வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 30 ஏப்ரல், 2011

நாலு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி



அடுத்து ஆட்சிக்கு வருவது யாராக இருந்தாலும் நமக்கு என்ன செய்வாங்க..
தேர்தல் அறிக்கையில சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவாங்களா..
இலவசமா கொடுக்கறேன்னு சொன்னதையெல்லாம் மறக்காமக் கொடுப்பாங்களா..
என்று மட்டும் இங்கு ஒரு கூட்டம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது!

சரி இலவசமா கொடுக்கறாங்கன்னா எப்படிக் கொடுக்கறாங்க அவங்களோட சொந்தப் பணத்தையா கொடுக்கறாங்க..?
நம்ம வரிப்பணம் தானே இது!
இந்த இலவசமெல்லாம் நாளைய விலைஉயர்வுக்கு காரணமாகிவிடாதா..?

என்பதையெல்லாம் சிந்திக்க நேரமே இல்லை இவர்களுக்கு.

இதோ ஒரு சிந்திக்க வைத்த,வைக்கும் குறுந்தகவல்.

“எதுக்கு அரிசி? மிக்சி? கிரைன்டர்?
எல்லாத்தையும் தனித்தனியா கொடுக்கறாங்க?

ஒரு ஆளுக்கு நாலு இட்லி கொஞ்சமா கெட்டி சட்னின்னு வீட்டுக்கு வீடு கொடுத்துட்டா...
இலவச தொலைக்காட்சியப் பார்த்துட்டு எங்க காலத்தை ஓட்டிருவோம்ல..!“

இந்த நகைச்சுவை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தான்.

மக்களும் ரொம்பத் தாங்க மாறிப்போயிட்டாங்க.
கடைக்குப் போனேன்..
இடியப்ப மாவு வாங்கலாமேன்னு..
கடைக்காரர் சொன்னார்..
இன்னும் என்னப்பா மாவு வாங்கிட்டிருக்கீங்க..
இடியப்பத்தை அவித்து பாக்கெட் போட்டு வைய்திருக்கோம்..
இதை வாங்குங்க, வீட்டுக்குப் போங்க, வேகவைங்க, சாப்பிடுங்க.

இதை மாதிரி சப்பாத்தி கூட போட்டே பாக்கெட்ல வைத்திருக்கோம் என்றார்.
கடைக்காரர் நண்பர் என்பதால் நானும் விளையாட்டாகச் சொன்னேன்..

பாக்கெட்ல தான் வைத்திருக்கீங்களா..?
வீட்டுக்கும் வந்து ஊட்டிவிட்டா இன்னும் நல்லா இருக்குமே!!

என்று..
அதற்கு அவரு சொன்னார்..
அடுத்து அதைத்தான் யோசிச்சிட்டே இருக்கோம் என்று..

காலம் போற போக்கைப் பார்த்தா.. காலப்போக்குல வாசுதுபடி வீட்டில சமையல் அறையே இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க போலத் தெரியுது..

இந்த அரசியல்வியாபாரிகளும் திட்டமிட்டே மக்களை சோம்பேறிகளாக்குறாங்க.(அரசியல் வாதிகளும், வியாபாரிகளும்னுதான் எழுதவந்தேன் தவறி சரியா எழுதீட்டேங்க).

“சோம்பல் என்பது நம்மைச் சுற்றி நாமே
கட்டிக்கொள்ளும் கல்லறை“
என்பது இந்த மக்களுக்கு எப்போது புரியப் போகிறது..?

பெரியவர்களே இப்படி இருந்தா..
அடுத்து வரப்போற புதிய தலைமுறையோட நிலை எப்படியிருக்கும்..?

இதோ..

பையன் - அம்மா தண்ணீர் கொண்டுவா
அம்மா - டேய் வந்து குடிச்சிட்டுப் போடா
பையன் - நீயே கொண்டுட்டு வாம்மா
அம்மா - நா வந்தேன்னா நாலு உதை விழும் பரவால்லையா..?
பையன் - எப்படியும் உதைக்கறதுக்காவது எழுந்துதானே வருவ... அதுக்கு தண்ணீயைக் கொண்டு வந்தா வேலை முடிஞ்சி போயிடும்லமா..?
அம்மா - !!!!!

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

கோப்புகளுக்குப் பூட்டு.


கணினியில் உள்ள தங்கள் கோப்புகளை நீங்கள் மட்டும் பயன்படுத்தவேண்டுமா..?
உங்கள் கோப்புகள் கடவுச் சொல் கொடுத்துத் திறக்கப்பட வேண்டுமா..?
கோப்புகளைப் பாதுகாக்கும் மென்பொருள் இலவசமாகவும், குறைந்த அளவு கொள்திறன் கொண்டதாகவும் இருக்கவேண்டுமா..?

உங்கள் கணினி விண்டோசு - எச்பி, 2003, விசுடா, 7. என்னும் இயங்குதளங்களைக் கொணடதா..?

எனது கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்காக நான் பரிந்துரைக்கும் மென்பொருள் இதுதான். இங்கே சொடுக்கி 2.4 எம்பி அளவுடைய இந்த மென்பொருளைப் பதிவிறக்கி தங்களின் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

நிறுவும்போதே கடவுச்சொல் கேட்கும்... கொடுத்து நிறுவிக்கொள்ளுங்கள். உங்கள் கோப்புகளை அதன் உள்ளே இட்டுவைத்து மூடவும். அடுத்து உங்கள் கோப்புகளை நீங்களே நினைத்தாலும் கடவுச்சொல் இன்றித் திறக்கமுடியாது.


பயன்படுத்துவதில் ஏதும் ஐயமிருந்தால் கேளுங்கள் நண்பர்களே.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரின் சிந்தனைகளை எண்ணிப்பார்ப்பதே அவருக்கு நாம் சொல்லும் வாழ்த்தாகக் கருதுகிறேன்.

தமிழ் பயின்ற காலத்தில் பாரதிதாசனை மதிப்பெண் நோக்கில் மட்டுமே படிக்கமுடிந்தது. அப்போது கவிஞரின், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரச்சிக்கவி ஆகிய ஆக்கங்களை மட்டுமே படித்து அவர்மீது பெருமதிப்புக் கொண்டேன்.அப்போதெல்லாம் பாரதிதாசன் பாடமாக மட்டுமே தெரிந்தார். படித்து முடித்தபின்னர் தான் பாரதிதாசன் ஒரு வாழ்க்கைப் பாடமாகக் காட்சியளித்தார்.

“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!“


என்ற கவிதையை எத்தனை முறை மனதிற்குள் சொல்லிப்பார்த்திரு்ப்பேன். வகுப்பில் சான்றாக இப்பாடலை எத்தைனை முறை சொல்லியிருப்பேன் என்று எனக்கே தெரியாது.

காதல், வீரம், தமிழ்மொழிப்பற்று, பெண்ணுரிமை, என எத்தனை களங்களைக் கொண்ட கவிஞன்...
கூடத்திலே மனப் பாடத்திலே – விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி.
ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்..

கவிஞரின் இந்தக் கவிதையைப் படித்த ஒவ்வொருவருக்கும் கவிதை எழுதவேண்டும் என்ற ஆசைவரும்.

நகைச்சுவை உணர்வுடன் பெண்களின் எழுச்சியைச் சொல்லும் அழகான பாடல்..
“மேற்றிசையில் வானத்தில் பொன்னுருக்கு
வெள்ளத்தில் செம்பருதி மிதக்குநேரம்!
வேற்கண்ணி யாளொருத்தி சோலைதன்னில்
விளையாட நின்றிருந்தாள் மயிலைப்போலே!
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
கனிய டித்துக் கொண்டு செலும் செல்வப்பிள்ளை
ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
அவளிடத்தே சில சொன்னான் பின்னுஞ் சொல்வான்;
விரிந்தஒரு வானத்தில் ஒளிவெள்ளத்தை
விரைந்துவந்து கருமேகம் விழுங்கக்கூடும்!
இருந்தவெயில் இருளாகும் ஒரு கணத்தில்
இது அதுவாய் மாறிவிடும் ஒரு கணத்தில்
தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றேயொன்று!
தெளிந்தஓர் உள்ளத்தில் எழுந்தகாதல்
பருந்துவந்து கொத்துமென்றும் தணிவதில்லை!
படைதிரண்டு வந்தாலும் சலிப்பதில்லை!
கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் பெண்ணே,
கருதுவதிற் பயனில்லை தனியாய் நின்று.
மின்னிவிட்டாய் என்மனதில்! பொன்னாய்ப் பூவாய்.
விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னாள்.
கன்னியொரு வார்த்தையென்றாள் என்னவென்றான்.
கல்வியற்ற மனிதனை நான் மதியேன் என்றாள்
பன்னூற் பண்டிதனென்று தன்னைச் சொன்னான்.
பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்.
பெருங்கல்விப் பண்டிதனே! உனக்கோர்கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்னவென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோரின்றிச்
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
மருவ அழைக் கின்றாயே, நானும் என்றன்
மாதா பிதாவின்றி விடைசொல்வேனோ?
என்றுரைத்தாள், இதுகேட்டுச் செல்வப்பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரியவில்லை.
மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில்மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
என்மனது வேறொருவன் இடத்திலென்றே
இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
உன்நலத்தை இழக்கின்றாய் வலியநானே
உனக்களிப்பேன் இன்பமென நெருங்கலானான்!
அருகவளும் நெருங்கி வந்தாள்; தன் மேல்வைத்த
ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்குமுன்னே
ஒருகையில் உடைவாளும் இடதுகையில்
ஓடிப்போ! என்னுமோரு குறிப்புமாகப்
புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்;
புனிதத்தால் என்காதல் பிறன்மேலென்று
பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்த காதல்
படைதிரண்டு வந்தாலும் சலியாதென்றாள்.
ஓடினான் ஓடினான் செல்வப்பிள்ளை
ஓடிவந்து மூச்சுவிட்டான் என்னிடத்தில்
கூடிஇரு நூறுபுலி எதிர்த்ததுண்டோ?
கொலையாளி யிடமிருந்து மீண்டதுண்டோ?
ஓடிவந்த காரணத்தைக்கேட்டேன், அன்னோன்
உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டுவிட்டேன்.
கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சிதாங்கக்
குலுங்கநகைத் தேயுரைத்தேன் அவனிடத்தில்;
செல்வப்பிள்ளாய் இன்றுபுவியின் பெண்கள்
சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
கொல்லவந்த வாளைநீ குறைசொல்லாதே!
கொடுவாள் போல் மற்றொருவாள் உன்மனைவி
மெல்லிடையில் நீகாணாக் காரணத்தால்,
விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப் பெண்கள்மேல்!
பொல்லாத மானிடனே, மனச்சான்றுக்குள்
புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான்“

தமிழ்க்கவிதைப் பரப்பில் பாரதி பரம்பரை என்பதுபோல பாரதிதாசன் பரம்பரை என தனியொரு தலைமுறையையே உருவாக்கியவர் பாவேந்தர் அவர்களை எண்ணி அவர்களைப் போற்றுவோம்..

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார், அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடையப படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மறைவு

கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மன்னர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் ஆக்கங்கள்

பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
• பாண்டியன் பரிசு (காப்பியம்)
• எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
• குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
• குடும்ப விளக்கு (கவிதை நூல்)
• இருண்ட வீடு (கவிதை நூல்)
• அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
• தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
• இசையமுது (கவிதை நூல்)
• அகத்தியன் விட்ட புதுக்கரடி
• பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
• செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
• பாரதசக்தி நிலையம் (1944)
• இசையமுதம் (இரண்டாம் பாகம்)
• பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
• குடியரசுப் பதிப்பகம் (1939)
• இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
• பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
• குயில் (1948) எதிர்பாராத முத்தம்
• வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
• எது பழிப்பு
• குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
• குயில் (1948)
• கண்ணகி புரட்சிக் காப்பியம்
• அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
• காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
• கற்புக் காப்பியம்
• குயில் (1960)
• காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
• காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
• காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
• குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)
• குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
• முல்லைப் பதிப்பகம் (1944)
• குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
• பாரதிதாசன் பதிப்பகம் (1950)
• குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)
• குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
• சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
• சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)
• தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
• தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
• திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
• தேனருவி இசைப் பாடல்கள்
• பாரதிதாசன் பதிப்பகம் (1955)
• நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)
• நீலவண்ணன் புறப்பாடு
• பாண்டியன் பரிசு
• முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
• பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)
• பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
• பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
• குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
• பாரதிதாசன் பதிப்பகம் (1952)
• பாரதிதாசன் நாடகங்கள்
• பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
• முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
• பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
• புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)
• பெண்கள் விடுதலை
• பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)
• மணிமேகலை வெண்பா
• அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
• முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
• கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
• உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
• வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
• தமிழுக்கு அமுதென்று பேர்
• வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
• புகழ் மலர்கள் நாள் மலர்கள்
• தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

(செய்திக் குறிப்புகள் – விக்கிப்பீடியா(நன்றி))

வியாழன், 28 ஏப்ரல், 2011

அந்தக் காலத்து எட்டாவது..

ஊருல வயதானவங்க சொல்லுவாங்க......

நாங்க அந்தக் காலத்துப் பத்தாவது..
அந்தக் காலத்து பியுசி என்று..

அவங்க சொல்லும் போதெல்லாம் புரியாத உண்மை இப்போதுதான் புரிகிறது.
அந்தக் காலத்துல வாழ்க்கைக்குப் பயன்படனும்னு பாடம் சொல்லித்தந்தாங்க. அதனால மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுத்தாங்க.பல்துறை அறிவும் அவர்களுக்கு இருந்தது.

இன்றைக்கு பணம் ஈட்டுவதையே முதல் நோக்கமாகக் கொண்டு கல்வி நிறுவனங்கள் செயல்படுவதால் மூளைக்கு வேலையின்றி விரல்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கின்றன.அதனால் சுயசிந்தனை, படைப்பாக்கத்திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு துறை குறித்த முழுமையான அறிவும் அவர்களில் பலருக்கு இருப்பதில்லை.


அப்துல்கலாம் அவர்களின் பொன்னான வார்த்தைகள்.

தேர்வில் உங்களால் சொந்தமாக
விடையளிக்க இயலவில்லையா?

அப்படியென்றால் இந்தக் கல்வி முறை உங்களுக்கு ஏற்றதல்ல!


பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி முறை நிறைய மாறிவிட்டது...

நான் கல்வி கற்ற காலத்தில் எனது மிகப்பெரிய இலக்காக முனைவர் பட்ட ஆய்வு இருந்தது. ஆனால் இன்று அதே முனைவர் பட்டத்தை மிக எளிதாகவும் வியாபர முறையிலும் முடிப்பவர்களைப் பார்க்கும் போது...

நானும் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்வேன் “நான் அந்தக் காலத்துல முனைவர் பட்டம் முடித்தவன்” என்று..

புதன், 27 ஏப்ரல், 2011

தமிழ்நாட்டின் அடையாளம்.


எனக்குப் பலநேரங்களில் நாம் எங்கு இருக்கிறோம்..?
தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா..?
என்ற ஐயம் வந்துவிடும்.
அப்போதெல்லாம் என் கண்ணில் படும் “தமிழ் வாழ்க“ என்ற பெயர்ப்பலகைகள் தான் நாம் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை எனக்கு அறிவுறுத்தும்..

இப்படி எழுதி வைத்தால் தான் தமிழ் வாழுமா..?
எனது அரசுக்கு ஏன் இப்படியொரு சிந்தனை வந்தது..?
என நான் பல முறை சிந்தித்துப்பார்த்திருக்கிறேன்..!

நாம் வாழ்வது தமிழ்நாடு என்ற சிந்தனை தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு குறிப்பாக வணிகத்துறையினருக்கு வரவேண்டும் என்பதால் தான் அவர்கள் கண்ணில் அடிக்கடித் தெரியுமாறு இவ்வளவு பெரிய பலகை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.

உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் சிந்தனை...


 பிரான்சு நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது!
செருமானிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது செருமனி தெரிகிறது!
உருசிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது உருசியா தெரிகிறது!
தமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது இங்கிலாந்து அல்லவா தெரிகிறது!


 தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் ஒரு நிறுவனம் கோ-ஆப்-டெக்ஸ் எனத் தன் பெயரை வைத்துக்கொண்டிருப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்துவது ஆகாதா..?
அதே கூட்டுறவு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு “வானவில்“ அழகாய் இருக்கிறது.

 “ஆவின் பால்“ பாலாகவும் சுவைக்கிறது – தமிழாகவும் இனிக்கிறது.

 Bakery என்பதை பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்களால் “பேக்கரி என்று எழுதினால் தமிழாகிவிடாது.
பேக்கரி என்னும் ஆங்கிலச் சொல்லை எரித்து “அடுமனை“என தனித்தமிழில் பொறித்திட வேண்டும்.

ஆங்காங்கே சில வியப்படைய வைக்கும் தமிழர்களையும் பார்க்கமுடிகிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தமிழ் புரியாதா..?
கடைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் என்ன..?

திங்கள், 25 ஏப்ரல், 2011

பெண்கொலை புரிந்தவன்.



சங்ககாலத்தில் குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் எவ்வாறு இருந்தன என்பதை தொடர் இடுகையாக வழங்கலாம் என எண்ணுகிறேன்..

ஒரு அரசன், போரில் வென்றால் தோற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவான், அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பான், தோல்வியடைந்த மன்னரின் மணிமுடிகளை உருக்கிக் காலடியில் பலகையாக்கிக் கொள்வான், தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவான்......
இப்படி பல்வேறு விநோதமான தண்டணைகளைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது.

பெண்கொலை புரிந்த நன்னனைப் பற்றிய செய்தியை உள்ளடக்கிய குறுந்தொகைப்பாடலைக் காண்போம்....

தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல், காலம் தாழ்த்தி வருகிறான். அதனால் வருந்திய தோழி அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள். பகற்குறி, இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்கலாம் என எண்ணிய தலைவனிடம் பெற்றோரையும், ஊராரையும் காரணம் காட்டி உங்கள் களவு வெளிப்பட்டது அதனால் தலைவியை திருமணம் செய்து கொள்வதே சிறந்தது என்று சொல்கிறாள் தோழி..

தோழியின் செயலானது தலைமக்களின் மீது அன்பில்லாத செயலாகத் தோன்றினாலும், தோழியின் நோக்கம் இருவரும் இல்லறவாழ்வில் இணையவேண்டும் என்பதே ஆகும். தாம் செய்யும் சூழ்ச்சியுடன் கோசரின் சூழ்ச்சியையும் ஒப்பிட்டு உரைக்கிறாள் தோழி,

கோசரின் சூழ்ச்சி.
நீண்ட ஆயுளைத் தரும் மாமரம் ஒன்றை நன்னன் தம் நாட்டின் காவல் மரமாக வைத்து வளர்த்து வந்தான்.அம்மரத்திலிருந்து பழம் ஒன்றை ஆற்றுவெள்ளம் அடித்துக்கொண்டுவந்தது. அது யாருடையது என அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கோசர்குடிப் பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் இணையாக ஏற்றுக்கொண்டு அவளை விட்டுவிடும்படி மன்றாடினர். நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான். அதனால் புலவர் இவனைப் 'பெண்கொலை புரிந்த நன்னன்' எனக் குறிப்பிடுகின்றனர்.
நன்னனைப் பழிவாங்க எண்ணிய கோசர்கள்,

பெண்யானைகளைப் பரிசிலாக வழங்கும் அகுதை தந்தையிடம் அகவல் மகளிரைப் பரிசில் பெறக் கோசர்கள் அனுப்பினர். அந்த யானைகளை நன்னன் ஊரில் இல்லாத நாளில், அவனுடைய காவல் மரத்தில் கட்டவைத்தனர். யானைகளும் அந்தக் காவல் மரமான மாமரத்தை வேரோடு சாய்த்தன. நன்னன் ஊர்திரும்பி இதனை அறிந்து போர் புரிந்தான். அப்போரில் கோசர்களால் நன்னன் கொல்லப்பட்டான். இதுவே கோசர்கள் செய்த வன்கண் சூழ்ச்சியாகும். தாம் தலைமக்களின் வரைவின் பொருட்டே இவ்வாறு சூழ்ச்சி செய்தேன். அதனால் தலைவன் விரைவில் மணப்பான் என எண்ணுகிறாள் தோழி. பாடல் இதோ..

மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி – தோழி! – நன்னன்
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.

குறுந்தொகை – 73
குறிஞ்சி,
பரணர்
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

(துறை விளக்கம் - தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பகலிலும்,இரவிலும் சந்திக்க மறுத்தல்)
சொற்பொருள் விளக்கம்.
வரைவு கடாவுதல் – திருமணம் செய்துகொள்ளத் தூண்டுதல்.
பகற்குறி – காதலர்கள் பகலில் சந்திக்குமிடம்.
இரவுக்குறி - காதலர்கள் இரவில் சந்திக்குமிடம்.

குற்றமும் தண்டனையும்.
அரசுடைமையை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக கொலை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனையைக் குறைப்பதற்காக எடைக்கு எடை பொன்னோ, யானையோ அளிப்பதும் சங்ககாலப் பழக்கமாக இருந்திருக்கிறது.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

A frantic heart (குறுந்தொகை)




“Her arms have the beauty
of a gently moving bamboo
Her large eyes are full of peace
she is faraway
her place not easy to reach

My heart is frantic
with haste

a plowman with a single plow
on land all wet
and ready for seed“


(far away – a long distance away
frantic – done quickly and with a lot of activity.but in a way that is not very well organized.)



'ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோட்
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆர் இடையதுவே ; நெஞ்சே
ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர் ஏர் உழவன் போல
பெருவிதுப்பு உற்றன்றால் நோகேயானே.'

ஓரேருழவனார் (குறுந்தொகை-131)

வினை முற்றிய தலைவன் பருவ வரவின்கண் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.

பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து நெடுந்தூரம் வந்தான். பொருள் தேடி தலைவியைக் காண மனம் துடிக்கிறது. வீடோ மிகவும் தூரத்தில் உள்ளது. இந்நிலையில் தன் மன நிலையை,
ஒரு ஏர் மட்டும் வைத்திருக்கும் உழவன் பருவ காலத்தில் தம் நிலம் முழுவதும் உழுவதற்கு எவளவு ஆர்வமுடன் இருப்பானோ
அந்த மனநிலையோடு ஒப்பிட்டு உரைக்கிறான் தலைவன்.

இதனை,

அசைகின்ற மூங்கிலைப் போன்ற அழகிய தோள்களையும், அழகிய கண்களையும் கொண்ட தலைவியின் ஊர் நெடுந்தொலைவில் அடைதற்கு அரிய இடத்தில் உள்ளது. எனது நெஞ்சு மழை பெய்து ஈரமுடைமையால் உழுதற்கு ஏற்ப செவ்வியை உடைய பசிய கொல்லையின்கண் ஒரு ஏர் மட்டும் கொண்ட உழவனின் மனம் எவ்வளவு விரைவாக உழத் துடிக்குமோ அதே விரைவு மனநிலை தான் தனக்கு உள்ளது என்று தலைவன் தன் மனநிலையை எடுத்துரைக்கிறான். தன் நெஞ்சு விரைவிற்கு ஏற்ப தன்னால் விரைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறான்.

இப்பாடலில் ஓர் ஏர், அதனால் உழப்படும் நிலம், உழுதற்கு ஏற்ற செவ்வி, உழவனின் ஆர்வம் ஆகிய பண்புகளைச் சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் ஓரேருழவனார் என்னும் பெயர் பெற்றார்.

தொடரால் பெயர்பெற்ற புலவர்களின் பெயர்களை நோக்கும் போது. அப்பெயர்கள் மிகவும் பொருத்தமுடையனவாக உள்ளன.அழகுணர்வுடையனவாகவும் உள்ளன. இப்புலவர்கள் தம் பாடலில் இடம் பெற்ற உவமைகள் வாயிலாகப் பெரும் பெயர் பெற்றுக் காலப்போக்கில் தம் இயற்பெயரைத் தொலைத்தனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது

சனி, 23 ஏப்ரல், 2011

சாமி (நறுக்குகள்)


உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் கவிதைகளுள் என்னைக் கவர்ந்த கவிதை இது.
சிந்திக்க வைத்த கவிதை.

வியாழன், 21 ஏப்ரல், 2011

20/20 தேர்வு முறை


நாடே கிரிக்கெட் வெறிபிடித்து அலைகிறது. மக்கள் நாட்டுப் பற்றை கிரிக்கெட்டில் மட்டுமே ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்துகிறார்கள்.
மக்கள் வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் கிரிக்கெட் வாரியங்களும் 365 நாளும் கிரிக்கெட் போட்டிகளை நடத்துகின்றன.
தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அதனை ஒளிபரப்புகின்றன. ஒரு மறக்குடிமகன் சொல்கிறான்....
எனக்கு நேரடியாகக் கிரிக்கெட் பார்க்க அரங்க அனுமதிச்சீட்டு தாருங்கள் என் கிட்னியைக் கூடத் தருகிறேன் என்று...

கிரிக்கெட்டால் இலாபம் ஈட்டுவது பலராக இருந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான் என்பது என் கருத்து.
நேரடியாகவே பல மாணவர்களின் அவலநிலையை என்னால் பார்க்க முடிகிறது..

• தான் என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் கூட இல்லாத மாணவன் கூட கிரிக்கெட் வீரரின் பெயரையும் அவரின் சாதனையையும் நினைவில் வைத்துக்கொள்ள எண்ணுகிறான்.
• தன் தேர்வு நாள் நினைவிருக்கிறதோ இல்லையே கிரிக்கெட் என்று எங்கு நடக்கிறது..? விளையாட்டுக்கு எந்த வீரர் தேர்ந்தெடு்க்கப்பட்டிருக்கிறார்? என்பதில் ஆர்வமாக இருக்கிறான்....

இறுதியில் இவன் தேர்வு எழுதத் தகுதியில்லாதவனாக ஆகிப்போகிறான்..

இம்மாணவனின் எதிர்பார்ப்பில் தாம் எழுதும் தேர்வுகூட இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறான்...

20/20 தேர்வு முறை.


 தேர்வு எழுதும் நேரத்தை 3 மணிநேரத்தில் இருந்து 1 மணிநேரமாகக் குறைத்துவிட வேண்டும்.
 மதிப்பெண்ணையும் 50 ஆகக் குறைத்துவிடவேண்டும்.
 தேர்வின் இடையில் 15 நிமிடத்துக்கு ஒருமுறை இடைவெளி விடவேண்டும்.
 எதிர்பாராத வினாக்களுக்குப் பதிலளித்தால் கூடுதல் மதிப்பெண் அளிக்கலாம்.
 கடைசி அரைமணி நேரம் அறையில் தேர்வுக் கண்காணிப்பாளர் இருக்கக் கூடாது.

புதன், 20 ஏப்ரல், 2011

உங்களயெல்லாம் கேட்க ஆளே இல்லையா?


குள்ளநரிக் கூட்டம் என்றொரு படம் பார்த்தேன். அதில் ஒரு நகைச்சுவை...
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நீண்டகாலமாகத் தம் தொகுதிப்பக்கமே சென்றிருக்கமாட்டார். அதனால் கோபம் கொண்ட மக்கள் அவரைப் பார்க்க கூட்டமாக வருவார்கள். அந்த அரசியல்வாதியின் உதவியாளர் வந்து இவரிடம் அறிவுறுத்துவார்.
தலைவரே... உங்களைப் பார்க்க மக்கள் கோபமா வந்திருக்காங்க... என்ன செய்யறதுன்னே தெரியல என்பார்...
கொஞ்சம் கூட யோசிக்காத அந்த அரசியல்வாதி உடனடியாக வெளியே செல்வார்...
மக்களைப் பார்த்து என்ன இது இங்கவந்து கூட்டம் போட்டிருக்கீங்க..
உங்க தலைவர் இங்கே இப்ப இல்லை...
கிளம்புங்க கிளம்புங்க என்று கூட்டத்தைக் கலைத்துவிட்டு கம்பீரமா வருவார்...
மக்களும் நம்ம தலைவர் நமக்காகத் தான் சட்டமன்றத்துல பேசிட்டிருப்பார் என நம்ம்ம்ம்பிக் கொண்டே செல்வார்கள்.
வந்த விருந்தினர்கள் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்..
அவர்களைப் பார்த்து அந்த அரசியல்வாதி சொல்வார்..
நான் தொகுதிப்பக்கமாப் போயி பலவருசமாச்சு..
மக்களுக்கு என் முகமே மறந்துபோயிருக்கும் அதான் தைரியமா போயிட்டு வந்தேன் என்பார்.
இந்த நகைச்சுவைக் காட்சியை நான் மிகவும் விரும்பிப்பார்த்தேன் சமூகத்தை அழகாகப் பிரதிபலிப்பதாக இக்காட்சி உள்ளதே என்று...

இங்கு இந்த தலைவருக்கு வெட்கமே வரல..!!!!
இதெல்லாம் இவரு ஒரு விளையாட்ட்ட்ட்ட்டாவே எடுத்துக்கறார்..

இவரைமாதிரியே வெட்கப்படத் தெரியாத எதையும் விளையாட்டாவே எடுத்துக்கற சங்க காலத் தலைவனைப் பற்றிப் பார்ப்போம்.

அறியாமையின் அன்னை! அஞ்சி
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்
கேட்போர் உளர்கொல்,இல்லைகொல்?போற்று என
“நாண் இலை, எலுவ!“ என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறுநுதல் அரிவை! போற்றேன்
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே

நற்றிணை 50
குறிஞ்சி (மருதம் பாடிய இளங்கடுங்கோ)
தோழி பாணர்க்கு வாயில் மறுத்தது
தலைவன் பரத்தையிற் பிரிந்தான். பின் சிறைப்புறமாக வந்துநின்று வாயில் வேண்டிப் பாணனைத் தூதாக விடுத்தான். தோழி தலைவன் கேட்க தலைவியை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
“மணம் கமழும் நெற்றியைக் கொண்ட பெண்ணே!!
தலைவன் காதில் குழையும், கழுத்தில் மாலையும் அணிந்து குறுகிய பல வளைகளையும் அணிந்தவனாக விழாக்களத்தில் பரத்தையுடன் துணங்கையாடினான். அப்போது அவனைக் கையும் களவுமாகப் பிடிக்கலாம் என்று நெருங்கிச் சென்றோம். அவனோ எங்களிடமிருந்து தப்பிக்க கருதியவனாக, வேறொரு வழியில் புகுந்து சென்றான். எதிர்பாராதவிதமாக எம்முன்னே எதிர்பட்டான்...
“உன் செயல்களைத் தட்டிக் கேட்பார் யாரும் இல்லையோ..?” என்று கேட்டேன்.
அந்தச் சூழலிலும் எதுவும் அறியாதவன் போல, என்னிடத்துப் பசலை அழகாக உள்ளதே என வியந்தான்..
அவனுடைய இழிந்த நிலை கண்டு “ நீ நாணமுடையவன் இல்லை“ என்று கூறிவந்தேன். என்கிறாள் தோழி.

பாடல் வழியே...

1. வாயில் மறுத்தல் ( பரத்தையிற் பிரிந்த தலைவன் மீது தலைவி ஊடல் (கோபம்) கொண்டு வீட்டிற்குள் வர அனுமதி மறுத்தல்.) என்ற அகத்துறை விளக்கப்படுகிறது.
2. துணங்கை என்னும் கூத்து பற்றிய குறிப்புவழியே இருபாலரும் சேர்ந்து இக்கூத்தாடுவர் என்ற மரபு புலனாகிறது.
3. நகைச்சுவை –
1. தலைவன் தலைவியின் வருகையைக் கண்டு ஓடி வேறு வழியே சென்று எதிர்பாராதவிதமாக தலைவியிடம் மாட்டிக்கொள்ளும் நிலையில் நகைப்பிற்குரியவனாகிறான்.
2 தவறு செய்தமைக்காக வருந்தாமல், தோழி இழிவாகப் பேசியபோதும் அதனைக் கண்டுகொள்ளாது அவளிடம் நலம் விசாரிக்கும் போது பெருநகைப்பிற்குரியவனாக் காட்சியளிக்கிறான்.

சனி, 16 ஏப்ரல், 2011

கொலை (நறுக்குகள்)



(கடவுளின் பெயரால் மக்கள் செய்யும் சில காரணமற்ற அல்லது காரணம் தெரியாத கண்மூடித்தனமான செயல்களைக் காணும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு.)

The body’s pallor (குறுந்தொகை)



Like moss on pond
in the town’s water pond
the body’s pallor
clears

as my lover touches
and touches,

and spreads again,
as he lets go
as he lets go

1.Pond – a small area of still water.
2.Moss – a very small green or yellow plant without flowers that spreads over damp surfaces, rocks,trees,etc
3.Pallor- pale colouring of the face, especially because of illness or fear.

தலைவனை நீங்கினால் ஏற்படும் பிரிவு காரணமாகத் தலைவியின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றம் பசலை எனப்படும். பசலையைக் கண்டு ஊரார் அலர் தூற்றுவர் என்பது சங்ககால மரபு. இந்த பசலை பற்றிப் பல பாடல்களைப் புலவர்கள் பாடியிருந்தாலும் அதன் தன்மையை எல்லோருக்கும் புரியமாறு சொல்லும் பாடல் ஒன்றைக் காண்போம்…


நீர்நிலைகளின் பச்சை நிறத்தில் பாசிபடர்ந்திருப்பதைப் பலரும் பார்த்திருப்பர். அந்தப் பாசி பயன்கொள்வோர் அருகே செல்லும் போது விலகிச் செல்லும், அந்நீர்நிலையைக் கடந்து வந்தபின்பு மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும்.

அந்த பாசி போன்றது பசலை என்கிறாள் தலைவி. ஏனென்றால் தலைவன் அருகே இருக்கும் போது இந்த பசலை என்னைவிட்டு நீங்கிவிடுகிறது. அவன் என்னை நீங்கியவுடன் மீண்டும் வந்து சேர்ந்துகொள்கிறது என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்னும் அகத்துறையில் அமைந்த இப்பாடலை,

(வரைவு - திருமணம்)

ஊருண் கேணி உண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.

குறுந்தொகை -399. மருதம் - தலைவி கூற்று


பரணர் பாடியிருக்கிறார்.

(சங்க இலக்கியத்தின் சிறப்பை பிறமொழியாளர்களும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலேயே இம்மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளேன்)

புதன், 13 ஏப்ரல், 2011

வேடிக்கை மனிதர்கள்

அரிது அரிது மானிடராதல் அரிது.
அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பார் ஔவையார்...
எந்தக் குறையுமின்றி பிறந்ததே சிலருக்குப் பெரிய குறையாகிவிடுகிறது.

இதோ சில வேடிக்கை மனிதர்கள்...



வெள்ளி, 8 ஏப்ரல், 2011

உங்கள் நண்பர் எலியா? புலியா? - UPSC EXAM TAMIL - புறநானூறு -190



உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள். நண்பர்கள் நம் கண்ணாடி போல, நம் நிழல் போல…
நம் உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும், ஆசைகளுக்கும் இயைபுடைய நண்பர்களைத்தான் நாம் தேர்ந்தெடுப்போம். இதோ நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைச் சோழன் நல்லுருத்திரனார் … 

“எலி போன்ற நண்பர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது”

 “புலி போன்ற நண்பர்களையே தேர்ந்தெடுக்கவேண்டும்

” என்று உரைக்கிறார். இயல்பான வழக்கில் எலி, புலி என்ற உவமையை பயத்துக்கும், வீரத்துக்கும் நாம் கூறுவதுண்டு. இங்கு.. 

விளைந்து முற்றிய பின் அறுவடைக்கு முன் உள்ள சிறிய வயலில் இருந்து கதிராகிய உணவைக் கொண்டுசென்று எலி தன் வலைக்குள் மிகுதியாகச் சேர்த்து வைக்கும். அவ்வெலியைப் போல சிறுமுயற்சியையும், சுயநலமும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதைவிட.. வீரம் செறிந்த புலி முதல்நாள் வேட்டையாடிய ஆண்பன்றி இடப்பக்கம் விழுந்தால் அதனை உண்ணாது, அடுத்தநாள் காத்திருந்து பெருமலைப்பக்கத்தில் வீரம் நிறைந்த ஆண்யானையை வலப்பக்கமாக வீழ்த்தி உண்ணும். அத்தகைய புலிபோன்ற பெருமுயற்சியும், கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்கிறார். 


பாடல் இதோ.. 

விளைபதச் சீறிடம் நோக்கி , வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி உள்ளத் தம்
வளம் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழி நாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டு எழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ!

புறநானூறு -190 
சோழன் நல்லுருத்திரன். திணை – பொதுவியல் துறை – பொருண்மொழிக்காஞ்சி. 

தமிழ்ச்சொல் அறிவோம் 

1. வல்சி – உணவு, நெல், சோறு, அரிசி. 
2. கேண்மை – நட்பு, உறவு. 
3. உரன் – வலிமை.
4. கேழல் – பன்றி. 
5. களிறு – ஆண்யானை, பிடி- பெண்யானை. 

பாடலின் வழி அறியலாகும் கருத்துக்கள்.

1. எலிபோன்ற சுயநலமும், சிறுமுயற்சியும் கொண்டவர்களின் நட்பைப் பெறுவதைவிட, புலி போன்ற பெருமுயற்சியும், உயர்ந்த கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்ற உயரிய கருத்து எடுத்துரைக்கப்படுகிறது. 

2. புலியானது தன் வேட்டையில் வலப்பக்கம் வீழும் விலங்குகளையே உண்ணும் இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது என்ற புலியின் வழக்கமாகச் சங்ககால மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இப்பாடல் வழி அறியமுடிகிறது. 

3. மெலியோரின் (எலி) நட்பைவிட, வலியோரின் (புலி) நட்பே சிறந்தது என்ற செம்மாந்த கருத்து உரைக்கப்படுவதால் இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சியானது.