புதன், 16 பிப்ரவரி, 2011

சங்ககால இருமல் மருந்து


சங்கப்பாடல்களின் வழி அகப்புற கருத்துக்களுடன் அக்காலப் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இதோ ஒரு அகப்பாலில் ஓர் மருத்துவக்குறிப்பு.

தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் சூழலில் தலைவி தோழிக்குச் சொல்லுவதாகவோ, தலைவிக்குத் தோழி சொல்லுவதாகவோ இப்பாடலைக் கொள்ளலாம்.

“அம்ம வாழி, தோழி! 'இம்மை

நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?

தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த

சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்

வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்

தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,

நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து

அடி புதை தொடுதோல் பறைய ஏகி,

கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,

இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,

பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,

புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,

தண் கார் ஆலியின், தாவன உதிரும்

பனி படு பல் மலை இறந்தோர்க்கு

முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!”

அகநானூறு 101. பாலை -மாமூலனார்

(பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம்.)

தொன்றுபடு பழமொழி

தலைவன் தலைவியைப் பிரிந்து காலத்தை நீட்டிக்கிறான். அதனால் வருந்திய தலைவி நன்மை செய்தவர்கள் நன்மைதானே பெறுவர். இதுதானே பழமொழி. இந்த அனுபவமொழி இன்று பொய்யானதோ..? என்று புலம்புகிறாள். இதனை..,

'இம்மை

நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?

என்னும் பாடலடிகள் சுட்டும்.

நான் தலைவருக்கு நன்மைதானே செய்தேன்...? (இயற்கைப் புணர்ச்சியின் போது தலைவனைச் சந்தித்த தலைவி அவனுக்கு இன்பமளித்தது)

அவரோ காலத்தை நீட்டித்து என்னைத் துன்புறுத்துகிறாறே! என்று வருந்துகிறாள் தலைவி.

சங்ககால இருமல் மருத்துவம்.

* செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்று சுருண்ட, பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்ணினையுமுடைய மழவர்கள்,

(வாய்ப் பகை கடியும் மண்ணொடு) வாயிலிருந்து எழும் இருமலான பகையினை எழமாற் தீர்க்கும் மருந்தான புற்றுமண்ணை வாயில் அடக்கிக் கொண்டனர்,
கடிய திறல்வாய்ந்த தீயுண்டாம் சிறிய அம்பினை வில்லொடு கையிற்பற்றி, வெண்ணெய்யை வெளிப்படுத்தும் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் உள்ளவிடத்துத் தம் அடியை மறைத்துள்ள செருப்புக்கள் தேயச் சென்று, பகைவர் காவல் இடத்திலே கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆவினத்தையுடையராய், அவ்வினத்தினை அவ்விடத்தினின்று கொண்டு போகும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டிலே.

* அகன்ற பெரிய வானாகிய கடற்கண் ஒடம்போல, பகலில் வானிடையே நின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின், வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்று வரு மேல் காற்றினால், புல்லிய அடிமரத்தினையுடைய முருங்கையின் முதிர்ந்து கழியும் பல பூக்கள், குளிர்ந்த கார் காலத்து ஆலங்கட்டி போலப் பரந்தனவாய் உதிரும்,நடுக்கமுண்டாகும் பல மலைகளையும் தாண்டிச் சென்ற நம் தலைவர்க்கு, வெறுக்கத்தக்க செயல் யாதும் நாம் செய்திலமே.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்..

1. பழமொழிகள் சங்க காலத்திற்கு முன்னரே வழக்கில் இருந்தமை இப்பாடல வழி அறியமுடிகிறது.“தொன்றுபடு பழமொழி” என்னும் சொல் இதற்குச் சான்றாகிறது.
2.இருமலுக்கு எறும்புப் புற்றிலுள்ள “புற்றுமண்ணை” மருந்தாக எண்ணி வாயில் அடைக்கிக்கொண்டனர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.

11 கருத்துகள்:

 1. புதுமையான தகவல்.... ஆச்சர்யமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 2. சங்கப் பாடல்களில் என்னவெல்லாம் இருக்கிறது!
  இம்மாதிரிப் பாடல்களை அறிமுகப் படுத்தி விளக்குவதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. தமிழ் பாடல்கள் இனிக்க
  மருத்துவம் வியக்க..பதிவு எப்பவும் போல் தமிழின் சுவையோடு..

  பதிலளிநீக்கு
 4. தமிழ் மருந்து அருமை.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. @சென்னை பித்தன் தங்கள் தொடர் வருகையையும் தமிழார்வமும் கண்டு பெருமகிழ்ச்சியாகவுள்ளது அன்பரே

  பதிலளிநீக்கு
 6. அட அருமையான ஒரு பாடல், விளக்கம், அதில் இருக்கும் இருமல் மருந்து பற்றி சொல்லியமை...அசத்தல் ..பேராசிரியரே..

  பதிலளிநீக்கு
 7. தமிழ் இலக்கியங்களில்
  மருத்துவம் - தங்கள்
  பதிவு தக்க சான்று.

  பதிலளிநீக்கு