வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 19 மார்ச், 2011

What She Said.....(குறுந்தொகை)


0 ஆங்கிலம் தெரிந்தவர்களும் சங்க இலக்கியத்தின் சிறப்பை உணரவேண்டும்.
0 தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு ஆங்கிலத்துக்கு வாயையும் வயிற்றையும் விற்றுவிட்ட அறிவாளிகளும் சங்கஇலக்கியத்தின் பெருமையை அறிந்துகொள்ளவேண்டும்..

என்ற நோக்கிலேயே கீழ்க்காணும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்பை வெளியிட்டுள்ளேன்.

Bigger than earth, certainly,
higher than sky,
more unfathomable than the waters
is this love for this man

of the mountain slopes
where bees make rich honey
from the flowers of the kurinchi
that has such black stalks

மண்ணில் உயிர்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி காதல். காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை. காதலைப் பாடாத இலக்கியங்களும் இல்லை.

காதல் உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. ஆயினும் மனித உயிர்கள் மட்டுமே காதலைக் காதலிக்கத் தெரிந்து கொண்டன. சங்க காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் தீராமல்த் ததும்பிக் கொண்டிருக்கிறது காதல். காதலைப் பல மொழிகளில் பல புலவர்கள் பாடியுள்ளனர். இன்றுவரை காதல் பல வடிவங்களில் பாடப்பட்டு வருகிறது.
வாய்மொழிப் பாடல்கள்,மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைகூ, சென்ரியு என பாடல் வடிவங்கள் மாறலாம் ஆனால் பாடுபொருள் உள்ளடக்கம் மாறுவதில்லை. காதலைப் பல வடிவங்களில் பாடியுள்ளனர் ஆனால் காதலின் வடிவத்தைப் பாடிய பாடல் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவுள்ளது. ஆம் இன்று வரை காதலை இவ்வாறு வடிவப்படுத்திப் பாடிய பாடல் எதுவும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை.

காதலை வடிவப்படுத்த முடியுமா?
காதல் என்ன பொருளா? என்றெல்லாம் வினா எழலாம்.

அழிந்து போகும் பொருட்களையே நாம் வடிவப்படுத்திப் பழகிவிட்டோம். அவையெல்லாம் காட்சிப் பிழைகள் என்பதை நாம் உணர்வதற்கு ஒரு முதிர்ந்த மனநிலை வேண்டும்.

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,
இப்பாடலின் பொருளை அறிந்துகொள்ள பாடலின் மீது சொடுக்கவும்.

சனி, 12 மார்ச், 2011

வயசு.. இளவயசு…!!


வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள்
அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!!

என்பது முன்னோர் அனுபவ மொழி.

எத்தனை வயது வரை வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே பயனுள்ள வாழ்க்கையின் அளவுகோளாகவுள்ளது.

தமிழிலே பேசவும், எழுதவும் பலர் இருக்கலாம் . இருந்தாலும் ஒரு சிலரின் எழுத்துக்களிலும் , பேச்சிலும் மட்டும் ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருப்பதுண்டு.

அப்படியொரு ஈர்ப்புள்ள..
உயிர்ப்புள்ள ஒரு கவிதையை எங்கள் கல்லூரி மாணவர் எழுதித்தந்தார்.
அறிவியல் துறைசார்ந்த அம்மாணவரின் தமிழ்ப்பற்றும், ஆர்வமும்
வரவேற்பிற்குரியதாகவும், தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் கொள்ளத்தக்கது.
வாழ்த்துவோம் வளரட்டும்.

வயசு.. இளவயசு…!!


பெத்தவங்க திட்டிப்புட்டா
கோபம் வரும் வயசு!
மத்தவங்க சொல்லிப்புட்டா
ரோசம் வரும் வயசு!
அறிவுரையக் கேட்டுப்புட்டா
காதடைக்கும் வயசு!
அங்க இங்க சுத்த நினைக்கும்
இளங்காற்று வயசு!
கல்விச் சாலைக்குப் போயிட்டு
கட்டடிக்கும் வயசு!
புத்தகத்தைப் பார்த்துப்புட்டா
எட்டி நிற்கும் வயசு!
நண்பர்களைப் பார்த்துவிட்டால்
கிண்டலடிக்கும் வயசு!
எண்ணமெல்லாம் எங்கெங்கோ
ஏணியேறும் வயசு!
கொட்டுகின்ற மழையோடு
ஆற்றில் குளிக்கும் வயசு!
சுட்டெரிக்கும் பரிதியோடு
பந்தாடும் வயசு!
அர்த்தமில்லாப் பேச்செடுத்து
தினம் உரையாடும் வயசு!
உணவெண்ணம் வாராது
ஊரைச்சுற்றும் வயசு!
வாகனங்கள் அனல் பறக்க
விரைந்தோட்டும் வயசு!
இளங்கன்று போலத் துள்ளி
ஓடியாடும் வயசு!
பலவழியில் குணமிழந்து
போகவைக்கும் வயசு!

வாழ்வுக்கும் வீழ்வுக்கும்
பாதை காட்டும் வயசு!!!!

கண் சிமிட்ட்ட்டும் நேரத்தில்
கரைந்தோடும் வயசு!!!!

அதனால் சீக்கிரமாய்
சிகரமேறி கொடி நாட்டு வயசே!!!!!!!



ச.கேசவன்
இளங்கலை இயற்பியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.

சனி, 5 மார்ச், 2011

வெள்ளி, 4 மார்ச், 2011

சங்க இலக்கியப் பொன்மொழி..


நான் மட்டும் அப்போது அங்கு இருந்திருந்தால்....
அந்த நேரம் பார்த்து நான் அங்கு இல்லாமப் போயிட்டேனே....

என நடந்து முடிந்த ஏதோ ஒரு நிகழ்வைப் பற்றி உணர்ச்சிபொங்க பேசிக்கொண்டிருப்போம்.

நடந்து முடிந்ததைப் பேசுவதால் யாது பயன்..?
இருந்தாலும் நாம் ஏன் நடந்து முடிந்தவொரு நிகழ்வை அதாவது கடந்த காலத்தைப் பற்றி இன்றும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

“பானை உடைந்து போனால் அதை ஒட்ட வைக்க முடியாது
இருந்தாலும் அது எப்படி உடைந்தது என்ற அனுபவம் அந்தப் பானை மீண்டும் உடையாமல் பாதுகாக்கத் துணை நிற்கும்“
இது போலத்தான் கடந்த காலம் பற்றிய உரையாடல்கள்..


ஒரு அழகான அகச்சூழல்.

பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
என்பது இப்பாடலுக்கான துறைக்குறிப்பு.

தலைவன் தலைவியைப் பகலில் சந்திக்கத் துணை செய்யுமாறு தோழியிடம் வேண்டுகிறான். தோழியோ தலைவியின் நிலையைக் கூறி அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.

“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”

என்பதை எங்கள் தலைவி முன்பே அறிந்திருந்தால் இன்று உன்னை எண்ணி வருந்தாமல் இருந்திருப்பாள் என்கிறாள் தோழி .


“படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர்வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல்விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப
“நன்றி விளைவும் தீதொடு வரும்” என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள் மன்னே.“

188 – நற்றிணை (குறிஞ்சி)

பகற்குறி மறுத்து வரைவு கடாயது.

நடந்தவை
நடப்பவை
நடக்க இருப்பவை என முக்காலத்தையும் அறிந்து வைத்திருக்க நாமென்ன தீர்க்கதரிசிகளா..?

உங்கள் நண்பனிடம் அளவாக அன்பு வையுங்கள்!!
ஏனென்றால் அவனே நாளை உங்கள் எதிரியாகலாம்!!!

உங்கள் எதிரியின் மீதும் அளவாகவே கோபம் கொள்ளுங்கள்!!
ஏனென்றால் நாளையே அவன் உன் நண்பனாகலாம்!!!

என்பது இன்றைய வாழ்வியல் அனுபவமொழி.

சங்க கால அனுபவ மொழி...

“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”

என்பதாகும்.

பாடலின் பொருள்..

ஆழமான சுனையி்ல் நீரையுடைய மலையிடத்தே முளைத்த வாழையின் வளைந்த மடலிலிருந்து தோன்றிய கூரிய நுனியைக் கொண்ட குவிந்த மொட்டு, ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட பெண்களின் விரலில் அணிந்த விரலணி போலச் செங்காந்தளின் வளமையான இதழில் தோயும். வானில் நீண்டு பொருந்திய மலையையுடைய தலைவனே!!

எங்கள் தலைவி,
“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்” என்று உன்னோடு நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்தின் கண் நன்றாக அறிந்திருப்பின் இப்போது வருத்தமின்றி இருந்திருப்பாள்.

இனி நடந்து முடிந்தபின் அதனைக் கூறுவதால் என்ன பயன்...?

பாடலின் வழியே .....

1. “ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”
என்னும் சங்ககால மக்களின் அனுபவமிக்க பொன்மொழி பின்பற்றத்தக்கத்தாகவுள்ளது.
மனதைத் திடப்படுத்தும் பொன்மொழியாக இதனைக் கருதமுடிகிறது.

2. பகற்குறி மறுத்து வரைவு கடாயது என்ற அகத்துறை,

தலைவன் தலைவியைப் பகலில் சந்திக்கத் துணை செய்யுமாறு தோழியிடம் வேண்டுகிறான். தோழியோ தலைவியின் நிலையைக் கூறி அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.

என விளக்கம் பெறுகிறது.

செவ்வாய், 1 மார்ச், 2011

பாடத்திட்டம் 80 சிபி (GB)


இன்றைய கல்வி மாணாக்கர்களைச் சிந்திக்கச் செய்கிறதா..?
இயந்திரமாக்குகிறதா..?

என்ற சிந்தனையைத் தூண்டிய குறுந்தகவல்..

பாடத்திட்டம் – 80 சி.பி (GB)
மாணவர்கள் படிப்பது – 80 எம்.பி (MB)
அவர்களின் மனதில் பதிவது – 80 கே.பி (KB)
தேர்வில் எழுதுவது – 80 பைட்சு (BYTES)
தேர்வு முடிவு – 00, 01
-----------------------------------
-----------------------------------

கற்பித்தல் என்பது என்ன?

மாணவர்கள் மதிப்பெண் பெறுவது ? புரிந்துகொள்வது? இரண்டில் எது முதன்மையானது என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கும்...

கல்விஅம்மா – இன்று பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தந்தார்கள்..?
பையன் – இன்று எப்படி எழுதுவது என்று சொல்லித்தந்தார்கள்.
அம்மா – சரி! என்ன எழுதியிருக்க......?
பையன் - எழுதியதை எப்படிப் படிப்பது என்று சொல்லித்தரவில்லையே..!!!

---------------------------------
---------------------------------

துன்பம் பெரிதா..? அனுபவம் பெரிதா ? என்னும் கேள்வியை எழுப்பிய...

அனுபவம்.


நீ பட்ட துன்பத்தைவிட...
அதில் நீ பட் ட அனுபவம் பெரிது...!!!

---------------------------------------
---------------------------------------
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்ற கருத்தை அறிவுறுத்தும்..


பெருந்துன்பம்.

துன்பங்களை எண்ணிப் பார்ப்பது
இரண்டு முறை துன்பப்படுவதற்குச் சமமானது!
---------------------------------------
---------------------------------------
நாமெல்லாம் மனிதம் உடையவர்களா என்று தன்மதிப்பீடு செய்யச் சொல்லகிறது இந்தக் குறுந்தகவல்.


அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து
ஆனால் அந்த அன்பே இங்கு பொய்யானால்
உலகத்தில் அதைவிட கொடிய நோய் எதுவுமில்லை!!

அன்னை தெரசா.

---------------------------------------
---------------------------------------