மீன் சென்ற வழி....


பொருளின்றி இவ்வுலகில் வாழமுடியாது!
பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும் பொருள்!

எனவுரைப்பர் வள்ளுவர்.
எல்லோரும் தேடுவது பொருளே!
எல்லோருக்கும் கிடைக்கின்றதா பொருள்?

கிடைத்தாலும் நிலைக்கின்றதா?

நிலைத்தாலும் எடுத்துச் செல்லமுடியுமா?

“காதில்லாத ஊசியைக்கூட நாம் இறந்தபின் நம்முடன் எடுத்துச்செல்லமுடியாது“

என்றெல்லாம் சிந்தித்தால்…

நிலையாமையை நன்கு உணர்வோம். மனிதம் மலரும்!

அடுத்தவேளை உணவுக்குக்கூட வழியின்றி பல்லாயிரம் பேர் தவிக்க உனக்கென்ன ஏழுதலைமுறைக்குச் சொத்து வேண்டியிருக்கிறது என்ற கேள்வியை நம் மனம் நம்மிடம் கேட்கும்.

சங்க இலக்கியத்தில் நற்றிணையில் ஓர் அழகான அகச்சூழலில் ஆழமான வாழ்வியல் அறம் இயல்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.தலைவியை விட்டு நீங்கி பொருள் ஈட்ட வேண்டுமென எண்ணியது தலைவனின் நெஞ்சம். அந்நிலையில் தலைவன் தன் நெஞ்சினை நோக்கி…


பொய்கையில் மீன்சென்ற வழியைப் போல இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகக் கூடியது செல்வம்!

நானோ கடல் சூழ்ந்த அகன்ற இந்நிலத்தையே மரக்காலாகக் (அளவீடுகருவி) கொண்டு ஏழு மரக்கால் அளவு பெரிய நிதியைப் பெருவதாக இருந்தாலும். அந்நிதியை விரும்பேன்.ஏனெனில்,

நான் இவளது கண்களால் கட்டுண்டேன்!
இது இன்பம் தந்தது.
இவ்வின்பத்தினும் பொருள் சிறந்தது இல்லை!

எனவே பொருள் தேட உன்னோடு நான் வரமாட்டேன் என்றான்.

பாடல் இதோ…….


16. பாலை
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை-வாழி, என் நெஞ்சே!-பொருளே,
5 வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ;
யானே,
விழுநீர் வியலகம் தூணிஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
10 அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்;
எனைய ஆகுக! வாழிய பொருளே!

சிறைக்குடி ஆந்தையார்
(பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது)

பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று எண்ணிய நெஞ்சிடம் தலைவன் பேசி தன் பயணத்தைத் தவிர்த்தான்.

பாடல் வழி..


² செலவழுங்குதல் (தலைவன் பயணத்தைத் தவிர்த்தல்) என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
² பொருள் நிலையற்றது என்னும் வாழ்வியல் உண்மை உணர்த்தப்படுகிறது.

² பொருள் மீன்செல்லும் வழிபோல….
என்னும் உவமை எண்ணி இன்புறத்தக்கதாகவுள்ளது.

² நிலத்தையே மரக்காலாகக் கொண்டு ஏழுமரக்கால் செல்வம் தந்தாலும் அதனை நான் விரும்பமாட்டேன் என்ற தலைவனின் கூற்று நயமுடையதாகவுள்ளது.


v பொருளின்றி யாரும் வாழமுடியாது!
v பொருளோடு யாரும் போகமுடியாது!

Comments

 1. அருமை வாழ்த்துக்கள் நண்பரே அழகாய் எழுதி இருக்கிறீர்கள்

  ReplyDelete
 2. காலைப்பொழுதிலேயே இலக்கியம் தந்த சுகம் அருமை குணா !

  ReplyDelete
 3. நல்ல இடுகை.பாராட்டுகள்.

  ReplyDelete
 4. இந்த அளவிற்கு நமக்கு தமிழ் வராதுப்பா.. அருமைங்க

  ReplyDelete
 5. //“காதில்லாத ஊசியைக்கூட நாம் இறந்தபின் நம்முடன் எடுத்துச்செல்லமுடியாது“

  என்றெல்லாம் சிந்தித்தால்…

  நிலையாமையை நன்கு உணர்வோம். மனிதம் மலரும்!//

  ஒரு நல்ல கருத்தை இலக்கியத்துடன் சேர்த்து தந்த விதம் அருமை. நன்றி.

  ReplyDelete
 6. நல்ல கருத்துக்களைக் அழகான கவிதை முத்துக்களாகக் கோர்த்துத் தரும் பாங்கு வியப்பு......வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. பொய்கையில் மீன்சென்ற வழியைப் போல இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகக் கூடியது செல்வம்!


  அருமை...குணா...


  நான் இவளது கண்களால் கட்டுண்டேன்!
  இது இன்பம் தந்தது.
  இவ்வின்பத்தினும் பொருள் சிறந்தது இல்லை!

  என்ன சொல்ல..

  ReplyDelete
 8. @ஹேமா இலக்கியம் சுவை நாடி ஒவ்வொரு பதிவுக்கும் தவறாமல் வருகைதரும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
 9. @Kousalya தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் கௌசல்யா

  ReplyDelete
 10. @தமிழரசி பெயருக்கேற்றது போல தங்களுக்குள்ள தமிழார்வம் மகிழ்ச்சி கொள்ளவைக்கிறது.

  நன்றி தமிழ்.

  ReplyDelete
 11. இவ்வுலக இயக்கமே பொருள் பின் ஓடுவதாய் மாறிவிட்ட இத்தருணத்தில், தக்க அறிவுறுத்தலாக நினைவு படுத்தப்பட்ட பாடலுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 12. அருமையான பதிவு. தமிழாசிரியர் என்பதை உங்கள் எழுத்திலேயே காட்டுகிறீர்கள் . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. @நிலா மகள் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிலா மகள்.

  ReplyDelete
 14. @ஈரோடு தங்கதுரை வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தங்கதுரை

  ReplyDelete
 15. காதலின் ஆழத்தைச் சொல்லும் மிக அருமையான இரு உவமைகள். அருமை!

  ReplyDelete
 16. நன்றி குமரன்

  ReplyDelete

Post a Comment