வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 13 ஜூலை, 2011

நம் உயிர் உள்ள இடம்...? - UPSC EXAM TAMIL - புறநானூறு -186

உயிர் எங்கு இருக்கிறது? இதயத்திலா? மூளையிலா?
என எங்கெங்கோ மருத்துவவியலார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சங்கஇலக்கியப் புறப்பாடல் ஒன்று மக்களின் உயிர் மக்களிடம் இல்லை!

அவர்களை ஆளும் மன்னனிடம் தான் இருக்கிறது என்று சொல்கிறது.

மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவை என்ன ?

நெல்லா? நீரா?

இரண்டுமில்லை ஆளும் மன்னனின் உயிர் என்கிறார் மோசிக்கீரனார்.

“ஒரு நாட்டில் மக்கள் உடல் என்றால் மன்னன் தான் உயிர் என்று நம்பிய காலம் சங்ககாலம்! 
இன்றும் ஒரு நாட்டை ஆளுவோருக்குச் சொல்லித்தர வேண்டிய அடிப்படைப் பாடமாகவே இந்த அறக்கருத்து விளங்குகிறது.“


ஒரு பேருந்தில் செல்வோரின் உயிர் மொத்தமும் ஓட்டுநரின் காலில் இருக்கிறது!

ஒரு தொடர் வண்டியை ஓட்டுவோரின் மொத்தஉயிரும் அந்த ஓட்டுநரின் கையில் இருக்கிறது!

அதுபோல ஒரு ஆட்சியாளனின் நடத்தையில் அந்த நாட்டின் மொத்த மக்களின் உயிரும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஆட்சியாளர்க்கும் உணர்த்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

பாடல் இதோ..

“நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”


புறநானூறு -186
திணை - பொதுவியல்
துறை - பொருண்மொழிக்காஞ்சி.
மோசிக்கீரனார் பாடியது.

பரந்த இடத்தைக் கொண்ட உலகம், வேந்தனாகிய உயிரைக் கொண்டுள்ளது.
அதனால் இந்த உலகத்தாருக்கு நெல்லும் உயிரன்று! நீரும் உயிரன்று!

வேலால் மிகுந்த படையையுடைய அரசனுக்கு இவ்வுலகிற்கு தானே உயிர் என்பதை அறிந்து அதற்கேற்ப மக்கள் நலனில் ஆர்வமுடையவனாக இருத்தல் கடமையாகும்.பாடல் வழியே..


1. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று மன்னனின் கடமையை உணர்த்தியதால் இப்பாடல் பொருண்மொழிக்காஞ்சி என்னும் புறத்துறையை விளக்குவதாக அமைந்தது.

2. நாட்டுமக்களின் உயிர், தான் என்பதை அறிவது அரசனின் அடிப்படைக் கடமையாக அறிவுறுத்தப்படுகிறது


3. உடலுக்கு வந்த நோயைத் தாங்கி உயிர் உடலைப் பேணுவதுபோல, அரசனும் நாட்டுக்கு வந்த துன்பங்களைத் தான் ஏற்று மக்களின் நலனைக் காக்கவேண்டும் என்ற அறக்கருத்தையும் பாடல்வழியே உணரமுடிகிறது.


தமிழ்ச் சொல் அறிவோம்


1. மலர்தலை உலகம் - பரந்த உலகம்
2. தானை - படை
3. கடன் - முறைமை , கடமை.

22 கருத்துகள்:

 1. அருமையான அறக்கருத்து சிந்தனை பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஆட்சியாளர்கள் மக்களை எங்கு கருத்தில் வைக்கின்றனர். . .அவரவர் மக்களின் நலன் கருதியே உழைக்கின்றனர். . .

  பதிலளிநீக்கு
 3. //ஆட்சி மாற்றின் விளைவாக திமுக சார்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. தற்போது பதுங்கி ஒதுங்கி இருந்தவர்கள் கூட வெளியில் வந்துவிட்டார்கள்... வழக்குகள் நியாயம் இருப்பின் சரியான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பது என்னுடைய வாதம். இதில் பழிவாங்கக்கூடிய போக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்...//

  correct.

  பதிலளிநீக்கு
 4. அழகிய தமிழில்
  அபூர்வத் தகவல்களை சொல்லும்
  அதிசய பதிவுகள் உங்களுடையது
  அற்புத நடையில்
  ஆனந்த தமிழ் பருகினேன்
  நன்றி முனைவரே

  பதிலளிநீக்கு
 5. தங்களின் தளம் படிக்க என்னுடைய தமிழ் மேம்படுகிறது..

  பதிலளிநீக்கு
 6. எக்காலத்திற்கும் பொருந்துகிற கவிதை
  புரியவேண்டியவர்களுத்தான் புரியவில்லை
  நாம் உடலாகத்தான் இருக்கிறோம்
  உயிராய் இருக்கவேண்டியவர்கள்தான்
  உயிரை எடுப்பவர்களாக இருக்கிறார்கள்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. அருமையான கருத்து குணசீலன்.இந்த காலத்து ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டால் எல்லோருக்கும் நன்மையாகும்.....

  பதிலளிநீக்கு
 8. சங்கக் கடல் மூழ்கி-நல்
  சத்தான முத்து தரும்
  தங்கத் தம்பியே நீர்-ஏனோ
  தருவ தில்லை கருத்துரையே
  வங்கக் கடலோரம் தம்பீ-நான்
  வாழ்கின் றேன் சென்னையிலே
  உங்கள் வரவு காணின்-என்
  உள்ளம் மகிழ் திடுமே

  வந்தால் வருவீரா..?

  அன்பு அண்ணன்
  புலவர் சா இராமாநநுசம்

  பதிலளிநீக்கு
 9. மற‌ந்து போன அருமையானதொரு கருத்தை அழகுற வழங்கியிருக்கிறீர்கள்! அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
 10. மாப்ள ஆட்சியாளன் கையில் மக்களின் உயிர்!.....உண்மைதானே அதான் அதைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை இக்காலத்தில்!

  பதிலளிநீக்கு
 11. நல்ல கருத்துக்கள் . சுவையான படைப்பு
  இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டால் நல்லது .

  பதிலளிநீக்கு
 12. நல்ல கருத்துக்களை நல்லவிதமாய் விளக்கியுள்ளீர்கள்.. சுவையான பதிவு

  பதிலளிநீக்கு
 13. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, ஒளவை வாழ நெல்லிக் கனியை ஈர்ந்தளித்தான் மன்னன். மானும் புலியும் ஓர் துறையில் நீரருந்தி மகிழ்ந்த ஆட்சி சங்ககாலத்தில் நடந்தது என்று பாடல்கள் காட்டுகின்றன. இவ்வாறு இலக்கியங்களில் போற்றப்பட்ட மன்னர்களும் அவர் தம் ஆட்சியும் உண்மைதானா? இல்லை இலக்கியங்களில் பொன்னுக்கும் புகழுக்கும் புலவர்கள் போற்றிப் பாடிய புகழுரைகள் தானா இவை என சந்தேகக் கண் கொண்டு நோக்க வேண்டிய நிலையை இக்காலத்தில் நாம் காண்கின்றோம். சிந்திக்கச் சில வரிகள் தந்தேன். நன்றி குணசீலன் அவர்களே. இவ்வாறான பதிவுகளைத் தரும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 14. உண்மைதான் பிரணவன்
  நன்றி நீரோ
  மகிழ்ச்சி குமார்
  பெருமகிழ்சி அடைந்தேன் இராஜகோபாலன்

  பதிலளிநீக்கு
 15. நன்றி கருன்
  நன்றி இராஜா
  நன்றி இரமணி ஐயா
  உண்மைதான் இராம்வி
  வந்தேன் புலவரே

  பதிலளிநீக்கு
 16. நன்றி மனோ
  உண்மைதான் விக்கி
  கருத்துரைக்கு நன்றி தாமசு
  மகிழ்ச்சி மோகன்
  தங்கள் சிந்தனை வரிகளுக்கு நன்றி சந்திரகௌரி

  பதிலளிநீக்கு
 17. பழைய இடுகை ஒன்றை வாசித்தேன் மிக்க நன்றி.-
  இனிய வாழ்த்து.

  பதிலளிநீக்கு
 18. மிகவும் சிறந்த முறையில் விளக்கம் அமைந்துள்ளது. நன்றி ஐயா 🙏🏻

  பதிலளிநீக்கு