வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 7 ஜனவரி, 2010

காலெறி கடிகையார்




இல்வாழ்க்கைக்குப் பொருள் தேவையானது. பொருளின்றி இவ்வுலகில் வாழமுடியாது. அதே நேரம் இளமையும் நில்லாதது. விரைவில் கடந்து செல்லக்கூடியது.

தலைவனை பொருள் தேடவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இழுக்கிறது.
இளமை நில்லாதது அதனால் தலைவியை விட்டு நீங்காதே..

என்று ஒரு மனம் சொல்கிறது.

தலைவனுக்கும் நெஞ்சுக்கும் இடையிலான உரையாடல் இதோ..


தலைவன்
- பொருள் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானது.
அறவழியே வாழவும்.
ஈயென இரப்போருக்கு இல்லை என்று சொல்லாது ஈயவும்,
பொருள் தேவையாகவுள்ளது.


நெஞ்சம்
- பொருள் தேவைதான் நான் இ்ல்லையென்று சொல்லவில்லை. பொருள் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. நீசென்றவுடன் அள்ளிவர பொருளெல்லாம் ஒரே இடத்திலேயேவா கிடைக்கப்போகிறது?

தலைவன்
- சரி அதற்காக இங்கேயே இருந்தால் பொருளுக்கு எங்கே செல்வது?

நெஞ்சம்
- இங்கே இல்லாத வளமா?
உன் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை நீ இங்கேயே பெறமுடியும்.
மேலும் நீ சிந்திக்கவேண்டிய ஒன்றை நீ சிந்திக்கவே இல்லை.

தலைவன்
- என்ன சொல்கிறாய்…?

நெஞ்சம்
- இளமை நில்லாது சென்றுவிடும் என்பதை நீ அறியாயா?
நீ பல நிலங்களையும் கடந்து பொருள் தேடி வரும் போது உன் தலைவி தன் இளமையைத் தொலைத்திருப்பாள். பொருளைக் கூட எப்போது வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம் ஆனால் இளமையைக் காலத்தில் தான் பெறஇயலும்.
உனது இளமையையும் - தலைவியின் இளமையையும் ஒரு சேர நுகராது நீ பொருள் தேடி வந்து என்ன பயன்?

தலைவன்
- ஆம் நீ சொல்வது சிந்திக்கவேண்டிய ஒன்றுதான்.

நெஞ்சம்
- தலைவியின் பல்லிலும், இதழிலும் ஊரிய நீரை சுவைத்த நீ கரும்பின் துண்டங்களிலிருந்து வரும் இனியநீர் போன்றதென்று உணர்ந்திருக்கிறாய். அத்தகைய இனிமையான தலைவியையும் அவள் தம் இளமையையும் நீங்கிச் செல்வது சரிதானா? சிந்தித்துப்பார்! உன்னை நீங்கித் தலைவி உயிர் வாழ்வாள் என நினைக்கிறாயா?

தலைவன்
- நீ சொல்வது சரிதான்.
நான் சென்றால் தலைவி உயிர்தாங்கமாட்டாள். அதனால் நான் செல்லவிருந்த பயனத்தை நிறுத்திக்கொள்கிறேன்..

நெஞ்சம்
- ஆம் நல்ல முடிவு. நீ ஈட்ட எண்ணிய பொருளை நீ இங்கேயே பெற்று அறவழியே இன்பவாழ்வு நடத்தலாம்.

என்பது பாடலின் உட்பொருளாகும். இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில தலைவியின் வால்எயிறு ஊரிய நீரை கரும்பின் இனிய சுவையோடு ஒப்பிட்டு நோக்கி “ காலெறி கடிகை“ என்ற கூறியதால் இப்புலவர் காலெறி கடிகையார் என்று பெயர் பெற்றார்.

பாடல் இதோ..



இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே.

குறுந்தொகை -267.
பாலை - தலைவன் கூற்று
காலெறி கடிகையார்.



(அகத்துறை -மேல் நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும்“ என்னும் நெஞ்சிற்கு நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி செலவு அழுங்கியது.)

செல்வத்தால் கிடைக்கும் அறமும், இன்பமும் தலைவியுடன் முறையாக இல்லறம் நிகழ்த்துதலால் பெறாலாம் எனத் தலைவன் கருதினான். அறனும் இன்பமும் பெறுவதற்குரிய பொருளைத் தேடப் புகுந்து அறமும் இன்பமும் இழப்பதற்கு நான் தயாராக இல்லை. அதனால் எனது பயனத்தை தவிர்கிறேன். என முடிவு செய்கிறான் தலைவன். பயனத்தைத் தவிர்த்தல் செலவழுங்குதல் என்னும் அகத்துறையாகும்.

இப்பாடலின் வழியாக “காலெறி கடிகையார்“ என்ற புலவரின் பெயருக்கான காரணத்தையும். செலவழுங்குதல் என்னும் அகத்துறைக்கான விளக்கத்தையும் அறியமுடிகிறது.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

வலவன் ஏவா வானஊர்தி. (2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆளில்லா வானூர்தி)



பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். அந்த விமானம் படைத்தவன் யார் என்றால் இன்றைய குழந்தைகள் கூட கண்ணை மூடிக் கொண்டு “ரைட் சகோதரர்கள்“ என்று கூறுவார்கள்.

தமிழ் நூல்களில் வானூர்தி பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

“அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிப்பறந்தான் !
இராவணன் சீதையைத் தூக்கிப் பறந்தான்!
கண்ணகியை கோவலன் வானூர்தியில் அழைத்துச் சென்றான்..“


இன்னும் இலக்கியங்களில் விமானம் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன..

சான்றாக..


வலவன் ஏவா வானஊர்தி“

என்ற தொடர் புறாநானூற்றில் இடம்பெறுகிறது.

இன்று விமானத்தை ஓட்டும் விமானியை அன்று “வலவன்“ என்று நம் தமிழர் அழைத்தனர்.

“வல்“ என்பது விரைவு என்பதைக் குறிக்கும் சொல்லாகும்..
விரைவாக ஓட்டுபவன் என்றபொருளில் வல்லவன் என்பதே வலவன் என்றானது..

வலவன் ஏவா வான ஊர்தி என்பது - ஆளில்லாத விமானத்தையே குறிப்பதாக உள்ளது.

வாழ்வில் நல்வினை மட்டும் செய்தால் சொர்க்கம் என்ற வீடுபேறு கிடைக்கும். அவ்வாறு கிடைத்தவர்கள் “ வலவன் இன்றித் தானே இயங்கும் வான ஊர்தியைப் பெறுவர்“ என்று சங்ககாலத்தமிழரிடம் நம்பிக்கை இருந்தது.


சொர்க்கம் இருப்பது உண்மையா? பொய்யா?

என்ற விவாதம் முடிவடையாதது..
என்றென்றும் தொடர்ந்து வருவது.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சொர்கம் உண்டு!
நரகம் உண்டு என்று நம்புவார்கள்..

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்..
சொர்க்கம் என்பதும் நரகம் என்பது உண்டு..
ஆனால் அது எங்கோ இல்லை!

நாம் வாழும் நிகழ்கால வாழ்க்கையிலேயே அது இருக்கிறது என்பதை நம்புவார்கள்..

ஆம் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், நம்மைச்சுற்றி வாழ்வோர் மகிழ்வுடனிருந்தால், நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று பொருள்..

நாமும் நம்மைச் சுற்றி வாழ்வோரும் துன்பத்துடனிருந்தால் நாம் வாழ்வது நரகமே!!



பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை தோய்ந்த புறப்பாடல் இதோ…


சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
“வலவன் ஏவா வான ஊர்தி“
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.


புறநானூறு -27
27. புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.



பொதுவியலின் ஒரு துறை முதுமொழிக்காஞ்சி. இது அறம் பொருள் இன்பம் என்பவற்றின் தன்மைக் குற்றமில்லாது அறிவுடையோர் அரசனுக்குக் கூறுதலாலும் “ புலவர்பாடும் புகழுடையார் வானவூர்தி எய்துவர் எனப் புகழ்ச்சி செல்வத்தின் பயன் கூறியதாலும் முதுமொழிக்காஞ்சியானது.


சேற்றில் வளரும் தாமரையின் பூத்த ஒளியுடைய நிறமும் நூற்றுக்கணக்கான இதழ்களுடைய தாமரை மலரின் குவியலைக் கண்டது போல சிறந்த குலத்தில் பிறந்து கவலையின்றி அரசர் வீற்றிருப்பர். அவர்களை மனதால் கருதும் போது அவர்களுள் புகழும், அதனால் பாடப்பொறும் பாட்டும் உடையராய் இருப்பவர் சிலரே.

தாமரையின் இலையைப் போல பயன்படாது மாயந்தோர் பலரே!

“புலவரால் பாடப் பெறும் புகழுடையோர், வானில் வலனால் செலுத்தப்படாது இயங்கும் விமானத்தினைத் தாம் செய்யும் நல்ல செயல்களை முடித்தபின் அடைவர் என்பர் அறிவுடையோர்.“ எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என்னுடைய இறைவனே, சேட்சென்னியே நலங்கிள்ளியே,

வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்!
குன்றிப்போனது வளர்வதையும்!

பிறந்தது இறப்பதையும்!
இறந்தது பிறப்பதையும்!

உண்மை எனக் கல்லாதவரும் அறியுமாறு செய்யும் திங்களாகிய தெய்வம்.
அது இயங்கும் உலகத்தில் ஒன்றனைச் செய்ய வல்லவராயினும் செய்ய இயலாதவராயினும் வறுமையால் வருந்தி வந்தோரின் வயிற்றின் பக்கங்களைக் கருதி அவர்களுக்கு அருளுடன் வழங்க வல்லவனாகுக.
கெடாத வலிமையுடன் உனக்குப் பகைவரானவர்கள் அருளின்றிக் கொடாது இருத்தலில் வல்லவராகட்டும்.

தாமரை மலர் அரசர் கூட்டத்திற்கு உவமையானது. மக்களுள் மண் பயனுற வாழ்வோரே மக்களாகக் கருதப்படுவர்.
எஞ்சியோர் மாக்களாகவே(விலங்கு) கருதப்படுவர்.

உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியை இவ்வாறு பாடுகிறார்..



� இப்பாடலில் வலவன் ஏவா வான ஊர்த்தி என்ற பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை ஆளில்லாத விமான ஊர்தியைக் குறிப்பதாக உள்ளமை வியப்பளிப்பதாகவுள்ளது.


� வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்!
குன்றிப்போனது வளர்வதையும்!
பிறந்தது இறப்பதையும்!
இறந்தது பிறப்பதையும்!


என்ற சிந்தனை இன்றைய மருத்துவவியலோடு ஒப்பு நோக்கத்தக்கதாகவுள்ளது.

� பழந்தமிழரின் அறிவியல் சிந்தனையை உற்று நோக்கும் போது..
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட அறிவியல்ச் சிந்தனைகள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை?
என்ற வினா எழுவது இயற்கையே..

� அறிவியல் தமிழுக்குத் தொடர்பில்லாதது!
� அறிவியலை ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் வாயிலாகத் தான் படிக்கமுடியும் என்ற தமிழனின் சிந்தனையும் நம் அறிவியல்சிந்தனைகள் உலகறியப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் போனதற்கு ஒருகாரணமாக
அமைகிறது.

� இன்றைய சூழலில் எல்லா அறிவியல்த் துறைகளையும் தமிழில் படிக்கிறார்கள். அதனால் அவர்களின் சிந்தனை மேலும் வலுப்படும். தம் கருத்தை முழுமையாக ஆழமாகச் சொல்லமுடியும்.

அறிவுக்கு மொழி தடையல்ல!
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!!

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.




ங்க காலத்தமிழர் கடல் வணிகத்தில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.சங்க இலக்கியங்கள் இதற்கு முதல் சான்றாதரங்களாகின்றன. தாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்ரிகர்களின் குறிப்புகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.

மலேசியாவில் கிடைக்கும் தமிழ்க்கல்வெட்டு,
தாய்லாந்தில் கிடைக்கும் சங்ககால நாணயம்,
கம்போடியா கல்வெட்டில் கிடைக்கும் தமிழ்மன்னனின் பெயர்,
சங்க இலக்கியத்தில் கிடைக்கும் யவனர் பற்றிய குறிப்பு ஆகியனவும்

சங்ககாலத்தமிழர் கடல்வாணிகத்தில் புகழ்பெற்றிருந்தமைக்குத் தக்க சான்றுகளாகவுள்ளன..

பெரிய கப்பல் என்றதும் பலருக்கு டைட்டானிக் கப்பல் தான் நினைவுக்கு வரும். இன்று பெரிய பெரிய கப்பல்களை அதிநவீன வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம்.

சங்ககாலத்தமிழர் பயன்படுத்திய கப்பல்கள் பற்றிய குறிப்பை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்“ என்ற குறிப்பு சங்கப்பாடல் வழி கிடைக்கிறது.

உலகமே கூடிக் கிளர்ந்து சென்றது போன்ற பெரிய கப்பல் என்ற இந்தக்குறிப்பு..

சங்க காலமக்களின் கப்பல் கட்டும் அறிவு, கடல்வணிகத்தில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் ஆகியவற்றை உணர்த்துவதாகவுள்ளது.

உலகையே ஒரு கப்பலில் அழைத்துச் செல்ல இயலும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருந்தமை இதனால் புலனாகிறது.

பாடல் இதோ..

உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
5 கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
மாட ஔ்எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே, அழி படர் அகல,
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
10 பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
15 அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
நிரை வளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.


அகநானூறு -255. பாலை
மதுரை மருதன் இளநாகனார்


(பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது.)

பொருள் ஈட்டும் நோக்கில் தலைவன் தலைவியைப் பிரிந்து கடல் கடந்து சென்றான். சென்றவன் தான் வருவதாகக் குறித்துச் சென்ற பருவம் வந்தும் தான் வரவில்லை. தலைவி அவன் பிரிவைத் தாங்க இயலாதவளாக, எனது நிலையைத் தலைவனிடம் சென்று கூறுவோரை நான் பெறவில்லையே என வருந்தி தோழியிடம் கூறினாள்..

பாடலின் பொருள்…

உலகமே கிளர்ந்து எழுந்தது போன்ற அச்சத்தை ஏற்படுத்தும் நாவாயானது, வேகமாக வீசும் இயல்புடைய காற்றானது அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிடத்தும் தங்காமல் புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய பெரிய கடல்நீர்ப்பரப்பைக் கிழித்துச் சென்றது.

அந்த நாவாயை ஓட்டிச் சென்ற தலைவர், உயர்ந்த இடத்தில் எறியும் கலங்கரை விளக்குகளால் செல்லும் இடமறிந்து பொருளீட்டும் எண்ணத்தால் என்னை நீங்கிச் சென்றார்.

அறநினைவின்றி நம்மை வருத்தும் அன்பில்லாத வாடைக் காற்றோ,
நீர் வளமிக்க குளிர்ச்சி பொருந்திய மருதநிலத்தில் உள்ள நம் ஊரிடத்தில் கருவிளை மலரோடு மாறுகொண்டு எழுந்த பகன்றையின் வெண்ணிற மலர்களின் இதழ்களை அளைத்துச் சென்றது.

பலாக்காய் போன்ற புறப்பகுதியையுடைய முதிர்ந்த பழத்தைக் கொண்ட பாகற்கொடிகள், முற்றிய இலைகளையுடைய கூதாளியோடு கிடந்து அசையுமாறு செய்தது.

காவல் நிறைந்த வீட்டின் மாடத்தும் இரவெல்லாம் புகுந்து வீசியது.
திருத்தமாக அணியப்பெற்ற எனது அணிகலன்களும் நழுவி வீழ்ந்தன.
தோளும், வளையும் நெகிழ்ந்தன.

எனது இந்த நிலையைத் தலைவரிடம் தூதாகச் சென்று சொல்வோர் இருந்தால் தலைவர் விரைவில் வருவார்.

அப்படி தூது செல்வோர் யாரையும் நான் பெறவில்லையே..!
என்ன செய்வது?

என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள்.


இப்பாடலின் நோக்கம் தலைவியின் அகவாழ்வியலை உணர்த்துவதே என்றாலும்..
அக்கால மக்கள் பயன்படுத்திய கப்பல் பற்றிய குறிப்பையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

உலகு கிளர்நதன்ன உருகெழு வங்கம் இருந்ததா?
என்று சிந்திப்பதை விட பெரிய நாவாய் வைத்திருந்தனர் என்பதையும்,
அந்த நாவாய் உலகம் கிளர்ந்தது போல பெரியதாக இருந்தது என்பதையும் இப்பாடல் வழி அறிமுடிகிறது.


இவர்கள் இவ்வளவு பெரிய கப்பல் செய்ய எங்கு சென்று படித்தார்கள்?

எல்லாம் அனுபவம் தான்..!

சனி, 2 ஜனவரி, 2010

சிறுபிள்ளையும் பெருங்களிறும்!

அதியமான் சங்ககாலத்தில் வாழ்ந்த அரசர்களுள் குறிப்பிடத்தக்கவன்.
அதியனுக்கும் ஔவைக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும்.
அதியன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லியை தான் உண்ணாமல் ஔவைக்குக் கொடுத்தான்..
தான் உண்டால் நிலப்பரப்பு இன்னும் அதிகரிக்கும்..
அதனால் யாது பயன்?
ஔவை உண்டால் தமிழ் வளரும் என்பது அவனது எண்ணமாக இருந்தது.
அதியனின் வாழ்ந்திருந்தால் கூட அவனுக்கு இந்த அளவுக்குப் புகழ்கிடைத்திருக்குமா என்பது ஐயமே!
அதியனின் ஒவ்வொரு பண்பு நலனையும் ஔவையார் தம் பாட்டில் அழகாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.

இதோ ஒரு பாடல்..



ஊரில் உள்ள சிறுவர்கள் தன் வெண்மையான தந்தத்தைக் கழுவுவதால் நீர்த்துறையில் பெரிய களிறு(யானை) படிந்துகிடக்கும்.
பெருமானே!
அவ்வாறே எங்களுக்கும் எளிமையுடையவனாக நீ விளங்குகிறாய்!




மாறாக,

அந்தக் களிறு மதம் கொண்டால் மிகவும் அச்சமூட்டுவதாகவும், தம் அருகே யாரும் செல்ல இயலாததாகவும் விளங்கும்
அவ்வாறே நீ உன் பகைவருக்கு இன்னாதவனாக விளங்குகிறாய்!






யானையின் எளிமையும், வலிமையும் அதியனின் பண்புக்கு உவமையானது.

யானை எளிமையாய் இருத்தல் அதியனின் அருள் உள்ளத்தையும்.
மதம் கொள்ளுதல் எதிரிகளுக்கு அஞ்சத்தக்கவனாக அமையும் வீரத்துக்கும் சான்றாயிற்று.

இருவேறு தன்மைகளையும் ஒன்றாகப்பெற்றவன் அதியன்,

யாரிடம் அன்புகாட்டவேண்டும்?
யாரிடம் வலிமையைக் காட்டவேண்டும்?
என்பதை நன்கு அறிந்தவன் என்று அதியனின் புகழை உரைக்கிறார் ஒளவையார்.


பாடல் இதோ..


ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.


புறநானூறு 94.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.


ஒவ்வொருவருக்குள்ளும் அன்பும் இருக்கும். வலிமையும் இருக்கும்.
அன்பை எங்கே வெளிப்படுத்த வேண்டும்?
வலிமையை எங்கே வெளிப்படுத்த வேண்டும்?

என்பதில் தான் இங்கு சிலருக்குக் குழப்பம் வருகிறது.


(படங்கள்- ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர். நன்றி)

வெள்ளி, 1 ஜனவரி, 2010

வலையுலகப் படைப்பாளிகள்! (தினமணி)






இன்றைய தினமணி நாளிதளில் வலையுலகம் பற்றி வந்த கட்டுரையில்,

”தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.“

என்று எனது வலைப்பதிவையும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இயல், இசை, நாடகம் என முத்தமிழாக இருந்த தமிழ் இணையத்தமிழ் என்ற நான்காம் தமிழாக வளர்ந்துவருகிறது. எதிர்காலத்தமிழருக்கான சான்றாதரங்கள் யாவும் கொண்டதாக இந்த இணையவுலகம் வளர்ந்து வருகிறது. கருத்துச்சுதந்திரம் நிறைந்த இந்த இணையவுலகில் பலதுறை சார்ந்து எழுதுவோர் இருக்கிறார்கள்..

மொழி, இலக்கியம் சார்ந்து எழுதுவோர் குறைவாகவே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும் தமிழ்த்துறைசார்ந்தோரும் தம் கருத்துக்களை வலைப்பதிவுகளில் வெளியிடவேண்டும்.
தமி்ழ்த்துறை சார்ந்தோர் பலர் வலைப்பதிவின் கருத்துக்களைப் படிப்வர்களாக மட்டுமே உள்ளனர். அவர்களும் வலைப்பதிவு வாயிலாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்தல் தேவையான ஒன்றாகவுள்ளது.


கட்டுரை இதோ..

வலையுலகப் படைப்பாளிகள்!
எம். மணிகண்டன்
First Published : 01 Jan 2010 12:12:00 AM IST

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.
இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.
உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.
தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.
நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.
நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.
வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.
÷இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

தழைக்குமா தமிழ்…?




பிறமொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது தமிழ்மொழி. ஆனால் தமிழன் வாயில் தமிழ்படும் பாடு கொஞ்சமல்ல. பிறமொழிசார்ந்தோர் தமிழ்மொழியைபேசும் அளவுக்குக் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் தமிழ் பேசுவதில்லை என்பது உண்மை. ஆங்கிலத்தோடு தமிழைக் கலந்து பேசுவதில் தமிழனுக்கு அளவுகடந்த ஆர்வம். பிறமொழிக்கலப்பில்லா தமிழ் பேசுவோரைக் காணுதல் அரிதாகவே உள்ளது.

தமிழா நீ பேசுவது தமிழா….

என்று இன்றைய தமிழன் பேசும் தமிழின் நிலையை தமிழன் சிந்திக்கும் வகையில் சொன்னார் உணர்ச்சிப் பாவலர். காசியானந்தன் அவர்கள்..

கவிஞர் வேழவேந்தன் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். அவர்தம் கவிதையில் தமிழன் பேசும் தமிழின் நிலையை அழகாக எடுத்தியம்பி பிறமொழியின் துணை எதற்கு..?
அழகுத்தமிழில் பேசலாமே என்ற சிந்தனையைத் தூண்டியுள்ளார்..
கவிதை இதோ…


“டாடி என்றே அழைக்காதீர் இனிமை தோய
தண்டமிழில் அப்பாவென்றே அழைத்திடுங்கள்

மீடியா என மொழிய வேண்டா ; நல்ல
மென்றமிழில் ஊடகங்கள் எனக்கூறுங்கள்

மூடில்லை எனப் பேசல் வேண்டா மூளை
முனைப்பில்லை எனத் தமிழில் பேசிடுங்கள்

பாடி என்றே சொல்லாதீர்! அழகாய் நந்தம்
பழந்தமிழில் உடலமென்றே கூறிடுங்கள்

சூப்பர் என்றே ஏன் கூறல் வேண்டும்? சொந்தச்
சுவைத்தமிழில் மிக நன்றே என்றால் என்ன?

பேப்பர் என்றே ஏன் மொழிதல் வேண்டும்?
பேசும் பேச்சினிலே“தாள்“ என்றால் தவறா? நாமும்

சாப்ட் என்றே ஏன் பேசல் வேண்டும்? நந்தம்
தாய்மொழியில் மென்மை என்றால் புரிந்திடாதா?

சேப்டி இல்லை எனப்புலம்பும் நீங்கள் தூய
தென்தமிழில் காப்பில்லை என்றால் என்ன?

மம்மி என்றே பெற்றவளைப் பிணமாக்காமல்
மதுத்தமிழில் அம்மா என்றழைத்தால் தப்பா?

டம்மி என்று கூறுவதை மாற்றி நந்தம்
தண்டமிழில் போலி எனச் சொல்லக்கூடாதா?

செம்மொழியாய் நம்மொழியை அறிவித்தென்ன?
சேய்த்தமிழர் தாய்மொழியை மிதித்துவிட்டுத்

தம்மொழியாய்த் தேம்ஸ் மொழியைத் தலையில் வைத்தால்
சாகாமல் தீந்தமிழ் வாழ்வதெங்கே?

(கவிஞர்.வேழவேந்தன்)

இன்றைய நிலையில் எல்லா அறிவியல்த்துறைகளையும் தமிழ்வழி கற்கும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளோம். மருத்துவக்கல்வி, கணினி, அறிவியல் என எந்தத்துறையாக இருந்தாலும் அந்தத்துறையைத் தமிழில் படிக்க இயலும். அந்த அளவுக்கு கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன, உருவாக்கப்பட்ட வருகின்றன.
சான்றாக தமிழ் இணையப்பல்கலைக்கழகம் என்ற இணையதளத்தில் பல்வேறு துறைகளுக்கான கலைச்சொற்களை இலட்சக்கணக்கில் தொகுத்தளித்துள்ளனர். தமிழன் சிந்திக்கவேண்டிய நேரமிது.