வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 28 ஜனவரி, 2017

புறநானூற்றில் நாணம்


(இன்றைய பதிவு இந்த வலைப்பதிவின் 1300 வது பதிவு என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
            நாணம் தமிழர் உடல்மொழிகளுள் குறிப்பிடத்தக்கது.
நாணம் என்பது பெண்களுக்கானது என்றே காலந்தோறும்; இலக்கியங்கள் மொழிந்துவருகின்றன. பெண்கள் வெட்கப்படுவதை இலக்கியங்கள் மிகுதியாகவே இயம்பியுள்ளன. நாணிக்கண் புதைத்தல் என்று தனியாகவே இதைப் பற்றிப் பாடும் அளவுக்கு பெண்களின் நாணம் பேசப்பட்டுள்ளது. புறநானூற்றில் கூறப்படும் நாணம் பெண்களுக்கானது அல்ல, ஆண்களுக்கானது. ஒரு ஆண் நாணம் கொள்வதற்கான சூழல்களை நயம்பட எடுத்துரைக்கிறது புறநானூறு. இதன்வழி பழந்தமிழரின் பண்பட்ட அறிவும், செம்மையான வாழ்க்கையையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
நாணம்
            நாணம் என்ற சொல்லுக்கு இன்று வெட்கம் என்று பொருள் வழங்கப்படுகிறது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பெண்களுக்கான பண்புகளுள் ஒன்றாக நாணத்தை உரைக்கும்; தொல்காப்பியம், பெருமையும், உரனும் ஆண்களுக்கான இலக்கணமாக  உரைக்கிறது. பெருமை என்பது செல்வச்சிறப்பு, வலிமை, கொடை எனப்படும், உரன் என்பது அறிவு, ஆற்றல் எனப் பொருள்படும். பெண்களுக்கான பண்பாக நாணம் கூறப்படுவதால் ஆண்கள் நாணம் கொள்வதை தமிழச்;சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும் தமிழ் இலக்கியங்களை நன்கு உற்றுநோக்கும்போது, நாணம் என்பது இருபாலருக்கும் பொதுவானது என்றும் அது நுட்பமான பல உள்ளடக்கங்களைக் கொண்டது என்பதும் புலனாகிறது. நாணுடைமை என்னும் அதிகாரத்தில் நாணத்தை இருபாலருக்கும் பொதுவாகவே வள்ளுவர் பேசுகிறார். சான்றாக,  1011 என்ற குறளில் தகாத செயல் காரணமாக நாணுவதே நாணம். பெண்களுக்கு இயல்பாகத் தோன்றும் நாணம் வேறு வகை என நாணத்தின் நுட்பமான வேறுபாட்டை அழகுபட மொழிகிறார் வள்ளுவர். மேலும் நாணுத்துறவு உரைத்தல் என்ற அதிகாரத்தில்,  1133 என்ற குறளில் நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு உடையவனாக இருந்தேன். இப்போது நாணமற்றார் ஏறும் மடலைத் துணையாகக் கொண்டேன் என உரைக்கிறார் இக்குறள் வழியாக நாணம் இருபாலருக்கும் உரியது என்ற கருத்தைப் புரிந்துகொள்ளலாம்;.
நாண் என்னும் அணி
   நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் ஏதுமற்ற தன் மனைவியின் வறுமை நிலையை எண்ணி வருந்தும் ஒரு புலவரின் நிலையை,  (புறநா – 196-12) ஆவூர் மூலங்கிழார் எடுத்துரைக்கிறார்.
கூற்றம் அடைந்த நாணம்
         தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனின் போர்த்திறனைக் கண்டு கூற்றம் நாணம் கொண்டது (புறநா – 19-16) என்கிறார் குடபுலவியனார்.
பகைவரின் நாணம்
                                    தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனின் வீரம் கண்டு பகைவர் வெட்கப்பட்டார்கள் என்பதை நண்ணார் நாண (புறநா – 23-12) என்று உரைக்கிறார் கல்லாடனார்.
வேல்தந்த நாணம்  
        போரில் வீரத்துடன் போராடிய மறவனின் நெஞ்சிலே அவனறியாதவாறு வேல் ஒன்று பாய்ந்தது. தன் நிலை எண்ணி நாணம் கொண்டான் (புறநா – 288-6)  அம்மறவன் என்கிறார் கழாத்தலையார்.
பிடிகளின் நாணம்
             பகையரசன் எறிந்த வேல் ஓர் அரசனின் மார்பைத் தாக்கியது. அவ்வேலை உள்ளக் களிப்புடன் பறித்து அவ்வரசன் வீரத்தோடு போர்புரியும் ஆற்றலைக் கண்ட பகையரசனின் யானைகள் எல்லாம் அவற்றின் மடப்பிடிகள் கண்டு நாணுமாறு புறங்காட்டி ஓடின என ஒரு அரசனின் வீரத்தை எடுத்துரைக்கிறார் கோவூர்க்கிழார். இதனை, “புன்தலை மடப்பிடி நாணக்                                   குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே ((புறநா –308 -10-11) என்ற அடிகள் இயம்பும்
கொடை தரும் நாணம்
      குமணனைப் பாடவந்த பெருஞ்சித்திரனார், நீ தரும் கொடையால் பிற அரசர்கள் நாணுமாறு செல்வேன் (புறநா – 161-26)  என உரைக்கிறார்.
       கரும்பனூர்க் கிழாரின் கொடைத்தன்மையைப் பாடவந்த நன்னாகனார், உணவு வழங்கும்போது நெய்யை தண்ணீர் போல அள்ளி அள்ளி வழங்கினான் அதனால், நீர் நாண நெய்வழங்கினான் (புறநா – 384 -17) என்று உரைக்கிறார்.
                        ஆவூர் மூலங்கிழார், கௌணியன் விண்ணந்தாயன் என்னும் அரசன் வேள்விசெய்யும் திறனைப் பாடும்போதுநீர் நாண நெய் வழங்கினாய், எண்கள் நாண பல வேள்விகள் செய்தாய், மண்ணில் உள்ள பல மனிதர்களும் நாண உனது புகழைப் பரப்பினாய் (புறநா – 166-21-23) எனப் புகழ்ந்து பாடுகிறார்.
அஞ்சுதல் நாணம்
     நெடுங்கிள்ளி தன்னை எதிர்த்துவந்த நலங்கிள்ளிக்கு அஞ்சி கோட்டையின் மதிற்கதவுகளை அடைத்து மறைந்திருந்தான். இது வெட்கக்கேடானது (புறநா – 44-16)  என உரைக்கிறார் கோவூர்க்கிழார்.    காவல் மரங்களை வெட்டும் ஒலி கேட்டும் போருக்கு வராமல் இருக்கும் சேரனுடன் போரிடுவது உனக்குத் தகுதியா? இது நாணத்தக்க செயலல்லவா? என சோழ மன்னனைப் பார்த்துக் கேட்கிறார் ஆலந்தூர்க்கிழார். (புறநா – 36 -13)
புகழால் தோன்றிய நாணம்
   தன்மீது கொண்ட அன்பால் தன்முன்னே தனது புகழைப் பாடிய பரிசிலர் பாடிமுடிக்கும் முன்பாக புகழ்கேட்க நாணி (புறநா152 - 22) வல்வில் ஓரி பரிசில் வழங்கியதை வன்பரணர் உரைக்கிறார்.
நாணமும் வடக்கிருத்தலும்  
         நெடுஞ்சேரலாதன், கரிகாற்பெருவளத்தானுடன் செய்தபோரில் புறப்புண் பட்டான். அதற்கு நாணம் கொண்டவனாக வடக்கிருந்து உயிர்நீக்க முயன்றனான். இதை, மாலை நேரத்தில் நிலவுக்கு எதிர்நிற்க நாணி மலையில்சென்று மறைந்தது கதிரவன். அதுபோல எதிர்பாராது புறப்புண்பட்ட நீ நாணினாய்! வாளுடன் வடக்கிருந்தாய்! என்ன கொடுமை! (புறநா –65-10-11)  எனப் புலம்புகிறார் கழாத்தலையார்.
   போரில் வென்ற சோழனைக்காட்டிலும் புறப்புண்ணுக்காக நாணி வடக்கிருக்கும் சேரன் நின்னினும் நல்லன் என்று புகழ்ந்து பேசுகிறார் வெண்ணிக் குயத்தியார். இதனை, புறப்புண் நாணி, வடக்கிருந்தோனே! (புறநா – 66-8) என்ற பாடலடிகள் சுட்டுகின்றன.
நிறைவாக
            நாணம் என்ற உடல்மொழியானது ஆண்களுக்கும் பெருமைசேர்ப்பது என்ற உண்மையைப் புலவர்கள் புறநானூற்றில் பல நிலைகளில் அழகுபட எடுத்துரைத்துள்ளனர். பல்வேறு இலக்கியங்களில் நாணம் என்பது பெண்களின் பண்புகளில் ஒன்று என்று விரித்துப் பேசியிருந்தாலும் திருக்குறளின் நாணுடைமை, நாணுத்துறவுரைத்தல் ஆகிய அதிகாரங்கள் நாணம் என்பது இருபாலருக்கும் உரியது என்ற உண்மையை இயம்புகின்றன.
            புறநானூற்றில் நாணம் என்பது பெண்களின் அணிகளுள் ஒன்று என்றும், வீரமுடைய அரசர்களின் போர்திறனைக் கண்டு கூற்றம் நாணம் கொண்டதாகவும், தன்னைவிட வீரம் கொண்ட அரசரின் திறன் கண்டு பகைவர் நாணம் கொள்வதும் இயல்பாகப் பேசப்படுகிறது.
            போர்புரியும்போது தன்னையறியாது நெஞ்சில் வேல்பாய்ந்தால் வீரர்கள் நாணம் கொள்வதையும், அவ்வேலைப் பறித்து வலிமையுடன் போரிடும் வீரனைக் கண்டு பிடிகள் நாண களிறுகள் ஓடியமை குறித்தும் புறநானூற்றில் குறிப்புகள் உள்ளன.
                        நீர் நாண நெய் வழங்கியமையும், எண்கள் நாண வேள்விகள் செய்தமையும், மண்ணில் வாழும் மக்கள் நாண புகழ்பெற வாழ்ந்தமையும் புறநானூற்றுப் பாடல்கள் வழி உணரமுடிகிறது.
                        போருக்கு அஞ்சுதல் வெட்கக்கேடான செயல் என்றும், தம் வீரம் கண்டு தம்முடன் போர் புரிய அஞ்சும் அரசர்களுடன் போரிதல் நாணத்தக்க செயல் என்றும் கருதிய நம் முன்னோர் வீரம் பெருமிதம்கொள்ளச் செய்வதாக உள்ளது.
                        தம் புகழைக் கேட்பதுகூட நாணக்கேடான செயல் என்று கருதி தம்மைப் புகழும் முன்னரே கொடைவழங்கிய அரசர்களின் செயல்வழியாக பழந்தமிழரின் மாண்பை அறிந்துகொள்ளமுடிகிறது.
                        தம் மானத்துக்கு கேடான தோல்வி ஏற்பட்டால் அந்த நாணத்துக்கு அஞ்சி வடக்கிருந்து உயிர்நீத்தனர் என்ற செய்தியின் வழி சங்ககாலத்தமிழர்கள் உயிரைவிட நாணத்துக்கு மதிப்பளித்தனர் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.
                        இக்கட்டுரைவழியாக நாணம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பெருமைசேர்ப்பது என்ற உண்மை எடுத்துரைக்கப்படுகிறது.