வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 30 ஜூன், 2020

சிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்1. மாதவியின் நாட்டியப் பயிற்சி்

தெய்வ மால்வரைத் திருமுனி அருள

எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு

தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய

மலைப்பரும் சிறப்பின் வானவர் மகளிர்

சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய

பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை

தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை

ஆடலும் பாடலும் அழகும் என்றிக்

கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்

ஏழாண் டியற்றி ஓரீரா றாண்டில்

சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி

தெய்வ மால்வரை என்று போற்றப்படும் பொதியமலை முனிவன் அகத்தியன். அவன் அருளினால் இந்திரன் மகன் சயந்தன் சாபம் பெற்றான். சாபத்தால் மூங்கிலாக மாறிக் கிடந்தான். அந்த மூங்கிலால் செய்யப்பட்டது தலைக்கோல்.  அந்தத் தலைக்கோலை விருதாகப் பெற்றாள் உருப்பசி (ஊர்வசி). உருப்பசி வானவர் மகளிருள் ஒருத்தி. இவள் சிறப்பில் குன்றா நாட்டியக்காரி. ஊர்வசியின் பிறப்பில் குறைவில்லாப் பிறப்பில் தோன்றியவள் மாதவி. மாதவி தேனொழுகும் கூந்தலை உடையவள். இவளுக்கு ஆடல், பாடல், அழகுபடுத்திக்கொள்ளும் ஒப்பனை ஆகிய கலைகள் மூன்றனுள் ஒன்றிலும் குறைவுபடாமல் இருக்கும்படி ஏழு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. பன்னிரண்டாம்  வயதில் இவளது கலைத்திறத்தை மன்னருக்குக் காட்ட அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

2. ஆடல் ஆசிரியன்

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,

பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,

பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்(கு)

ஆடலும், பாடலும், பாணியும்,தூக்கும்,

கூடிய நெறியின் கொளுத்தும் காலை

பிண்டியும், பிணையலும், எழிற்கையும், தொழிற்கையும்,

கொண்டவகை அறிந்து, கூத்துவரு காலை

கூடை செய்தகை வாரத்துக் களைதலும்,

வாரம் செய்தகை கூடையில் களைதலும்,

பிண்டி செய்தகை ஆடலில் களைதலும்,

ஆடல் செய்தகை பிண்டியில் களைதலும்,

குரவையும் வரியும் விரவல செலுத்தி,

ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்

இரண்டு வகையான கூத்தின் வகைப்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டும். பல வகையான கூத்துகளை அறிந்து வேண்டாதவற்றை விலக்கி, வேண்டியவற்றை இணைத்துக்கொள்ளும் முறைமை தெரிந்திருக்க வேண்டும். 11 வகையான ஆடல், வாயில் பாடும் இசைப்பாட்டு, தாளக் கொட்டு ஆகியவற்றை இலக்கணப் பாங்கு, இலக்கியப் பாங்கு ஆகியவற்றோடு அறிந்திருக்க வேண்டும். ஆடும் பாங்கு, பாடும் பாங்கு, தாளம் கொட்டும் பாங்கு, இசை கூட்டும் பாங்கு ஆகியவற்றைச் சொல்லித்தர வேண்டும். இரண்டு கைகளையும் வெவ்வேறு வகையாக ஆட்டிக் காட்டும் பிண்டி, இரண்டு கைளையும் ஒன்று போல் ஆட்டிக்காட்டும் பிணையல், அழகிய அசைவுகளைக் காட்டும் எழில்-கை அசைவு, பூக் கட்டுதல் முதலான தொழில் புரிவதைத் காட்டும் தொழில்-கை, ஆகியவற்றையெல்லாம் சொல்லித்தந்து அவற்றை மாணவி செய்யும்போது, இரண்டு கைகளும் ஒன்று போல் செயல்படுதல் கூடை இரண்டு கைகளும் வெவ்வேறாகச் செயல்படுதல் வாரம், கூடை செய்த கை வாரம் செய்யக்கூடாது, வாரம் செய்த கை கூடல் செய்யக்கூடாது, நிலை நிறுத்திக் காட்டும் பிண்டி செய்யும் கை ஆடக்கூடாது, ஆடல் செய்யும் பிண்டியாகி நிலை நிறுத்தப்படக் கூடாது, குலவை ஒலியுடன் ஆடல் குரவை, பண்ணிசை ஒலியுடன் ஆடல் வரி, இவை இரண்டும் ஆடலில் ஒன்றாகக் கலந்துவிடக் கூடாது, ஆடலுக்கு உரிய இந்தப் பாங்குகளை ஆடல்-ஆசிரியன் தெரிந்திருக்க வேண்டும். 

3. இசையோன் - இசையமைத்துப் பாடக் கற்றுத்தருபவன்

யாழும், குழலும், சீரும், மிடறும்,

தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்

இசைந்த பாடல் இசையுடன் படுத்து,

வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,

தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்

ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,

கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,

பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -

வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்

அசையா மரபின் இசையோன் - தானும் -

யாழின் இசை, குழலின் இசை, பாட்டில் வரும் சீர்களைப் பிரித்து இணைக்கும் இசை, தொண்டையில் வரும் குரல் மாறுபாட்டு இசை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவனாக இருக்க வேண்டும். தாழ்ந்த குரலில் பாட வேண்டும். மத்தள ஓசைக்கும் ஆட்டத்தின் கால் தாளத்துக்கும் ஒத்துப்போகும்படிப் பாடவேண்டும்.  வரி என்னும் தாள நடனத்துக்கும், ஆடல் என்னும் மெய்ப்பாட்டு நடனத்துக்கும் உரிய பொருள் விளங்குமாறு பாட வேண்டும். தேசிகம் என்னும் நாட்டுப்பண் ஓசை வகைகளை எந்த விதமான குறைபாடும் இல்லாமல் உணர்ந்தவனாக இருக்க வேண்டும். பாட்டில் வரும் குறிப்பை உணர்த்துமாறு பாடவேண்டும். ஆடலின் பகுதி, தொகுதி ஆகியவற்றை உணர்ந்துகொள்ளுமாறு சொல்லித்தரும் திறமை பெற்றிருக்க வேண்டும். யாழிசைக்கு ஏற்ப வகுத்துப் பாடும் முறைமையைக் கற்பிக்க வேண்டும். இசையமைத்துச் சொல்லித் தருபவன் இசையோன். 

 4. நன்னூல் புலவன் - இயல் தமிழ்ப்  புலவன் பொருள் நலம் காட்டும் நல்ல நூல்களை மாதவிக்குப் புகட்டியவன்

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத்

தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,

வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்

நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து,

இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்து, ஆங்கு,

அசையா மரபின் அது பட வைத்து,

மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,

நாத் தொலைவு இல்லா நல் நூல் புலவனும் -

கடலால் வரையறுக்கப்பட்ட தமிழகம் முழுவதிலும் வழங்கும் தமிழை முழுவதுமாக அறிந்தவனாக இருந்தான். வேந்தன் இயல்பினை வெளிப்படுத்தும் வேத்தியல், பொதுமக்களின் இயல்பினை உணர்த்தும் பொதுவியல், என்னும் நாட்டிய நூல்களை நன்கு அறிந்தவனாக இருந்தான். இசையமைப்பாளனுக்கு ஏற்ற வகையில் பாடல் பாடித்தரும் வல்லமை படைத்தவனாக இருந்தான். மாறுபடுவோர் கூறும் வசை மொழிகளை உணர்ந்து திருத்திக்கொள்ளக் கூடியவனாக இருந்தான்.

5. தண்ணுமை ஆசிரியன் அமைவு

ஆடல், பாடல், இசையே, தமிழே,

பண்ணே, பாணி, தூக்கே,முடமே,

தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,

கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,

வார நிலத்தை வாங்குபு வாங்கி,

வாங்கிய வாரத்து, யாழும், குழலும்,

ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,

கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,

ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,

சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்

அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் -

 ஆடுதல், பாடுதல், இசை கூட்டுதல், தமிழ் பேசுதல், பொருள் இல்லாத பண்ணிசை பாடுதல், கையில் தாளம் போடும் பாணி, காலில் தாளம் போடும் தூக்கு, அமுக்கும் தாளக் கொட்டு – முடம், நாட்டுப்புறக் கொட்டு போன்றவற்றைக் குறை இல்லாமல் உணர்ந்திருந்தான். தட்டும்போது இரண்டு கைகளாலும் ஒரே மாதிரிக் கொட்டும் கூடை - தட்டு குறைவில்லாமல் அதிகமாகத் தட்டுதல் இரண்டு கைகளும் வெவ்வேறு வகையில் தட்டும்போது நிலத்தை நோக்கித் தட்டுதல் அப்படித் தட்டும்போது யாழிசையும் குழலிசையும் தொண்டையிலிருந்து வரும் குரலிசையும் ஒத்துப்போகுமாறு தட்டுதல் விரல்களை மடக்கி நகத்தால் தட்டுதல் அதனை வலிமையாகத் தட்டும் ஆக்கம், மென்மையாத் தட்டும் அடக்கம் ஆகியவை அளவுக்கு மிகாமல் தட்டுதல் உருட்டித் தட்டும் சித்திரக் கரணம் போன்றவற்றைத் தண்ணுமையில் முழக்கும் அருந்தொழிலில் முதன்மை பெற்றவனாக விளங்கினான்.

6. குழலோன் அமைதி - மாதவி ஆட்டத்துக்குக் குழல் ஊதியவன்

சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை

புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்

வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,

ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்

ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி,

பண் அமை முழவின் கண் எறி அறிந்து,

தண்ணுமை முதல்வன் - தன்னொடும் பொருந்தி,

வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து - ஆங்கு,

இசையோன் பாடிய இசையின் இயற்கை

வந்தது வளர்த்து, வருவது ஒற்றி,

இன்புற இயக்கி, இசைபட வைத்து,

வார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு

ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,

வழு இன்று இசைக்கும் குழலோன் - தானும் -

யாழ் வல்லுநன் போன்றவனாகக் குழல் ஊதுபவனும் விளங்கினான். சித்திர வஞ்சனை, விரல்கள் மாறும் நான்கு வகையான பரிவர்த்தனை ஆகியவற்றில் திறம் பெற்றிருந்தான். குரல், இளி நரம்பிசைகளை ஒப்பக் கேட்குமாறு ஊதும் திறம் பெற்றிருந்தான். முழவின் இசை, தண்ணுமை இசை ஆகிய இசைகளோடு பொருந்தி வருமாறு ஊதினான். வண்ணப் பட்டடை இசையைக் கூட்டும்போது யாழிசையைப் பின்பற்றறினான். கேட்ட இசையை குழலிசையில் கூட்டியும், கேட்கப்போகும் இசையை முன்னிறுத்தியும் ஊதினான். பாட்டில் வரும் வார இசையை எழுத்து எழுத்தாக உச்சரிப்பது போல ஊதினான். குறை ஏதும் இல்லாமல் ஊதும் பாங்கினனாகக் குழலோன் விளங்கினான்.  

7. யாழ் புலமையோன்

ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்

ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி

வன்மையிற் கிடந்த தார பாகமும்

மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்

மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்

கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத்

தளராத் தாரமும் விளரிக்கு ஈத்துக்

கிளைவழிப் பட்டனள் ஆங்கே கிளையும்

தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர

ஏனை மகளிரும் கிளைவழிச் சேர

மேலது உழையிளி கீழது கைக்கிளை

வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது

இறுதி ஆதி ஆக ஆங்கு அவை

பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது

படுமலை செவ்வழி பகர் அரும் பாலைஎனக்

குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து ஆங்கு

இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்

கோடி விளரி மேற்செம் பாலைஎன

நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்

இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டு ஆங்கு

யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்

குழல்மேற் கோடி வலமுறை மெலிய

வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்

பொலியக் கோத்த புலமையோனுடன்

செம்மையான முறையிலே இரண்டு ஏழாகத் தொடுக்கப்பட்ட ஆயப்பாலை பதிநான்கில்,ஓர் ஏழிசைபாலைகளை மட்டும் நிறுத்திக் காட்டுதல் விரும்பி, வன்மையாய் நிற்கும் ‘தாரம்’பெற்ற இரண்டலகில் ஓரலகையும், மென்மையாக நிற்கும் குரல் பெற்ற நாலகில் இரண்டலகையும் கூட்டி தோன்றியது ‘கைக்கிளை’(தாரம்)1+(குரல்)2=3 அலகு), தாரம் எனும் மெய்க்கிளை நரம்பில் இருந்து. அழகு தளராத தாள நரம்பு,தன்னிடம் எஞ்சியிருந்த ஓர் அலகை அருகில் இருந்த விளரிக்கு தர விளரி’ தன் தன்மை மாறித் ‘தத்தம்’ எனும் நரம்பாயிற்று.

அம்முறையே,’குரல்’,'இளி’,'உழை’ முதலான ஏனைய இசை நரம்புகள் தமக்கு ஏற்ற கிளைஞர் இடங்களை சேர்ந்தனர். செம்முறை மாறிப்போய்,இவ்வாறு பதினாற் கோவையானது. உழை முதல் இடத்தில நின்றது, கைக்கிளை இறுதி இடத்தில நின்றது.இப்புதிய கோவைகளாலே செம்பாலை முதலிய புதிய பண்கள் புதியதொரு மரபினிலே தோன்றின யாழிசை மூலமாக.

இறுதியாய் நின்ற கைக்கிளை முதலாக அனைத்து இசைகளும் முறைக்கேற்பத் தத்தமக்குப் பொருந்திய முறையான திரிபுகள் பெற்றுப் பொலிந்தன.

வலமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி,’கைக்கிளை, தத்தம், குரல்’ ஆகியவை, கைக்கிளை படுமலைப் பாலையாய் தத்தம் செவ்வழிப் பாலையாய் குரல் அரும் பாலையாய், திரிந்து; இடமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி,’தாரம், விளரி, இளி’, ஆகியவை, தாரம் கோடிப் பாலையாய்,  விளரி விளரிப் பாலையாய், இளி மேற்செம் பாலையாய்த் திரிந்து; நெடிதாகக் கிடந்த சுரங்களின் இடத்தே,முதலும் இறுதியுமாக கிடந்த நரம்புகளை பொருத்தமுறக் கொண்டு, அரும்பாலை முதலான இடமுறைப் பாலைகள் மெலிந்து இசைக்கவும்,கோடிப்பாலை முதலான வலமுறைப் பாலைகள் வலிந்து இசைக்கவும்,

வலிவு மெலிவு,சமம் என்னும் மூவகை ஓசைகள் விளங்கவும், நரம்புகளின் அடைவு சிறிதும் கெடாது, பண்ணீர்மை குன்றாது இனிதாக இசைக்கவல்ல யாழ் இசையசிரியனும் மாதவியுடன் வந்தான்.

 8. நாட்டிய அரங்கு – ஆடும் இடம்

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது,

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு

புண்ணிய நெடு வரைப் போகிய நெடுங் கழைக்

கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு,

நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்

கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக,

எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,

ஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி,

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை

வைத்த இடை நிலம் நால் கோல் ஆக,

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய,

தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த;

நாடக நூலோர் சொல்லிய அரங்க அமைப்பு இயல்புகளில் இருந்து சிறிதும் மாறாது, அரங்கம் அமைப்பதற்குத் தகுதியான ஒரு இடத்தை முதலில் தேர்வு செய்தனர். பொதிய மலை போன்ற உயர்ந்த புண்ணிய மலைகளிலே உயரமாக வளர்ந்த மூங்கில்களிலே, கணுவுக்கு கணு ஒரு சாண் தூரம் உள்ளதாக வளர்ந்திருக்கும் மூங்கில் ஒன்றை வெட்டி வந்தனர்.அதனை, நூல்கள் உரைத்த முறைக்கு ஏற்றவாறு, நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் கைபெருவிரலில் இருபத்தி நான்கு வரும்படி அளந்து ஒரு கோல் நறுக்கினர்.ஏழு கோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் உயரமுமாக நடன அரங்கம் அமைக்கப்பட்டது.

நாற்புறமும் தூண்களை நிறுத்தி, அவற்றின்மேல் உத்திரப் பலகைகளைப் பொருத்தினர்.உத்திரப் பலகைகளுக்கும் நடனமேடைக்கும் இடையே நான்கு கோல் அகல இடைவெளி இருந்தது.அரங்கத்தின் உள்ளே போவதற்கும் வருவதற்குமாக இரண்டு வாயில்கள் அமைக்கப்பட்டன. அரங்கின் மேல்நிலை மாடத்தில், யாவரும் தொழுது போற்றுமாறு,

9. அரங்கு ஒப்பனை - மாதவி நடனமாடிய அரங்கின் ஒப்பனை

பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;

தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து; ஆங்கு,

ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,

கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு;

ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;

விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து -

மேல்மூடித் துணியில் தேவர் உருவங்கள் எழுதப்பட்டிருந்தன. தூண்களின் நிழல் அரங்கில் விழாத வண்ணம் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கத்திலிருருந்து மற்றொரு பக்கத்துக்கு நகரும் திரையாகிய ஒருமுக எழினி,  இரண்டு பக்கங்களிலிருந்தும் நகர்ந்து வந்து நடுவில் பொருந்துமாறு அமைக்கப்பட்டிருந்த திரையாகிய பொருமுக எழினி, மேலே மறைந்திருந்து திடீரென இறங்கி மூடும் திரையாகிய கரந்துவரல் எழினி ஆகியவை சுருண்டு நின்றன. மேல் திரையில் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. முத்து மாலைகள் வளைந்திருக்கும்படித் தொங்கவிடப்பட்டிருந்தன. புதுமையான வேலைப்பாடுகள் அரங்கிற்கு அமைக்கப்பட்டிருந்தன.

10. தலைக்கோல் அமைதி

மாதவிக்கு விருதாக வழங்கப்பட்ட தலைக்கோல்

பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த

சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு,

கண் இடை நவ மணி ஒழுக்கி, மண்ணிய

நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி,

காவல் வெண்குடை மன்னவன் கோயில்

இந்திர சிறுவன் சயந்தன் ஆக என

வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல்

பெரும்புகழ் பெற்ற மன்னவர்,பகையரசருடன் நடந்த போரில் வென்று,அப்பகையரசர் புறமுதுகிட்ட வேளையிலே,அவருடைய வெண்கொற்றக் குடையின் காம்பினைச் சிதைவின்றி எடுத்துக்கொண்டு வருவர்.அதன் கணுக்களை தூய்மை செய்து,நவமணிகளை கட்டி அலங்கரிப்பர்.கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியைச் ‘சாம்பூநதம்’ என்னும் பொன் தகட்டால் பொதிவர். நாட்டினை தன் வெண்கொற்ற குடையின் கீழ் காக்கும் மன்னனின் அரண்மனையிலே அக்கோலை வைத்து,’இந்திரனின் மகன் சயந்தனாக இக்கோல் விளங்குக’,என அதற்கு வந்தனை,வழிபாடுகள் முதலியன செய்து போற்றுவர்.அதுவே ‘தலைக்கோல்’ என்பதாகும். .

11. தலைக்கோல் ஊர்வலம்

புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி

மண்ணிய பின்னர், மாலை அணிந்து,

நலம் தரு நாளால், பொலம் பூண் ஓடை

அரசு உவாத் தடக் கையில் பரசினர் கொண்டு,

முரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப,

அரைசொடு பட்ட ஐம் பெருங்குழுவும்

தேர் வலம் செய்து, கவி கைக் கொடுப்ப,

ஊர் வலம் செய்து புகுந்து, முன்வைத்து - ஆங்கு -

புண்ணிய நதிகளில் இருந்து பொற்குடங்களால் முகந்து வந்த நல்ல நீரைக் கொண்டு தலைக்கோலை நீராட்டி,மாலை சூட்டி,நன்னாள் ஒன்றில் பொன் ‘பூண்’ மற்றும் பொன் ‘முகபடாம்’ என்னும் அலங்கார துணி பூண்டிருக்கும்,பட்டத்து யானையின் பெரிய துதிக்கையிலே வாழ்த்தொலிகளுடன் அந்த தலைக்கோலை வழங்கினர்.

அந்த யானையை அழைத்துக் கொண்டு வீதி உலா வரும்போது,மூவகை முரசுகள் முழங்கின,பல்வேறு வாத்தியங்கள் ஒலித்தன,அரசனும் அவனுடன் சேர்ந்த ஐம்பெரும் குழுவினரும் அதனுடன் வீதிவலம் வந்தனர்.யானை தேர்வீதியை சுற்றி வந்த பின் தன் கையிலிருந்த தலைக்கோலை கவிஞனிடம் அளித்தது.அவ்வாறு வந்து சேர்ந்த தலைக்கோலைக் கவிஞன் மாதவியின் நடன அரங்கிலே கொண்டு போய்,அவையோர் அறியுமாறு ஒரு இடத்தில வைத்தான்.

12. மாதவி நாட்டிய அரங்கில் ஏறல்

இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்,

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,

வலக் கால் முன் மிதித்து ஏறி, அரங்கத்து,

வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி,

இந் நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த

தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,

சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க,

வாரம் இரண்டும் வரிசையின் பாட,

பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் -

கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்.

அரசன் முதலிய அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப அமைத்த இருக்கைகளில் முறையாக அமர்ந்தனர். இசைக்கருவிகளை இசைப்பவர் அவர்களுக்குரிய இடத்தில் அரங்கில் முறைப்படி நின்றனர். நடனம் ஆட வந்த மாதவியும் தன் வலதுகாலை முன் வைத்து அரங்கில் ஏறினாள்.’அரங்கத்தின் வலதுப் பக்கத் தூணின் அருகே ஆடுபவள் நிற்கவேண்டும் என்னும் வழக்கப்படி, மாதவி அவ்விடத்தே சென்று நின்றாள். பழைய முறைகளின் இயற்கைகள் அனைத்தும் அறிந்த அனுபவமுள்ள நடன மகளிர்,முறைப்படி இடத்தூண் அருகே சென்று நின்றனர். நன்மைகள் பெருகவும்,தீமைகள் அறவே நீங்கவும், ஓரொற்று வாரப்பாடல்களும் ஈரொற்று வாரப்பாடல்களும் முறையாக பாடினர். வாரப்பாடல்களின் இறுதியில், இசைக்கும் இசைக்கருவிகள் அனைத்தும் முழங்கின.

13. இசைக் கருவிகள் ஒலித்த முறை

குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்

தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப்

பின் வழி நின்றது முழவே; முழவொடு

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.

முதலில் குழல் இசை. அதன் வழியில் யாழ் இசை.

யாழ் வழியில் தண்ணுமை. தண்ணுமை வழியில் முழவு.

முழவு வழில் ஆமந்திரிகை. அனைத்து இசைக்கருவிகளும் இணைந்து ஒத்த இசையை எழுப்பின.

14. அந்தரக் கொட்டு

ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி,

கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக்

கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி,

வந்த முறையின் வழிமுறை வழாமல்,

அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,

முன்னர் சொன்ன முறைப்படி இசைவாணர்கள் தனித்தனியே இசை கூட்டி இறுதியில் சேர்ந்திசைக்கையில் ஆமந்திரிகை இசைக்குப் பின்னர் இருமுறைக் கொட்டல் நிகழ்ந்தது. இப்படிப் பதினொரு சுழற்சி முழக்கிக் காட்டப்பட்டது. இறுதியில் அந்தரக்கொட்டு என்னும் தன்னிசை முழக்க நிறைவு நடந்தேறியது.

15. தேசிக் கூத்து - மாதவி ஆடிய நாட்டுக் கூத்து

மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,

பாற்பட நின்ற பாலைப்பண் மேல்

நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து,

மூன்று அளந்து, ஒன்று கொட்டி, அதனை

ஐது மண்டிலத்தால் கூடை போக்கி,

வந்த வாரம் வழி மயங்கிய பின்றை,

கால அளவுக்கு மிஞ்சாமல் ஆடினாள், பல்வேறு கோணங்களில் சுழலும் வக்கணம் வகுத்து ஆடினாள், வகைவகையான பாலைப்பண் இசைக்கேற்ப ஆடினாள். நான்காம் நரம்பின் இசையை ஒதுக்கிவிட்டு ஆடினாள். ஒவ்வொன்றையும் மூன்று முறை ஆடினாள். ஒரு இசைக் கொட்டுக்கு ஐந்து வகையான கூடைப் பாவனைகளைக் காட்டி ஆடினாள். இப்படி வழிமுறையில் ஆடினாள். உரையாசிரியர்கள் இதனைத் தேசிக்கூத்து எனக் குறிப்பிட்டுள்ளனர்.

16. மார்க்கக் கூத்து - வாழ்க்கை விளக்கக் கூத்து

ஆறும் நாலும் அம்முறை போக்கி,

கூறிய ஐந்தின் கொள்கை போல,

பின்னையும், அம்முறை யேரிய பின்றை,

பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,

நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்துக்

காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்

இந்த முறையில் பத்து சுற்றுகள் ஆடினாள். ஐம்பொறிகளும் இயங்க ஆடினாள். ஆடி முடித்த பின்னர் பொன்னால் செய்யப்பட்ட கொடி சுழல்வது போல் சுழன்றாள். நாட்டிய நூலில் கூறப்பட்ட செய்திகளை நன்கு கடைப்பிடித்து ஆடினாள். அதனால் நாட்டுக் காக்கும் வேந்தன் அவளுக்குத் தலைக்கோலை விருதாக வழங்கினான்.

17. மாதவி மன்னனிடம் பெற்ற பரிசு

இலைப் பூங் கோதை, இயல்பினின் வழாமை,

தலைக்கோல் எய்தி, தலை அரங்கு ஏறி,

விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு

ஒரு முறையாகப் பெற்றனள் அதுவே

மாதவி நடனத்தை கண்டு சோழ மன்னன் மகிழ்ந்தான்.அந்நாட்டு நடைமுறை இயல்பு வழுவாமல்,அவன் அணிந்திருந்த பச்சை மாலையையும்,’தலைக்கோலி’ என்ற பட்டத்தையும் மாதவி பெற்றாள்.’முதன்முதலாய் மேடையேறி சிறந்து விளங்கிய நாடக கணிகையர்க்குரிய பரிசின் அளவு இது’, என்று நூலோர் விதித்த முறைப்படி,அரங்கின் முன் ஆயிரத்து எட்டுப் கழஞ்சுப் பொன்னையும் பெற்றாள் மாதவி.

18. மாதவியின் மாலையைப் பெற்று, கோவலன் அவளுடன் இருத்தல்

நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த,

வீறு உயர் பசும் பொன் பெறுவது; இம் மாலை,

மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ என,

மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,

நகர நம்பியர் திரிதரு மறுகில்,

பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த -

மா மலர் நெடுங் கண் மாதவி மாலை

கோவலன் வாங்கி, கூனி - தன்னொடு

மணமனை புக்கு, மாதவி - தன்னோடு

அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி -

விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன் -

வடு நீங்கு சிறப்பின் தன் மனை, அகம் மறந்து - என்.

நூறு பத்துகள் அடுக்கிய எண் ஆயிரம். அத்துடன் எட்டு சேர்த்தால் 1008. மாதவிக்கு மன்னவன் பாராட்டிச் சூட்டிய மாலையின் விலை 1008 பொற்காசுகள். இதனை விலை கொடுத்து வாங்குபவர் என் மகள் மலர்க்கொடி மாதவிக்கு உரிமை உடையவன் ஆவான் - என்று விலை கூறி விற்கும்படி மான் போன்ற பார்வை கொண்ட மாதவியின் தாய் மாலையை ஒரு கூனியின் கையில் கொடுத்து நகரத்து நம்பியர் (பெருங்குடி மகன்மார்) திரியும் நெருவில் மாதவியை விலைக்கு விற்பவள் போல நிறுத்தினாள்.  அழகிய மலர் போன்ற கண்ணை உடையவளாகிய மாதவியின் மாலையைக் கோவலன் அந்த விலையைக் கொடுத்து வாங்கிக்கொண்டான். மாலை விற்ற கூனியோடு மாதவியைத் தழுவும் மனைக்குச் சென்றான். மாதவியை அணைத்து மகிழ்ந்தான். எந்த நாளும் விட முடியாத விருப்பத்துடன் அவளுடன் வாழ்ந்துவந்ததான். குற்றமற்ற தன் வீட்டு நினைவே இல்லாதவனாக மாறிவிட்டான்.

வெண்பா

எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்

பண்ணின்ற கூத்துப் பதினொன்றும்-- மண்ணின்மேற்

போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்

வாக்கினால் ஆடரங்கின் வந்து.

புகார்நகரிலே பொன்னாலாகிய வளை அணிந்த மாதவியானவள், தலை அரங்கிலே வந்து, எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண்நான்கும், பண்ணுக்கிசைந்த பதினொரு வகையான கூத்தும், உலகம் முழுதும் உள்ளோரெல்லாம் புகழ்ந்து பேசும்படியாக,ஆடியும் பாடியும் காட்டி, அதனால் உலகு போற்றும் சிறப்பும் பெற்றாள்.


1 கருத்து:

  1. மிக அருமை ஐயா மிகவும் தெளிவாகப் புரியும் வகையில் பாடலும் விளக்கமும் இருக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா🙏

    பதிலளிநீக்கு