சனி, 12 ஜூன், 2010

குழந்தையான ஒளவை.


குழந்தை என்றவுடன் நினைவுக்குவருவது அக்குழந்தை பேசும் மழலை மொழிதான். குழல்,யாழை விட இனிமையானது மழலை மொழி என்பர் வள்ளுவர். பொருளற்றதாயினும் மழலை மொழி யாவருக்கும் பிடிக்கிறது.
அதிலும் “தம்மக்கள் மழலைச் சொல்“ என்று வள்ளுவர் அழுத்திச் சொல்வது உற்று நோக்கத்தக்கது.

நம் குழந்தைகள் பேசும் மொழி நம்மை ஈர்க்கும் அளவுக்குப் பிறருடைய குழந்தைகள் பேசும் மொழி நம்மை ஈர்த்துவிடுவதில்லை.

இதுபோலவே,

நமக்குப் பிடித்தோர் பேசும் குறைகளும் நிறைகளாகத் தெரிகின்றன.

நமக்குப் பிடிக்காதோர் பேசும் நிறைகளும் குறைகளாகத் தெரிகின்றன.

ஔவைக்கும் அதியனுக்குமான நட்பினைத் தமிழுலகம் நன்கறியும். தான் பெற்ற அரிய நெல்லிக்கனியைத் தான் உண்டு நீண்ட காலம் உயிர் வாழ்வதைவிட ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய அதியன் அக்கனியை ஔவைக்கு அளித்தான்.

மனம் நெகிழ்ந்த ஔவை நாக்குழறித் தாம் எண்ணியவாறெல்லாம் அதியனைப் பாராட்டினாள். இசைத் தன்மையில்லாத, பொருளில்லாத, சொல்லாயினும் புதல்வரின் மழலை மொழி கேட்டு்ப் பெற்றோர் பேரின்பம் கொள்வர்.

உன்னைப் பாராட்டும் ஊக்கத்தால் மழலை போல நான் பேசும் வாய்ச்சொல்கேட்டு இன்புறுகிறாயே என்று அதியனைப் பார்த்து ஔவை பாடுகிறார்,

பாடல் இதோ,


யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.


புறநானூறு -92.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். துறை: இயன் மொழி.

இதன் பொருள்,


யாழோசை போல இனிமையாக இருக்காது!
காலத்தோடும் பேசப்படமாட்டாது!
பொருளும் இருக்காது!

ஆயினும் புதல்வரின் மழலை மொழியை தந்தையர் பெரிதும் விரும்புவர்.

என் வாய்ச்சொல்லும் அத்தன்மையதே ஆகும்.

புதல்வர் மீது கொண்ட பற்றால் தந்தையர் மழலைச் சொல்லை மிகவும் விரும்பிக்கேட்பது போல,

தமிழின் மீது கொண்ட பற்றால் மழலை மொழிபோன்ற என் பாராட்டையும் விரும்பிக் கேட்கிறாய் என்று அதியனைப் பார்த்து ஔவை பாடுகிறார்.

பாடல் சுட்டும் கருத்து..

v அதியன் தமிழ் மீது கொண்ட பற்றால் ஔவையைத் தம் உயிரினும் மேலாகக் கருதினான்.

v பொருள் பொதிந்த பாடல் பாடும் திறனுடையவராயினும் அடக்கமாக ஔவையார் தம் பாடலை மழலையின் மொழியோடு ஒப்பிட்டு உரைக்கிறார்.

v குழந்தை பேசினால் பொருளற்ற சொல்கூட இனிமையளிக்கும், அதுபோல, விருப்பமுடையவர் பேசினால் தவறுகள் கண்ணுக்குத் தெரியாது என்னும் உளவியல் கூறும் உணர்த்தப்படுகிறது.

18 கருத்துகள்:

 1. நமக்குப் பிடித்தோர் பேசும் குறைகளும் நிறைகளாகத் தெரிகின்றன.

  நமக்குப் பிடிக்காதோர் பேசும் நிறைகளும் குறைகளாகத் தெரிகின்றன.//

  ஔவையைக் கொண்டு சரியான விஷயத்தைச் சொல்லியுள்ளீர்கள் குணா

  பதிலளிநீக்கு
 2. முனைவர் அவர்களே,

  இத்தனை தூய தமிழில் புறநானூறு பற்றி விளக்கி சொல்வதை இந்த வியாபார உலகில் என்னால் நம்ப முடியவில்லை. வளர்க உங்கள் தொண்டு.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு நண்பரே..தொடருங்கள் உங்கள் தமிழ்தொண்டை...வாழ்க வளமுடன்,வேலன்.

  பதிலளிநீக்கு
 4. ஒளவையின் பாடல்கள் கருத்து செறிவு மிக்கவை .பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. @பட்டாசு மகிழ்ச்சி அன்பரே..

  இவ்வலைப்பதிவு எனது மொழியின் எதிர்காலம் குறித்த தேடலின் தடம்.

  பதிலளிநீக்கு
 6. வாசிக்க ரொம்ப நல்லா இருந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. உண்மை தான் நண்பா, மற்ற குழந்தைகளை விட நம் குழந்தை பேசுவதையே அதிகம் விரும்புவோம் , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓட்டும் போட்டுவிட்டேன்

  பதிலளிநீக்கு
 8. //குழந்தை பேசினால் பொருளற்ற சொல்கூட இனிமையளிக்கும், அதுபோல, விருப்பமுடையவர் பேசினால் தவறுகள் கண்ணுக்குத் தெரியாது என்னும் உளவியல் கூறும் உணர்த்தப்படுகிறது.//

  காதலி பேசினாலும்... இக்கி... இக்கி...( நன்றி பழமைபேசி)

  பதிலளிநீக்கு
 9. உயிரினும் மேலாய் நெல்லிக்கனி
  ஈய்ந்த அதியன்...
  உயிர் கொடுத்த தந்தையுமானானோ,
  அவ்வையின் உணர்வுக்குழறலில்?
  மிக..மிக .. நல்லதொரு பதிவு!

  பதிலளிநீக்கு