 

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு  

இறையென்று வைக்கப் படும். - 388

நடுநிலை அரசனை மக்கள் இறைவனாகப் போற்றி வணங்குவர்

 

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.- 389

குறைகூறுவோரின் சொற்களையும் தாங்குவது மன்னர் கடன்

 

42. கேள்வி என்ற அதிகாரத்தில், (Listening)

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயினராதல் அரிது.- 419

நல்ல கேள்வியறிவுடைரே, பணிவுடன் பேசுவர்

 

43. அறிவுடைமை என்ற அதிகாரத்தில், (Possessions of Wisdom)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. - 423

யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

 

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.  - 427

அறிவுடையோர் எதிர்காலத்தை அறிவர், பேதையர் அறியார்

 

44. குற்றம் கடிதல் என்ற அதிகாரத்தில், (Avoiding Faults)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். - 435

வருமுன் காக்காதவன் வாழ்க்கை, தீயின் முன் வைக்கோல் போல்

 

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு.-  436

தன்குற்றம் நீக்கி, பிறர் குற்றத்தைக் காண்பது தலைவனின் கடன்

 

45. பெரியாரைத் துணைக் கோடல் என்ற அதிகாரத்தில், (Gaining Great Men's Help)

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல். - 442

வந்த துன்பம் நீக்கி, துன்பம் வராமல் காப்பவரிடம் நட்பு பாராட்டு

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். - 448

கடிந்து கூற மூத்தோர் இல்லாத அரசன் தானே கெடுவான்

 

47. தெரிந்து செயல்வகை என்ற அதிகாரத்தில், (Deliberation Before Action)

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.- 466

நற்செயல் செய்யாவிட்டாலும், தீச்செயல் செய்தாலும் கேடு வரும்

 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.- 467

சிந்தித்து செயல்படு, செயல்பட்ட பிறகு சிந்திப்பது இகழ்ச்சி

 

48- வலி அறிதல் என்ற அதிகாரத்தில், (Judging Strength)

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல். - 471

செயல், பகை, துணை, தன் வலிமையறிந்து எச்செயலும் செய்க

 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.- 475

மயிலிறகானாலும் அளவு மிகுந்தால் வண்டியின் அச்சு முறியும்

 

49. காலம் அறிதல் என்ற அதிகாரத்தில், (Knowing Proper time)

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.- 481

ஆந்தை, காக்கையின் வலிமையைக் காலமே முடிவுசெய்கிறது

 

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின். - 484

காலம், இடமறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம்

 

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.- 490

நற்காலம் வரும்வரை கொக்கைப்போலக் காத்திரு

 

50- இடன் அறிதல் என்ற அதிகாரத்தில், (Judging the Place)

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.- 491

எந்த செயலையும் முடிவை அறிந்த பின் தொடங்கு

 

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.- 495

முதலையின் வலிமையும் அது வாழும் இடம் சார்ந்தே அமையும்

 

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.- 496

தேர் கடலில் ஓடாது, படகு நிலத்தில் செல்லாது

 

51. தெரிந்து தெளிதல் என்ற அதிகாரத்தில், (Testing of men for Confident)

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.- 503

அரியவை கற்ற, குற்றமற்றாரிடமும் அறியாமை இருக்கும்

 

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.- 504

நற்பண்பு, குற்றம் இவற்றுள் மிகுதியானவையை ஆராய்ந்து அறிக

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.- 505

நம் பெருமைக்கும், சிறுமைக்கும் நம் செயல்களே அடிப்படை

 

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.- 509

ஆராயமல் ஒருவரை நம்பாதே, நம்பியவரை என்றும் ஆராயாதே

 

52. தெரிந்து வினையாடல் என்ற அதிகாரத்தில், (Testing and Entrusting)

இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.   - 517

இதனை இவர்தான் முடிப்பார் என ஆய்ந்து வேலையை வழங்கு

 

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல். -  518

நம்பிய ஒருவனுக்கு வழங்கிய பணியில் குறுக்கிடாதே  

 

 55. செங்கோன்மை (Good governance)

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.   - 541

குற்றத்தை ஆராய்ந்து யாரிடமும் நடுநிலையுடன் வழங்குவதே நீதி 

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர். - 550

தீயரை அழித்தல், களை எடுப்பதற்கு சமமானது

 

57. வெருவந்த செய்யாமை என்ற அதிகாரத்தில், (Show fear with the limit)

கடிதோச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம் 

நீங்காமை வேண்டு பவர். - 562

கடுமையாக தண்டிப்பதுபோல மென்மையாக தண்டிப்பவரே நல்லோர்

 

60. ஊக்கம் உடைமை என்ற அதிகாரத்தில், (Energy)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.- 594

ஊக்கமுடையவரிடம் செல்லும் வழிகேட்டு செல்வம் வந்து சேரும்

 

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.- 595

நீரளவுக்கு மலர் நீளும், ஊக்கத்தின் அளவே உயர்வு அமையும்

 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.- 596

கிடைக்காவிட்டாலும் உயர்வாக எண்ணுவதே என்றும் உயர்வு

 

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டன்றுங் களிறு. - 597

அம்பு தைத்தும் கலங்காத யானைபோல துன்பத்தில் கலங்காதிரு 

 

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.- 599

ஊக்கமுடைய புலியிடம், பெரிய யானையும் தோற்றுவிடும்

 

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு.- 600

ஊக்கமில்லாதவர்கள் மரத்துக்கு ஒப்பானவர்கள்

 

62. ஆள்வினையுடைமை  என்ற அதிகாரத்தில், (Manly Effort)

 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.- 619

தெய்வத்தால் ஆகாததும் முயற்சித்தால் கைகூடும்

 

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.- 620

தொடர்ந்த முயற்சி விதியையும் மாற்றிவிடும்

 

63. இடுக்கண் அழியாமை என்ற அதிகாரத்தில், (Faith in suffering)

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில். - 621

துன்பம் வரும்போது சிரி, அதுதான் துன்பத்தை வெல்லும் வழி 

 

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.- 623

துன்பத்தில் கலங்காதவர், துன்பத்திற்கே துன்பம் கொடுப்பார்கள்

 

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.- 630

துன்பத்தில் கலங்காதவரை பகைவரும் விரும்புவர்

 

 64. அமைச்சு என்ற அதிகாரத்தில், (Ministers)

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு. - 631

கருவி, காலம், செய்யும் முறை ஆய்ந்து அறிந்தவனே அமைச்சன்    

 

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்  

யாவுள முன்நிற் பவை.- 636

தன்னறிவுடன், நூலறிவும் கொண்டவருக்குமுன் சூழ்ச்சிகள் நில்லாது   

 

65. சொல்வன்மை என்ற அதிகாரத்தில், (Power of Speech)

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.- 643

கேட்டார் மகிழ, கேட்காதவரும் விரும்ப அமைவதே நல்ல பேச்சு

 

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின்ஊங்கு இல்.- 644

அறத்தையும் பொருளையும் விட உயர்வானது திறனறிந்து கூறுதல்

 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.- 645

ஒவ்வாரு சொல்லையும் ஒன்றை ஒன்று வெல்வதாகப் பேசு

 

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது. - 647

சொல்வன்மை,சோர்வின்மை,அஞ்சாமை உடையாரை வெல்லலாகாது

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின். - 648

சொல்லுபவர் சொன்னால் இவ்வுலகமே அதனை விரைந்து கேட்கும்

 

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார். - 650

கற்றதைப் பிறர் உணரக் கூறாதவர், மணமில்லா மலர் போன்றவர்

 

67. வினைத்திட்பம் என்ற அதிகாரத்தில், (Powerful acts)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல். - 664

சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது

 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.- 666

மனவுறுதி இருந்தால் நினைத்தது நிறைவேறும்

 

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து. – 667

யாரையும் தோற்றத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது

 

68. வினை செயல் வகை என்ற அதிகாரத்தில், (Modes of Action)

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.- 671

ஆராய்வது துணிவடையத்தான், துணிந்தபின் காலந்தாழ்த்தக்கூடாது  

 

70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் என்ற அதிகாரத்தில், (Walk with King)

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். - 691

நெருப்பில் குளிர்காய்வதுபோல் அரசனிடம் அணுகாது, அகலாது பழகு

 

 71. குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில், (Understanding body language)

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.- 701

குறிப்பறிந்து நடப்பவன் கடல்சூழ் உலகிற்கு அணியாவான்  

 

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல். 703

முகக்குறிப்பால் அகத்தை உணர்வாரை எப்படியும் துணையாகக் கொள்

 

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

கண்ணல்லது இல்லை பிற. -710

கண்களால் கருத்தை உணர்பவரே நுண்ணறிவாளர் எனப்படுவார்

 

73. அவையஞ்சாமை என்ற அதிகாரத்தில், (Courage before the Councils)

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர். - 723

போருக்கு அஞ்சாதார் எளியவர், அவையில் அஞ்சாதாரே அரியவர்

 

77. படைமாட்சி (The Glory of Army)

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை  

நாகம் உயிர்ப்பக் கெடும். - 763

கடல்போல எலிகள் கூட்டமிருந்தாலும் நாகத்தின் முன் நிற்கமுடியுமா

 

78. படைச் செருக்கு என்ற அதிகாரத்தில், (Military Pride)

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது. - 772

முயலை எய்த அம்பைவிட, யானையைத் தவறவிட்ட வேல் சிறந்தது

 

98. பெருமை என்ற அதிகாரத்தில், (Greatness)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து. -978

பணிவதே பெருமை, தற்பெருமை கொள்வதே சிறுமையின் அடையாளம்

 

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும். - 980

பெரியோர் சிறப்பையும், சிறியோர் குறையையும் காண்பர்

 

அதிகாரம் - 99. சான்றாண்மை (Sublimity)

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு       

ஐந்துசால் பூன்றிய தூண். – 983

அன்பு, நாணம், ஒற்றுமை, தனிநோக்கு, உண்மை சான்றோரியல்புகள்

 

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.- 985

பணிவால் மாறுபட்டவர்களையும் வெல்லும் இயல்பினரே சான்றோர்

 

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல். - 986

சிறியோரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்வதே மேன்மையின் உரைகல்

 

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார். – 989

உலகு மாறினாலும் மாறாத இயல்புடையோர் சான்றாண்மைக் கடலாவர்

 

அதிகாரம் - 100. பண்புடைமை (Courtesy)

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர். - 997

அரம்போன்ற கூர்மையான அறிவும், பண்பின்றிப் பயனில்லை

 

தலைமைப்பண்புக்கான தகுதிகள் இவைதான் என வரையறுத்துச்சொல்ல இயலாது. என்றாலும் நாம் கண்ட தலைவர்களிடம் இப்பண்புகளுள் பல இருப்பதை நம்மால் உணரமுடியும்.

பலர் தலைமைப்பதவியைத் தேடிச்செல்வர்,

தலைப்பதவி சிலரைத் தேடிச்செல்லும்.

எப்படியிருந்தாலும், அப்பதவிக்கு ஒருவர் தகுதியானவரா என்பதைக் காலம்தான் முடிவுசெய்கிறது. திருவள்ளுவர் குறிப்பிப்பிடும் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்வோம்.. .

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக