வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


வியாழன், 18 டிசம்பர், 2025

இன்னா நாற்பது -கூடா நீதி

 இன்னா நாற்பது என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.

இன்னா என்ற சொல்லுக்கு, துன்பம், தீங்கு, வெறுப்பு, இகழ்ச்சி, அல்லது விரும்பத்தகாதவை 

 

விழுமியம் – கூடா நீதி

 

கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;

நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;

கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3

 

கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் வாழ்தல் இன்னாதது.

நீண்ட தொலைவு நீரை மிதவை இல்லாமல் நீந்துதல் துன்பம்.

கடுகடு’வெனப் பேசுபவர் தொடர்பு துன்பம்.

தட்டுத் தடுமாறிக்கொண்டு வாழும் உயிருக்குத் துன்பம்.

 

 

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;

தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,

மாற்றம் அறியான் உரை.               7

 

ஆற்றல் இல்லாதவன் கையில் போர்க்கருவி வைத்திருத்தல் துன்பம்.

மணம் இல்லாத பூவின் அழகு துன்பம்.

ஆராயும் திறன் இல்லாதவன் துணிச்சல் துன்பம்.

கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாதவன் மேடையில் பேசுதல் துன்பம்.

 

உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;

மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;

சுரம் அரிய கானம் செலவு இன்னாஇன்னா,

மன வறியாளர் தொடர்பு.               18

                               

நெஞ்சில் உரம் மிக்கவன் செயல்படாமல் இருப்பது துன்பம்.

வீரனின் மார்பை (விழுப்புண் தெரியாமல்) ஆடையால் மறைத்தல் துன்பம்.

கடத்தற்கு அரிய காட்டு வழியில் செல்லுதல் துன்பம்.

மனம் வறண்டு கிடப்பவரோடு தொடர்பு வைத்துக்கொள்ளுதல் துன்பம்.

 

பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;

கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;

வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,

இளமையுள் மூப்புப் புகல்.             27

 

பெருந்தன்மை உடையவரின் பெருமையைச் சீரழித்தல் துன்பம்.

உரிமை உடையவரை மதிக்காமை துன்பம்.

செல்வம் இல்லாதவரின் அழகு துன்பம்.

இளமைக் காலத்தில் மூத்தோரின் தளர்வு வருதல் துன்பம்.

 

 

ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;

விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;

இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,

கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு. 34

 

ஒழுக்கமே இல்லாதவருக்கு உறவுக்காரர் என்று சொல்லிக்கொள்ளுதல் துன்பம்.

விரும்பாதவர்களுக்கு நூல் எத்தகைய சிறப்புடையதாயினும் தருவது துன்பம்.

இழிதொழில் புரிபவருடன் நட்பு கொள்ளல் துன்பம்.

வயிற்றுப் போக்கு, வாந்தி வரின் துன்பம்.

 

அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;

தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;

அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா,

அடக்க, அடங்காதார் சொல். 40

 

அடக்கம் உள்ளவன் வீரம் கொள்ளல் துன்பம்.

தன்னைப் பற்றிய தொடக்க அறிவே இல்லாதவன் வீறாப்பு துன்பம்.

அடைக்கலாமாக தந்த பொருளைத் திருடிக்கொள்ளுதல் துன்பம்.

அடக்கினால் அடங்காதவரிடம் அறிவுரை சொல்லுதல் துன்பம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக