ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நாம் ஏன் இப்படியிருக்கிறோம்?

நீ ஏன் இப்படியிருக்கிறாய்?

அவர் ஏன் இப்படியிருக்கிறார்?
இவர் ஏன் இப்படியிருக்கிறார்?

என்ற கேள்விகளை நாம் பயன்படுத்தாமல் இருந்திருக்கமாட்டோம். இந்த உலகில் நாம் யாரையும் மாற்றமுடியாது. இந்த உலகில் நம்மால் ஒருவரை மாற்றமுடியும் என்றால் அது நம்மைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற உண்மையை அறிந்தால் இப்படி யாரையும் நாம் கேட்கமாட்டோம்.

எறும்பு தண்ணீரில் வீழ்ந்தால் மீனுக்கு உணவு, மீன் தண்ணீரைவிட்டு நிலத்துக்கு வந்துவிட்டால் மீன் எறும்புக்கு உணவு! இதுதான் வாழ்க்கை.

காலம் எல்லோருக்குமான வாய்ப்பை தன்னுள் அடக்கிவைத்திருக்கிறது. நாம் குறைகூறும் ஒருவரின் நிலை நமக்கு வரும்போதுதான் தெரியும் அவரும் இந்தச் சூழலில் இதைத்தானே செய்தார் அவரைப் போலத்தானே நாமும்,  நாம் எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள் தான் என்ற உண்மை அப்போது புரியும். 

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.
தனக்கு வந்தால் தான் தெரியும் வயிற்று வலி.
பழுத்தோலையைப் பார்த்து, குருத்தோலை சிரித்ததாம்

போன்ற பலமொழிகள் இந்த உண்மையையே எடுத்தியம்புகின்றன.


இதே கருத்தை எடுத்துரைக்கும் கலீல் ஜிப்ரான் அவர்களின் சிந்தனை ஒன்றை இன்று காண்போம்,


இலையிடம் புல் சொன்னதுஇலையுதிர் காலத்து 

இலை ஒன்றிடம் 
புல் சொன்னது: 
"நீ நிலம் நோக்கி 
விழும் போது 
எத்தனை ஓசை செய்கிறாய். 
நாராசம்! 
என் குளிர் காலக் கனவுகள் 
அனைத்தையும் 
கலைத்து விடுகிறாய். 
ஒழிந்து போ எங்காவது.!!" 


இலை 

எரிச்சலுடன் 
மறுமொழி இறுத்தது: 
"சீச்சீ! அற்பப் பிறவியே! 
கீழே பிறந்து கீழே வாழ்ந்து 
கீழே மடியும் கீழான பிறவியே! 
மேலே இருக்கும் காற்றின் 
இசை, இன்பம், இனிமை 
இது குறித்தெல்லாம் 
ஏதும் அறிவாயா நீ? 
எனது இசையைப் பற்றி 
ஏதும் பேசாதே!! 
வாயை மூடு..!!" 


இலையுதிர் காலத்தின் 

இயல்புக்கேற்ப 
இலை கீழே விழுந்தது. 
மண்மீதில் உறங்கியது. 


வசந்தத்தின் வருகையால் 

அதுவும் ஒரு புல்லாய் 
மறுபடி முளைத்தது. 


இலையுதிர்காலம் மீண்ட போது 

குளிர்கால உறக்கத்தின் 
பிடிக்குள்ளிருந்த படி 
அது தனக்குள் முனகியது: 
"சீ! இந்த இலையுதிர்காலத்து இலைகள்.! 
எத்தனை ஓசை! எத்தனை கூச்சல்! 
என் குளிர்காலக் கனவுகளை 
துரத்திவிடுகின்றன.!!"

14 கருத்துகள்:

 1. அட அற்புதமான விஷயத்தில் தொடங்குகிறது வரிகள்...

  காலம் மாறிக்கொண்டே இருப்பது போல மனிதனின் இயல்புகளும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது இடத்திற்கேற்றப்படி..

  பிறரை குறைச்சொல்லுவதில் இருக்கும் இன்பமும் சந்தோஷமும் அவசரமும், தன் மீதுள்ள குறைகளை காணவும் மறந்து அல்லது மறுத்துவிடுகிறது.. மனித இயல்பு இது....

  எப்போதும் ஏதாவது குறைச்சொல்லிக்கொண்டே புலம்பிக்கொண்டே இருக்கும் மனிதர்களை காணும்போது ஒரு வித அசூயை தோன்றுகிறது...

  ஏன் அவர்களை குறைச்சொல்லவேண்டும்? ஒருவரின் குணம் இஷ்டமில்லை என்றால் புலம்பிக்கொண்டே குறைகள் கூறிக்கொண்டே அவருடனே இருக்காமல் ஒன்று திருத்தலாம்.. இல்லை அவரின் நிலைக்கேற்ப நம்மை திருத்திக்கொள்ளலாம்.. நம்மிடம் இருக்கும் தவறுகளை களையும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்..

  ஒருமுறை க்ருஷ்ண பரமாத்மா கேட்கிறார் இருபக்கமும் நடந்து வரும் துரியோதணரையும் தர்மரையும் பார்த்து...

  உங்கள் இருவரின் கண்களுக்கு என்ன தெரிகிறது??

  தர்மரின் கூற்று.... காண்போர் எல்லோருமே நல்லவராகவே தெரிகின்றனர் ப்ரபோ...

  துரியோதணரின் அங்கலாய்ப்பு... ஒருத்தனாவது நல்லவனா இருக்கானா பாருங்க....

  இதில் இருந்து என்ன தெரிகிறது?

  நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை பொறுத்தே அமைகிறது.. நல்லது என்று நினைத்து பார்க்கும் எதைப்பற்றியும் குறைகள் சொல்ல நம்மிடம் எதுவும் இருப்பதில்லை....

  தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்...

  உண்மை தான்.. இல்லை என்று சொல்லவில்லையே...

  அதை பிறருக்கும் வரவைத்து நாம் படும் அவஸ்தைகளையும் அவரையும் பட வைத்து தான் உணரவைக்க வேண்டுமா வலி?

  நமக்கு ஏற்படும் சந்தோஷங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக்கொள்வோம்... அதுவே நமக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அது யாருக்கும் ஏன் நம்ம விரோதிக்கு கூட இப்படி ஆகக்கூடாதுன்னு வேண்டிக்குவோம்..

  அருமையான கவிதை வரிகளை எடுத்துக்காட்டி இருக்கீங்க..

  இலையா இருக்கும்போது அனுபவிக்கும் இசையும், இனிமையும் புல்லாகி மடங்கும்போது எரிச்சலாகிறது...

  ஒருத்தர் போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு கண்டிப்பாக தவறு....

  அதே நாம் எல்லோரிடமும் அவருடைய குணத்துக்கு ஏற்றமாதிரி அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்..

  வாழ்க்கை கண்டிப்பாக ரசனையானதா இருக்கும்...

  நான் நேற்று பார்த்த படம் நினைவுக்கு வருகிறது...

  பப்பு காண்ட் டான்ஸ்...

  ஹீரோ பக்கா டிபிகல் கல்ச்சர்ட்...

  ஹீரோயின் க்ரூப் டான்ஸ்ல நடிப்பவர்....

  இருவர் மனதிலும் நேசம் அரும்புகிறது....

  ஒருவருக்காக ஒருவர் ஈகோவை விட்டுக்கொடுத்து வாழலாம்... ஆனால் தன் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல்....

  அருமையான பகிர்வு குணசீலன்... அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்க்கையின் தத்துவத்தை எறும்பையும் மீனையும் வைத்து அழகாக சொல்லி விட்டீர்கள். ஏன் அப்படி இருக்கிறா◌ார்கள் என்று கேட்பதை விடுத்து நாம் ஏன் அப்படி குறை கூறும் அளவிற்கு மாறி விட்டோம் என்பதை நினைக்க மறந்து விடுகிறோம்.
  குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற பழமொழியை படிப்பதோடு நின்று விடுகிறோம். முதலில் நாம் திருந்துவோம் என்பதை அர்த்தமுள்ள வரிகளுடன் விளக்கிய விதம் சிறப்புங்க. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வாழ்க்கையில் அனைவருக்கும் தேவையான அற்புதமான கருத்துக்கள். 'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்; உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்' என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வந்து போனது.

  பாராட்டுக்கள் முனைவர் அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. கலீல் ஜீப்ரான் கவிதை கொண்டு நிலையாமை தத்துவத்தையும் இயல்புக்கேற்ப குணம் மாறுவதையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி! நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. காலத்தின் சக்கரம் சுற்றுவதைக் காட்டினீர்!
  ஞாலத்தின் மாற்றம்யா தென்று!

  பதிவு அருமை முனைவர் ஐயா.

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான கருத்துப் பகிர்வு முனைவரே.... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு