வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 24 மார்ச், 2026

தற்புகழ்ச்சி- சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 

புகழ் பெற வாழவேண்டும் என்பது மனித இயல்பு.

ஈதல் இசைபட வாழ்தல், தோன்றின் புகழொடு தோன்றுக என்றெல்லாம் திருவள்ளுவர் உரைத்துள்ளார்.

என்றாலும் எல்லோரும் புகழ்பெற வாழ்வதில்லை.

புகழைத் தேடிச்செல்வோர் பலர், ஆனால் புகழ் சிலரை மட்டுமே தேடிச்செல்வதுண்டு.

அவ்வாறு புகழ் பெறாதவர்கள் தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதுண்டு.

தற்புகழ்ச்சி, தற்பெருமை, சுயதம்பட்டம் என பலவாறு அழைத்தாலும்.

சில நேரங்களில் இதனால் நன்மையும் பலநேரங்களில் தீமையும் விளைகிறது.

உடையது விளம்பேல் என்பது ஔவையார் வாக்கு

கற்க வேண்டிய நூல்களைக் கற்று அறிவுடையவர்கள் கண்ட அடக்கமே உண்மையான அடக்கமாகும். கற்று அறியாதவர்களோ, தங்களுடைய அறியாமையான தன்மையை மறந்துவிட்டுத் தம்மைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். நீர் நிறைந்த குடம் தளும்பாது; குறை குடமே தளும்பும் என உரைக்கிறது பழமாழி நானூறு.

வெள்ளி, 13 மார்ச், 2026

மக்களே போல்வர் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை



மக்களே போல்வர்

 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, ஆளைப் பார்த்து எடை போடாதே.

என்றெல்லாம் பழமாழிகள் உண்டு.

கடைகளில் காய்கறி வாங்கும்போதோ ஏதாவதொரு பொருள் வாங்கும்போதோ..

பார்த்துப் பார்த்து வாங்குவோம். அவ்வாறு வாங்கியும் சில நேரங்களில் நாம் தரமற்ற பொருளை விலைகொடுத்து வாங்கிவிட்டோமே என வருந்துவதுண்டு.

அதுபோல, எல்லா மனிதர்களும் நல்லவர்கள் என்றோ எல்லோரும் தீயவர்கள் என்றோ முடிவுசெய்துவிடமுடியாது.

மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் என உரைக்கிறது உலகநீதி.

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளலார்.

சனி, 7 மார்ச், 2026

மதிப்புகள் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


 காலம் பொன்போன்றது என்று சொல்வதுண்டு.

காலம் மட்டும்தான் பொன்போன்றதா, என்றால், காலத்தைக் காட்டிலும் மதிப்புமிக்கவை பல உண்டு.

காலத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள் தங்கத்தை விட மதிப்பு மிக்கது காலம் என்பார்கள். ஆம் யாவருக்கும் 24 மணிநேரம் பொதுவானதாக இருந்தாலும் எல்லோரும் அதை ஒரே மாதிரி பயன்படுத்துவதில்லை.

பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கு கல்வியின் மதிப்பை, வாழ்க்கையின் மதிப்பை, உழைப்பின் மதிப்பை, நேரத்தின் மதிப்பை, பணத்தின் மதிப்பை இப்படி பல்வேறு மதிப்புகளையும் உணர்த்துகிறார்கள். பெற்றோர்களே எல்லா மதிப்புகளையும் உணர்த்த முடியாது என்பதால்தான் கல்வி நிலையங்களில் மேலும் இம்மதிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

பெற்றோரிடமும் கல்வி நிலையங்களிலும் இம்மதிப்பை உணராதவர்கள் வாழ்க்கையில் அனுபவம் வழியாக இம்மதிப்பை உணர்கிறார்கள். ஆனால் அனுபவம் பாடம் நடத்திய பிறகு தேர்வு வைக்காது. தேர்வு வைத்தபின்தான் பாடம் நடத்தும்.

புதன், 4 மார்ச், 2026

கற்றது ஒழுகு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


கற்றலும் கடைப்பிடித்தலும், வாழ்வில் உயர்வதற்கான  திறவுகோல்களாகும். கல்வியின் நோக்கம், தேர்வில் மதிப்பெண் பெறுவது, பட்டம் பெறுவதுமட்டும் அல்ல. கற்ற கல்வியானது ஒரு மனிதனின் ஒழுக்கத்திலும், அவன் எடுக்கும் முடிவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும்.

திருவள்ளுவர்,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. (391)  என்றார்.

எதையும் தெளிவாகக் கற்க வேண்டும். அதோடு நின்றுவிடக் கூடாது; கற்ற அறநெறிகளின் வழியில், வாழ்க்கை அமைய வேண்டும். அறிவு என்பது வழிகாட்டும் ஒளி என்றால், அந்த ஒளியில் நடப்பதே உண்மையான அறம். எல்லா நேரமும் கற்ற கல்வியை வாழ்க்கையில் கடைபிடிக்க இயலுமா என்று சிந்தித்த வள்ளுவர் நிற்க அதற்குத் தக என்றார். சூழல்களுக்குத் தக சரியாக நிற்பதே அறிவின் வெளிப்பாடு.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.             (297)

உண்மை பேசுவது அறம் செய்வதைவிட உயர்ந்தது என்று சொன்ன வள்ளுவர்,

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.      (292)

நன்மைக்காகப் பேசும் பொய்களும் வாய்மை எனக் கருதப்படும் என்றார். அதனால் நாம் வாழ்வில் எந்த சூழலில் உண்மை பேசவேண்டும், எந்த சூழலில் பொய்பேசவேண்டும் என்று சிந்தித்துப் பேசவேண்டும்.