வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 19 மார்ச், 2013

சின்னச் சின்னத் தீப்பொறிகள்.


ஈழத்தமிழர்களுக்காக இளைய தலைமுறையினர் செய்துவரும் போராட்டங்களை சில அரசியல்வாதிகள் அரசியலாக்கப்பார்க்கின்றனர்.
சில ஊடகங்கள் காசாக்கப்பார்க்கின்றன.
இன்று நேற்று ஏற்பட்டதல்ல இந்தக் கோபம்.

நெடுங்காலமாகவே  சிறிது சிறிதாய் சேர்த்துவைத்த தீப்பொறிகள் இவை.

அதற்கான சான்று..



நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுளையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி
 

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை

சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
 

என்பார் கவிஞர்.தணிகைச்செல்வன் . தற்போது தன் இனம், மொழி, நாடு குறித்த சிந்தனை இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டிருப்பருப்பது வரவேற்கத்தக்கதாகவுள்ளது.



எல்லா ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு!
எல்லா முடிவுக்கும் ஒரு ஆரம்பம் உண்டு!

என்பதை நடந்துமுடிந்த இனப்படுகொலையும்
நடந்துகொண்டிருக்கும் மாணவர் போராட்டமும் உணர்த்துகின்றன.
            
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே !

என்ற மகாகவி பாரதியின் வாக்கை மனதில் கொண்டு, நடக்கும்,இந்தப் போராட்டங்கள் எவ்விதமான உள்நோக்கங்களும் இன்றி, இனப்பற்று மற்றும் மொழிப்பற்றை மட்டுமே அடித்தளமாகக்கொண்டு நடந்துவருகின்றன என்பதை மாநில, மத்திய அரசுகள் உணர்ந்து மாணவர்களின் குரலைச் செவிமடுத்து அதை எதிரொலித்தால்தான் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்பதை அரசு மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

8 கருத்துகள்:

  1. சிறிய வரிகளில் பல விடயங்களை சொல்லி விட்டீர்கள்....

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கவிதை! உங்கள் கோபம் ஆதங்கம் புரிகிறது! இனியாவது ஒன்று படுவோம்! அதற்கும் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் போல! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே !//

    அனைவரும் ஒன்றுபடுவோம்.
    அருமையான கருத்துக்களை சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
    என் – சரித்திரச் சாலையை

    அன்று நான்
    சோழனாக இருந்தேன்
    சேரனாக இருந்தேன்
    பாண்டியனாக இருந்தேன்
    தமிழனாக இல்லை!

    அன்று நான்
    சைவனாக இருந்தேன்
    வைணவனாக இருந்தேன்
    சமணனாக இருந்தேன்
    பவுத்தனாக இருந்தேன்
    தமிழனாக இல்லை!

    நான்

    பல்லவனாக இருந்தேன்
    சுல்தானாக இருந்தேன்
    பாளையக்காரனாக இருந்தேன்
    தமிழனாக இல்லை!

    பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
    பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
    போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
    தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

    இன்று நான்

    இந்துவாக இருக்கிறேன்
    இஸ்லாமாக இருக்கிறேன்
    ஏசுவாக இருக்கிறேன்
    எங்கேயும் நான் தமிழனாக இல்லை!



    அரசியல் சட்டத்தில்
    என் பெயர் இந்தியன்
    இந்தியத் தேர்தலில்
    என் பெயர் வாக்காளன்
    எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

    தமிழ் நாட்டில் என் அடையாளம்
    வன்னியன்,வேளாளன்,
    கள்ளன்,கைக்கோளன்,
    பள்ளன், பறையன்,
    இத்தியாதி இத்தியாதி
    என்று எத்தனையோ சாதி

    செட்டியார் இனம்
    ரெட்டியார் இனம்
    என்பது போல்
    சாதி தான் இனம் என்று எனக்குத்
    தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
    தமிழன் என்ற இன அடையாளம்
    சந்திரகிரகணமாகிவிட்டது……

    மனதில் எழுந்த வலிகளின் சுவாலை
    தீய சக்திகளைப் பொசுக்கி எரிக்கப்
    புறப்பட்ட அக்கினிக் குஞ்சுகளாக
    வார்த்தைகள் விளையாடி இருக்கும்
    விதம் அருமை !!...உங்களுக்கு எனது
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    சகோதரரே .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  5. மிகவும் நல்ல பதிவு. தமிழன் என்ற உணர்வு முதலில் இருக்க வேண்டும்..நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.அடையாளம் தேடி அழைகிறவர்களாய் நாம்அடையாளப்படுத்தப்படுகிறோம்/

    பதிலளிநீக்கு