வெள்ளி, 8 ஜனவரி, 2016

தமிழா் பண்பாட்டில் மலா்கள் (1000 வது பதிவு)


1000 வது இடுகை எழுதும் இந்த நாளில் என்னை நெறிப்படுத்திய, ஊக்கப்படுத்திய அன்பான வலையுலகத் தமிழ் உறவுகளை நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.

இந்த வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிருள்ள பெயா்கள், சங்க ஓவியங்கள் என இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்.

தற்போது தொடராக எழுதிவரும் இன்றைய சிந்தனைகளையும் நூலாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இந்த வலையில் எழுதும் ஒவ்வொரு கட்டுரைகளும் ஏதோ ஒரு புதிய சிந்தனையை அல்லது நமது மரபுகளை எடுத்துரைப்பதாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறேன்.

தொடர்ந்து இந்தவலைப்பதிவை வாசித்து, மறுமொழி தந்து என்னுடன் உலாவரும் தமிழ் உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மகிழ்வான நாளில் தமிழா் பண்பாட்டில் மலா்கள் என்ற கட்டுரையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.


        தமிழர் பண்பாட்டின் அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை மலர்கள் சிறப்பிடம் பெறுகின்றன. தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், காலத்தை அறிந்துகொள்ளவும், இன்பத்தையும், துன்பத்தையும் வெளிப்படுத்தவும், பக்தியைப் புலப்படுத்தவும், தன்னை அழகுபடுத்திக்கொள்ளவும் காலந்தோறும் மலர்கள் பெரிதும் பயன்பட்டுவருகின்றன. தமிழர் பயன்பாட்டில், பண்பாட்டில் மலர்கள் சிறப்பிடம்பெறுவதை, சங்கஇலக்கியங்கள் வழி எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலர்களுக்கு தமிழர்கள் இட்ட நுட்பமான பெயர்கள்
அரும்பு - அரும்பும் தோன்றுநிலை,
 நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை, 
முகை - நனை முத்தாகும் நிலை,
 மொக்குள் - நாற்றத்தின் உள்ளடக்க நிலை,                   
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல், 
மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு, 
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை, 
மலர்- மலரும் பூ,
 பூ - பூத்த மலர், 
வீ - உதிரும் பூ, 
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை, 
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள், 
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை என மலர்களின் ஒவ்வொரு நிலைக்கும் நுட்பமாகப் பல பெயரிட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.

அகவாழ்வில் மலர்கள்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தைக் குறிப்பதற்கு மலர்களே பயன்பட்டன. பத்துப்பாட்டில் இடம்பெறும் பத்து பாடல்களுள், முல்லைப்பாட்டும், குறிஞ்சிப்பாட்டும் மலர்களைக் குறியீடாகக் கொண்டு பெயர்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெடுநல்வாடையில் இடம்பெறும் ‘வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்ற அடிகள் இந்நூல் அகமா? புறமா? என்னும் கருத்துவேறுபாட்டுக்கு அடித்தளமாக இருந்தமையும் இங்கு எண்ணத்தக்கதாக உள்ளது.

பூ விற்கும் மகளிர்

‘மணமிக்க, வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சுமந்து தெறுதோறும் விலை கூறிச்செல்லும் மகளிர்’1 பற்றிய குறிப்பு  நற்றிணையிலும், மதுரைக் காஞ்சியிலும் காணக்கிடைக்கிறது.

வழிபாட்டில் மலர்கள்

விரிச்சி கேட்டல் என அழைக்கப்பட்ட தமிழரின் நற்சொல் கேட்கும் வழக்கத்தில் மலர்கள் சிறப்பிடம் பெற்றன. இதனை,
           அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இனவண்டார்ப்ப நெல்லொடு
அரும்பு அவிழ் அலரிதூஉய் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல்லைப்பாட்டு - 6-10 என்ற 

பாடலடிகள் சுட்டுகின்றன. மேலும் முருகனை ஆற்றுப்படுத்தும் வெறியாட்டில் மலர்கள் 2 சிறப்பிடம் பெறுவதை திருமுருகாற்றுப்படை  குறிப்பிட்டுச்செல்கிறது. ‘நெல்லும் மலரும் தூவி’ 3 மகளிர் மாலைக்காலத்தை வரவேற்றமை நெடுநல்வாடை வழியாக சுட்டப்படுகிறது. இன்று ஒவ்வொரு கடவுளருக்கும் விருப்பமான மலர்கள் என நாம் வழங்கிவருவதும் சிந்திக்கத்தக்கது.

கூந்தலில் சூடப்பட்ட மலர்கள்

தலைவியும், தோழியும் அருவியிலும், சுனையிலும் நீராடியபின் மரம், செடி, கொடி ஆகியவற்றில் மலர்ந்த மலர்களையும், மலர்களைப் போல விளங்கும் இலைகளின் தளிர்களையும் பறித்து அகன்ற பாறையில் குவித்தனர். இவ்வாறு இவர்கள் தொகுத்த மலர்களின் எண்ணிக்கை 99. சுட்டப்படும் பாடல் குறிஞ்சிப்பாட்டு. இச்செய்தி பழந்தமிழரின் தாவரவியல் அறிவைக் காட்டுவதுடன், மலர் மீது அவர்களுக்கு இருந்த வேட்கையின் அடையாளமாகவும் திகழ்கிறது. ‘காட்டு மல்லிகை மலர்களுடன் பாதிரி மலரையும் சேர்த்துக் கூந்தலில் சூடியமையும் வாசமிக்க பல்வேறு மலர்களை மகளிர்தம் கூந்தலில் சூடியமையும்’4 சங்கப்பாடல்கள் வழியாக அறியமுடிகிறது.

தழையாடையும் மலரும்

தலைவன் தலைவிக்குத் தந்த கையுறையைத் தோழி மறுக்கிறாள். அதற்குக் காரணம் தழையாடையில் உள்ள காந்தள் மலர் முருகனுக்கு உரியது. மேலும் இந்த ஆடையை தலைவி அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவார்கள் என்றும் தோழி கூறும் கூற்றின் வழியாக மலர் அணிவது குறித்த சங்ககால வழக்கத்தை அறியமுடிகிறது. 5 ஒரு தலைவி, ‘குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; அதற்கு இந்த ஊர் அலர் தூற்றுகிறது என்கிறாள், (அகம். 180) 

மலரணியும் உரிமை

மலர் சூடுதல் என்பது சங்ககால அகவாழ்வில் திருமணமான பெண்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. களவுக்காலத்தில் ஒரு பெண் மலர் அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவதும் வழக்கமாக இருந்தது. திருமணத்துக்கு முன் களவுக் காலத்தில் சிலம்பு அணிதலும், திருமணத்துக்குப் பிறகு மலர் அணிதலும் பழந்தமிழரின் மரபாக இருந்தது. களவுக்காலத்தில் தனக்கு தலைவன் சூட்டிய மலர் குறித்து பெற்றோர் அறிந்தால் தலைவி உடன்போக்கில் செல்லதும் பெண்களின் இயல்பாக இருந்தது. மேலும் சங்ககாலப் பெண்கள் மலரணியும் மரபு குறித்து,
தலைவன் களவுக் காலத்தில் தலைவியைப் பார்த்து அவள் கூந்தலில் மலர் சூடிச் செல்கிறான். கூந்தலில் மலரைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர்.6  ஒரு நாள் தாய் தன் மகளிடம் உன் கூந்தலில் மலரின் மணம் வருகிறதே..? என்று வினவுகிறாள். தன் களவு வெளிப்பட்டது என்ற அஞ்சிய தலைவி, தலைவனுடன் உடன்போக்கு செல்கிறாள் 7. தலைவி கூந்தலில் மறைத்த மலர் அன்னை அக்கூந்தலை அவிழ்க்கும் போது வீழ்கிறது, அன்னை நெருப்பைத் தொட்டவள் போல அவ்விடம் விட்டு நீங்குகிறாள் 8. இரவில் தலைவனைக் காணும் போது மலர் சூடிச் சென்ற தலைவி, தன்வீட்டார் முன்னர் மலர் நீக்கியவளாகக் காட்சியளிக்கிறாள 9. ஏறுதழுவல் நடைபெற்ற போது வலிமையான காளையை இடையன் ஒருவன் அடக்குகிறான். அப்போது அக்காளை அவன் தலையில் சூடிய முல்லைச் சரத்தைத் தன் கொம்பால் சுழற்றி வீசுகிறது. அம்மலர்ச்சரம் ஓர் ஆயமகளின் கூந்தலில் வீழ்கிறது. அதனை விரும்பிய தன் கூந்தலுள் மறைத்த அப்பெண் ஊராருக்கும், அவர் தூற்றும் அலருக்கும், தம் பெற்றோருக்கும் அஞ்சுகிறாள் 10. திருமணத்தின் போது தலைவனை,      “திருமணத்தைக் கொண்டாடும் படி பின்னிய கரிய கூந்தலில் மலர் சூட்டினாய்” என்று தோழியர் வாழ்த்துகின்றனர் 11. மேற்கண்ட சங்கப்பாடல்கள் வழி அறியலாம். திருமண நாள்முதல் ஒரு பெண் மலரணியும் உரிமை பெறுகிறாள் என்பதை,

எரிமருள் வேங்கை யிருந்த தோகை
இழையணி மடந்தையில் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயரவிவள்
                 பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங்.296)                                    இப்பாடல்வழியாக அறியலாம்.

புறவாழ்வில் மலர்கள்

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, தும்பை, வாகை, பாடான் என வீரர்கள் போரின்போது தம் அடையாளமாக மலர்களைச் சூடிச் சென்றனர். வெற்றிபெற்ற மன்னர்கள் தோற்றநாட்டின் காவல் மரங்களை வெட்டுவதையும், நிலத்தை எரியூட்டுவதiயும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன்வழியாக மலர்கள் புறவாழ்வில் பெற்ற இடத்தை உணரலாம். 

மலர் சூடிய முரசு

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையினது, முரசுகட்டிலில் உறங்கிய மோசிகீரனாரின் தமிழுக்காக தலைவணங்கிய மன்னவன் அவருக்கு கவரி வீசினான் என்ற புறநானூற்றுப் பாடலில், ‘மலரின் நீண்ட தோகையுடன் உழிஞையின் பொன்போன்ற தளிர்களும் அழகுபெறச் சூடப்பெற்றது’12 என்ற செய்தி வழியாக அரச முரசுக்கு மலர் சூடிய மரபினை அறியமுடிகிறது.

படைக்கருவிகளுக்கு மாலை சூடுதல்

அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார், ‘உனது படைக்கருவிகள் மயில்தோகையுடன் மாலை சூட்டப்பட்டு,  அழகுசெய்யப்பட்டு, நெய்பூசப்பட்டும், காவலையுடைய அகன்ற மாளிகையில் உள்ளன. ஆனால் அதியனுடைய படைக்கருவிகளோ கொல்லனது பட்டறையில் கிடக்கின்றன’13 என்று அதியனின் போர்த்திறன் குறித்து பேசுகிறார் ஒளவையார். இப்பாடல்வழியாக படைக்கருவிகளுக்கு மாலை சூடிய பாங்கு உணர்த்தப்படுகிறது.

நடுகல்லுக்கு மலர் சூடிய மரபு
‘போரில் வீரமரணம் அடைந்தவருக்கு எழுப்பப்படும் நடுகல்லில் மயில்த்தோகையுடன் சிவந்த மலர்களைக் கொண்ட கண்ணிகளை சூடினர்’ 14  என்ற குறிப்பு புறநானூற்றில் இடம்பெறுகிறது. 


ஆடைகளில் பூவேலைப்பாடு

சங்ககாலத் தமிழர்கள் தழையாடைகள் முதல் பல்வேறு ஆடைகளை அணிந்தனர் மறவர்தம் ஆடைகளில் ‘பூவேலைப்பாடு’15 இருந்தமை அவர்களுக்கு மலர்கள் மீது இருந்த பற்றைக் காட்டுவதாக உள்ளது.

சமையலில் பூ

பழந்தமிழர்கள் விரும்பி உண்ட உணவுகளுள் ‘கவைத்த வரகுக் கதிரைக் குற்றிச் சமைத்த சோற்றை வேளைப் பூவுடன் தயிரும் சேர்த்து  உண்ட உணவு’16 குறிப்பிடத்தக்கதாக இருந்தது. சமையலிலும் மலர்கள் சிறப்பிடம் பெற்றமை இதனால் உணரலாம்.

காதல் நன்மரம்

வளையணிந்த இளமகளிரும், வீரம் செறிந்த மறவர்களும் விரும்பி அணிவதால் பூப்பூக்கும் பல்வகை மரங்களுள்ளும் சிறந்த ‘காதல்நன்மரம்’17 என்று நொச்சிமரம் போற்றப்பட்டமை புறப்பாடல்வழி காணக்கிடைக்கிறது.

கோபுர வாயிலின் பூ வேலைப்பாடு

வலிமைபொருந்திய அரண்மனைக் கோபுரவாயிலின் கதவுகளில். ‘குவளையின் புதிய மலர்களை உயர்த்தித் தங்கள் துதிக்கைகளில் ஏந்திய யானைகளின் உருவங்கள், அவற்றின் நடுவே திருமகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தமை’ 18 பழந்தமிழர்களின் சிற்பக்கலை மரபில் பூக்களுக்கும் சிறப்பிடமிருந்தமை அறியமுடிகிறது.

முடிவுரை

தமிழர் பண்பாட்டின் குறிப்பிடத்தக்க அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. சங்கஇலக்கியங்களின் வழியாக பழந்தமிழர்தம் அகவாழ்விலும், புறவாழ்விலும் மலர்கள் சிறப்பிடம் பெற்றமை அறியமுடிகிறது. இன்று மலர்களை திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் அணிகின்றனர் சங்ககாலத்தில் மலரணியும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே இருந்தமை அறியமுடிகிறது. குறிஞ்சிப்பாட்டில் சுட்டப்படும் 99 மலர்கள் பற்றிய குறிப்பு மலர்கள் மீது தமிழர்கள் கொண்டிருந்த விருப்பத்துக்குச்; சான்றாகத் திகழ்கின்றது.

அடிக்குறிப்புகள்

1. நற்றிணை 118 மதுரைக்காஞ்சி 397, 2. திருமுருகாற்றுப்படை 241, 3.நெடுநல்வாடை– 43 - 44

4. நற்றிணை 52,337,42,145 5. குறுந்தொகை -1 6. (அகம் 180), 7. நற் – 143, 8. கலி -115
9. குறுந் – 312, 10. கலி- 107, 11. ஐங் – 296, 12. புறநானூறு – 50 – 4, 2.                  

13. புறநானூறு – 95 – 1, 14 .புறநானூறு – 264 – 2-3, 15. புறநானூறு – 274 -1 5. 

16. புறநானூறு215 – 1-2 6. 17. புறநானூறு 272 -1-3, 18. நெடுநல்வாடை – 83, 8.

29 கருத்துகள்:

 1. 1000 வது இடுகை எழுதும் இந்த நாளில்
  இனிய வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள், இன்னொரு ஆயிரம் தொடர....

  அன்புடன்,
  பனிமலர்

  பதிலளிநீக்கு
 3. 1000-ல் அடி எடுத்து வைக்கும் குருவே..தங்கள் பணித் தொடர வாழ்த்துக்கள்..

  பூக்கள் என்றாலே அழகு..இன்று 99 பூக்கள் பற்றிய குறிப்பு மிக அருமையாக தந்துள்ளீர் ஐயா..தமிழர் வாழ்வில் பூக்களுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்தனர் என்பது இன்று தான் எனக்கு தெரியும் ஐயா..தங்களுடைய தேடல் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ஐயா..

  நன்றி..

  பதிலளிநீக்கு
 4. 1000 பதிவுை தொட்ட முனைவருக்கு எமது வாழ்த்துகள் தொடர்ந்து எழுதி சாதனை படைக்க எமது அட்வான்ஸ் வாழ்த்துகளும் - கில்லர்ஜி
  தமிழ் மணம் 8

  பதிலளிநீக்கு
 5. 1000 வது பதிவுை எழுதும் இந்த நாளில் இனிய வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. ஆயிரம் பதிவுகள் வியக்கத் தக்க சாதனை.
  மலரல் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை படித்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள் தொடரட்டும் தமிழ் சேவை

  பதிலளிநீக்கு
 7. ஆயிரம் பதிவுகள்..... வாழ்த்துகள் முனைவரே.....

  பதிலளிநீக்கு
 8. 1000-ஆவது பதிவிட்டமைக்கு பாராட்டுகளும்...
  தொடர, வாழ்த்துகளும்...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்.

  தங்களின் தமிழ் மரபில் மலர் பற்றிய ஆய்வுக் கட்டுரை மிகவும் அருமை.

  தங்களின் ஆயிரமாவது பதிவிற்கென் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஐயா.

  குறிப்பிட மறந்தேன்.

  பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி தாவரவியல் அறிஞர். திரு. கே.வி.கே அவர்களின் தமிழரும் தாவரமும் என்ற நூலும் திரு ராமசாமி அவர்களின் சங்க இலக்கியத்தில் மலர்கள் என்ற நூலும் இது தொடர்பான தங்களின் மேலாய்வுக்குப் பயன்படும் என்று கருதுகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இரு்நதது ஊமைக் கனவுகள்

   நீக்கு
 11. மலர்களோடு 1000 பதிவுகள் , இன்னும் எழுத வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. 1000-வது பதிவு என்ற மிகப் பெரிய உயரத்தை தொட்ட தங்களுக்கு வாழ்த்துகள்!
  த ம 12

  பதிலளிநீக்கு
 13. ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்! தங்களின் தமிழ்ச் சேவை தொடர வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 14. ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ குணா! வாழ்த்துகள்... வந்தசுவடு தெரியாமல் முகம்மறைத்து முகநூலில் மறைந்துபோவோர் மத்தியில்..1000 பதிவுகள் அபூர்வ சாதனை தான். அதிலும் அவற்றை நூல்களாக்கும் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். தொடர்க, தொடர்வோம். வணக்கம்.

  பதிலளிநீக்கு