வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

தாய் மொழிக்கல்வி (தமிழ்) இன்றைய நிலை

உலகம் பரவிய தமிழர்கள் ஐம்பத்தாறு நாடுகளில் வாழ்கின்றனர் .உலகெங்கும் வாழும் மனிதர்களுள் நூற்றுக்கு ஒருவர் தமிழராவர் .தமிழ் மொழியோ கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது .நாகரீகம் ,பண்பாடு என பல கூறுகளை உள்ளடக்கிய இலக்கிய செழுமை கொண்டது .செம்மொழி என்னும் தரத்தையும் பெற்றுவிட்டது .இன்னும் பல்வேறு சிறப்புகளையும் கொண்ட தமிழ் மொழியின் இன்றைய சமூக மதிப்பீடு குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது

தாய் மொழிக் கல்வியின் தேவை


குசராத் கல்வி மாநாட்டில் காந்தியடிகள் ஆற்றிய சொற்பொழிவில் "கல்வி மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும் .தாய் மொழி தனக்குரிய இடத்தைப்பெற்றுவிட்டால் நமது மூளைக்கும் இன்னும் தேவையான அறிவைப் பெறுதற்கு வசதியாக விடுதலை கிடைக்கும் "என்றார் .

"கண்டம் பாயும் ஒரு ஏவுகணை தயாரிக்க ஆகும் பணத்தில் மூன்றரை லட்சம் ஆரம்பப் பள்ளிகள் கட்டமுடியும்
."என்று முன்னால் இந்திராகாந்தி நாடளுமன்றதிலே அறிவித்தார் .தாய்மொழி நன்கு கற்றால் அது நல்ல அடித்தளமாகிறது தாய் மொழி மூலம் ஒன்றைக் கற்பது எளிதாகிறது .

"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை

தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை "


என்பது உலகறிந்த உண்மை..

கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சி பெற்று வெளி ஒலிகளைக் கேட்கிறது .என்கின்றனர் மருத்துவ அறிஞர்கள் .குழந்தை வளரும் சூழல் மொழித் தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. இன்றைய குழந்தைகள் கேட்கும் ஒலிகளும் ,சூழல்களும் அவர்களுக்கு தமிழை அன்னியமாக்கிவிடுகின்றன .அவர்கள் தாய் மொழியும் தெளிவின்றி ,பிற மொழியும் புரியாமல் தவிக்கின்றனர்.

தாய் மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் என்கின்றனர் உளவியலாளர்கள் .

இன்றைய சூழலில் தாய் மொழிக் கல்வி

அறிவுச்சுடர் என்ற மாணவி தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என வருந்தி தற்கொலை செய்து கொண்டார் ."


தேனி பண்ணைப் புரத்தைச் சேர்ந்த விது என்ற மாணவன் ஆங்கிலம் தெரியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் ஆயிரத்து இருபத்துமூன்று மதிப்பெண் பெற்ற இவர் தாய் மொழியான தமிழ் வழி பயின்றதால் ஆங்கிலம் புரியவில்லை .ஐந்து பாடங்களில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார்.

இவையெல்லாம் இணையத்தில் கிடைத்த உண்மைச் செய்திகள்.


இதுவே இன்றைய சூழழில் தாய்மொழிக் கல்வியின் நிலை .இதனை ,

டெல்லி வழி இந்தி"
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமஸ்கிருதம்
இசையின் வழி தெலுங்கு"


என இயம்புவர் தணிகைச் செல்வன்.

இரண்டாயிரமாவது ஆண்டு இரண்டாயிரம் பள்ளிகளாக இருந்த மெட்ரிக் பள்ளிகள் இன்று திசையெல்லாம் காட்சியளிகின்றன .இப்பள்ளிகள் பல தலைமுறைகளாக குழந்தைகளுக்கு தாய்மொழி கற்றுக் கொடுப்பதில்லை .ஏழை குழந்தைகள் இங்கு படிக்க முடியாத அளவுக்கு கட்டணம் பெறுகின்றன.அதனால் ஏழைக் குழந்தைகள் தரமான கல்வி பெற இயலாமல் தவிக்கின்றனர் .அதனால் அரசுப்பள்ளிகளை நாடுகின்றனர் .அரசுப்பளிகள் தலைமையாசிரியர் இல்லாமலும் ,போதிய வசதி இல்லாமலும் ஆசிரியர் பற்றாக் குறையோடும் இயங்கும் நிலை உள்ளது .இது அரசுப் பள்ளிகள் தரமான கல்வி கொடுக்க முடியாத சூழலை உருவாக்குகிறது .மத்திய மாநில அரசுகள் கல்வியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் .குறிப்பாக தமிழக அரசு கல்வி நிலை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சி பாதிக்கப்படும் .

தாய்மொழிகளின் தேவையை அறிந்த ஐ.நா.இரண்டாயிரமாவது ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி இருபத்து ஒன்றாம் நாளை "உலக தாய் மொழி நாளாக "அறிவித்துள்ளது.இந்த நிலையில் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டை "உலக தாய் மொழிகளின் ஆண்டாகவே"அறிவித்துள்ளது .

ஐ.நா.வின் உறுப்பு நிறுவனமான யுனச்கொவின் தலைமை இயக்குனர் ,கோய்ச்சிரோ கூறும் செய்தி அச்சமூட்டுவதாக உள்ளது.

"இப்போது பேச்சு வழக்கில் உள்ள ஏழாயிரம் மொழிகளில் சரிபாதி அடுத்த சில தலை முறைகளிலே காணாமல் மறைந்துவிடும்."

ஒரு இனத்தை அடையாளப்படுத்தி அதன் பண்பாடு நாகரீகம் போன்ற பல கூறுகளையும் அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்வது மொழியாகும்.அதனால் தாய்மொழியின் தேவையை அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

தீர்வுகள்

தாய்மொழி வழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.தாய்மொழியான தமிழ் வழி பயில்வோருக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ்ப்படுத்த வேண்டும்.அதற்கு அறிவியல் தமிழ் எனும் துறை வளர அரசு ஊக்கமளிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தாய்மொழி தெரிந்தவர்கள் முழுமையான கல்வி பெற இயலாத சூழலை அரசு உணரவேண்டும்.

ஆங்கிலம் தெரியாததால் தமிழ் படித்தவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டு தற்கொலை செய்து கொள்வதை அரசு அறிந்து அவர்களும் வாழ வழி செய்யவேண்டும்.

எதிர் காலத் தலை முறையினருக்காவது தாய்மொழி வழியில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரைப் பயில வகை செய்ய வேண்டும்.

தாய்மொழிக்கல்வி நல்ல அடித் தளமானால் அதன்மூலம் பல மொழிகளையும் எளிமையாக அறிந்துகொள்ளலாம் .கருத்தை தெளிவாக ,ஆழமாக, விரிவாக எடுத்தியம்ப அது உதவும்.

வணிக மயமான கல்வி நிறுவங்களை கண்டு அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்.
தாய்மொழி(தமிழ்)வழிக் கல்வி பயின்றோர் சமூகத்தில் மதிப்போடு வாழும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்பணிகளில் தாய் மொழி வழி கற்போருக்கு அரசு முன்னுரிமை தரவேண்டும் .
கல்வி கற்கும் மாணவர்களின் சுமையைக் குறைத்து ,அவர்கள் சுயமாக ,சுதந்திரமாக சிந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும் .

பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள்,பல அறிவியல்த் துறைகளையும் தாய்மொழி வழியே படிக்கவும், வினாத்தாள்களில் வினாக்கள் தமிழிலும் கேட்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.

மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மட்டுமல்ல ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தாலேயே தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம்.

3 கருத்துகள்:

  1. சிறப்பு மிகச்சிறப்பான கருத்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த கருத்துக்கள் பொதிந்த சிந்தனையைக் காலம் கடந்து வாசித்தாலும் அடுத்து என்னுடைய இலக்கு எதுவென்று உணர்த்திற்று இக்கட்டுரை. நன்றி பெருந்தகையீரே...

    பதிலளிநீக்கு