வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 23 மே, 2024

புறங்கூறாமை


நம்மைவிட நாம் மற்றவர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்..

அவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்கிறோம்..அந்த ஒப்பீடு சிலருக்கு  முன்னேறவேண்டும் என்று தன்னம்பிக்கையைத் தருகிறது. சிலருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது.

 ஒருவர் இருக்கும்போது அவரது குறைகளை அவரிடமே சொல்லவேண்டும்

அவர் இல்லாதபோது அவரது நிறைகளை மட்டுமே பேசவேண்டும்..

மாறாக ஒருவர் இல்லாதபோது குறைகளையும, இருக்கும்போது நிறைகளையும் பேசுவது பலரின் வழக்கமாக மாறிவருகிறது.

 


சில கடைகளில் சுவரில் எழுதியிருப்பார்கள். எங்கள் சேவையில், குறைகளிருந்தால் எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளிருந்தால் உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் என்று..

 

அடுத்தவரைப் பற்றிப் புறம்பேசுதல் பலருக்கும் பொழுதுபோக்காகவே உள்ளது. இன்றைய சூழலில் சமூகத்தளங்களில் கூட புறம்பேசும் பண்பே நிறைந்து வழிகிறது.

 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டினார் வள்ளலார்.

 

ஒருவர் இன்னொருவரைப் பற்றி நம்மிடம் புறம்பேசுகிறார் என்றால் அவர் நம்மைப்பற்றியும் இன்னொருவரிடம் இவ்வாறு தான் பேசுவார் என்பதை நாம் உணரவேண்டும்.

 

ஒருவர் நம்மிடம் சொல்லும் செய்தி உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றியோ.. 

நாம் பிறரிடம் சொல்லும் செய்தி உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றியோ நாம் அதிகம் கவலைப்படுவதில்லை..

கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

கேட்டதெல்லாம் நம்பாதே. நம்பியதெல்லாம் சொல்லாதே.

அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.

'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே'

கேப்பையில நெய் வடியுதுன்னா

கேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..?

கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

உலை வாய மூடலாம் ஊர்வாய மூடமுடியுமா

என்றெல்லாம் புறம்பேசுவதைப் பற்றிப் பல பழமொழிகள் உண்டு

 

தலைமக்களின் காதல் வாழ்வைப் பற்றி ஊரார் புறம் பேசுதலை அம்பல், அலர், கௌவை ஆகிய சொற்களால் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

 

தத்துவமேதை சாக்கரடீசிடம் ஒருவன் வந்து….


நான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம்

சாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா? என்று கேட்டார்..

அதற்கு அவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது என்றான்..

சாக்கரடீஸ்  அவனிடம், நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா? என்று கேட்டார்

நிச்சயமாக இருக்காது என்றான்

 

அதற்கு, உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் 

பயன்படாதவொரு செய்தியை நாம் பேசி  ஏன் நேரத்தைச் 

செலவிடவேண்டும்?

என்று கேட்டாராம் சாக்கரடீஸ்.

 

திருக்குறளில் புறங்கூறாமை என்ற அதிகாரத்தில்,

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.181

ஒருவன் தீமை செய்தாலும்புறங்கூறாமை சிறந்தது 

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை. - 182

பொய்யான முகமலர்ச்சிதீமைகளுள் தீமையானது

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கத் தரும். - 183

புறங்கூறி பொய்யாக வாழ்வதைவிட சாதலே நன்று

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல் - 184

நேரில் கடுஞ்சொல் கூறினும்மறைவில் புறஞ்சொல் கூறாதே

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும். - 185

புறங்கூறுவான் சொல் அவன் தீயவன் என்பதைக் காட்டும்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.- 186

நீ ஒருவரைப் புறம்பேசினால் உன்னை ஒருவர் புறம்பேசுவார்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.- 187

நட்பின் மதிப்பை அறியாதவர்கள் புறங்கூறி நட்பைப் பிரித்துவிடுவர்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்கு. - 188

நண்பனையே தூற்றுபவன் எதிரியைத் தூற்றாமல் விடுவானா  

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை.- 189

புறம்கூறுவோனையும் அறம் கருதியே நிலம் தாங்குகிறது

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்   

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. -190

பிறர் குற்றத்தைக் காண்பதுபோல் உன் குற்றத்தைக் காண்

நாம் ஒருவரைப் பற்றிப் புறம் பேசுகிறோம் என்றால் அதன் வலி என்ன என்பதை நம்மைப்பற்றி இன்னொருவர் பேசி அதைஅறியும்போதுதான் நாம் உணர்வோம்..

உண்மை ஒரு முறை உலகத்தைச் சுற்றிவருமுன் பொய் மூன்று முறை உலகைச் சுற்றிவந்துவிடும்.

புறம்பேசுவது என்பது பலவீனத்தின் அடையாளம்

நேருக்கு நேராக பேசும் திறனற்றவர்களே புறம்பேசித் திரிவர்.

உங்களைப் பற்றி அவர் இப்படிப் பேசினார் என்று ஒருவர் உங்களிடம் சொன்னால்,

அப்படியா சொன்னார்… அவர் என்ன நேர்மையானவரா அவரது நேர்மை எனக்குத் தெரியாதா.. என கோபம் கொள்வதும்.. அவரைப் பற்றிய குறைகளைப் பேசுவதும் அவரிடமே சண்டைக்குச் செல்வதும் மனித இயல்பு..

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. – 423

யாரிடம் என்ன கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

என வள்ளுவரின் வழிகாட்டலுக்கு ஏற்ப ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை.

சிலர் புறம்பேசுவதால்  எந்தப் பயனும் இல்லை என்று அறிந்தும் பொறாமை காரணமாக பயனில்லாத சொற்களையே பேசுவார்கள். அவர்களைத் திருவள்ளுவர்,

பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.-196

பயனில்லாத சொற்களைப் பேசுவோர் மனிதருள் பதர் போன்றவர் என்றுரைக்கிறார்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.- 100

கனிபோன்ற இன்சொல்லிருக்ககாய்போன்ற வன்சொல் ஏன்?

என்று கேட்கிறார்.

புறம்பேசுவதைத் தவிர்ப்போம்

புறம்பேசி வருபவர்களைப் புறக்கணிப்போம்..

இயன்றால் ஒருவர் இல்லாதபோது நிறைகளைப் பேசுவோம்..

நேர்மையிருந்தால் அவர் உள்ளபோது குறைகளைப் பேசுவோம்..

குறைகளைச் சொன்னால் பலர்முன் சொல்லாமல் தனியாக சொல்வோம்..

நிறைகளைச் சொன்னால் பலர் முன் சொல்வோம்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற பழமொழியை நினைவில் கொள்வோம்.

ஒருவரின் மீது நன்மதிப்பு வருவதற்குப் பல காரணங்கள் உண்டு.

அவற்றுள் குறிப்பிடத்தக்கது புறங்கூறாமை.

இன்றைய சூழலில், புறங்கூறுதலின் வடிவங்கள் மாறிவருகின்றன.

சமூகத்தளங்களில் பலரைப் பற்றிய செய்திகளும் உண்மைக்கு மாறாக பதிவு செய்யப்படுகின்றன. இது நவீனப் புறங்கூறுதலே..

அதனால், நமக்கு உண்மையென்று சரியாகத் தெரியாத ஒரு செய்தியை நாம் சமூகத்தளங்களில் பகிரும்முன்பு கொஞ்சம் சிந்திப்போம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக