வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


வெள்ளி, 23 ஜனவரி, 2026

திருக்குறள் – மருந்து அதிகாரம் நோட்புக் எல்.எம் வழி ஓர் ஆய்வு

   


(கோபி,பி.கே.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 22.01.2026 அன்று நடைபெற்ற இலக்கியங்களில் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுக்கட்டுரை)

Abstract

Thirukkural is a book full of wisdom. People gain knowledge by reading Thirukkural. Depending on the level of knowledge of the readers of this book, new ideas can be gained. This article explores the techniques of converting the subtle messages of Thiruvalluvar's medicinal power into media files suitable for learning and teaching using the Google Notebook LM tool.

குறிச்சொற்கள்

திருக்குறள், Google Notebook LM tool. செய்யறிவுக் கருவி, செயற்கை நுண்ணறிவு, மருந்து,

முன்னுரை

              நவில்தொறும் நயம்தரும் நூல் திருக்குறள். எல்லாப் பொருளும் இதன்பால் உள அதனால் தொட்டனைத் தூறும் மணற்கேணிபோல படிக்கப் படிக்க மனிதகுலம் திருக்குறளால் அறிவுபெறுகிறது. இந்நூலைப் படிப்பவர்களின் அறிவுநிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப் பெறமுடிகிறது. திருவள்ளுவர் கூறும் மருந்து அதிகாரத்தின் நுட்பமான செய்திகளை கூகுள் நோட்புக் எல்.எம் என்ற செய்யறிவுக் கருவி வழி, கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற ஊடகக்கோப்புகளாக மாற்றும் நுட்பங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கூகுள் நோட்புக் எல்.எம்

          கூகுள் வழங்கும் செய்யறிவுக்கருவிகளுள் குறிப்பிடத்தக்கது நோட்புக் எல்.எம். இது ஒரு ஆராய்ச்சி மற்றும் குறிப்பு எடுக்கும் இணையவழிக் கருவியாகும், இது பயனர்கள் தங்கள் ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள உதவுவதற்காக செயற்கை நுண்ணறிவை (AI), குறிப்பாக கூகிள் ஜெமினியைப் பயன்படுத்துகிறது.“1 இதில்,  PDFகள், வலைத்தளங்கள், YouTube வீடியோக்கள், ஆடியோ கோப்புகள், Google டாக்ஸ், Google ஸ்லைடுகள் மற்றும் பலவற்றைப் பதிவேற்றி, NotebookLM வழியாக அவற்றைச் சுருக்கி, தலைப்புகளுக்கு இடையே இணைப்புகளை உருவாக்கும், இவை அனைத்தும் ஜெமினியின் மல்டிமாடல் புரிந்துகொள்ளும் திறன்களின் சமீபத்திய பதிப்பால் இயக்கப்படுகின்றன.“2





இதில் திருக்குறளில் இடம்பெற்ற மருந்து அதிகாரத்தின் ஒரு வரி விளக்கத்தை இணையத்தில் பதிவேற்றி, அந்த இணையபக்கத்தின் இணைப்பை நோட்புக் எல்.எம் பக்கத்தில் கொடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிறகு நாம் விரும்பும் வடித்தில் கோப்புகளைப் பெற ஸ்டுடியோ பகுதியில் தேர்வு செய்யலாம்.  சான்றாக திருக்குறளின் மருந்து அதிகாரத்தில் இடம்பெற்ற கருத்துகளை ஒலிக் கோப்பாக இரண்டு மனிதர்கள் கலந்துரையாடுவதுபோல பெறமுடியும், காணொலியாக உருவாக்கமுடியும், மைன்ட் மேப் எனப்படும் மனவரைபடமாகவும், ரிப்போர்ட்ஸ் என்ற பிரிவில் மேலும் வடிவத்தில் தேவையான மாற்றங்களுடன் கருத்தை மேம்படுத்தமுடியும், ப்ளாஸ் கார்ட் பிரிவில் விளையாட்டு அட்டைகள் போல கேள்வி பதில்களை உருவாக்குதல், வினாடி வினா உருவாக்குதல், இன்போ கிராபிக் முறையில் ஒரே படத்தில் முழுமையான கருத்துகளையும் உருவாக்கமுடியும். ஸ்லைட் பிரிவில் பவர் பாய்ண்ட் போல பல குறிப்புப் பக்கங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

சான்றுகள்.

      

 நோட்புக் எல்.எம்மருந்து

          கூகுளின் நோட்புக் எல்.எம் வழி பல கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சிக்கான குறிப்புகளை உருவாக்கிகொள்ளமுடியும். அவற்றுள் காணொலி உருவாக்க நுட்பத்தைக் காண்போம்.

             திருக்குறள் - அதிகாரம் - 95. மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. - 941

வாதம், பித்தம், கபம் என்ற மூன்றே நோயின் தோற்றக் கூறு 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். - 942

செரித்தபின் உணவு உண்டால், உடலுக்கு மருந்தே தேவையில்லை

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. - 943

நீண்டகாலம் வாழ, அளவுடன் உண்பதே மிகச்சிறந்த வழி

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து. – 944     

செரித்தபின், காலத்துடன், ஏற்ற உணவை உண்ணவேண்டும்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு. - 945

மாறுபாடில்லாத உணவை, அளவுடன் உண்டால் நோயில்லை

இழவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய். - 946

அளவுடன் உண்டால் நலம்! அதிகமாக உண்டால் நோய்!

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும். - 947

பசியின் அளவறியாமல் அதிமாக உண்பவன் நோயாளியாவான்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். - 948

நோயின் தன்மை, அதன் காரணம், அதை நீக்கும் வழியறிந்து செய் 

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.- 949

நோயாளி, நோயளவு, காலம் கருதி மருத்துவம் செய்யவேண்டும்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து. - 950

நோயாளி, மருத்துவர், மருந்து, துணைபுரிபவர் நான்கே மருத்துவம்

 

இவ்வாறு திருக்குறளின் மூலத்தையும் அக்குறள் உணர்த்தும் கருத்தை, சமகால மொழிநடையில் மிகச்சுருக்கமாகதிருக்குறள் ஒரு வரி“3 உரையிலும் வழங்கியுள்ளேன். அதன் இணைப்பை நோட்புக் எல்.எம் இல் வழங்கி காணொலி உருவாக்கியபோது, 5 நிமிடம் அளவுக்கு தொடர்புடைய படங்களுடன் மிகத்துல்லியமான காணொலி உருவாக்கப்பட்டு பதிவிறக்கும் நிலையில் கிடைத்தது. அவ்வாறு உருவாக்கிய காணெலியின் இணைப்பு “திருக்குறள் சுகாதார வழிகாட்டி“ 4

         

காணொலிமாயத்தோற்றம் (Hallucination)

          இவ்வாறு செய்யறிவுக் கருவிகள் வழியாக உருவாக்கும் காணொலிகளின் நம்பகத்தன்மை, துல்லியத்தன்மை பெரிதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. காரணம் இவை உருவாக்கும் மாயத்தோற்றங்கள் (Hallucination). ஜெமினி, சாட் ஜி.பி.டி போன்ற செய்யறிவுக் கருவிகள், இயந்திரக்கற்றல் வழியாக பயிற்றுவிப்பதற்காக வழங்கியபெரிய மொழி மாதிரிகளை“6 அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. அதனால் இக்கருவிகளில் கற்றல் கற்பித்தலுக்கான கோப்புகளை உருவாக்கும் போது அதன் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மையை உருவாக்குநர் சரி பார்த்துக்கொள்ளவேண்டும். தொடர்பில்லாத, தவறான செய்திகளும் படங்களும், கருத்துகளும் இடம்பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். திருக்குறளில் மருந்து குறித்து நோட்புக் எல்.எம் வழி உருவாக்கிய காணொலி எந்தவிதமான தவறான கருத்துகளுமின்றி, நம்பகம் மற்றும் துல்லியமான கருத்துகளை சமகால மொழிநடையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, உருவாக்குதற்காக வழங்கிய இணைபக்கம் துல்லியமானதாகவும் மூலமான திருக்குறளுக்கு எளிமையான சுருக்கமான விளக்கம் உதவியாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

           தமிழ் மொழியின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமில்லை அதன் தொடர்ச்சியிலும் உண்டு என்பதற்கு சான்று சமகால தொழில்நுட்பத்தை தமிழ் மொழியில் பயன்படுத்துவதில் தான் உள்ளது. செய்யறிவுக் கருவிகளைக் கண்மூடித்தனமாக நம்புவதும், நம்பாமல் இருப்பதும் ஒரே நிலைப்பாடுதான். கற்றல் கற்பித்தல், ஆராய்சி நிலைகளில் இன்று நோட்புக் எல்.எம் போன்ற செய்யறிவுக்கருவிகள் வழங்கும் கருவிகளின் துல்லியத்தன்மை மேம்பட்டு வருகிறது. அதற்கு இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள திருக்குறள் சுகாதார வழிகாட்டி என்ற காணொலி தக்க சான்றாக அமைகிறது. தவறு செய்யும் மாணவரை நல்ல ஆசிரியர் வழிநடத்தினால் அந்த மாணவர் எதிர்காலத்தில் ஆசிரியராக உயர்வார். அதுபோல செய்யறிவுக் கருவிகளை அதிகமாக பயன்படுத்தவதும். தவறுகளை சுட்டிக்காட்டுவதும் துல்லியமான நம்பகமான முடிவுகளைப் பெறுவதற்கான வழி என்பதை உணர்வோம். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்.

 

சான்றெண் விளக்கம்.

 

1. https://en.wikipedia.org/wiki/NotebookLM

2. https://notebooklm.google.com/

3. https://www.gunathamizh.com/2020/11/95.html (மருந்து)

4. https://www.youtube.com/watch?v=fIsmymsP7fE

5. https://en.wikipedia.org/wiki/Hallucination_(artificial_intelligence)

6. https://en.wikipedia.org/wiki/Large_language_model

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக