வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 18 அக்டோபர், 2023

தமிழ் மின் உள்ளடக்கங்களும் உருவாக்க நுட்பங்களும்

 Tamil Electrical Content and Developing Technologies

முனைவா் இரா.குணசீலன்/ Dr.R.GUNASEELAN[1]

Valluvar said that counting and writing are like eyes for the life we ​​live. Since we understand the connection between numbers 0,1 and the Tamil text, and providing the electrical content to understand the computer, Tamil has grown to many levels on the Internet today. This article deals with the e-content of Tamils ​​and the technologies that create them to adapt to the ever-changing technological changes such as websites, blogs, android apps, dictionaries, translator techniques, Optical Character Recognition, e-books, videos, audio books.

Keywords – Dr.R.Gunaseelan, Tamil E - Content, Tamil Electrical Content,

E-book, web, blog, apps, ocr, dictionaries, முனைவா் இரா.குணசீலன், தமிழ் மின் உள்ளடக்கங்கள், மின்னூல்கள், அகராதிகள், விக்கிப்பீடியா,

             எண்ணும், எழுத்தும் நாம் வாழும் வாழ்க்கைக்குக் கண்களைப் போன்றன என்றார் வள்ளுவர். 0,1 என்ற எண்களுக்கும், தமிழ் எழுத்துகளுக்குமான தொடர்பைப் புரிந்துகொண்டு, கணினிக்குப் புரியுமாறு மின் உள்ளடக்கங்களை வழங்கியதால் இன்று இணையப் பரப்பில் பல்வேறு நிலைகளில் தமிழ் வளர்சியடைந்துள்ளது. இணையதளங்கள், வலைப்பதிவுகள், குறுஞ்செயலிகள், அகராதிகள், மொழிமாற்றி நுட்பங்கள், எழுத்துணரி நுட்பங்கள், மின்னூல்கள், காணொளிகள், ஒலிநூல்கள் என நாள்தோறும் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தமிழில் உள்ள மின் உள்ளடக்கங்களையும், அவற்றை உருவாக்கும் நுட்பங்களையும் இக்கட்டுரை இயம்புகிறது.

இணையதளங்களில் தமிழ் மின் உள்ளடக்கங்கள்

        தமிழ் மொழிசார்ந்த பல்வேறு செய்திகள் இணையதளங்களில் எழுத்து வடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் மின் உள்ளடக்கங்களாகக் கிடைக்கின்றன. கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி தனி மனிதர்களும்  இணையதளங்களை உருவாக்கி தமிழ் சார்ந்த செய்திகளை உள்ளீடு செய்ய முடியும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. தமிழ் எழுத்துக்களைக் கற்பித்தல் தொடங்கி தமிழ் ஆராய்ச்சி வரை இன்று பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக தமிழம் நெட், தமிழ் அநிதம்[2] அடிப்படைத் தமிழ் கற்க இத்தளங்கள் உதவுகின்றன. தமிழ் இலக்கியத் தொடரடைவு[3] தமிழாய்வு மாணவர்களுக்கு உதவியாக உள்ளது. மேலும் பல்வேறு துறைசார்ந்த பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்கள் பல ஆய்வுதொடர்பான பல்வேறு சிந்தனைகளை மின் உள்ளடக்கங்களாகக் வழங்குகின்றன. தமிழ் கற்றல் கற்பித்தல் முதல் கணினித் தமிழ் ஆய்வுகள் வரை தமிழ் இணையக் கல்விக்கழகம் [4]இணையதளம் உதவியாக(3)  உள்ளது. பல்வேறு துறை கற்றலுக்கும் இன்று என்.பி.டெல், சுவயம், யுடிமி[5]  போன்ற இணையதளங்கள் பயன்படுகின்றன. என்றாலும் இந்த இணையதளங்களில் தமிழ் சார்ந்த படிப்புகளை மின் உள்ளடக்கங்களாக உருவாக்கவேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம். ஆசிரியர்கள் தமிழ் சார்ந்த பாடங்களை உருவாக்குவதும், மாணவர்களை அதற்கு நெறிப்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது.

யுடியூப்

          காணொளிகளுக்கான இணையதளமாகப் புகழ்பெற்றுத் திகழ்வது யுடியூப்[6] தளம் ஆகும். இத்தளத்தில் தமிழ் கற்றல் கற்பித்தலுக்கான பல்வேறு எளிய வழிமுறைகள் காணொளிகளாக உள்ளன. கல்வி தொடர்பான காணொளிகளுள் செயல்விளக்கத்துடன் அழகிய தமிழில் கான் அகாதமி[7] தளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. யுடியூப் பக்கங்களில், தமிழ் சிறுகதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறுகளை ஒலி நூலாக வழங்கும் வழக்கமும் உருவாகியுள்ளது.

விக்கிக்கிப்பீடியா

                   ஒட்டுமொத்த மனித அறிவும் எல்லா மனிதர்களுக்கும் இலவசமாகப் போய்ச் சேர வேண்டும் என்ற ஜிம்மி வேல்சின் கனவே விக்கிப்பீடியா ஆகும். 285 மொழிகளில் 24 மில்லியன் கட்டுரைகள்,100,000 முனைப்பான பங்களிப்பாளர்கள், அலெக்சா தரவரிசையில் ஐந்தாவது இடம், 365 மில்லியன் வாசகர்கள், விளம்பரங்களே இல்லாத சேவை, நமது தேடல்களுக்கு முதல் பரிந்துரையாகக் கிடைப்பது என பல பெருமைகளுக்கும் உரிமையுடையது விக்கிப்பீடியா[8] (7) ஆகும். விக்கி என்றால் ஹவாய் மொழியில் "விரைவு” என்பது பொருளாகும். தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம் ஆண்டு ஆரம்பமானது. தற்போது இதில் 1,23,629 கட்டுரைகள் உள்ளன. 1,61,668 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

          தமிழ் கற்றல், கற்பித்தலில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாலமாக விளங்குவது விக்கிப்பீடியா ஆகும். விக்கிப்பீடியாவில் கட்டுரைகளைப் பார்வையிடுவது மட்டுமின்றி திருத்தம் செய்தல், தொகுத்தல், மொழிபெயர்த்தல், புதிய கட்டுரைகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை ஆசிரியர்களும் மாணவர்களும் மட்டுமின்றி தமிழ்ப் பற்றுள்ள யாவரும் செய்யமுடியும்.

விக்சனரி

          விக்கிப்பீடியாவின் இன்னொரு பிரிவான விக்சனரி[9] வழியாக தமிழ்ச்சொற்களை உச்சரித்து ஒலியேற்றுதல் ஆகிய பணிகளைச் செய்ய இயலும். சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சியாக விக்சனரி விளங்குகிறது. தற்போது தமிழ் விளக்கங்களுடன் வளரும் பன்மொழி அகரமுதலி - தற்பொழுதுள்ள சொற்கள் 3,49,456 ஆகும். விக்சனரியால் தமிழ் உச்சரிப்பு மற்றும் பொருள்சார்ந்த மின் உள்ளடக்கங்கள் பரப்பு விரிவடைந்துவருகிறது.

விக்கி மேற்கோள்

          விக்கிமேற்கோள்[10] என்பது புகழ் பெற்ற அறிஞர்களின் கூற்றுகளையும் படைப்புகளின் மேற்கோள்களையும் கொண்ட, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு நிகழ்நிலைக் களஞ்சியமாகும். இதில் பிற மொழிகளில் உள்ள மேற்கோள்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புகள் வழங்க இயலும். இதுவரை 562 பக்கங்களில் மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

விக்கிமூலம்

          இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாக விக்கிமூலம்[11] திகழ்கிறது. ஆக்கங்கள் 9,601. மேம்படுத்த வேண்டியப் பக்கங்கள்  3,77,592.  மின்னூலாக்கம் செய்யப்பட்ட பல நூல்கள் இணையத்தேடலின்போது நமக்குக் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அவ்வெழுத்துக்கள் பட வடிவில் உள்ளன. தேடு இயந்திரங்களுக்கு ஒருங்குறி வடிவிலான எழுத்து வடிவங்களே தெரியும். அதனால் மின்னூல்கள் ஒளி எழுத்துணரி (Optical Character Recognition – OCR) வழியாக மாற்றம் செய்து ஒருங்குறி எழுத்துகளாக மாற்றி விக்கிமூலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அண்மைக் காலத்தில் தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் மூலமாக பல தமிழ் நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டால் விக்கிமூலத்தின் வாயிலாக தமிழ்த்தரவுத்தளம் விரிவடையும்.

வலைப்பதிவு

          இணையதளங்கள், இதழ்களுக்கு இணையாக ஒவ்வொருவரும் சுதந்திரமாகத் தம் கருத்துக்களை வெளியிடுவதற்கான ஊடகங்களுள் வலைப்பதிவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. வலைப்பதிவுகளை இலவசமாக, எளிதில் உருவாக்க முடியும். ப்ளாக்கா், வேர்டுபிரசு, தம்ளர் [12]என எந்த இலவச வலைப்பதிவுகளாக இருந்தாலும்  அவற்றை உருவாக்குதல், பயன்படுத்துதல், வெளியிடுதல் என பல நிலைகளிலும் எளிமையானதாக இருப்பது வலைப்பதிவுகளின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும். மேலும் இவ்வலைப்பதிவுகளை இணையதளங்களுக்கு இணையாக வடிவமைக்கமுடியும் என்பதும், வலைப்பதிவுளில் எழுதப்படும் கருத்துக்கள் தேடுபொறிகளில் கிடைக்கப்பெறுவதும் கூடுதல் சிறப்பாக அமைகின்றன. வலைப்பதிவுகளை ஆரம்பித்துவிட்டு தொடக்கத்தில் ஒரே நாளில் பல இடுகைகளை வெளியிட்டவர்கள் பின்னர் வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை இடுகைகளை வெளியிடும்போது அந்த வலைப்பதிவு பார்வையாளர்களை முழுவதும் சென்று  சேராமல்போகிறது. அதனால் வலைப்பதிவுகளின் அமைப்புகளில் உள்ள சில நுட்பங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவற்றுள் ஒன்று இடுகைத் திட்டமிடல் நாம் நேரம் கிடைக்கும்போது இடுகைகளை வலைப்பதிவுகளில் உள்ளீடு செய்துவிட்டு நாம் விரும்பிய தேதி மற்றும் விரும்பிய நேரத்தில் வெளியிட இயலும். மேலும் நம் வலைப்பதிவுகளில் விருந்தினரை ஆசிரியராக அழைத்து ஒரே நேரத்தில் பலரையும் குழுவாகப் பதிவிட முடியும் என்பதையும் வலைப்பதிவர்கள் அறிந்துகொண்டால் தம் வலைப்பதிவைத் தொடர்ந்து இற்றைப்படுத்தி அதில் தமிழ் வளர்க்கமுடியும். ஆசிரியர்களுடன் மாணவர்களும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள நல்ல தளமாக வலைப்பதிவுகள் திகழ்கின்றன.

 மின்னூல்கள்

          மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பே மின்னூல் ஆகும். தமிழில் மின்னூல்களை உருவாக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னூலகம், மதுரை மின்னூல் திட்டம், நூலகம், புஸ்தகா, நோசன்பிரசு, லூலூ, கிண்டில்[13] என தமிழ் மின்னூல்களுக்கான நூலகங்கள் பல மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவற்றுள் அமேசான் கிண்டில் வழங்கும் மின்னூல் மிகப்பெரிய செல்வாக்குடன் திகழ்கிறது.

          மின்னூல்களை ஆசிரியர் மட்டுமின்றி மாணவர்களும் உருவாக்க இயலும். வேர்டு, கூகுள் டாக்சு, கிண்டில் மென்பொருள் வழியாகக் கூட தமிழ் மின்னூல்களை உருவாக்கி முடியும். மின்னூல்களை கணினி, மடிகணினி, பலகைக் கணினி, திறன்பேசி என பல்வேறு கருவிகளில் வாசிக்க இயலும்.

குறுஞ்செயலிகள்

        இன்றைய இணையதளப் பயன்பாடுகளில், கையடக்கக் கணினிகளுக்கும், திறன்பேசிகளுக்கும் சிறப்பான இடம் உண்டு. இவற்றில் பயன்படுத்தப்படும் ஆப்சு எனப்படும் குறுஞ்செயலிகள் இணையத்தில் நாம் செய்யவிரும்பும் செயல்பாடுகளை எளிமைப்படுத்தித் தருகின்றன. ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோசு வகை இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் கணினி பற்றிய அடிப்படை அறிவுடையவர் கூட தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்கமுடியும் என்ற தன்னிறைவான நிலையை இன்று நாம் அடைந்திருக்கிறோம். இணையதளம், மின்னூல், விளையாட்டு, படம், ஒலி, காணொளி, அசைபடம் என பல்வேறு வடிவங்களையும் குறுஞ்செயலிகளாக மாற்றமுடியும் என்ற கட்டற்ற சுதந்திரம் இதன் உருவாக்கப் பின்னணியில் இருப்பதால் நாள்தோறும் புதிய புதிய தமிழ்க்குறுஞ்செயலிகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. ஆப்ஸ் பில்டர், ஆப்கெய்சர்,  ஐபில்டு ஆப் [14]  போன்ற பல தளங்களும் இலவசமாகக் குறுஞ்செயலிகளை உருவாக்குவதற்குத் துணைநிற்கின்றன. மேலும் ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ, இகிலிப்சு[15] போன்ற மென்பொருள்கள் வழியாகவும் குறுஞ்செயலிகளை எளிதில் உருவாக்க இயலும் என்பதால் ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழில் தம் துறைசார்ந்த குறுஞ்செயலிகளை உருவாக்கி தகவல்தொடர்புகொள்ளும் போது கற்றல் ஆர்வமளிப்பதாக அமையும். மேலும் கூகுள் வகுப்பறை, ககூட், சுகுலாலசி, எட்மடோ [16] போன்ற பல குறுஞ்செயலிகளும் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தலுடன் அவர்களை பல்வேறு நிலைகளில் சிந்திக்கவைப்பனவாக அமைகின்றன.

மின் அகராதிகள்

        தமிழ் மின் உள்ளடக்கங்களுடள் தமிழ் அகராதிகள் குறிப்பித்தக்க வளர்ச்சியடைந்துள்ளன.ஒரு சொல்லின் பொருளை அறியவேண்டுமானால் அகாரதிகளில் தேடிய காலங்கள் உண்டு. இன்று இணையத்தில் மின் அகராதிகள் பல கிடைக்கின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஏழு அகராதித் தொகுப்புகள்[17] கிடைக்கின்றன. அவை, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, பால்ஸ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி, தமிழ் - தமிழ் அகர முதலி, த.இ.க வின் - உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி (பாட்டும் தொகையும்), காலக் குறிப்பு அகராதி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, ஆகியனவாகும். மேலும், பேராசிரியர் உமாராஜ் அவர்களின் சங்க இலக்கிய மின் அகராதி,[18] கதிரைவேலுப்பிள்ளை அகரமுதலி,[19] தமிழ்-ஆங்கிலம்-செருமன்அகரமுதலி,[20] ஆங்கிலம் – தமிழ் - சிங்கள அகர முதலி,[21] தமிழ் இணையக்கல்விக்  கழகத்தின் கலைச்சொல் பேரகராதி,[22] ஆகிய அகராதிகள் குறிப்பிடத்தக்கன. இவை மட்டுமின்றி கூகுள் பிளேசுடோரில் ஆண்ட்ராய்டு செயலிகளாகவும் தமிழ் அகராதிகள் கிடைக்கின்றன. ஒருங்குறி எழுத்துருக்களின் ஒத்திசைவால் இன்று யாரும் எளிமையாக அகராதிகளை உருவாக்கமுடிகிறது.

விரைவு எதிர்வினைக் குறியீடு (Quick Response code)

        கியூ.ஆர்.குறி என்பது பட்டைக் குறியீடு வாசிப்பிகளால் (bar code readers) வருடிகள், திறன்பேசிகள் புரிந்து கொள்ளக் கூடிய குறியீட்டுமுறை ஆகும். இங்கு குறியீட்டாக்கம் கொண்டுள்ளவை எண்கள் அல்லது எழுத்துக்களாக இருக்கலாம். இதனை வருடி, வாசித்து மேலதிக தகவல்களை, அல்லது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். இன்றைய சூழலில் பணம் செலுத்துதல் முதல் தகவல் பரிமாற்றங்கள் வரை இக்குறியீடு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களில் கூட இப்போது இக்குறியீட்டு முறையைக் காணமுடிகிறது. இந்த நுட்பத்தை தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கு எளிதில் பயன்படுத்தமுடியும். எழுத்து வடிவத்தில் உள்ள செய்தியையோ, காணொளி வடிவில் உள்ள செய்தியையோ இந்த நுட்பத்தால் பயன்படுத்த இயலும். இதற்கு கி.ஆர் கோடு கிரியேட்டர்,[23] போன்ற பல இணையதளங்கள் உதவுகின்றன.

நிறைவுரை

        ஆசிரியரிடம் மட்டுமே தமிழ் கற்கமுடியும் என்ற நிலை மாறி இன்று நுட்பியல் ஊடகங்கள் பலவும் தமிழ் கற்பிக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் திறன்பேசிகளும், குறுஞ்செயலிகளும், இணையதளங்களும்  திகழ்கின்றன. மனித ரோபோக்கள் ஒரு நாட்டின் குடியுரிமை பெறக்கூடிய அளவுக்கு சிறப்பான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இணையப் பரப்பில், தமிழ் மின் உள்ளடக்கங்களால் தமிழ்த்தரவுத்தளம் விரிவடைந்துள்ளது. அதனால் தமிழ் உச்சரிப்புகளை உணர்ந்து எழுத்துகளாக மாற்றமுடிகிறது. படங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களைப் பிரித்து உணரமுடிகிறது. தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் மென்பொருள்களை உருவாக்கமுடிகிறது. தமிழ் ஒலி நூல்களை உருவாக்கமுடிகிறது.

·         தமிழ் எழுத்துக்களைக் கற்பித்தல் தொடங்கி தமிழ் ஆராய்ச்சி வரை இன்று பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

·         யுடியூப், கான் அகாதமி போன்ற தளங்களில் தமிழ் தொடர்பான மின் உள்ளடக்கங்கள் எளிதில் உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

·         விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமேற்கோள், விக்கிமூலம் என விக்கியின் பல்வேறு சேவைகளில் தமிழ் மின் உள்ளடக்கங்கள் அதிகமாக உருவாகிவருகின்றன. எழுத்துணரி மென்பொருள்கள் வழியாக நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள பல நூல்கள் இன்று தேடுபொறிகளுக்குப் புரியக்கூடிய மின் உள்ளடக்கங்களாகக் கிடைக்கின்றன.

·         வலைப்பதிவுகளின் வழியே பலரும் தமிழில் பதிவுகளை எழுதிவருகின்றனர்.

·         தமிழில் மின்னூல்களை உருவாக்கும் வழிமுறைகளும் எளிதாகியுள்ளமையால் தமிழ் மின்னூலகங்களும் பல உருவாகியுள்ளன.

·         தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்க பல மென்பொருள்களும், செயலிகளும் உதவுகின்றன. குறுஞ்செயலிகளில் உள்ள மின் உள்ளடக்கங்களால் சொல்தேடுதல் முதல் கற்றல், கற்பித்தல் வரை எளிமையானதாகியுள்ளது.

·         இணையதளங்களிலும், குறுஞ்செயலிகளிலும் கிடைக்கும் தமிழ் மின் அகராதிகளால் தமிழ்ச்சொற்களின் பொருட்களை அறிந்துகொள்வதும், கலைச்சொற்களைத் தேடுவதும், தமிழ்ச்சொற்களுக்குப் பிற மொழிப் பொருள்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

·         விரைவு எதிர்வினைக் குறியீடுகளில் தமிழ் சார்ந்த செய்திகளை உள்ளீடு செய்வதும், வாசிப்பதும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது

தமிழின் பெருமையை தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மொழியினர் அறிவதற்கும், பிறமொழிகளில் உள்ள அறிவுச்செல்வங்களைத் தமிழில் வாசிப்பதற்கும் மின் உள்ளடக்கம் குறித்த அறிவைப் பெறுவது காலத்தின் கட்டாயமாகிறது. மாறிவரும் நுட்பங்களுக்கேற்ப தமிழில் மின் உள்ளடக்கங்கள் உருவாக்குவோம் கணினித் தமிழால் காலத்தை வெல்வோம்.

 

Bibliography

பொள்ளாச்சி நசன், ச. (n.d.). Retrieved from தமிழம், தமிழ் அநிதம்: http://www.thamizham.net, http://tamilanitham.com/

முனைவர்.ப.பாண்டியராஜா. (2017, 08 01). Retrieved from தமிழ் இலக்கியத் தொடரடைவு: http://tamilconcordance.in/

(n.d.). Retrieved from தமிழ் இணையக் கல்விக் கழகம்: http://www.tamilvu.org,

(n.d.). Retrieved from என்பிடெல், சுவயம், யுடிமி: https://nptel.ac.in, https://swayam.gov.in/, https://www.udemy.com/

(n.d.). Retrieved from யூடியூப்: https://www.youtube.com/

(n.d.). Retrieved from கான் அகாதமி: https://ta.khanacademy.org/

(n.d.). Retrieved from தமிழ் விக்கிப்பீடியா: https://ta.wikipedia.org/

(n.d.). Retrieved from தமிழ் விக்சனரி: https://ta.wiktionary.org/

(n.d.). Retrieved from தமிழ் விக்கி மூலம்: https://ta.wikiquote.org/

(n.d.). Retrieved from பிளாக்கர், வேர்டுபிரஸ், தம்ளர்: https://www.blogger.com/, http://ta.wordpress.com/, https://www.tumblr.com

(n.d.). Retrieved from தமிழ் மின்னியல் நூலகம், மதுரை மின்தொகுப்புத் திட்டம், நூலகம், புஸ்தகா, நோசன் பிரஸ், லூலூ, அமேசான் கிண்டில்: https://www.tamildigitallibrary.in/book-search https://www.projectmadurai.org/,

(n.d.). Retrieved from ஆப்ஸ் பில்டர், ஆப்கெய்சர், ஆப்யட், ஐபில்ட் ஆப்: http://www.apps-builder.com/, http://www.appsgeyser.com/ ,http://www.appyet.com/,

(n.d.). Retrieved from ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ, இக்லிப்ஸ்: https://developer.android.com/studio/, https://www.eclipse.org/

(n.d.). Retrieved from கூகுள் கிளாஸ்ரூம், ககோட், ஸ்கூலாலஜி, எட்மடோ: https://classroom.google.co, https://kahoot.com/, https://www.schoology.com/,

(n.d.). Retrieved from தமிழ் இணையக்கல்விக் கழக மின்னியல் அகராதி: http://www.tamilvu.org/library/dicIndex.htm

உமாராஜ், ம. (n.d.). Retrieved from சங்க இலக்கிய மின்னியல் அகராதி: http://umarajk.in/UGC_Dic_Dec_2013/Default.aspx

(n.d.). Retrieved from கதிரைவேலுப் பிள்ளை அகரமுதலி: https://dsal.uchicago.edu/dictionaries/winslow/

(n.d.). Retrieved from தமிழ் டிக்சனரி: http://www.tamildict.com/english.php

(n.d.). Retrieved from தமிழ் சிங்கள அகரமுதலி: https://www.kapruka.com/dictionary/EnglishToSinhala.jsp

(n.d.). Retrieved from தமிழ் இணையக்கல்விக் கழக கலைச்சொல்லகராதி: http://www.tamilvu.org/library/technical_glossary/html/index.htm

(n.d.). Retrieved from கியு.ஆர். கோட் ஜெனரேட்டர்: https://www.qr-code-generator.com/

 

 



[1] பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, (தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 14

[2] http://www.thamizham.net, http://tamilanitham.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக