புதன், 19 ஏப்ரல், 2017

மகாகவி பாரதியாரின் தொலைநோக்குப் பார்வை!


கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறமைகொண்டவர் மகாகவி பாரதியார்.  இவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் சிறப்புடையன. வாசிப்போர் அறிவுத்திறனுக்கேற்ப அக்கவிதைகளைப் பொருளாழம் புலப்படும். அவர் பாடல்களுள், தேசிய கீதங்கள் - பாரத நாடு - பாரத தேசம் என்ற பிரிவில் உள்ள ஒரு பாடலின் விளக்கத்தைக் காண்போம்.

தொழில்நுட்ப உலகில் வாழும் நமக்கு வானொலி கூட இல்லாத காலத்தில் வாழ்ந்த பாரதி கண்ட கனவு வியப்பளிப்பதாகத்தான்

இருக்கும்! செக்கிழுத்த செம்மல் என்றழைக்கப்பட்ட வ.உ.சி அந்நியருக்கு எதிராக கப்பல் விட்ட மகிழ்ச்சியை பாரதியார் இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். தொலைநோக்குப் பார்வையோடு
பல சிந்தனைகளை இப்பாடலில் பதிவுசெய்துள்ளார். 

தொன்மையால், பக்தியால், கல்வியால், தொழிலால்,

வளங்களால் சிறந்தது நம் பாரதநாடு என அடிமைப்பட்ட பாரதமக்களிடையே நாட்டின் பெருமையை
உணர்ச்சிபொங்க எடுத்துரைக்கிறார். நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாகவும், மக்களின் ஒற்றுமையை
எடுத்தியம்புவதாகவும் இப்பாடல் திகழ்கிறது.
பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் -- மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்.
வறுமையால் ஏற்படும் பயத்தையும், மனிதன் தனக்குள் தோன்றும் துயரமாகிய பகையையும் வெல்லவேண்டுமானால் பாரத தேசத்தின் புகழையும் பெருமையையும் நினைத்துக் கொள்ளவேண்டும்.  பாரத தேசமென்று பெயர் சொன்னாலே வறுமையும் போய்த் துயரமும் மறைந்து விடும் எனபது பாரதியாரின் கருத்து.
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் -- அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத) 1
வெள்ளி போலப் பளபளக்கும் பனி மூடிய வட இமய மலையும்,
மேல்திசை, தென் திசைக் கடலு நமக்குச் சொந்தம்,
அங்கே உலாவி அவ்விடத்து எழில் கண்டு இன்புறுவோம்.
இங்கே கப்பல்களை விட்டுப் பல நாடுகளுடனும் தொடர்பு கொள்வோம்! நாட்டில் பல சமயப் பள்ளிகள் உண்டு! கோயில்கள் உண்டு! இவற்றை

எண்ணும்போதே எம் தோள்கள் பூரித்துப் போகின்றன.
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்(பாரத)             2
சிங்களத் தீவாகிய ஈழத்திருநாட்டைத் தாய் நாட்டுடன் சேர்த்து,
இடையில்   உள்ள சிறு கடலை மேடாக்கிப் பாலம் அமைப்போம்!
வங்க நாட்டில் பாய்ந்துவரும் கங்கை யாற்று நீர் வீணே கடலில் பாய்கிறது, அதனைத்திருப்பி மத்தியிலுள்ள நாடுகளில் பாயவிட்டுப் பயிர் செய்வோம்!
இக்காலத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும், ஆற்றுப் பாய்ச்சலைப் பொறியியலறிவு கொண்டு திருப்பி வளமற்ற நிலங்களையும் வளம்படுத்துவோம்!
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.    (பாரத)3
பூமியிலே சுரங்கங்களை வெட்டுவோம். தங்கம், பொன், வெள்ளி, இரும்பு, கரி, நிலநெய் போன்றவற்றையெல்லாம் பூமித் தாயின் மடியிலிருந்து உரிமையோடு எடுத்துக்கொள்வோம்! அவற்றை உலகெங்கும் விற்று நமக்கு வேண்டிய பல்வேறு பொருளைப் பெற்றுவருவோம்.!
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே (பாரத)               4
பல்வேறு நாட்டின் வணிகர், நமது நாட்டு முத்துக்காக நம் தென் கடலே நோக்கி வருவார்கள், அவர்கள் நமக்கு வேண்டியவற்றைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நம்மிடத்துள்ளவற்றை வாங்கிச் செல்ல மேல்கரைத் துறைகளுக்கு ஆசையோடு வருவார்கள்!
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம். (பாரத)          5
சிந்துநதி நம்முடையது. அதில் வீசும் நில வெளி நமக்கின்பம் தருவது! சேரநாடு நம்முடை யது. அந் நாட்டு அழகுக் கன்னியர் நம்மவர்!  அழகிய தெலுங்கு நமது மொழி! அதில் ஒலிக்கும் தீஞ்சுவைப் பாடல் நமது இசை!   இவ்வளவு சிறப்புகளையும் கொண்ட பாரத நாடு முழுவதும் நமது நாடு! ஆங்காங்கு காணும் சிறப்புக்க ளெல்லாம் எல்லார்க்கும் உரியன!
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)          6
கங்கைக் கரையிலே கோதுமையானால், காவிரிக் கரையிலே வெற்றிலை!   இதற்கு அது பண்டமாற்று! வீரமுள்ள மாராட்டியருடைய மொழியில் யாத்த கவிதைகளுக்குப் பரிசு சேர நாட்டு ஆனைத் தந்தம்!
காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.  (பாரத)      7
காசியிலே அறிஞர்கள் பேசும் உரைகளை தெற்கேயுள்ள காஞ்சியிலிருந்தபடியே கேட்கும் கருவியை நாம் செய்வோம்!
ராஜபுத்திர வீரர்களுக்கு கன்னட தேசத்துத் தங்கத்தைப் பரிசளிப்போம்!
பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம். (பாரத)         8
பட்டாடை, பருத்தி உடை எல்லாம் செய்து மலை மலையாகக் குவித்துப் பல தேசத்திலிருந்தும் பணம் கொண்டு வருபவர்களுக்கு விற்று நம் நாட்டுப்  பொரு ளாதாரத்தை பெருக்குவோம்!
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்செய் வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம். (பாரத)9
எழுத்து என்னும் ஆயுதங்கள் செய்வோம்! காகிதங்களும் நாமே செய்வோம்!
 இதற்காக ஆலைகளும், தொழில் வளர்வதற்கேற்ற கல்விச்சாலைகளும் நம் நாட்டிலேயே உருவாக்குவோம்!  அவற்றிலே ஓயாது உழைப்போம்!
உண்மையையே உயிராகக் கொண்டு நடப்போம்! இல்லாதவர்க்கு உள்ளவர்    கொடுத்து, இல்லை என்ற சொல் இல்லாமல் வாழ்வோம்.
 குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள்செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.    (பாரத)  10
குடைகள் செய்வோம்! உழும் கருவிகள் செய்வோம்! கோணிச் சாக்குகள் செய்வோம்! இரும்பு ஆணிகள் செய்வோம்! விரைந்து செல்லும் ஊர்திகள் செய்வோம்! உலகமெலாம் நடுங்கும் பெரும் கப்பல்கள் செய்வோம்!

மந்திரம் கற்போம்வினைத் தந்திரங் கற்போம்
வானை யளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.  (பாரத)        11  


மந்திரங்கள் கற்பதுபோல கைவினை நுட்பங்களையும் கற்போம்!வானின் நீளத்தையும், கடலின் ஆழத்தையும் அளப்போம்!
விண்வெளி நுட்பங்கள் கண்டுதெளிவோம்! சாலைகளைப்பெருக்குவோம்
காவியம் செய்வோம்நல்ல காடுவளர்ப்போம்
கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம்
ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்.  (பாரத) 12        
 காவியங்கள் மட்டுமல்ல காடுகளையும் வளர்ப்போம்! கலைகள் மட்டுமல்ல, பல கருவிகள் செய்யும் கொல்லர் உலைகளையும் வளர்ப்போம்! உலகில் உள்ள எல்லாத்தொழிலையும் மகிழ்ந்து செய்வோம்!
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்
சாதி இரண்டே! நீதி நெறியுடன் வாழ்ந்து பிறர்க்குதவுபவர் உயர்ந்தோர்! மற்றவர் தாழ்ந்தோர்! என்று உரைத்த தமிழ்மகள் ஔவையின் சொல்லை அமுதமென மதிப்போம்! அதன்படி நடப்போம்!

8 கருத்துகள்:

  1. பாரதி பாக்களில்
    அருமையான கண்ணோட்டம்
    பயனுள்ள மதிப்பீடு

    பதிலளிநீக்கு
  2. தெளிவான, புதுமையான விளக்கம். தொடர்க நும் தமிழ்த்தொண்டு.

    பதிலளிநீக்கு

வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.