செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கண்களாலே கள்வனானேன்..!நம் சமூகம் காலகாலமாகவே ஆண்களை மையப்படுத்தி வந்திருக்கிறது. காலந்தோறும் பல போராட்டங்களைக் கடந்து பெண்கள் இன்று ஆணுக்கு நிகராக வளர்ந்துள்ளார்கள்.
 மூவாசைகளுள் ஒன்றாக “பெண்ணாசை” கூறப்படுகிறது.
 சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே!! என்றெல்லாம் ஆண்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
 பட்டினத்தாரோ பெண்ணாசையால் வாழ்வைத் தொலைக்கும் ஆண்களுக்காகப் பெண்களைச் சாடுகிறார்.

வள்ளுவரோ....

o கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
o கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
o ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
o யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
o கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

என பெண்களைப் பற்றியும் அவர்களின் கண்களைப் பற்றியும் நிறைய கூறிச் சென்றிருக்கிறார்.


இன்றைய திரைப்படப் பாடல்களோ...

o ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே
தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு
வெந்ததும் பெண்ணாலே
அன்று விளையாட்டு சிறுபிள்ளை
வீர சிவாஜியானதும் பெண்ணாலே
நில் என்று சொன்னதும்
சுள் என்று சூரியன்
நின்றது பெண்ணாலே
சின்ன தாலிக்கயிற்றுக்கு
பாசக்கயிறு அன்று
தோற்றதும் பெண்ணாலே
இந்தியா தங்க பதக்கம்
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
இந்தியா தங்க பதக்கம்
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே
மனம் கெட்டு தசரதன்
செத்து செத்து விட்டு
உயிர் விட்டதும் பெண்ணாலே
அட பத்து தலையிலும்
பித்தம் கொண்டு மன்னன்
கெட்டதும் பெண்ணாலே
பாலைவனம் எங்கும் மூளை கெட்டு
மஜ்னு போனதும் பெண்ணாலே
அந்த ரோமாபுரி அன்று
ரத்தகுளம் என்று
ஆனதும் பெண்ணாலே
இந்தக்கால கட்சிகளும்
இரண்டாச்சு பெண்ணாலே
பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று
கொடி நட்டதும் பெண்ணாலே
நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு
பயல்களும் கெட்டதும் பெண்ணாலே
கொள்ளை கொள்ளும்
ஒரு வெள்ளை தாஜ்மஹால்
வந்ததும் பெண்ணாலே
பாண்டிய மன்னன் அரண்மனை
மண்ணோடு மண்ணாகி
போனதும் பெண்ணாலே
நல்லதும் கெட்டதும் இங்கே
நடப்பதெல்லாம் பெண்ணாலே
முழுசா பாட்டில் சொல்ல
முடியாது என்னாலே
ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே
( படம் - திருமதி ஒரு வெகுமதி. )


என காலந்தோறும் பெண்களின் நிலையை எடுத்துரைக்கின்றன.

ஏன்? ஏன்? ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?

பெண்கள் தான் ஆக்கத்திற்கும், அழிவுக்கும் காரணமா..?
அவர்களும் ஆண்களைப் போன்ற பிறவிகள் தானே..?
ஆண்களை ஆக்கவும், அழிக்கவும் தானா? பெண்ணினம் தோன்றியது..?

என பல வினாக்கள் தோன்றினாலும்...
மனித இனம் தோன்றிய காலம் முதலாகவே இந்த நிலை பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது..

சான்றாக..
ஓர் பழந்தமிழ் நற்றிணைப் பாடலில்....

பாங்கன் தலைவனிடம் “ ஒரு பெண்ணால் உன் உள்ளம் அழிந்தது. உன்னிடத்து நயனும், நண்பும் , நாணும், பயனும் , பண்பும் பிறவும் இல்லையா..? எனக் கேட்டான். அதற்குத் தலைவன்....

என் நெஞ்சில் உள்ள அப்பெண்ணை நோக்கும் முன்னர் அவையெல்லாம் என்னிடத்து இருந்தன என்று கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

அழகிய வயிற்றின் மேல் மேலும் அழகுசேர்க்கும் விதமாகத் தோன்றிய தேமலையும், அழகுவாய்ந்த மார்பினையும், ஐந்து வகையாகப் பிரித்துக் கட்டப்பட்ட கூந்தலையும் கொண்ட என்னவளின் குவளை மலர் போன்ற அழகிய கண்களைக் காணும் முன்பு வரை…..
நான் யாருடனும் நெருங்கிப் பழகும் பண்பும்,
சுற்றம் தழுவலும்,
நட்பும்,
நாணமுடைமையும்,
பிறருக்கு உதவும் பண்பும்,
உலக நடைமுறைகளை அறிந்து நடக்கும் பண்பும் கொண்டவனாகத் தான் இருந்தேன்.
இப்போது அப்பண்புகள் எதுவும் என்னிடத்தில் இல்லை. அதற்காக வருந்துவதால் யாது பயன்…?“நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் 
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் 


நும்மினும் அறிகுவென்மன்னே – கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வனமுலை
விதிர்த்து விட்டன்ன அந்நுண் சுணங்கின் 
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி
திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மாலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக்கண் காணா ஊங்கே.”

துறை – கழற்றெதிர் மறை.
நற்றிணை -160 .


பாடல் வழி அறியாகும் மரபுகள்.

• பெண்கள் தம் கூந்தலை ஐந்து வகையாகப் பிரித்து அழகாக (சடை) பிணைத்துக் கட்டும் பழக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
• பாங்கன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் “கழற்றெதிர் மறை” என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
நெருங்கிப் பழகும் பண்பும், சுற்றம் தழுவலும், நட்பும், நாணமுடைமையும், பிறருக்கு உதவும் பண்பும், உலக நடைமுறைகளை அறிந்து நடக்கும் பண்பு ஆகிய சிறந்த பண்புகள் சிறந்த வாழ்வுக்கான அடிப்படைப் பண்புகள் என்பது புலப்படுத்தப்படுகிறது.

இப்பாடலிலும் பெண்ணால் தன் இயல்பு நிலை மாறிய தலைவனின் நிலை அறிவுறுத்தப்படுகிறது.

காலக் கண்ணாடியில் எனக்குத் தெரியும் பிம்பம்.

காலந்தோறும் பெண்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசினாலும் நானறிந்தவரை உணர்ந்த உண்மை.

பெண்களும் ஆண்களைப் போலத்தான்.
 நம் வாழ்வை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம்.
 பெண் மோகத்தால் ஆண்கள் தம் வாழ்வை, இலக்கைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் தான் இதுபோன்ற பெண்கள் பற்றிய சிந்தனைகள் காலந்தோறும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன.
 பெண்களின் நோக்கம் ஆண்களைத் துன்பறுத்துவதோ, தொல்லை செய்வதோ அல்ல..
இயல்பான உடலில் வேதிமாற்றமே ஆண்கள், பெண்கள் மீது மோகம் கொள்வதற்குக் காரணம் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.

6 கருத்துகள்:

 1. அருமையான கட்டுரை முனைவர் அவர்களே.....

  உங்களது கருத்தாக இறுதியில் சொல்லப்பட்டு இருப்பதில் இருந்து நான் மாறுபடுகிறேன்.

  இன்றைய பெண்கள் இயல்புக்கு ஒவ்வாத செயல்களை செய்வதில் நாணுவதில்/வருத்தபடுவதில்
  இருந்து விலகிவிட்டனர் என்று கருதுகிறேன். இன்று ஒரு சுமாரான அழகுடைய பெண்
  தனது வீதிலோ கல்வி நிலையத்திலோ குறைந்தது 3 முதல் 5 பசங்களின் மனதை "தேவை இல்லாத பார்வை,
  தேவை இல்லாத பேச்சு மற்றும் நேரடியாக பதில் சொல்லாமல் குழப்பமாக பதில் சொல்லுதல் " போன்றவைகளால்
  தன்னுடைய செயலில் இருந்து கவனத்தை சிதரசெய்கின்றனர் என்பது உண்மை. அணைத்து பெண்களையும் குறைகூறுவது எனது
  நோக்கம் அல்ல - ஆனால் இங்கு நல்ல பெண்களின் சதவிதம் குறைவு. இவை எதுவும் நானாக சொன்னது இல்லை. ஒரு நண்பி எனக்கு சொன்னது.

  பதிலளிநீக்கு
 2. இன்றொரு தகவல் போல இன்றைய அலசல் நற்றினை பாடல்..

  பதிலளிநீக்கு
 3. @தமிழ்மணி நல்ல பெண்களும் டைனசாரும் ஒன்று என்று ஒரு நகைச்சுவைக் குறுந்தகவல் எனக்கு வந்ததுண்டு...

  ஏனென்றால் இரண்டுமே இன்று இல்லையாம்..!!

  நாகரீகம் என்ற பெயரில் இன்றையபெண்ககள் தங்கள் பண்பாட்டினை மறப்பது வருத்தத்திற்கு உரியதுதான் நண்பரே

  பதிலளிநீக்கு