ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

A frantic heart (குறுந்தொகை)
“Her arms have the beauty
of a gently moving bamboo
Her large eyes are full of peace
she is faraway
her place not easy to reach

My heart is frantic
with haste

a plowman with a single plow
on land all wet
and ready for seed“


(far away – a long distance away
frantic – done quickly and with a lot of activity.but in a way that is not very well organized.)'ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோட்
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆர் இடையதுவே ; நெஞ்சே
ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர் ஏர் உழவன் போல
பெருவிதுப்பு உற்றன்றால் நோகேயானே.'

ஓரேருழவனார் (குறுந்தொகை-131)

வினை முற்றிய தலைவன் பருவ வரவின்கண் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.

பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து நெடுந்தூரம் வந்தான். பொருள் தேடி தலைவியைக் காண மனம் துடிக்கிறது. வீடோ மிகவும் தூரத்தில் உள்ளது. இந்நிலையில் தன் மன நிலையை,
ஒரு ஏர் மட்டும் வைத்திருக்கும் உழவன் பருவ காலத்தில் தம் நிலம் முழுவதும் உழுவதற்கு எவளவு ஆர்வமுடன் இருப்பானோ
அந்த மனநிலையோடு ஒப்பிட்டு உரைக்கிறான் தலைவன்.

இதனை,

அசைகின்ற மூங்கிலைப் போன்ற அழகிய தோள்களையும், அழகிய கண்களையும் கொண்ட தலைவியின் ஊர் நெடுந்தொலைவில் அடைதற்கு அரிய இடத்தில் உள்ளது. எனது நெஞ்சு மழை பெய்து ஈரமுடைமையால் உழுதற்கு ஏற்ப செவ்வியை உடைய பசிய கொல்லையின்கண் ஒரு ஏர் மட்டும் கொண்ட உழவனின் மனம் எவ்வளவு விரைவாக உழத் துடிக்குமோ அதே விரைவு மனநிலை தான் தனக்கு உள்ளது என்று தலைவன் தன் மனநிலையை எடுத்துரைக்கிறான். தன் நெஞ்சு விரைவிற்கு ஏற்ப தன்னால் விரைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறான்.

இப்பாடலில் ஓர் ஏர், அதனால் உழப்படும் நிலம், உழுதற்கு ஏற்ற செவ்வி, உழவனின் ஆர்வம் ஆகிய பண்புகளைச் சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் ஓரேருழவனார் என்னும் பெயர் பெற்றார்.

தொடரால் பெயர்பெற்ற புலவர்களின் பெயர்களை நோக்கும் போது. அப்பெயர்கள் மிகவும் பொருத்தமுடையனவாக உள்ளன.அழகுணர்வுடையனவாகவும் உள்ளன. இப்புலவர்கள் தம் பாடலில் இடம் பெற்ற உவமைகள் வாயிலாகப் பெரும் பெயர் பெற்றுக் காலப்போக்கில் தம் இயற்பெயரைத் தொலைத்தனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது

3 கருத்துகள்:

 1. அருமையான பதிவு
  எனது வலைத்தளத்தில்
  YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய
  http://mahaa-mahan.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. ஒரேவார்த்தையில் சொல்லனும்னா அருமையான பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு