வெள்ளி, 20 ஜனவரி, 2017

இந்தி மொழிபெயர்ப்பில் திருக்குறள் அதிகாரப் பெயர்கள்

இந்தி மொழிபெயர்ப்பில் திருக்குறள் அதிகாரப் பெயர்கள்

மு.முரளி, தமிழ் உதவிப் பேராசிரியர்,
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்
முன்னுரை
உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் பிற இந்திய மொழிகளிலும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் வெளிவந்து சிறப்பைப் பெற்றுள்ளது. உலகில் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பெற்றுள்ள நூல்களில் விவிலியத்திற்கு அடுத்தபடியாகத் திருக்குறளையே குறிப்பிடுவர். நூற்றிற்கும் மேற்பட்ட மொழிகளில் இதற்கு மொழிபெயர்ப்புகள் வந்ததன் வழி அதன் பெருமையை அறிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தி மொழியில் மட்டும் பத்தொன்பது மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளதை இணையதளக் குறிப்பின் வழி அறிய முடிகிறது (http://www.oocities.org/nvkashraf/kur-trans/Hind-Int.htm). இவ்வாறு ஒரு மொழியில் பல்வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் வந்துள்ள நிலையில் அவை பெயர்க்கப்பட்டுள்ள விதம் குறித்து ஒப்பிட்டு நோக்குவது உற்றுநோக்கத்தக்கதாகும். இந்தியில் திருக்குறளை மொழிபெயர்த்தப் பெயர்ப்பாளர்களில் கோவிந்தராஜ் ஜெயின் (1942), சு.சங்கரராஜீ நாயுடு (1958), கேமானந்தராஹத் (1960), பி.டி.ஜெயின் (1961), மா.கோ.வேங்கடகிருஷ்ணன் (1967), ராஜம் பிள்ளை மற்றும் நந்தகுமார் அவஸ்தி (1976), ரவீந்திரகுமார் சேட் மற்றும் எச். பாலசுப்பிரமணியம் (1999), ஆனந்த சந்திதத் (2000) போன்றோர் குறிப்பிடத்தக்கவராவர்கள். இவர்களில் 'கேமானந்தராஹத்' நேரடி மொழிபெயர்ப்பில்லாது ஆங்கிலம் வழியாகக் குறிப்பிட்ட சில குறள்களை மட்டும் மொழிபெயர்த்துள்ளார். மேற்சுட்டியவற்றுள் நேரடி மொழிபெயர்ப்பாக வெளியாகியுள்ள சு.சங்கரராஜீ நாயுடு, மா.கோ. வேங்கடகிருஷ்ணன், ரவீந்தரகுமார் சேட் மற்றும் எச். பாலசுப்பிரமணியம் ஆகியோரது மூன்று மொழிபெயர்ப்புகளின் அதிகாரத் தலைப்புகளை இங்கு ஓப்பீட்டிற்கு எடுத்துக்கொண்டு அதன் ஒற்றுமை வேற்றுமைகள் இனம் காணப்படுகிறது.
மூன்று மொழிபெயர்ப்பாளர்களின் ஒப்பீடு
          திருக்குறளை இந்தி மொழிக்கு நேரடியாக மொழிபெயர்த்துள்ள சங்கரராஜீ நாயுடு, ம.கோ. வேங்கட கிருஷ்ணன் மற்றும் ரவீந்திர குமார் சேட் & எச்.பாலசுப்பிரமணியம் ஆகியோரது மூன்று மொழிபெயர்ப்புகளின் அதிகாரத் தலைப்புகள் மூலமொழிக்குத் தக்கவாறு பெறுமொழியில் எவ்வாறு மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன என்பது சில சான்றுகளின் வழிப் பின்வருமாறு விளக்கப்படுகின்றது.
          இங்கு ஒற்றுமை வேற்றுமைகள் என்பது மூலமொழியில் இருந்து பெறுமொழிக்கு மொழிபெயர்த்ததில் பொருள் மாறுபடும் இடம், சொல் மாறுபடும் இடம் என்று இருவகையாகப் பிரித்து சான்றுகள் கொடுக்கப் பெற்றுள்ளன. 
பொருள் நிலையில் மாறுபடுமிடங்கள்
மூவரும் மூலத்திலிருந்து விலகி மொழிபெயர்ப்பைத் தருமிடம்
          ‘ஒப்புரவறிதல்’ என்னும் அதிகாரத் தலைப்பிற்கு மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்த்துள்ள மொழிபெயர்ப்பு பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
சங்கரராஜீ நாயுடு
शिष्टाचार का ज्ञन (ஷி2ஷ்டாசார் கா க்3யன்)
ம.கோ.வேங்கட கிருஷ்ணன்
लोकोपकारिता (லோகோ பகாரிதா)
ரவீந்திர் குமார் சேட்  &
எச். பாலசுப்பிரமணியம்
लोकोपकार करना (லோகோ பகார் கர்னா)

          ஒப்புரவறிதல் எனும் அதிகாரத் தலைப்பானது ‘சமமாகப் பாவித்தல்’ என்னும் பொருண்மையைக் கொண்டதாகும். மொழிபெயர்ப்பாளர்கள் சங்கரராஜீ நாயுடு மரியாதை காத்தல் (ஷி2ஷ்டாசார் கா க்3யன்) என்றும் வேங்கட கிருஷ்ணன் உலகுக்கு உபகாரம் (லோகோ பகாரிதா) என்றும் ரவீந்தர் குமார் சேட் & எச். பாலசுப்பிரமணியம் பிறருக்கு உதவுதல் (லோகோ பகார் கர்னா) என்றும் மொழிபெயர்த்துள்ளனர். இம்மூன்று மொழிபெயர்ப்புகளும் மூலத்தின் ‘சமமாகப் பாவித்தல்’ என்ற பொருண்மையை நேரடியாக பெறுமொழி வாசகர்களுக்கு கொடுக்க முயற்சிக்காமல் மறைமுகமாக உணர்த்த முயற்சிக்கும் போது மூலத்தின் சரியான பொருள் வாசகர்களுக்கு சென்று சேராமல் மாறுபாடடைகிறது.
வேங்கடகிருஷ்ணன் பொருள் மாறுபாடு அடையும் இடம்
          ‘கொல்லாமை’ என்ற அதிகாரத் தலைப்புக்கு மொழிபெயர்ப்பாளர்கள் சங்கரராஜீ நாயுடுவும் ரவீந்தர் குமார் சேட் & எச். பாலசுப்பிரமணியமும் வேங்கட கிருஷ்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பில் இருந்து மாறுபடுவதைக் காணமுடிகிறது.  ‘கொல்லாமை’ எனும் அதிகாரத் தலைப்பிற்கு மொழிபெயர்ப்பாளர்கள் சங்கரராஜீ நாயுடுவும் ரவீந்தர் குமார் சேட் & எச். பாலசுப்பிரமணியமும் ‘அஹிம்ஸா’ (யாருக்கும் தீங்கு செய்யாமை) என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். வேங்கட கிருஷ்ணன் கொல்லாமை என்பதற்கு வத்4 - நிஷேத்4 (கொலை தடுத்தல்) என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.  
            ‘கொல்லாமை’ என்னும் அதிகாரத் தலைப்பிற்கு சங்கரராஜீ நாயுடுவும் ரவீந்தர் குமார் சேட் & எச். பாலசுப்பிரமணியமும் மொழிபெயர்த்துள்ள ‘அஹிம்ஸா’ என்னும் மொழிபெயர்ப்பானது ‘யாருக்கும் தீங்கு செய்யாமை’ என்ற பொதுப் பொருளிலேயே அமைகிறது. வேங்கடக் கிருஷ்ணன்  ‘கொல்லாமை’ என்னும் அதிகாரத் தலைப்பிற்கு ‘வத்4 - நிஷேத்4’ என்று மொழிபெயர்த்துள்ளது ‘கொலை தடுத்தல்’ என்ற பொருளில் அமைந்துள்ளது. இங்கனம் வேங்கடகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பானது மற்ற இரு மொழிபெயர்ப்புகளிலிருந்து மூல மொழிக்கு மிக நெருக்க உறவுடையதாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது.
2. மொழிபெயர்ப்பாளர்கள் சொல் நிலையில் மாறுபடும் இடங்கள்
          மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கண்டவாறு ஒரு சில இடங்களில் பொருள் நிலையில் குறைவாக மாறுபட்டாலும் சொல் நிலையில் பல்வேறு நிலைகளில் மாறுபடுகின்றனர். அவை பின்னிணைப்புகளாக அட்டவணைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை சில சான்றுகள் வழி அறியலாம்.
மூவரும் மூலத்தின் சரியான மொழிபெயர்ப்பைத் தந்து மாறுபடுமிடம்
          ‘வான் சிறப்பு’ என்ற அதிகாரத் தலைப்பினை சங்கரராஜீ நாயுடு, வேங்கட கிருஷ்ணன், ரவீந்தர் குமார் சேட் & எச். பாலசுப்பிரமணியம் ஆகியோர் முறையே வர்ஷா வைஷி2ஷ்ட்ய (மழையின் சிறப்பு), வர்ஷா மஹத்வ (மழையின் பெருமை), வர்ஷா மஹிமா (மழையின் மகிமை) என்று மொழிபெயர்த்துள்ளனர். வான் என்பதற்கு वर्षा (வர்ஷா) என்ற சொல்லையே மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்தியுள்ளனர். இவ்வதிகாரத்தின் தலைப்பானது ‘வான் சிறப்பு’ என்று மூலமொழியில் இருப்பினும் அதிலுள்ள பத்து குறள்களும் மழையின் சிறப்பினை உணர்த்துவதாகவே அமைந்துள்ளன. இங்கு வான் என்பது மழைக்கு ஆகுபெயராகி வந்துள்ளது. இக்காரணத்தினாலேயே மொழிபெயர்ப்பாளர்கள் वर्षा (வர்ஷா) என்ற சொல்லுக்கு ‘மழை’ என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இது மொழிபெயர்ப்பாளர்களின் கூர்ந்து நோக்கும் தன்மைக்குச் சான்றாக அமைகிறது. 
சங்கரராஜீ நாயுடு சொல் நிலையில் மாறுபாடு அடையுமிடம்
           ‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரத் தலைப்பினை மொழிபெயர்க்கையில் மொழிபெயர்ப்பாளர்கள் வேங்கட கிருஷ்ணன், ரவீந்தர் குமார் சேட் & எச். பாலசுப்பிரமணியம் ஆகியோரிடமிருந்து மொழிபெயர்ப்பாளர் சங்கரராஜீ நாயுடு சொல் நிலையில் மாறுபடுவதைக் காணமுடிகிறது. ईश्वर-स्तुति (ஈஷ்2வர் – ஸ்துதி), ईश-वन्दना (ஈஷ்2 வந்த3னா) என்பது வேங்கட கிருஷ்ணன், ரவீந்திர் குமார் சேட் ஆகியோரது மொழிபெயர்ப்பாகும். இதற்கு கடவுள் வாழ்த்து, கடவுள் வணக்கம் என்று பொருளமைகிறது. சங்கரராஜீ நாயுடு தனது மொழிபெயர்ப்பில் सर्वेश स्तुति (ஸர்வேஷ்2 ஸ்துதி) என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதற்கு நேரடியான பொருள் ‘அனைத்துக்கும் மேலானவன் வாழ்த்து’ என்று அமைகிறது. இவ்வாறு நேரடியான சொற்களை பயன்படுத்தாது உயர்வுச் சொற்களாகவோ அல்லது மிகைப்படுத்தி கூறலாகவோ மொழிபெயர்ப்பு அமைத்துள்ளதை அறியலாம்.        
ரவீந்திர் குமார் & எச். பாலசுப்பிரமணியம் சொல் நிலையில் மாறுபடுதல்
          ரவீந்தர் குமார் & எச்.பாலசுப்பிரமணியம் இருவரும் தங்கள் மொழிபெயர்ப்புகளில் மூல மொழியில் இல்லாத சொற்களை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். பொச்சாவாமை, வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத் தலைப்பினை உற்றுநோக்கலின் வழி இதனை அறிய முடிகிறது.
பொச்சாவாமை என்பதற்கு ‘மறவாமை’ என்பதே பொருளாக அமைகின்றது. மொழிபெயர்ப்பாளர்கள் வேங்கட கிருஷ்ணனும் சங்கரராஜீவும் இதற்கு மறவாமை (அவிஸ்ம்ருதி) என்றே மொழிபெயர்த்துள்ளனர். மொழிபெயர்ப்பாளர்கள் ரவீந்தர் குமார் & எச். பாலசுப்பிரமணியம் இருவரும் ‘கடமை மறவாமை’ (கத்ரதவ்ய ந பூ4ல்னா) என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இதில் கடமை என்பது மொழிபெயர்ப்பில் புதியதாக சேர்க்கப்பட்ட சொல்லாக அமைகிறது. இங்கனம் அரசருக்கு  இருக்கக் கூடிய ஒரு பண்பை விளக்கும் முகத்தான் கூறப்பட்டமையால் மொழிபெயர்ப்பாளர்கள் ‘கடமை’ என்னும் சொல்லை மொழிபெயர்ப்பில் சேர்த்திருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கிறது.  
மற்றொரு அதிகாரத் தலைப்பான வெருவந்த செய்யாமை என்பதற்கு ‘அச்சம் தரும் செயல் செய்யாமை’ என்பது பொருளாகும். மொழிபெயர்ப்பாளர்கள் சங்கரராஜீ நாயுடு வேங்கட கிருஷ்ணன் இருவரும் தங்களது மொழிபெயர்ப்பில் மூலத்திற்கு நிகரான சொற்களையே பயன்படுத்தியுள்ளனர். ரவீந்திர குமார் & எச்.பாலசுப்பிரமணியம் இருவரது மொழிபெயர்ப்பில் ‘தண்டனை விதிக்கையில் இரக்கம் காட்டல்’ (தண்ட3 மே(ங்) நர்மீ தி3கா2னா) என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். ‘தண்டனை விதிக்கையில்’ என்று பொதுவாகக் கூற எண்ணாமல் அரசனுக்கு உரிய பண்பைச் சுட்டும் விதமாக குறள்கள் அமைந்திருப்பதால் அதிகாரத் தலைப்பில் மொழிபெயர்ப்பாளர் தனது மொழிபெயர்ப்பில் பொருள் புரிதலுக்காகக்  கூடுதல் சொற்களைக் கையாண்டிருக்க எண்ணியிருக்கலாம்.                          
மூவரும் ஒன்றுபடுமிடங்கள்
          சங்கரராஜீ நாயுடு, வேங்கட கிருஷ்ணன், ரவீந்தர் குமார் & எச்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இல்வாழ்க்கை, விருந்தோம்பல், செய்ந்நன்றி அறிதல், நடுவுநிலைமை, பிறனில் விழையாமை, பொறுமை, பொறாமை என நாற்பத்தி ஆறு அதிகாரத் தலைப்புகளில் சொல் நிலையிலும் பொருள் நிலையிலும் ஒன்றுபடுவதைக் அவர்களின் மொழிபெயர்ப்பின் வழி அறிய முடிகிறது.
முடிவுரை
          மூலத்தில் உள்ள ஒரு சொல்லுக்கு, அதே பொருளில் வெவ்வேறு சொற்களை அமைத்து சு.சங்கரராஜீ நாயுடு, மா.கோ. வேங்கடகிருஷ்ணன், ரவீந்தரகுமார் சேட் மற்றும் எச். பாலசுப்பிரமணியம் ஆகியோர் மொழிபெயர்ப்பில் சொல் நிலையில் வேறுபடுகின்றனர். சொல் நிலையில் மட்டுமல்லாது பொருள் நிலையிலும் சில இடங்களில் மாறுபடுவதைச் சான்றுகள் வழிக் கண்டோம். இம்மூவரின் மொழிபெயர்ப்பும் தமிழிலிருந்து இந்திக்கு நேரடி மொழிபெயர்ப்பு என்பதால் சொல் நிலையில் மட்டுமே அதிகமாக மாறுபட்டு பொருள் நிலையில் குறைந்த ஒரு சில இடங்களில் மட்டும் மாறுபடுகின்றனர். ஒரு படைப்புக்குப் பிறிதொரு மொழியில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வரும் போது குறிப்பிடத்தக்க அளவில் ஒருபொருட் பன்மொழிகள் பெறு மொழிக்கு (Target Language) கிடைக்கின்றன. இது மொழிபெயர்ப்பின் வழி ஏற்படும் நன்மைகளுள் ஒன்றாகும். ஒரு படைப்புக்கு கிடைக்கும் பல்வேறு மொழிபெயர்ப்புக்களை ஒப்பிட இலக்கணம், மொழியியல் சார்ந்த இந்தப் பகுப்பாய்வை இன்னும் விரிவுபடுத்த வாய்ப்பிருக்கிறது. மொழிபெயர்ப்பு ஒப்பீடு பற்றிக் கோட்பாட்டு அடிப்படையிலும் சிந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது.
நன்றி : பேரா. எச். பாலசுப்பிரமணியம்


துணைநூற்பட்டியல்
முதன்மை ஆதாரங்கள்
சங்கரராஜீ நாயுடு (மொ.ஆ), (1958), திருவள்ளுவர் கிருத் திருக்குறள், சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம்.
புலியூர் கேசிகன் (ப.ஆ), (2009), திருக்குறள் பரிமேழலகர் உரை, சென்னை, பூம்புகார் பதிப்பகம்.
ரவீந்தர் குமார் சேத், பாலசுப்பிரமணியம், எச், (1999), திருக்குறள், புதுதில்லி, சாகித்ய ஷோத் சன்ஸ்தான்.
வேங்கட கிருஷ்ணன், எம்.ஜி, (1967), திருக்குறள், சென்னை, சக்தி பைனான்ஸ் லிமிடெட்.
துணைமை ஆதாரங்கள்
வரதராசன், மு.வ. (2008), திருக்குறள் தெளிவுரை, சென்னை: தென்னிந்திய சைவசித்தானந்த நூற்பதிப்புக் கழகத்தார்.  
அகராதிகள்
சௌமியநாராயணன், டா.எஸ்.2010 (.) அகஸ்தியர் இந்தி இந்தி தமிழ் ஆங்கில அகராதி, திருச்சி, அகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ்.
ராமாரவிடிட்ட், கிருஷ்ணமூர்த்தி, சி.என், குருமூர்த்தி, என். (2005), இந்தி - தமிழ்-ஆங்கிலம் மும்மொழி அகராதி, சென்னை, யங் மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ்.
ஜகந்நாதன், வி.ரா. 2009. சாத்ரகோஷ் இந்தி ஆங்கில அகராதி, புதுதில்லி, ஜனே பாபப்ளிஷர்ஸ்.

அட்டவணை: 1
மொழிபெயர்ப்பாளர்கள் ஒன்றுபடுமிடங்களும் வேறுபடுமிடங்களும்:
             இடங்களின் எண்ணிக்கை
அதிகாரத் தலைப்புகள்
1.    மூவரும் ஒன்றுபடும் இடங்கள் = 46
5, 9, 11, 12, 15, 16, 17, 18, 23, 27, 29, 35, 38, 40, 41, 42, 43, 44, 50, 55, 61, 68, 75, 79, 84, 90, 94, 95, 96, 98, 100,101, 102, 104, 105, 106, 107, 108, 110, 116, 120, 122, 124, 129, 131, 133 
2.    சங்கரராஜீ நாயுடுவும் ம.கோ.வேங்கட கிருஷ்ணனும் ஒன்றுபடும் இடங்கள் = 18
10, 19, 24, 25, 48, 54, 66, 67, 69, 71, 73, 92, 97, 99,118, 119, 130, 132
3.    ம.கோ.வேங்கட கிருஷ்ணனும் ரவீந்திர குமார் சேட் & எச். பாலசுப்பிரமணியம் ஒன்றுபடும் இடங்கள் = 14
3, 4, 14, 31, 34, 37, 39, 112, 114, 115, 117, 125, 126, 128
4.    சங்கரராஜீ நாயுடுவும் ரவீந்திர குமார் சேட் & எச். பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஒன்றுபடும் இடங்கள் = 7
7, 21, 32, 33, 93, 111, 123
5.    மூவரும் வேறுபடும் இடங்கள் = 48
1, 2, 6, 8, 13, 20, 22, 26, 28, 30, 36, 45, 46, 47, 49, 51, 52, 53, 56, 57, 58, 59, 60, 62, 63, 64, 65, 70, 72, 74, 76, 77, 78, 80, 81, 82, 83, 85, 86, 87, 88, 89, 91, 103, 109, 113, 121, 127,

           

            

2 கருத்துகள்: