திங்கள், 25 ஏப்ரல், 2011

பெண்கொலை புரிந்தவன்.சங்ககாலத்தில் குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் எவ்வாறு இருந்தன என்பதை தொடர் இடுகையாக வழங்கலாம் என எண்ணுகிறேன்..

ஒரு அரசன், போரில் வென்றால் தோற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவான், அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பான், தோல்வியடைந்த மன்னரின் மணிமுடிகளை உருக்கிக் காலடியில் பலகையாக்கிக் கொள்வான், தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவான்......
இப்படி பல்வேறு விநோதமான தண்டணைகளைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது.

பெண்கொலை புரிந்த நன்னனைப் பற்றிய செய்தியை உள்ளடக்கிய குறுந்தொகைப்பாடலைக் காண்போம்....

தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல், காலம் தாழ்த்தி வருகிறான். அதனால் வருந்திய தோழி அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள். பகற்குறி, இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்கலாம் என எண்ணிய தலைவனிடம் பெற்றோரையும், ஊராரையும் காரணம் காட்டி உங்கள் களவு வெளிப்பட்டது அதனால் தலைவியை திருமணம் செய்து கொள்வதே சிறந்தது என்று சொல்கிறாள் தோழி..

தோழியின் செயலானது தலைமக்களின் மீது அன்பில்லாத செயலாகத் தோன்றினாலும், தோழியின் நோக்கம் இருவரும் இல்லறவாழ்வில் இணையவேண்டும் என்பதே ஆகும். தாம் செய்யும் சூழ்ச்சியுடன் கோசரின் சூழ்ச்சியையும் ஒப்பிட்டு உரைக்கிறாள் தோழி,

கோசரின் சூழ்ச்சி.
நீண்ட ஆயுளைத் தரும் மாமரம் ஒன்றை நன்னன் தம் நாட்டின் காவல் மரமாக வைத்து வளர்த்து வந்தான்.அம்மரத்திலிருந்து பழம் ஒன்றை ஆற்றுவெள்ளம் அடித்துக்கொண்டுவந்தது. அது யாருடையது என அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கோசர்குடிப் பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் இணையாக ஏற்றுக்கொண்டு அவளை விட்டுவிடும்படி மன்றாடினர். நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான். அதனால் புலவர் இவனைப் 'பெண்கொலை புரிந்த நன்னன்' எனக் குறிப்பிடுகின்றனர்.
நன்னனைப் பழிவாங்க எண்ணிய கோசர்கள்,

பெண்யானைகளைப் பரிசிலாக வழங்கும் அகுதை தந்தையிடம் அகவல் மகளிரைப் பரிசில் பெறக் கோசர்கள் அனுப்பினர். அந்த யானைகளை நன்னன் ஊரில் இல்லாத நாளில், அவனுடைய காவல் மரத்தில் கட்டவைத்தனர். யானைகளும் அந்தக் காவல் மரமான மாமரத்தை வேரோடு சாய்த்தன. நன்னன் ஊர்திரும்பி இதனை அறிந்து போர் புரிந்தான். அப்போரில் கோசர்களால் நன்னன் கொல்லப்பட்டான். இதுவே கோசர்கள் செய்த வன்கண் சூழ்ச்சியாகும். தாம் தலைமக்களின் வரைவின் பொருட்டே இவ்வாறு சூழ்ச்சி செய்தேன். அதனால் தலைவன் விரைவில் மணப்பான் என எண்ணுகிறாள் தோழி. பாடல் இதோ..

மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி – தோழி! – நன்னன்
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.

குறுந்தொகை – 73
குறிஞ்சி,
பரணர்
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

(துறை விளக்கம் - தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பகலிலும்,இரவிலும் சந்திக்க மறுத்தல்)
சொற்பொருள் விளக்கம்.
வரைவு கடாவுதல் – திருமணம் செய்துகொள்ளத் தூண்டுதல்.
பகற்குறி – காதலர்கள் பகலில் சந்திக்குமிடம்.
இரவுக்குறி - காதலர்கள் இரவில் சந்திக்குமிடம்.

குற்றமும் தண்டனையும்.
அரசுடைமையை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக கொலை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனையைக் குறைப்பதற்காக எடைக்கு எடை பொன்னோ, யானையோ அளிப்பதும் சங்ககாலப் பழக்கமாக இருந்திருக்கிறது.

8 கருத்துகள்:

 1. Hi Sir, Nice post... But i found some grammatical spelling mistakes in this thread myself , check this line [ நன்னன் ஊரில் இல்லாத நாளில், அவனுடைய காலம் மரத்தில் கட்டவைத்தனர்]"காலம்" or "காவல்"

  பதிலளிநீக்கு
 2. @Maiyalagan.k நன்றி மெய்யழகன் எழுத்துப்பிழையைத் திருத்திக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. @ஷர்புதீன் 55522 பார்வையாளர்களும் 362 பின்தொடர்வோரும் இலக்கியத்தை இரசிப்பத்தவர்கள் தான் நண்பா.

  மருந்து கசக்கிறது என்பதற்காகக் குடிக்காமல் விட்டுவிடுவோமா..?

  மருந்துபோலத்தான் இலக்கியங்களும்..

  பதிலளிநீக்கு