வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

'அசுணமா'இலக்கியங்கள் அவ்வக்கால செய்திகளைப் பிரதிபலிப்பன .இலக்கியங்கள் சுட்டும் செய்திகளில் சில காலப் பழமையால் மயக்கம் தருபவையாக அமைகின்றன .இத்தகைய இலக்கிய மயக்கங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வது தமிழ் உலகின் கடமையாகும்.

அசுணமா என்னும் உயிரினம் 'விலங்கு'என்றும் 'பறவை'என்றும் இரு வேறுபட்டகருத்துக்கள் உரையாசிரியர்களிடமும் ,ஆய்வாளர்களிடமும் உள்ளன .அசுணமா விலங்கு என்றோ பறவை என்றோ இதுவரை யாரும் வரையறை செய்து சொல்லவில்லை .அதனால் அசுணமா எந்த வகை உயிரினம் என்பதைத் தக்க சான்றுகளுடன் காண்பது சிறப்பாகும் .


அசுணமா தொடர்பான கருத்துக்கள்

அ.சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் 'அசுணமா' ஒரு விலங்கு என்று சுட்டுகிறது நச்சினார்க்கினியரும்,பின்னத்தூராரும் விலங்கு என்றே உரைப்பர்

ஆ .அவ்வை துரைசாமிப்பிள்ளை ,மு.வ, சுகிசிவம் ஆகியோர் அசுணமா ஒரு பறவை என்று இயம்புவர் .

இ .உ.வே.சா, விலங்கு என்றும் பறவை என்றும் (கேகேயப்புள் ,பண்ணரிமா) இரு கருத்துக்களிக் கூறுவார்.அகராதிகளும் விலங்கு, பறவை என்று மயக்கமான கருத்துக்களையே கூறுகின்றன .


அசுணமா.

அசுணமா ஒரு மலைவாழ் உயிரியாகும் .இது யாழிசை கேட்பதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .இதனை

'மணநாறு சிலம்பின் அசுனம் ஓர்க்கும்'(நற்-௨௪௪)
'தொழுதி ஆர்ப்ப யாழ் செத்

திருங்கல்விடரளை அசுணம் ஓர்க்கும் '(அகம் -88-11)
என வரும் அடிகள் விளக்குகின்றன .
அசுணாமாவைக் கொல்வதை அசுணம் கொல்பவர் (நற்௩0௪.௮)
என்ற அடி சுட்டுகிறது .

'யாழ் கேட்ட மானை'என்ற கலித்தொகை( 143.10.)சொல்லாட்சி அசுணமாவைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் கருதுவர்.யாழோசையை யானை,குதிரை ஆகிய விலங்களும் கேட்பதால் இச்சொல் ஆய்வுகுறியதாகும்.
பிற்கால இலக்கியங்கள் அசுணமா குழலுக்கு மயங்கியதைச் சுட்டுகின்றன.இதனை,'இன்னிளிக்குரல் கேட்ட அசுணமா'(சீவக- 1402.2)
'கோவலர் கொன்றத் தீங்குழல்
உளவு நீள் அசுணமா உறங்கும் என்பவே '(சூளாமணி-௩௪.௩௪)
'கழைகளின் துளைதொறும்
கால் பரந்திசைக்கின்ற்ர்
ஏழிசைக்கு உளமுருகி மெய் புளகெழ
இசைகொளும் அசுணங்கள் (பெருங்-௧.௪௭.௨௪)
இன்னோசை கேட்ட
அசுணமா வல்லோசை கேட்டு
இன்னிசை கொள் சீரியாழ்
இன்னிசை கேட்டஅசுண நன்மா
கேட்டுத் தன் மடிந்ததுபோலெ(பெருங்௧.47.24.))
எனப் பெருங்கதை குறிப்பிடுகிறது .
கூர்மபுராணம் ,அசுணத்தை
'முரசொலி கேட்ட அசுணமென்
புள் மூச்சவிந்து (இராமன் வனம் புகு படலம்)
என்று பறவையாக உரைக்கிறது .
புராணத்தில் சுட்டப்பட்டிருப்பதால் அதில் கற்பனை கலந்திருக்க வாய்ப்புள்ளது.
எனவே பிற இலக்கிய சொல்லாட்சிகளை அடிப்படையாகக் கொண்டே அசுணமா எந்த வகை உயிரினம் என்பதை மீட்டுருவாக்கம் செய்வதே முறையாகும்.

அ.சங்க இலக்கியங்கள் 'அசுணமா யாழோசை கேட்கும் ஒரு மலை வாழ் உயிரி ' என்று சுட்டுகின்றன.

ஆ.பிற்கால இலக்கியங்கள் அசுணமா குழழோசை கேட்டதை புலப்படுத்துகின்றன.

இ.இலக்கியச் சொலாட்சிகளில் சூளாமணியில் மட்டுமே அசுணமாவின் உருவம் சுட்டப்படுகிறது.

'உலவு நீள் அசுணமா'(சூளா)என்ற சொல்லில் (உல்-வளைதற் பொருள்,நீள்-நீண்ட,மா-பெரிய)அசுணமா என்பது வளைந்து செல்லும் நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினம் என்ற கருத்துப் புலனாகிறது.

அசுண (மா)சுணம்

சங்க இல்க்கியத்தில் மலைப்பாம்பை 'மாசுணம்'என்று சங்கப்புலவர்கள் இயம்புகின்றனர்.இதனை"களிறகப்படுத்த பெருஞ்சின மாசுணம்(நற்- 261.6)துஞ்சு மரங்கடுக்கும் மாசுணம் (மலைபடு- 261.)எனவரும் அடிகள் சுட்டுகின்றன.அசுணமா தொடர்பான வடிவங்களூம்,செய்திகளும் 'மாசுணம்' என்னும் மலைப்பாம்பைக் குறிப்பதாகவெ உள்ளன.மலைப்பாம்பின் இயல்பு நீளமாக இருத்தல் ,வளைந்து செல்லுதல்,உடலில் அழகிய வடிவமிருத்தல் ,பெரிய வடிவில் இருத்தல் ஆகியனவாகும்.அசுணமாவை வளைந்து செல்லும் ,நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினமாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .
அசுணமா ,மாசுணம் எனவரும் இரு சொற்களும் சொல்,பொருள் என இரு நிலைகளிலும் ஒன்றென்பது இக்கருத்துக்களால் புலனாகிறது

அசுணமாவின் ஒலிவுணர்வு

அசுணமா ,மாசுணம் என வழங்கப்பட்ட மலைப்பாம்பு யாழ் ,குழல் ஆகிய இன்னோசைகளை கேட்பதாகவும் பறை ,முரசு ஆகிய வல்லோசைகளை கேட்டு வருந்துவதாகவும் இலக்கியங்கள் இயம்புகின்றன.
புற செவிகளோ ,செவித் துளைகளோ இல்லாத மலைப்பாம்பு ,காற்றினால் ஒலி யைக் கேட்கும் திறன் இல்லாதது. தரையில் ஏற்படும் அதிர்வுகளாலேயே ஒலியை உணர்கிறது.பல ஊடகங்களால் எழும் ஒலி காற்றினால் தரையை அடைகிறது ஒலியை ஏற்கும் மரங்கள்கூட அவ்வொலியைத் தரையில் கடத்தும் இயல்புடையனவாக விளங்குகின்றன்.இடியால் பாம்பு அழிந்ததை (குறு- 391 .190)இலக்கியங்கள் சுட்டுகின்றன.இடியின் கடுமையான ஒலி காரணமாக பாம்பின் தலை நடுங்கியதை'அரவு தலை பனிப்ப'(நற்- 129.7.8-புற- 17.38)என்று சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.இதனால் பாம்பின் ஒலி உணர்வு புலனாகிறது.புன்னாகவராளி ராகம் கேட்டு பாம்பு வருமென்பதும்,'நுணலும் தன்வாயால் கெடும்'என வரும் நாட்டுப்புற வழக்குகளும் பாம்பின் ஒலி உணர்வோடு ஒப்புநோக்கிக் கருதத்தக்கனவாகும்.

யாழ் ,குழல் ஆகிய இனிய ஒலிகளை தரை வழி அறியும் மலைப்பாம்பு அவ்வொலிகளை இறை எனக்கருதி அவ்விடம் வருகிறது.அந்நேரத்தில் பறை ,முரசு ஆகிய வல்லோசைகளை முழக்கி அதனைச் திகைக்கச் செய்வர்.பின் கூரிய ஆயுதத்தால் அதனைக் கொல்வர்.மலைப்பாம்பின் தோல் அதிகமான விலை மதிப்புடையது.அதனால் மலைப்பாம்பை அக்காலத்தில் கொன்றுள்ளனர்.இன்றும் இவ்வழக்கம் வழக்கில் உள்ளமை சுட்டத்தக்கது.

அசுணமா ஊர்வன இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பே ஆகும்.இதனை மாசுணம் என்ற பெயரிலும் அழைத்தனர்.இலக்கியச்சொல்லாட்சிகள் அசுணமாவே மாசுணம் என்பதைப் புலப்படுத்துகின்றன.'அசுணமா யாழ் குழல் ஆகிய இனிய இசையை கவனிப்பதாக இலக்கியங்கள் இயம்புகின்றான.இன்றும் மகுடி ஓசைக்கு பாம்புகள் மயங்கும் என்ற நம்பிக்கை உள்ளது .

புறச்செவிகளே இல்லாத அசுணமா,இனிய ஒலியால் எழும் ஒழுங்கான அதிர்வை இரை எனக்கருதி அவ்விடம் வருகிறது.அவ்வேளையில் ஒழுங்கற்ற வல்லொலிகளை எழுப்பி அதனைத் திகைக்கச்செய்து கொன்றுள்ளனர்.அசுணாமாவினுருவம் ,அதன் செயல்பாடுகள் குறித்த இலக்கியக் கருத்துக்கள் யாவும் 'மாசுணாம் என்றா மலைப் பாம்பை க் குறிப்பதாகவே வுள்ளான.எனவே அசுணமா என்பது மாசுணம் என்ற மலைப் பாம்பே என்ற கருத்து இதனால்ப் புலப்படுத்தப்படுகிறது.

5 கருத்துகள்:

 1. தங்களின் ஆய்வு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. கட்டுரையின் தொடக்கத்தில் தந்த தரவுகளைப் படித்து வரும் போது அசுணமா என்பது பாம்பாக இருக்குமோ என்ற ஐயம் வந்தது. அதனையே உறுதிபட நீங்கள் கூறியிருபப்தைக் கண்டு மகிழ்ச்சி. நான் வெறும் பாம்பென்று நினைத்தேன். தகுந்த இலக்கியத் தரவுகளைக் காட்டி அசுணமா என்பது மலைப்பாம்பே என்று உறுதிபடுத்திவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 3. நானும் அவ்வாறே கருதுகிறேன்.
  இடி, இசை இவற்றுக்கும் பாம்புக்கும் தொடர்பு இருக்கு
  அதனால் மாசுணம், அசுணமா பாம்பாகத்தான் இருக்கும்.
  பாம்பைத்தான் கொல்வார்கள். விலங்குகளை வீழ்த்துவார்கள்.
  ”மைவிடை வீழ்ப்பவும்”

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் ஆழமான வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றி வேந்தன் அரசு

   நீக்கு
 4. இடியுண்ட நாகம் போல் மருண்டு நின்றதாக தசரதனைக் குறிப்பிடுவார் கம்பர்..

  பதிலளிநீக்கு