வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 28 அக்டோபர், 2010

காதல்னா சும்மாவா..?


எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை – காதல்!
காதலர் மாறினாலும் காதல் என்றும் மாறுவதில்லை.

களவும் கற்று மற ! என்பதையே பலர் பிழைபடத்தான் புரிந்துகொண்டுள்ளனர்.
களவும் கற்று மற ! என்பதற்குத் திருடவும் கற்றுக்கொள்ளவேண்டும் என்றே பொருள் கொண்டுவருகின்றனர்.

களவு என்றால் காதல்.
காதலிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். காதலித்துக்கொண்டே இருந்துவிடக்கூடாது. விரைவில் அதனை மறந்து திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதையே..

களவும் கற்றுமற என்று நம்முன்னோர் உரைத்துச்சென்றனர்.

இன்றைய காதலர்கள்.........

“அறுகம்புல் போல நாங்கள் வளர்த்த காதலை
ஆடுமாடு போல உங்க அப்பன் வந்து மேய்ந்துவிட்டான்“
என்று புலம்புகின்றனர்“.

இன்றைய சூழலில் காதலின் பொருளும், அதன் புரிதலும் பிற பண்பாட்டுத் தாக்கங்களால் சற்றுத் திரிபடைந்துள்ளது.
அற்றைக் காலத்தில் காதலில் எவ்வளவு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை எடுத்தியம்பும் அழகான பாடல் இதோ…

இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், 5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் 10
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின், 15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன் மா 20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.

அகநானூறு 122. குறிஞ்சி - பரணர்

(தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொன்னது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். (தலைவன் அருகில் மறைந்திருக்க அவன் வந்தமை அறியாதது போல தோழிக்குத் தலைவி சொல்வதாக இத்துறை அமைந்துள்ளது)


மிகுதியான கள்ளைப் பருகிக் களித்தாடும் மக்களையுடைமையால், ஆரவாரத்தினையுடைய பழைமையான இந்த ஊரானது, விழாக்கள் நடைபெறவில்லையாயினும் உறக்கம் கொள்ளாது.

ஊரிலுள்ள வளமிக்க கடைத்தெருவும் பிற தெருக்களும் ஒரு சேர உறங்கி ஒலி அடங்கினாலும் ,

உரத்த குரலுடன் பேசும் கொடிய சொற்களைக் கொண்ட நம் அன்னை உறங்கமாட்டாள்.

நம்மைப் புறம் போகவிடாது காவல் செய்யும் அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினாலும் உறங்காத காவலைக் கொண்ட ஊர்க்காவலர் விரைந்து சுற்றி வருவர்.

ஒளி பொருந்திய வேலையுடைய அக்காவலர்கள் உறங்கினாலும் கூர்மையான பற்களையும், வலப்பக்கம் உருளும் தன்மைகொண்ட வாலையுடைய நாய் குரைக்கும் .

நிலவோ வான்முழுவதும் தோன்றிப் பகல் போல ஒளி செய்யும். அந்நிலவு மறைந்து எங்கும் இருள் பரவிய பொழுதும், இல்லத்து எலியை உணவாகக் கொள்ளும் வலிய வாயினையுடைய கூகைச் சேவல் (ஆந்தை) பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும். பொந்தில் வாழும் அந்தக் கூகைச் சேவல் குழறாது உறங்கினாலும் மனையில் வாழும் கோழிச் சேவல் தனது மாட்சிமைப்பட்ட குரலையெழுப்பிக் கூவும்.ஒருநாள் இவையெல்லாம் உறங்கினபொழுது எப்போதும் என்னையே எண்ணிக்கொண்டிருக்கும் எம் தலைவன் என்னைக் காணாது ஒழிவர்.

என்று ஒரு தலைவி காதலின் இடையூறுகளைக் காட்சிப்படுத்துகிறாள்.


ஒப்புநோக்க...

இன்றைய சூழலில் காதலர்கள் ஒருவரை சந்திப்பதில் சில மரபு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சங்ககாலக் காதலர்கள் ஊராரின் அலருக்கு (பழி தூற்றுதலுக்கு) அஞ்சினர். இன்றைய காதலர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
அன்றைய காவலர்களைக் கண்டு காதலர்கள் அஞ்சினர். இன்றை காதலர்களோ காவல் நிலையங்களிலே தஞ்சமடைந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

9 கருத்துகள்:

 1. //இன்றைய காதலர்கள்.........

  “அறுகம்புல் போல நாங்கள் வளர்த்த காதலை
  ஆடுமாடு போல உங்க அப்பன் வந்து மேய்ந்துவிட்டான்“
  என்று புலம்புகின்றனர்“. //

  ஹ..ஹா...ஹா அருமை.
  முன்னோர் காலத்து காதலையும் தற்பொதைய காதலையும் விரிவாகவும் சிறப்பாகவும் விளக்கீட்டீங்க பேராசிரியரே..!

  பதிலளிநீக்கு
 2. சங்க கால காதல் - தற்கால காதல் - ஒப்பீடு அருமை.

  பதிலளிநீக்கு
 3. சங்க கால காதல் - தற்கால காதல் - ஒப்பீடு அருமை.

  Repeat Chitra Madam.

  பதிலளிநீக்கு
 4. @சே.குமார் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 5. “அறுகம்புல் போல நாங்கள் வளர்த்த காதலை
  ஆடுமாடு போல உங்க அப்பன் வந்து மேய்ந்துவிட்டான்“
  என்று புலம்புகின்றனர்“. //

  அடடா அருமை.
  காதலர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.

  பதிலளிநீக்கு