வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 10 ஜனவரி, 2023

இனியவை நாற்பது


இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது. இனியது என்பது இனிமையானது. வாழ்க்கையில் செய்யத்தக்க நற்பண்புகளை இனியது என ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். இவர் கூறும் நற்பண்புகளை வாழ்க்கையில் கடைபிடித்தல் இனிது.

 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே

நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே

முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. - 1

 

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது.

அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது.

முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது.

அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்

மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்

நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்

தலையாகத் தான்இனிது நன்கு. - 2

பொருள் உடையவனது ஈகை இனிது.

மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது.

உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே

நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே

ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே

தேரிற்கோள் நட்புத் திசைக்கு.    -3

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும்.

குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும்.

ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது.

அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

 யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே

ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே

கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே

மான முடையார் மதிப்பு.    -4

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது.

தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது.

முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது.

அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே

நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே

மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்

எனைமாண்புந் தான்இனிது நன்கு. -5

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது.

கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது.

மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக