வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

பழந்தமிழரின் இசைக்கருவிகள்(படம்)



ஓரறிவுயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரைக்கும் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இத்தகைய இசைக்கு அடிப்படையனவை இசை்ககருவிகளாகும். பண்டைத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்று வெவ்வேறு வடிவங்களோடும், பெயர்களோடும் நம் பயன்பாட்டில் உள்ளன.

பண்டைத்தமிழர் இசைக்கருவிகளை,

தோல் கருவி
நரம்புக்கருவி
துளைக்கருவி
கஞ்சக்கருவி

என நான்கு வகையாகப் பகுத்தனர். இக்கருவிகளுள் எது முதலில் தோன்றியது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

தோல் கருவிதான் முதலில் தோன்றியது என்போர்,
வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல் வெயிலில் காய்ந்த போது ஏதோவொரு கல்பட்டாலும் ஒலி எழுப்பும் தன்மையுடன் அத்தோல் இருக்கும். அதை அறிந்த பழந்தமிழன் அந்தத் தோலைக் கல்லில் போர்த்தி இருகக் கட்டி ஒலி எழுப்பினான். இதுவே தோல்கருவியின் தோற்ற வரலாறு என்கின்றனர்.

நரம்புக்கருவி தான் முதலில் தோன்றியது என்பவர்கள்,

பழந்தமிழர் போருக்காகவோ, வேட்டையாடவோ வில்லைப் பயன்படுத்தினர். வில்லை எய்தபோது நாணிலிருந்து வரும் ஒலியே யாழ் தோன்றக்காரணமானது. யாழில் பழமையானது வில்யாழ், சீறியாழ், பேரியாழ், மகர யாழ், செங்கோட்டியாழ் எனப் பழ நரம்பாலான இசைக்கருவிகள் வளர்ச்சி பெற்றன. இன்று பயன்பாட்டிலிருக்கும் வயலின், கிட்டார் போன்ற நரம்பிசைக் கருவிகளுக்கு யாழே தாயாகும்.

துளைக்கருவி தான் முதலில் தோன்றியது என்பவர்கள்,

மூங்கிலில் வண்டு செய்த துளையில் காற்று வந்து முத்தமிட்ட போது மூங்கிலின் சிணுங்களே மண்ணில் தோன்றிய முதல் இசை என்கின்றனர் சிலர்.

கஞ்சக்கருவி இரும்பு, செம்பு, பொன் ஆகியவற்றால் செய்யப்பட்டது. சேர்ந்திசைக்கருவியாக இக்கருவி பயன்பட்டது.

வாழ்வியலில் இசைக்கருவிகள்.

பழந்தமிழரின் வாழ்வியலோடு இசைக்கருவிகள் இரண்டரக் கலந்திருந்தன.

பண் இசைப்பதால் பாணர் என்று பெயர் பெற்ற கலைஞர்கள் தம்மோடு எப்போதும் யாழ் வைத்திருந்தனர்.
சீறியாழை வைத்திருப்பவர் சிறுபாணர் என்றும் பேரியாழை வைத்திருப்பவர் பெரும்பாணர் என்று பெயர் பெற்றனர்.

ஆயர்கள் ஆநிரைகளை மேய்ப்பதற்கு குழல் இசைத்தனர்.

சங்க கால வாழ்வியலில் அதிகம் பயப்பட்ட இசைக்கருவிகளில் தோல்கருவிகளுள் குறிப்பிடத்தக்கது பறை, முரசு, முழவு ஆகியன ஆகும்.

ஆற்றுநீர் அணை உடைந்து வந்தால்,
யானை மதம்பிடித்து ஓடி வந்தால்,
மக்களுக்கு அறிவிப்பு செய்ய தோல்க்கருவியை இசைத்தனர்.
உழவுத் தொழில்.
குரவை, துணங்கை, வெறியாட்டு ஆகிய கூத்து நிகழ்விலும் தோல்க்கருவி முதன்மை பெற்றது.

போரில் வெற்றியின் அடிப்படையாக முரசொலி இருந்தது. எந்த நாட்டு மன்னன் வெற்றி பெறுகிறான் என்பதை முரசொலியை வைத்தே அறிந்துகொள்ள முடியும். ஒரு மன்னன் வெற்றி பெற்றால் முதலில் செய்வது தோற்ற மன்னனின் முரசின் கண்ணைக் கிழிப்பது தான். அரசனுக்கு அளிக்கும் மதிப்பை முரசுக்கும் முரசுகட்டிலுக்கும் அக்கால மக்கள் அளித்தனர்..

வழி தவறியவர்களுக்கு வழிகாட்டும் இசை.

அன்று பல சூழல்களின் காடுகளைக் கடந்து செல்லும் நிலையிருந்தது. அப்போது வழிமயக்கம் ஏற்பட்டு எப்படிச் செல்வது என்ற வழிச்செல்வோர் அஞ்சும் போது, மேட்டுப்பகுதிகளில் அனைவரும் கூடித் தம் இசைக்கருவிகளால் இசைத்தனர். அவ்விசை கேட்டுக் கானக்காவலர்கள் ஓடோடி வந்து முதலில் அவர்களுக்குப் பசி தீர காய் கனிகளை அளிப்பர். பின் அவர்கள் வழிமயக்கம் தீர உதவுவர்.

பழங்கால இன்னிசைக் கச்சேரி.

பல இசைக்கருகளையும் சேர்ந்து இசைக்கும் பெரிய இசைநிகழ்ச்சிகள் பலவற்றையும் அன்றைய தமிழன் கேட்டு மகிழ்ந்திருக்கிறான்..

இன்னியம் ( இனிய இசை ஒலி)
பல்லியம் ( பல இசைக்கருவி)
அந்தரப்பல்லியம் (வானில் இசைக்கும் ஒலி)


ஆகிய சொற்கள் இதற்குச் சான்றுகளாகின்றன.

இசையால் பெயர் பெற்ற தமிழன்.

பாணர் ( பண் இசைப்பதால்)
சிறுபாணர் ( சீறியாழை இசைப்பவர்)
பெரும்பாணர் ( பேரியாழை இசைப்பவர்
பறையர் ( பறை இசைப்பவர்)
துடியர் ( துடி இசைப்பவர்)
கடம்பர் (கடம் இசைப்பவர்)
இயவர் ( இசைப்பவர்
கூத்தர் ( கூத்தாடுவதால்)
வயிரியர் ( வயிர் என்னும் கருவியை இசைப்பவர்)

கலைஞர்கள் கருவிகளைக்கட்டித் தம் தோளில் சுமந்து கொண்டு வள்ளலை நாடிச் செல்வதைப் பல சங்கப்ப பாடல்கள் சுட்டுகின்றன.
சான்றாக மலைபடுகடாம் என்னும் பத்தப்பாட்டு நூலில் இடம் பெற்றுள்ள குறிப்பு,

விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, 5
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் து¡ம் பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் து¡ம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, 10
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,

(மலைபடுகடாம் -2-11)

இப்பாடலில் இவ்விசைக்கருகளின் இசையை அழகாகக் குறிப்பிட்டுள்ளார் புலவர்.

இவ்வாறு பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்றைய இசைக்கருகளுக்கு அடிப்படையாகும். பழந்தமிழர் வகுத்த பண்களே இன்றைய இராகங்களுக்கு முன்னோடி.

இன்றை இசைக்கருவிகளுக்கு அடிப்படை மின்சாரம்.
மின்சாரம் இல்லாவிட்டால் இந்தக் கருவிகள் செத்துப் போகும்.

பழந்தமிழர் இசைக்கருவிகளின் அடிப்படை இயற்கை.

இயற்கையப் புறந்தள்ளி மனிதனால் வாழமுடியாது!
இயற்கைக்கு இணையான இசையை எந்த ஒரு இசையமைப்பாளனாளும் உருவாக்க முடியாது!
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் பழந்தழிழர்தம் இசைக்கருவிகளும் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையே.
அதனால் தான் சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது இவ்விசைக்கருவிகளின் ஒலிகளைக் கேட்டுணர முடிகிறது.

பழந்தமிழரின் அனுபவங்களும், அவர்கள் விட்டுச்சென்ற பழைய கருவிகளுமே நமது இன்றைய இசைக்கு வாழ்வுக்கான அடிப்படை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

சனி, 30 ஜனவரி, 2010

மனையுறை குருவிகளின் காதல்.




சங்கப்பாடல்கள் அகப்புற வாழ்வியலை நேரிடையாகக் கூறவில்லை. இயற்கையைத் துணையாகக் கொண்டே எடுத்தியம்பியுள்ளன. மனையில் தங்கும் குருவிகளின் வாழ்வியலைக் கொண்டு இங்கு ஒரு அகவாழ்வியல் விளக்கம் பெறுகிறது.


தலைவன் தான் சென்ற செயல் முடிந்து தலைவியைக் காணவருகிறான். இத்தனை காலம் தலைவனை நீங்கியதால் தலைவி உடல் மெலிந்து, பசலையுற்று வாடியிருந்தாள். இனி அத்துயர் நீங்கியது எனத் தோழி மகிழ்ந்து உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.



“வீட்டின் கூரையில் தங்கியிருக்கும் கருமையான மோவயையுடைய குருவியின் சேவல், வேற்றுப் புலம் சென்றது
அங்கு தங்குமிடத்தில் ஓர் பெண்குருவியோடு கூடியது. பிறகு பொழுது சாயத் தம் கூட்டுக்கு வந்தது.
ஆண்குருவி வேறு பெண்குருவியோடு கூடியதற்கான அடையாளங்கள் உடலில் தெரிந்தன. அதனை அறிந்த உரிமையுடைய பெண்குருவி வருந்தியது. அதனால்த் தம் சிறிய பிள்ளைக் குருவிகளோடு சேர்ந்து ஆண்குருவியைத் தம் கூட்டுக்கு வரவிடால்த் தடுத்தது.

இதனால் ஆண்குருவி தம் கூட்டுக்குச் செல்ல இயலாது வெளியிலேயே நெடுநேரம் காத்திருந்தது. அவ்வேளையில் மழை வேறு வந்துவிட்டது. மழையிலேயே நனைந்தபடி நடுங்கிக்கொண்டு நின்றது. அதனைப் பார்த்த பெண்குருவி மனதில் நீண்ட நேரம் எண்ணி தம் ஈரநெஞ்சத்தால் ஆண்குருவியை உள்ளே வர அனுமதித்தது.

இத்தகைய நிகழ்வுக்குரிய மயக்கத்தைத் தரும் மாலைக் காலத்தில் மாலை அணிந்த குதிரைகள் மெல்லிய பயிர்களை மிதிக்க பெரிய வெற்றியையுடைய தலைவனின் தேர் வந்தது. இனி இவளது அழகிய நெற்றியில் உள்ள அழகானது பசலையால் உண்ணப்படாது.



ஒப்புமை.


குருவியின் சேவல் பிற பேடையொடு கூடியதால் சேவற்குரிய பேடை எதிர்த்துப் பின் இரக்கங்காட்டியது.




தலைவனும் முன்பு பரத்தையரோடு ( பொருட் பெண்டிர்) சேர்ந்து வந்தமையால் தலைவி ஊடினாள். (கோபம் கொண்டாள்) இப்போது வேறு பணிநிமித்தம் சென்று வருவதால் ஊடாது ஏற்றுக் கொள்வாள்.

உட்கருத்து.


வேறு பெடையை அணைந்து வரும் சேவலை, பெடையும் பிள்ளைகளும் கூட்டில் நுழையாதவாறு தடுத்தன என்பது முன்பு தலைவன் பரத்தையரிடம் சென்று மீண்டபோது தலைவி அவனை ஏற்காது ஊடல் கொண்டாள். பின் அவனின் வருத்தம் தாளாது ஏற்றனள். இக்கருத்தே இப்பாடலின் உட்பொருளாகவுள்ளது.

சங்க காலம் மக்கள் தொகை குறைவு ஆதலால் தலைவன் பரத்தையரிடம் செல்வதை சமூகம் ஏற்றது. சங்க காலத்துக்கு அடுத்துவந்த சங்க மருவிய காலத்தில் பரத்தையர் பிரிவு வன்மையக கடியப்பட்டது. ஆயினும் தன் தலைவன் தனக்கே உரியவன் என்னும் உரிமையைத் தலைவி தன் ஊடலாலும், வாயில் மறுத்தலிலும் புலப்படுத்துவது மரபாக இருந்தது.


பாடல் இதோ..



நற்றிணை 181. முல்லை

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
5 சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்,
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப,
கையற வந்த மையல் மாலை
10 இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று, பெருவிறல் தேரே;
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே.


(வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.)

இப்பாடல் வழியாக அகவாழ்வியல் ஒன்று அழகான இயற்கையோடு இயைபுபட விளக்கம் பெறுகிறது.

பாடல் படித்த பின்னரும் அகவாழ்வைக் காட்டிலும் மனதில் நிலைத்துவிடுவது குருவிகளின் வாழ்வியல்தான்.

தலைவனுடைய மனநிலை
தலைவியினுடைய மனநிலை

ஆகியவற்றைப் புரிந்து கொண்ட தோழியின் மனநிலை ஆகியவற்றைப் புலப்படுத்திய புலவர் பாராட்டுக்குரியவர்.

கவிதை சுட்டும் குருவிகளின் வாழ்க்கை உண்மையா? என்று சிந்திப்பதைவிட ஓர் அகவாழ்வியலை மனதில் நிற்குமாறு இயற்கையோடு இயைபுறப் பாடிய புலவரின் திறம் எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கது.

காலத்தை வென்ற இக்கவிதை தாங்கி வருவது சங்ககால வாழ்வியலை மட்டுமல்ல இயற்கையோடு அக்காலமக்கள் கொண்ட உறவுநிலையையும் தான்!

வெள்ளி, 29 ஜனவரி, 2010

மணல் வீடும் மாறாத மனமும்.




கதை ஒன்று…

மாலை 6 மணியாகிறது.
வழக்கமாக வேலைக்குச் சென்ற தன் மகள் 5மணிக்கே வந்துவிடுவாள்.
7 மணி ஆனபின்னும் இன்னும் வந்து சேரவில்லையே என்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகிறார்கள். தன் மகளின் அலைபேசியைத் தொடர்புகொள்ள முடியததால்,அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கிறார்கள். அவர்களோ தங்கள் மகள் 4 மணிக்கே கிளம்பிவிட்டாளே என்கிறார்கள்.

ஒன்றும் புரியாத குடும்பத்தார், அவளின் தோழி வீட்டுக்கெல்லாம் அழைத்துப்பார்த்து ஏமாற்றத்தை மட்டுமே பதிலாகப் பெறுகிறார்கள்.

இந்த சூழலில் இந்தக் குடும்பத்தின் குழப்பத்தைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளோர் கதை திரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒருவர் சொல்கிறார்..

அந்தப் பொன்னு இப்படி ஓடிப் போகும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அந்தப் பொன்னு ஒரு பையனோட வண்டில போனத நான் பல தடவ பார்த்திருக்கேன்..!

இன்னொருவர்…

அட! ஆமாங்க…
அந்தப் பொன்னு என்ன அடக்க ஒடுக்கமாவா இருந்துச்சு..
யாரப்பார்த்தாலும் சிரிச்சி சிரிச்சிப் பேசிட்டு…..
அதான் சொல்லாமக் கூட யாரையே கூட்டிட்டு ஓடிடுச்சி!

இவ்வாறு வாய்க்கு வந்தவாறு ஆளாளாளுக்குப் இந்தப் பெண்ணின் குடும்பத்தாரின் காதுபடவே பேசிக்கொண்டிருக்க…………….

ஒருவழியாக அந்தப் பெண்னே வீடு வந்து சேர்ந்தாள்!


அவ்வளவு தான் கதை…

என்ன கதையிது. கதையின் முடிவு என்ன?
அந்தப் பெண் எங்கு சென்றாள்?
ஏன் இவ்வளவு காலதாமதமாக வந்தாள்?
ஊர் மக்கள் பேசியதெல்லாம் உண்மையா? பொய்யா?
பெற்றோர் அவளிடம் என்ன கேள்வி கேட்டார்கள்?
அதற்கு அவள் என்ன பதில் சொன்னாள்?

இதெல்லாம் உணர்த்தவில்லை இந்தக் கதை.
இந்தக் கதை உணர்த்தும் நீதி…

ஒரு பெண் வீட்டிற்குக் காலதாமதமாக வந்தால் ஊரார் என்னவெல்லாம் பேசுவார்கள். இந்த சமூகம் இதனை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது தான்.

இந்தக் கதையைப் படிக்கும் போது நம்மைச் சுற்றி இது போன்ற பல உண்மை நிகழ்வுகளை நம் மனது எண்ணிப்பார்க்கும்.

அந்தப் பெண்ணின் பெற்றோர் மனம் படும் பாடு! என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியாது.

தமிழர் பண்பாட்டு கூறுகளுள் இவையெல்லாம் என்றும் மாறாத தன்மையுடைன. காலங்கள் பல மாறிய போதும் மாறாத மனித மனங்களுக்கான சில சான்றுகள்.

சங்கப்பாடல் ஒன்று..

(மகட் போக்கிய தாய் சொல்லியது.)

களவொழுக்கத்தில் இடையூறுகள் ஏற்பட்டன. ஆதலால் தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு சென்றான். செய்தியறிந்த நற்றாய் அவளது பிரிவாற்றாமையைால் வருந்திப் புலம்பினாள்.

தலைவி ஒரு தலைவனைக் காதலிக்கிறாள் வீட்டில் தம் காதலை ஏற்கமாட்டார்கள் என்று அஞ்சிய தலைவி தலைவனுடன் உடன்போக்கில் ( தலைவன் உடன் பெற்றோர் அறியாது செல்லுதல்) சென்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள். அதனால் அவளின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தோன்றின. அதனை நன்கு அறிந்தாள் நற்றாய்.


வயலைக் கொடி படர்ந்த பந்தரின் கீழ் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள் தலைவி.

அப்போது நற்றாய் தலைவியைப் பார்த்து…

நீ என்ன சிறுபிள்ளையா?
மணப்பருவம் அடைந்துவிட்டாய் என்பது நினைவில் இல்லையா?
வளம் பொருந்திய மனைக்கு உரிமையுடையவள் நீ!
இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பந்து எறிந்து விளையாடித்த திரிகின்றாயே!
என்றாள்.

அழகிய நெற்றியையுடைய தலைவி தன்மனதில்……

தாய் என்னுடைய காதலை அறிந்தனளோ!
அதனால் தான் சினம் கொண்டு பேசுகிறாளோ!
என்று அஞ்சியவாளாக,

விரைவில் தாயைப் பிரிந்துவிடுவோமே என்று எண்ணி தாய்மீது சினம் கொள்ளாது அன்புடன் இனிய மொழிகள் பேசினாள்.

ஒருநாள் தம் பெற்றோர் அறியாது தன் தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டாள்.

தன் மகள் தன்னை நீங்கி யாரோ ஒருவனோடு சென்றுவிட்டாள் என்பதை அறிந்த தாய் என்ன செய்வதென்று தெரியாமல்ப் பித்துப் பிடித்தவள் போல அழுதுபுலம்பினாள். தாம் பல முறை திட்டியபோதும் அன்பு மொழிபேசிய தலைவியின் ஒவ்வொரு செயல்களும் நற்றாயின் கண்முன் வந்து வந்து போயின. தினம் தினம் மகளின் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தவள் தாய். தன் மகள் வளர்ந்துவிட்டாளும் இன்னும் ஒரு குழந்தையாகவே எண்ணி வாழ்பவள் தாய். தன்னை நீங்கிச் சென்ற தலைவியை நினைந்து நினைந்து அழுது புலம்பினாள் தாய்.

அதற்குள் இதனை அறிந்த ஊரார் இச்செய்தியறிந்து தாயைத் தேற்றுவதற்காக வந்துவிட்டனர்.
ஊராறிடம் இவ்வாறு புலம்புகிறாள் தாய்…

அவள் இடையின் தழையாடைக்குச் சேர்க்கும் இலைகளைத் தரும் நொச்சி மரத்தைப் பாருங்கள்!

என் அன்புமகள் தன் சிவந்த சிறுவிரல்களால் செய்த சிறு மணல்வீட்டைப் பாருங்கள்!




கண்ணுடையவர்களே காண்கிறீர்களா?

நம் வீடு பலரையும் விருந்தினராக ஏற்று எந்நாளும் பெருஞ்சோறோடு விளங்கும் வீடன்றோ!

பெருவிருந்துகள் எந்நாளும் நடக்கும் இந்த வீட்டில் எம்மோடு மகிழ்வோடு இருந்திருக்கக் கூடாதா?

யாரோ ஒருவன்,
அயலான்,
அவன் மீது கொண்ட காதலால் நாங்கள் அவள் மீது கொண்ட அன்பைப் புரிந்துகொள்ளாமல்ச் சென்றுவிட்டாளே!!

அவள் சென்ற வழி என்ன இனிமையானதா?

கடத்தற்கரிய நெடிய வழியல்லவா அது!
திரண்ட அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் வெண்ணிற மலர்களைக் கரடிக்குட்டிகள் கவர்ந்துண்ணும் வெம்மை பொருந்திய மலைகளைக் கொண்டது!

அவ்வழிகளில் செல்லும் உயிர்கள் வெம்மை தாளாது நெட்டுயிர்ப்புக்கொள்ளும் தன்மையது அந்நிலம்..

அந்தோ என்மகள் என்ன துன்புறுவாளோ!


என்று புலம்புகிறாள் நற்றாய். பாடல் இதோ,

275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
5 'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
10 ஏதிலாளன் காதல் நம்பி,
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
15 நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?

அகநானூறு -275.
கயமனார்

இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

L காதலித்த தலைமக்கள் (காதலர்கள்) பெற்றோர் அறியாது வேறு புலம் செல்லும் உடன்போக்கு என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
L பாலையின் கொடுமை புலப்படுத்தப்படுகிறது.
L தலைவி தாய் மீது கொண்ட அன்பும், தாய் மகள் மீது கொண்ட அன்பும் சுட்டப்படுகிறது.
L வண்டல் இழைத்தல் என்னும் மணல் வீடு கட்டி விளையாடுதல், பந்துவிளையாடுதல் என்னும் இரு சங்ககால விளையாட்டுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
L பெண்கள் தழையாடை அணிந்து கொள்ளும் மரபு உணர்த்தப்படுகிறது.
L தலைவியை எண்ணி நற்றாய் கொண்ட மனத்துயர் இன்றைய பெற்றோர் கொள்ளும் மனத்துயராகவே எண்ணமுடிகிறது.


ஒப்புமை.


இன்றைய காதலுக்கும் சங்ககாலக் காதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

இன்றைய காதலர்கள் பெற்றோர் அறியாது செல்வதை ஓடிப்போதல் என்கின்றனர். சங்ககாலத்தில் “உடன்போக்கு“ என்று இது அழைக்கப்பட்டது.

சங்க காலக் காதலர்களின் காதலைப் பற்றி ஊரர் பேசுவது அம்பல் அலர் எனப்பட்டது. இன்று புறம் பேசுதல் என அழைக்கப்படுகிறது.

(அம்பல் என்பது காதலை பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமக்குள் பேசுவது.
அலர் என்பது அந்தப் பெண்ணின் பெற்றோர் மட்டுமன்றி ஊரறிய யாவரும் பேசுவது)

நடந்துமுடிந்த பின்னர் வருந்துவதைவிட,

நடக்கும் முன்னரே யோசித்தால் உறவுகள் துன்பமின்றி வாழமுடியும்.

J இத்தனை ஆண்டுகாலம் வளர்த்த பெற்றோர் தமக்கு சரியான துணை தேடித்தருவார்கள் என்ற மகளின் நம்பிக்கையும்,

J தன் மகளின் விருப்பம் தான் என்ன? அவன் அவளுக்கு ஏற்றவன் தானா? என அறிந்து, சாதி,மதம், பணம் ஆகியவற்றை நோக்காது, முடிந்தவரை அவளின் விருப்பத்துக்கு முன்னரிமை அளிக்கும் பெற்றோர்,

J பெண்ணின் பெற்றோர் அறியாது அவளை அழைத்துச் செல்வதைவிட அவளின் பெற்றோரிடமே சென்று பெண்கேட்டு மணம் செய்து கொள்ளும் காதலன்.

J இவ்வாறு ஒவ்வொருவம் சிந்தித்து நேர்வழியில் செயல்பட்டால் வாழ்வில் இது போன்ற துன்பங்கள் நேராது.

புதன், 27 ஜனவரி, 2010

தமிழாய்வும் அறிவியலும்.




தமிழ் என்றால் திருக்குறளும், சிலம்பும், இராமாயணம், மகாபாரதம் என்றே பலர் நினைத்துவருகின்றனர். தமிழ் மாணவர்களும், ஆய்வாளர்களும் இது போன்ற சிந்தனை கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகவுள்ளது. இயல், இசை, நாடகம் என்ற மூன்றிற்குள் பல துறைகள் அடங்கியுள்ளன. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் 25 தமிழ்த்துறைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

கீழே 37 துறைகள் குறிப்பிட்டிருக்கிறேன். இத்துறைகள் ஒவ்வொன்றும் தம்முள்ளே பல உட்கூறுகளைக் கொண்ட ஆய்வுக்களங்களாகத் திகழ்கின்றன.இத்துறைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே விரித்தால் 200க்கும் மேற்பட்ட தமிழாய்வுத் துறைகளை இனம் காணமுடியும்.
ஆய்வாளர்கள் சிறுகதை, புதினம், சிற்றிலக்கியம் என்றே தம் ஆய்வுகளை முடித்துக்கொள்கின்றனர்.
• தமிழாய்வுத் துறைகள் எத்தனை இருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.
• செய்த ஆய்வுத் தலைப்புகளையே மீண்டும் மீண்டும் செய்வதால் யாது பயன்?
ஆய்வு என்பது வாழ்வியலுக்குப் பயன்படவேண்டும். இலக்கியங்களை ஆய்வு செய்தாலும் அறிவியல் நோக்கோடு வாழ்வியலுக்குப் பயன்படுமாறு செய்தல் வேண்டும்.
• கவிஞர். வைரமுத்து இன்றைய நிலையை,

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.
என்றுரைக்கிறார்.

• தமிழ் படித்தால் வாத்தியார் வேலைக்குப் போகலாம் என்பது மட்டும் தமிழர்களிடம் ஆழப்பதிந்திருக்கிறது.
“வழக்கில் சொல்வதுண்டு,

“வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று“

அதன் உண்மையான பொருள்,

“வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான்“

என்பது தான். எல்லோரும் வாத்தியார் வேலைக்குப் போய்விடமுடியாது.
நன்கு ஆன்றோர் அனுபவங்களைக் கற்றவன் மட்டுமே வாத்தியாராகமுடியும்.

திருடனின் போக்குக் கற்றவனே போலீசு வேலைக்குப் போக முடியும்.

வேலையில் எந்தவிதத்திலும் உயர்வு தாழ்வில்லை. மொழியைக் காக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.
• தமிழ்த்துறை சார்ந்தோர் தமிழ்த்துறைகள் பலவற்றையும் அறிந்து தம் ஆய்வை மேலும் எதிர்கால நோக்கோடு, வாழ்க்கைக்குப் பயன்தரும் விதத்தில் செய்ய வேண்டும். இத்துறைகளிலெல்லாம் பணிவாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் அறிவியல்

• பழந்தமிழர் நாம் வியக்கும் அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் அறிவியல் அறிவைப் பெறவில்லை.
• தம் தாய்மொழியாயே சிந்தித்து இவ்வறிவைப் பெற்றனர். எல்லா அறிவியல்த் துறைகளும் தமிழ் மொழி வழியே இருத்தல் நம் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
• அறிவியலுக்கு மொழி தடையா?
• 500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழியால் அறிவியல் சொல்லும் போது 2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது?
• ஆய்வுகள் வாழ்வியலுக்கும் அறிவியலுக்கும் முன்னுரிமை தருதல் வேண்டும்.
• ஆய்வுத்திட்டங்களுள் அறிவியலுக்கும், வாழ்வியலுக்கும் முன்னுரிமையளிக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கு அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.


தமிழ்த்துறைகள்
.


² இலக்கியம் (சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்திஇலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல் திரட்டு, இக்கால இலக்கியம்)
² இலக்கணம் ( எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல்)
² வரலாறு (இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, மொழி வரலாறு, தமிழக வரலாறு, இந்திய வரலாறு)
² கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்த் துறை.
² சுவடியியல். (அரிய கையெழுத்துச் சுவடித் துறை)
² மொழியியல்.
² மானிடவியல்.
² அகராதியியல்.
² சொற்பிறப்பியல்.
² நுண்கலைகள். ( கோயில் கலை.கட்டிடக்கலை, ஒவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, நடனக்கலை)
² மொழிபெயர்ப்பியல்.
² ஒப்பியல்.
² தொன்மவியல்.
² சித்தரியல்
² சைவ சித்தாந்தக் கொள்கைகள்.
² காந்தியக் கொள்கைகள்.
² பெரியாரியக் கொள்கைகள்.
² நேரு கொள்கைகள்
² வள்ளுவக் கொள்கைகள்.
² கலைச் சொல்லாக்கம்.
² இதழியல்.
² தகவல் தொடர்பியல் ( வானொலி, தொலைக்காட்சி, இணையம்)
² அயலகத் தமிழ்த்துறை.
² சமூக அறிவியல்த் துறை.
² கல்வியியல்த் துறை ( மாணவர் உளவியல், கல்வி உளவியல்)
² தத்துவவியல்த் துறை.
² பழங்குடி மக்கள் வாழ்வியல்.
² நாட்டுப்புறவியல்த் துறை.( நாட்டார் வழக்காற்றியல்)
² தொல்லறிவியல்.
² தொழில் மற்றும் நிலஅறிவியல்.
² கணிப்பொறி அறிவியல்த் துறை.
² சுற்றுச் சூழல், மூலிகை அறிவியல்த் துறை.
² திறனாய்வியல்த் துறை.
² பதிப்பியல்த் துறை.
² சோதிடத் துறை.
உளவியல்த் துறை



தமிழில் இத்தனை துறைகள் இருக்கின்றன. இவையன்றி அறிவியலைத் தமிழ் மொழி வழி அணுகும் போது இன்னும் பல புதிய துறைகள் உருவாகும் வாய்ப்பிருக்கின்றனது. இதனை

அரசு,
தமிழ் வழி கற்கும் மாணவர்கள்,
தமிழ் மொழியைக் கற்கும் மாணவர்கள்,
பெற்றோர்,
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர்,


என யாவரும் உணரல் வேண்டும்.

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உவே. சாமிநாதையர் அன்று வடமொழியையோ வேறு துறையையே தேர்ந்தெடுத்திருந்தால் நாம் இன்று பெருமைபேசும் சங்க இலக்கியங்கள் கிடைத்திருக்காது.

அவர் தேர்ந்தெடுத்தது பதிப்பியல்த்துறை. அவரையும் அவரது பணியையும் யாரும் மறக்க முடியாது. அதுபோல,

தமிழுக்குத் தொண்டு செய்வோம்!
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்!

திங்கள், 25 ஜனவரி, 2010

பெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா? - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 02


குறுந்தொகையில் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று,

“கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?
இல்லை செயற்கை வாசனைப் பொருள்களாலேயே கூந்தல் மணம் பெறுகிறதா? என்ற கருத்து விவாதிக்கப்பட்டுள்ளது.

திருவிளையாடல் புராணச் செய்தி.

சிவனின் திருவிளையாடல்களுள் “தருமிக்குப் பொற்கிழி அளித்தல்“ என்பதும் ஒன்றாகும்.
தருமி என்பவன் ஏழை அந்தணன் ஆவான். அவன் வறுமையால் வாடிய காலத்தில் சிவன் ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

பாண்டிய மன்னன் செண்பகராமன் தன் மனைவியோடு சேர்ந்திருக்கும் போது அவளின் கூந்தல் மனம் காற்றுக் குதிரையேறி மூக்கு என்னும் பெரும் பாதை தாண்டி மூளை என்னும் ஆய்வுத்தளம் சென்று சேர்ந்தது. அவ்வளவுதான் செண்பக ராமனின் மூளை சிந்திக்க ஆரம்பித்துவிட்டது.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை வாசனைப் பொருள்களைத் தம் கூந்தலில் சூடுவதால் தான் மணம் பெறுகிறார்களா?
என்ற கேள்வி அவனைத் துளைத்தெடுத்தது. பதிலறியாமல்த் தவித்த மன்னன், தன் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடல் இயற்றுபவருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக அறிவித்தான்.

இதனை அறிந்து கோயிலில் சிவன் திருவுருவத்தின் முன் புலம்பிய தருமிக்கு இறைவன் ஒரு பாடலை அளித்தான். செண்பகராமனின் ஐயம் தீர்க்கும் தன்மை வாய்ந்த அந்தப் பாடலை எடுத்துச்சென்ற தருமி தமிழ்ச்சங்க அவையோர் முன் மன்னனுக்கு பாடிக்காட்டினான்.

பெண்களின் கூந்தல் இயற்கையிலேயே மனம் வாய்ந்தது என்னும் பொருள்தோய்ந்த அந்தப்பாடலைக் கேட்டு தம் ஐயம் தீர்ந்து மகிழ்ந்த மன்னன் பரிசளிக்க முற்படும்போது, அந்த அவையிலிருந்த நக்கீரர் என்னும் புலவர் தடுத்தார். இப்பாடலில் பிழையுள்ளது என்று தம் கருத்தைத் தெரிவித்தார். நக்கீரரை எதிர்த்து வாதம் செய்ய இயலாத தருமியும் திரும்பிச் சென்றார்.

என்ன நேர்ந்தது என்று வினவிய பாண்டியனிடம் நக்கீரர்,
“எய்தவனிருக்க அம்பை நோகலாமா?

எய்தவன் ஒருவன், ஆம் பாடல் எழுதியவன் வேறொருவன் இவன் பாவம் அம்பு. என்றார்.

தவறான பாடலுக்குப் பரிசளிக்க இருந்தோமே எம்மைக் காத்தீர் என்று மகிழ்ந்தான் மன்னன்.

கோயிலில் தமக்கு நேர்ந்த இழிவை எண்ணி வருந்திய தருமி முன்னர் தோன்றிய சிவன், தருமியை அழைத்துக்கொண்டு பாண்டியனின் அவைக்கு வந்தார். அவையில் நடந்த விவாதம்,
(மூல புராணத்தையும், திருவிளையாடல் புராணம் என்னும் படத்தின் வசனங்களையும் தழுவி,)

சிவன் - எனது பாடலில் பிழை கண்டவன் எவன்?
நக்கீரர் - அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்.
சிவன் - ஓ நக்கீரனா? சங்கைக் கீறு கீறு என்று அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா எனது பாடலில் குற்றம் காணத்தக்கவன்.
நக்கீரர் - சங்கறுப்பது எங்கள் தொழில். சங்கரனாருக்கு என்ன தொழில்.
அரனே அறுந்துண்டு வாழ்வோம். உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.
சிவன் - எமது பாடலில் என்ன குறை கண்டீர்? சொல்லிலா? பொருளிலா?
நக்கீரர் - சொல்லிலிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். பிழை பொருளில்.
சிவன் - பொருளில் என்ன பிழை கண்டீர்?
நக்கீரர் - பாடலை ஒரு முறை பாடுங்கள்.

சிவன் -

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம்
செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.“

நக்கீரர் - இப்பாடலின் பொருள்.

சிவன் - புரியவில்லையா?
தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல இப்பாடலை அமைத்திருக்கிறேன்.
நக்கீரர் - பாடலின் உட்பொருள்?
சிவன் - பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்பது.
நக்கீரர் - ஒருபோதும் இல்லை பெண்களில் கூந்தலுக்கு எக்காலத்தும் இயற்கையில் மணம் இல்லை. வாசனைத் திரவியங்களையும், மலர்களையும் தம் கூந்தலில் சூடுவதாலேயே அவர்கள் மணம் பெறுகின்றனர். அன்றி கூந்தலுக்கு இயற்கையில் ஏது மணம்?

சிவன் - ஓ உயர்ந்த குலப் பெண்களுக்கு?
நக்கீரர் - அவர்களுக்கும் தான்.

சிவன் - தேவ குலப் பெண்களுக்கு?
நக்கீரர் - நான் தினமும் வணங்கும் சிவனுக்கு அருகே அமர்ந்து காட்சியளிக்கிறாளே. உமையம்மை அவளுக்கும் கூட கூந்தல் செயற்கை மணம் தான்.

சிவன் - சினமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவராக, நக்கீரா நன்றாப் பார் என்கிறார்.
நக்கீரர் - சற்றும் தன் கொள்கையில் பின்வாங்காதவராக நக்கீரர் எதற்கும் அஞ்சாது. “ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே“ என்றுரைக்கிறார்.

சிவன் - சினம் அடங்காத சிவன் நக்கீரரை சுட்டெரித்துவிடுகிறார். பின்னர் பாண்டியன் சிவனிடம் வேண்டியதற்கிணங்க நக்கீரரை உயிர்ப்பிக்கிறார்.

நக்கீரர் - நக்கீரரும் பொற்றாமரைக்குளத்திலிருந்து எழுந்து வருகிறார்.

சிவன் ஆடிய திருவிளையாடல்களுள் ஒன்றாக இது அமைகிறது.

குறுந்தொகையில் இரண்டாவது பாடல் இறையனார் இயற்றியதாக உள்ளது. இறையனார் என்ற பெயர் கொண்ட புலவரும் இருந்திருக்கலாம் ஆயினும் இறையனார் என்பவர் இறைவனே என்று நம்பி இப்பாடலையும் திருவிளையாடல் புராணத்தையும் பிற்காலத்தில் வந்தோர் தொடர்புபடுத்திவிட்டனர்.
கொங்கு தேர் வாழ்க்கை


குறுந்தொகைப் பாடல் இதோ,

2. குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீயறியும் பூவே.
குறுந்தொகை - 02
பாடியவர் - இறையனார்.

இயற்கைப் புணர்ச்சிக்குப் (தலைவியைத் தலைவன் இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்) பின்னர் தலைவியைச் சந்திக்கும் தலைவன் அவளின் நாணத்தை நீக்குதல் பொருட்டு, மெய்தொட்டுப் பயின்று (தலைவியின் உடல் தொட்டு உரையாடல்) நலம் பாராட்டுதல் ( தலைவியின் அழகு நலத்தைப் பாடுதல்)

தலைவி நாணத்தோடு இருப்பதை உணர்ந்த தலைவன் அவளின் நாணத்தை நீக்க தும்பியைப் பார்த்துப் பேசுகிறான்.
பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்க்கை வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே!

எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக,

பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?

(பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம்பெண் ஆகியன பெண்களின் ஏழு பருவங்களாகும்)


இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்..


1. இயற்கைப் புணர்ச்சி ( தலைவன் தலைவியை இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்.
2. மெய்தொட்டுப் பயிறல் ( தலைவியைத் தொட்டுப் பேசுதல்)
3. நலம் பாராட்டல் (தலைவியின் அழகு நலத்தைப் பாராட்டுதல்) ஆகிய அகத்துறைகள் விளக்கப்படுகின்றன.
4. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்று சொல்கிறது இப்பாடல்.
5. காமம் செப்பாது - என்ற தொடர் விரும்பியதைக் கூறாது என்றுரைக்கிறது. காமம் என்றசொல் விருப்பம் என்ற பொருளில் வந்தமை புலனாகிறது. (கமம்- நிறைவு)
6. இறையனார் எழுதிய இப்பாடலை திருவிளையாடல் புராணத்தோடு தொடர்பு படுத்தியமை அறியமுடிகிறது.

கொங்கு தேர் வாழ்க்கை ஆய்வு.


தமிழுலகம் இப்பாடலை நிறைய விவாதித்து விட்டது. ஆயினும் இவ்வாய்வுகளுள் காலத்தை விஞ்சி நிற்பது, மு.வரதராசன் அவர்களின் “கொங்குதேர் வாழ்க்கை“ என்னும் நூலாகும். இந்நூல் பற்றி இவர் கூறும் போது,
ஆராய்ச்சித் தூண்டு கோல்.

பாட்டின் அமைப்பே ஆராய்ச்சியைத் தூண்டுவதாக உள்ளது. கூந்தலின் மணம் பற்றிய வண்டின் ஆராய்ச்சியைக் கேட்கிறான் காதலன். துணைவியின் கூந்தல் மணம் இயற்கையா? செயற்கையா? என ஆராய்கிறான் பாண்டியன். இப்பாட்டு குற்றமற்றதா? குற்றமுடையதா? என்று ஆராய்கின்றனர் சங்கப்புலவர்களும் நக்கீரனாரும்.
இப்பாட்டு நம் உள்ளத்திலும் ஓர் ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. இலக்கிய ஆராய்ச்சிக்கு உரிய முறை யாது? எது உயர்ந்த ஆராய்ச்சி என்று ஆராயுமாறு நம்மைத் தூண்டுகிறயது இப்பாட்டு.

என்று உரைக்கிறார்.

அறிவியல் அடிப்படையில் கூந்தல் மணம்.

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.


வியாழன், 21 ஜனவரி, 2010

சகுனம் பார்த்த பன்றி!




“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“

என்பது நம் முன்னோரின் அனுபவ மொழி. சகுனம் பார்க்கும் வழக்கம் பன்னெடுங்காலமாகவே நம்மிடையே உள்ளது. சகுனம் என்பது நன்மை, தீமைக்கான குறியீடு என்று பொருள் வரையறுத்து வழங்கிவருகின்றனர்.

சகுனங்களுள் பல்லி கத்துவது பல்வேறு மக்களும் நம்பும் குறியீடாக உள்ளது. இன்று, நேற்றல்ல சங்க காலம் முதலாகவே இந்த நம்பிக்கை உள்ளது..

ஊருக்கே குறி சொல்கிறது பல்லி,
என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். அந்தப் பல்லி மனித உடலில் எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கென்று பலன் சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.
தன் துணையை அழைக்கத்தான் பல்லி கத்துகிறது என்பது படித்தவருக்குக் கூடப் புரியவில்லை.

பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..

'ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தானாம்.
ஒரு ஏழை அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்தானாம். அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லையாம். தான் காலையில் முழித்த முகம் சரியில்லை என்ற எண்ணம் வந்ததாம். தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டானாம்.
ஏழையும் அழைத்துவரப்பட்டான். அரசன் அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தானாம். சிரித்தானாம் அந்த ஏழை!
சாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பிய அரசன்,

ஏன் சிரிக்கிறாய்?

என்று கேட்டானாம். அந்த ஏழை சொன்னானாம்.

“என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது.
நான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன். எனக்கோ உயிரே போகப் போகிறது. யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன் என்றானாம்.”


கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்ற. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல.

நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது.

மனிதன் தன்னைப் போலவே தன் நம்பிக்கைகளையும், கடவுள் குறியீடுகளையும் படைத்துக்கொண்டான்.

நற்றிணைப் பாடல் ஒன்று,


தினைக்கதிர்களை உண்ணச் சென்ற காட்டுப்பன்றி தவறான திசையிலிருந்து பல்லி கத்தியதால் தனக்கு துன்பம் நேரும் என்று அஞ்சி பின் திரும்பியாதாக ஒரு குறிப்பு உள்ளது.

பாடல் இதோ,


எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
5 பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
10 இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!


புலவர் - உக்கிரப் பெருவழுதி

நற்றிணை - 98. (குறிஞ்சி)

பாடல் குறிப்பு.

இரவுக்குறி வந்தொழுகும் தலைவனத் தோழி வரைவு கடாயது ( திருமணத்துக்கு அறிவுறுத்தியது)

களவுக்காலத்தில் இரவுக்குறியில் (இரவுசந்திப்பு) பல தடைகளையும் மீறி வந்து தலைவியைச் சந்தித்து மகிழும் தலைவனிடம் தோழி,

நீ பல அச்சம் நிறைந்த வழிகளில் காவல்களை மீறி வருகிறாய். அதனால் உனக்கு ஏதும் தீங்கு நேருமோ என தலைவி அஞ்சுகிறாள். நீ இரவில் வரும் வழியினும் அதனால் வருந்தும் தலைவியின் இமை மூடாத கண்களும், உன்னைத் தேடிச்சென்று திரும்பி வராத நெஞ்சமும் கொடியன என்கிறாள்.

பாடலின் பொருள்.

முள்ளம் பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிர்களையுடைய பிடரியும், சிறிய கண்களையும் கொண்டது காட்டுப்பன்றி. அது தினைப் பயிர்களை உண்பதை விரும்பிச் சென்றது. பெரிய இயந்திரம் பொருத்திய பகுதியில் அப்பன்றி செல்லும் போது பல்லியொன்று கத்தியது. பல்லியின் ஒலியைத் தனக்கு எதிர்வரும் துன்பத்தின் குறியீடாக எண்ணிய பன்றி தினை உண்ணாமல்த் திரும்பி மலைப் பகுதியில் தங்கியது.

எம் தந்தைபால் பாதுகாக்கப் படும் காவல் நிறைந்த மாளிகையில் தூங்காத காவலர் சிறிது அயர்ந்த நேரத்தில் வந்து நீ தலைவியைப் பார்த்து மகிழ்கிறாய். உன்னை எண்ணித் தலைவி வருந்துகிறாள். நீ வரும் துன்பம் நிறைந் வழிகளைக் காட்டிலும் தலைவியின் மூடாத இமைகளும், உன்னைத் தேடிச்சென்று திரும்பாத அவளின் நெஞ்சும் கொடியன. என்று தலைவனைப் பார்த்து வரைவு கடாவினாள் தோழி (தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள்)இதனால் தலைவியின் அன்புமனதும் எடுத்துரைக்கப்பட்டது.

இப்பாடலின் உட்பொருள்.

� காட்டுப் பன்றி கூட வழித்துன்பம் கண்டு தன் பயணத்தை தவிர்க்கும் நீயோ எதற்கும் அஞ்சாது வந்து தலைவியைப் பார்க்கிறாய். உனக்கு ஏதும் துன்பம் நேருமோ என்ற அச்சத்தால் தலைவிக்கு தூக்கம் வருவதில்லை. உன்னை எண்ணிச் சென்ற அவளின் மனது அவளிடம் மீண்டும் வராமல் மிகவும் வருந்துகிறாள்.

� பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்

1. பல்லி கத்துவது நன்மை, தீமைக்கான குறியீடு என்ற நம்பிக்கை சங்ககாலத்திலேயே இருந்தது என்பதை அறியமுடிகிறது.
2. இயல்பாகவே விலங்குகள் ஒலிகளை உள்வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் பன்றி, பல்லியின் ஒலியை துன்பத்திற்கான குறியீடாகக் கொண்டது என்ற புலவரின் கற்பனை, அவர்களின் எண்ணத்தின் வெளிப்பாடகக் கொள்ள முடிகிறது.
3. வரைவு கடாவுதல் (திருமணத்திற்குத் தூண்டுதல்) என்றும் அகத்துறை விளக்கப் படுகிறது
4. இரவுக்குறி ( தலைமக்களின் இரவு நேர சந்திப்பு) என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.
5. வீங்கு பொறி என்பது பெரிய இயந்திரம் என்ற பொருளுடையது. பன்றிகளைப் பிடிக்க பெரிய இயந்திரங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.