செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மகிழ்ச்சி இங்கே இருக்கிறது

ஒரு அரசனுக்கு ஒரு ஏழையைப் பார்த்துப் வியப்பு! நாம் எல்லா செல்வங்களோடும் இருக்கிறோம். ஆனால் இவன் எந்த செல்வங்களும் இன்றி நம்மைவிட மிகவும் மகிழ்வாக இருக்கிறானே என்று. ஒருநாள் தன் அமைச்சரை அழைத்து இவன் மகிழ்வு எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும் என்றார்.
அமைச்சர், 99 பொற்காசுகளை ஒரு பையில் கட்டி அவன் வீட்டு வாசலில் போட்டுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து வந்த ஏழை அந்தப் பையைப் பார்த்து வியந்துபோனான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அதை எடுத்து வீட்டுக்குள் சென்று எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைந்தது. அன்றிலிருந்து அவனது உறக்கம்போனது, மகிழ்வு போனது! எப்போதும் தன் மடியிலேயே அந்தப் பையை வைத்துக்கொண்டு வீட்டையே சுற்றிச் சுற்றிவந்தான்.

இந்த ஏழையின் தூக்கத்தையும், மகிழ்வையும் பறித்த கவலைகள் இரண்டு,
 • இந்தப் பணத்துக்குச் சொந்தம் கொண்டாடி யாராவது வந்துவிடுவார்களோ?
 • தொலைந்த அந்த 100வது காசு எங்கே? 
அமைச்சர் அரசனிடம் சொன்னார். மன்னா,

“இந்த ஏழையிடம் இல்லாமையில் இருந்த மகிழ்ச்சி
இருப்பில் இல்லாமல் போனது!
இவன் தன்னிடம் இருப்பதைப் பற்றி மகிழ்வுகொள்ளாமல் இல்லாததைத் தேடித் தன் மகிழ்வைத் தொலைத்துவிட்டான்” 
என்று..
இந்தக் கதையில் வரும் ஏழையைப் போலத்தான் நாமும். நம்மிடம் இருப்பதை எண்ணி மகிழாமல், நம்மிடம் இல்லாததை எண்ணியே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

சரி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்று பார்ப்போம்.

 • பணம் மட்டுமே மகிழ்வு தரும்
 • சுற்றுலா செல்வதே மகிழ்ச்சி.
 • கொடுப்பதால் கிடைப்பதே மகிழ்ச்சி
 • பெறுவதால் வருவதே மகிழ்ச்சி.
 • இயற்கையை பார்ப்பதே மகிழ்ச்சி
 • சமூகதளங்களில் உலவுவதே மகிழ்ச்சி
 • மறுமொழியிடுவதே மகிழ்ச்சி
 • மறுமொழி பெறுவதே மகிழ்ச்சி
 • தொலைக்காட்சி பார்ப்பதே மகிழ்ச்சி
 • பேசிக்கொண்டிருப்பதே மகிழ்ச்சி
 • தூங்குவதே மகிழ்ச்சி
 • விளையாடுவதே மகிழ்ச்சி
 • அடுத்தவரைப் பற்றிப் பேசுவதே மகிழ்ச்சி
 • போதையில் உள்ளதே மகிழ்ச்சி
 • குழந்தைகளிடம் விளையாடுவதே மகிழ்ச்சி
 • நூல்களை வாசிப்பதே மகிழ்ச்சி

என ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் இடம், வெவ்வேறாக உள்ளது. இப்படி தன்னலம் சார்ந்த மகிழ்ச்சிகளுக்கு நடுவே, பிறர் நலம் நாடும் மகிழ்ச்சியே போற்றத்தக்கது. 
இங்கே பதிவு செய்யப்பட்ட காணொளி கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை என்பதை அழகாக எடுத்துரைக்கிறது. ஆனால் யாரிடம் கொடுக்கிறோம் என்பதற்கேற்ப மகிழ்ச்சி மாறும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.  மதிப்பு தெரியாதவர்களிடம் நாம் எதையும் கொடுத்தால் குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தது போல ஆகிவிடும். 

நம் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று கண்டறிவதிலும் அதைத் தக்கவைத்துக்கொள்வதிலுமே நம் வாழ்க்கை தொலைந்துவிடுகிறது.

மகிழ்ச்சி இருக்கும் இடத்தை வெளியே தேடிச்சென்ற நான். என்னுள் மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன்,

தமிழ் வாசிக்கும்போதும், அதைப் பேசும் போதும் என் மனதில் தோன்றும் மகிழ்ச்சி பிற மகிழ்ச்சிகளைவிடக் கூடுதலானது என்பதை உணர்ந்துகொண்டேன்.

அன்பு நண்பர்களே உங்கள் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா?

8 கருத்துகள்:

 1. தமிழை வாசிக்கும்போதும், எழுதும்போதும் எழும் மகிழ்ச்சி ஈடு இணை இல்லை நண்பா...! அந்த வகையில் நானும் உங்கள் சாதிதான்..!

  தமிழ் சாதி..!!!

  பதிலளிநீக்கு
 2. இடையிடையே நம் பதிவு விஷயத்தையும்
  இணைத்திருந்தது மனம் கவர்ந்தது
  பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. ஆமாம் தமிழை வாசிக்கும் போதும் எழுதும் போதும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை முனைவரே.... அருமையான படைப்பு.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு மிக்க நன்றி சகோ சூப்பர்

  பதிலளிநீக்கு
 5. அருமையான சிந்தனை.

  இருப்பவனைக் காட்டிலும் இல்லாதவனிடம்தான் அன்பும்,ஈரமும்,ஈகையும்,வண்மையும் அதிகம் காணப்படுகின்றன...

  பதிலளிநீக்கு
 6. "நம்மிடம் இருப்பதை எண்ணி மகிழாமல், நம்மிடம் இல்லாததை எண்ணியே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்." என்பதில் உண்மை இருக்கிறது. இதனால், நம்மவர் துயரப்படுகின்றனர்.

  பதிலளிநீக்கு