வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 31 டிசம்பர், 2022

நெய்தல் கார்க்கியார்

 



சங்க இலக்கியத்தில் தலைவனின் பிரிவு தாங்காமல் வருந்தும் தலைவியின் மனநிலையைப் பாடுவன நெய்தல் பாடல்கள் ஆகும்.இவ்வுணர்வை இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என உரைப்பர்.

நெய்தலின் முதல், கரு, உரி ஆகிய முப்பொருளும் சிறப்பாகப் பாடப்பட்டமையால் இப்புலவர் நெய்தல் கார்க்கியார் என்ற பெயர் பெற்றார்.

இன்று பிரிவு என்ற சொல் பெரிதும் பொருளற்றதாகிவிட்டது. 

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பிரிவின் இடைவெளிகளைக் குறைத்துவிட்டன.

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151) என்ற வள்ளுவரின் குறள் இங்கு நோக்கத்தக்கது.

குறுந்தொகையில் களவுக்காலத்தை நீட்டிக்கும் தலைவனிடம் அவன் தலைவியை விரைந்து திருமணம்செய்து கொள்ளாவிட்டால் இவள் இறந்துவிடுவாள் என்று அவள் தோழி நாகரிகமாக உரைக்கிறாள்.


மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப்

பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,

கையற வந்த தைவரல் ஊதையொடு

இன்னா உறையுட்டு ஆகும்

சில் நாட்டு அம்ம இச் சிறு நல் ஊரே.

குறுந்தொகை - 55 - நெய்தல் கார்க்கியார்

நெய்தல்

(வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்'' எனத்

தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.)

 தலைவன் தலைவிக்கு அருகில் அவள் அறியாதவன் போல் நிற்க தோழி தலைவன் கேட்குமாறு கூறியது.

தோழி இவ்வாறு உரைப்பதன் நோக்கம்.

பெரிய உப்பங்கழிகளில் உள்ள நீலமணி போன்ற நிறமுடய நெய்தல் மலர்கள் கூம்பின.

தூய அலைகள் உடைந்து சிதறும் நீர்த்திவலைகளுடன் மேகங்கள் வீசின.

தலைவனைப் பிரிந்தவர்களுக்கு பெரும் துயரை ஏற்படுத்துகிறது வாடைக்காற்று.

உள்ளத்திற்கு இன்னாமை தரும் இச்சிறிய நல்ல ஊரில் உயிரோடு கூடி வாழும் வாழ்க்கை சில நாட்களே ஆகும்.    

தலைவன், தலைவி படும் துயரை உணர்ந்து விரைந்து திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே  தோழியின் நோக்கம் ஆகும்.

நெய்தல் பூ கூம்புதல் மாலைக் காலத்தைக் குறிக்கிறது.

இவ்வூர் இன்னாத உறையுளை உடையது என ஊர் மேல் வைத்துக்கூறினாலும் தலைவனின்றி இவள் சில நாளே உயிர்வாழ்வாள் என்பது உணர்த்தப்பட்டது. அச்சில நாட்களும் அவன் வருவான் என்ற நம்பிக்கையில் கழிவன.

இவர்களின் களவுக்கு இவ்வூரே காரணம் என்பதால் நல் ஊர் எனப்பட்டது.

சொற்பொருள் விளக்கம்.

 

ஊதை - குளிர்க்காற்று, வாடைக்காற்று,

மாக்கழி - கரிய உப்பங்கழி

மணிப்பூ - நீலமணிப்பூ

மங்குல் - மேகம்

உறையுட்டு - உறையுளை உடையது,தங்குதல்

 

தொடர்புடை இடுகைகள்

நீர் வார் கண்னை

பிரிவாற்றாமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக