நவில்தொறும் நயம்
தரும் நூலான திருக்குறளுக்கு எண்ணிலடங்கா உரைகள் வந்தாலும் திருவள்ளுவரின் கருத்தை
அவரவர் அறிவிற்கேற்ப வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள இயலும். ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவிதை திருக்குறள் குறித்த ஆழமான பார்வையின் வெளிப்பாடாக அமைகிறது.
விழுமியம் - வாழ்வியல் நெறி
வண்ணங்களுக்கு அப்பால் போய்
எப்படி
எண்ண
முடிந்தது உன்னால்?
என்று திருவள்ளுவரிடம் கவிஞர் கேட்கிறார். மனிதர்களின் நிறங்களைப் பார்த்து உயர்வு, தாழ்வு கருதும் இச்சமூகத்தில் மனிதர்கள் மட்டுமல்ல உயிர்கள் யாவும் பொது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… என்ற வள்ளுவரின் கருத்தே கவிஞரின் கேள்விக்குக் காரணமாக இருக்கவேண்டும்
ஓசை ஒலிகள் காணாத எல்லையில்
போய்
எப்படி
உன்னால்
வார்த்தைகள்
தேடும் பொருளை
வாரிக்
கொண்டுவர முடிந்தது?
குறளில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் ஒன்றை ஒன்று வெல்வதாகவே உள்ளது பயனிலாத சொல் என்று ஏதும் இல்லை. பொருள் பொதிந்த வார்த்தைகளாக எப்படி உன்னால் தேர்ந்தெடுத்து எழுத முடிந்தது என்று வியக்கிறார்.
தமிழ்க் கிண்ணத்தில்
உலகத்தை
எப்படி
நிரப்பி
வைத்தாய்?
தமிழுக்குக் கதி என்று கம்பனையும் திருவள்ளுவரையும் சொல்வதுண்டு. தமிழுக்கு அடையாளமான திருக்குறளில் உலகில் மனிதர்கள் வாழத்தேவையான அத்தனை கருத்துகளும் செறிந்துள்ளன அதனையே இவ்வாறு எண்ணிப் பார்க்கிறார்.
காலம்
உன்
கருத்துக்களின் சந்திப்பில்
தனது
கோடுகளைக்
கரைத்து விட்டது
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமல்ல நாம் வாழும் காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் மனிதர்கள் நல்வாழ்வு வாழத் தேவையான நற்கருத்துகளைக் கொண்ட நூல் திருக்குறள் என்பதால் காலம் உன் கருத்துகளில் தனது கோடுகளைக் கரைத்துவிட்டது என்றார்.
மானுட ஆன்மிகத்தை முன்மொழிந்த
உன்னைச்
சமய
ஆன்மிகம்
தழுவ
முடியாமல்
தள்ளி
நின்று தவித்தது
உலகப் பொதுமறை எனக் கொண்டாடப்படும் திருக்குறள் தனிப்பட்ட கடவுள், மதம் என சில குறிப்பிட்ட மக்களுக்கான ஆன்மீகத்தைப் பேசாமல் மனிதர்கள் யாவருக்குமான ஆன்மீகத்தைப் பேசியதால் எந்த சமயமும் தனிப்பட்ட உரிமையாக்கிக் கொள்ளமுடியவில்லை என்கிறார்.
இலக்கணம் தவறிய கடவுளர்கள்
உன்
இரண்டடிக்குள்
வந்து
தங்களைத்
திருத்திக்
கொள்ளும் முன்
மாசு
கழுவி
மானுடரை
மன்றத்துள்
முந்தி
இருக்கச் செய்தாய்
கடவுள் யார்? கடவுளுக்கான இலக்கணம் என்ன? என்றெல்லாம் விவாதம் ஒருபக்கம்
நடந்துகொண்டிருக்க. சில கடவுளர் அதற்கான இலக்கணங்களுடன் இருக்கிறார்களா என்று ஆராய்ந்துகொண்டிருக்க
திருக்குறள் படித்தவர்கள், குற்றமில்லாத நன்மக்களாக வாழும் நல்வழியைக் காட்டினாய் என்று
புகழ்ந்துரைக்கிறார்.
இல்லறக் கதவுகளைத்
திறந்து
வந்த
துறவற
ஞானிகள்
வேள்வி
நெருப்பில்
ஊருக்கு
அருள் சமைத்தனர்
பதம் பார்த்துச் சொல்ல
பக்கத்திலேயே
உட்கார
வைத்தனர் உன்னை
இல்லறம் துறவறம் இரண்டிலும் எது அறம் என்று பேசினாய்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். (280)
தோற்றத்தைவிட பற்றற்று வாழ்வதே உயர்ந்தது என்று சொன்னதால் இல்லறத்தையும் துறவறத்தையும்
நன்கறிந்து மக்கள் வாழும் வகைசெய்தாய் என்று பாராட்டுகிறார்.
போதி மாதவன்
உன்
சிந்தனைக்குள் புகுந்து
தானும்
சிந்தித்தான்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (350)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ( 341)
என்ற கருத்துகளையே புத்தரும் உரைத்தார் என சுட்டிக்காட்டுகிறார்
உண்மை
உடை தரித்த
பொய்ப்
பொருள்கள்
மெய்ப்
பொருள்கள் காணும்
அறிவிடமிருந்து
அகலும் வேளை
மங்கிய
குரலில் மன்னிப்புக் கேட்டன
எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்
யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே
அறிவு என மெய்பொருளுக்கும் அறிவுடைமைக்கும் வேறுபாட்டை உரைத்த திருவள்ளுவரின் அறிவு நுட்பத்தை எடுத்துரைக்கிறார்.
திருக்குறள் கற்றோர் பொய்ப்பொருள்களை இனம்காண்பர் என்பது கவிஞர் கருத்து.
விருஷப தேவரின் மவுனத்தைப்
பெருக்காத
இரத்தப் பெருக்கிற்கு அப்பால்
இருந்த
உயிர்க்குலத்தின்
உதடுகளில்
உட்கார்ந்து
உச்சரித்தாய்
கருவறைகளில்
சமத்துவ
சாசனம் வரைந்து உன்
வார்த்தைகள்
நியாய
வாசம் வீசின
தராசு முள்களை மழுங்கடித்த
மனு
தர்மத் தட்டுகளில்
மனிதச்
சதைகளை எடைபோடும்
சந்தைக்குள்
சந்தேகங்களின்
எடை
கனத்தது
கொல்லாமை, கள் உண்ணாமை போன்ற சமண சமயக் கருத்துகளும் திருக்குறளில்
உண்டு. மனு தர்ம சாத்திரங்களைப் போல மனிதர்களைப் பாகுபாடு கருதாமல் செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26) என்று
உரைத்த திருவள்ளுவரின் மாண்பை எண்ணிப்பார்க்கிறார். திருக்குறள் படித்தவர்கள் மனிதர்களுக்குள்
பாகுபாடு தேவையா என்று சிந்திப்பார்கள் என்பதை உணர்த்தியுள்ளார்.
வழிபாடுகளையும் வரிகளையும்
வற்புறுத்திய
தெய்வ பிம்பங்களிலிருந்து
மன்னர்களை
உரித்தெடுத்தாய்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.(388)
என்று இறை மாட்சியில் இறைவன் என்பவன் அரசன் என்ற சிந்தனைப் பகுத்துணர்த்துகிறார்.
அரசர்களின் இதயங்களில் இருந்து
ஆணையிட்டுக்
கொண்டிருந்த
அதிகாரங்களை
அப்புறப்படுத்தி விட்டு
மக்களை
அங்கு நீ அமர வைத்தாய்!
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். (386)
என்று மக்கள் நலனே மன்னர் கடன் என்றாய்.
பாதி அச்சமும் பாதி வெட்கமுமாய்க்
குடிமக்கள்
அரசர்கள்
செங்கோலைத் தமது
விரலோரத்தை
அனுப்பித்
தொட்டுப்
பார்த்தனர்
செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த
செய்யாமை போன்ற அதிகாரங்களில் மன்னருக்கும் மக்களுக்குமான உறவை எடுத்துரைத்தாய்..
படையால் கிடைப்பதைவிட நல்லாட்சியால்
கிடைப்பதே வெற்றி என்று
புரியவைத்தாய்.
மன்னர்களின்
வாளை,
வேலை, கோட்டை,
கொத்தளத்தைத்
தூக்கிக்கொண்டலைந்த
வார்த்தைகள்
மக்களை
இரக்கத்தை, நீதி நேர்மையைத்
தோள்களில்
சுமந்தன
அரசர்களைப் பற்றி எழுதுவதே இலக்கியம் என்று அரசர்களின் வீரம், கொடை
பேசிய இலக்கியங்களுக்கு நடுவே மக்களையும், இரக்கதையும், நீதியையும் நேர்மையையும் பேசிய
திருவள்ளுவரின் உள்ளத்தை சுட்டிக்காட்டுகிறார்.
மக்கள்
தலைக்குமேல் உன் குறட்பா
குடை
பிடித்தது
மன்னர்கள்
நினைவுக்குள் பெருகியது
நிழல்
வெள்ளம்
மக்கள் குறள் காட்டும் அறவழி வாழ்ந்ததும், அரசர்கள் மக்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளவேண்டும்
என்ற நினைவுடன் ஆட்சிசெய்ததும் குறள் காட்டும் தமிழகமாக கண்முன் விரிகிறது.
அறங்களைப்
பேசிய நீயே
காதலர்
கண்களில் மலரும்
கவிதைகளுக்கு
அர்த்தம்
சொல்ல முற்பட்டது
விந்தைதான்
அறத்தையும் பொருளையும் பேசிய திருவள்ளுவர் இன்பத்துப்பாலில் காதலர்களின்
களவு, கற்பு பற்றி பேசியதை எண்ணி வியக்கிறார்.
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். (1120)
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.(1151)
என்ற குறள்களை நோக்கும்போது ஈரோடு தமிழன்பன் கூறியதில் வியப்பென்ன என்று
தோன்றுகிறது.
ஒரு
சொல்லுக்கும்
மறு
சொல்லுக்கும்
இடையே
ஒரு
நூறு வானத்திற்கும்
ஒரு
நூறு கடலுக்கும்
இடம்
வைத்திருக்கும் உன் நூலின்....
இன்பத்துப்
பாலில்
தமிழ்த்தாய்
தனது கன்னிமைக் காலத்துக்
கனவுகளை
ஆசையோடு அள்ளிக்
கொள்கிறாள்!
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் என்று ஔவையார் குறளைப் பற்றி கூறியது போல சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் கொண்ட நூல்
திருக்குறள் என்பதையும் அதில் இன்பத்துப்பால் தமிழ்த்தாயின் இளமைப் பருவத்தைக் காட்சிப்படுத்துவதாகவும்
நயம்பட உரைத்துள்ளார்.
தொல்காப்பிய வாசற்படி விட்டிறங்கிய
கைக்கிளை
நீ
பார்த்த பார்வையில்
நூற்பாவுக்குள்
ஓடி நுழைந்து
வேர்வை
துடைத்துக் கொண்டது.
கைக்கிளை என்பது தலைவன் அல்லது தலைவி ஆகிய
இருவரில் ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் ஒருதலைக் காமத்தைக் குறிக்கும்.
கைக்கிளை ஒழுக்கம் சிறுபான்மையோர் ஒழுக்கம் என்றும் அன்பின் ஐந்தினைகளுள்
வாராது என்றும் கருதிய நிலையில், திருக்குறளில் ஒருதலைக் காதலைத் தவறு என்று வள்ளுவர்
குறிப்பிடவில்லை என்பதால் ஒருதலைக் காதலைப் பெருமையாகப் பேசியதால் கைக்கிளை வேர்வை
துடைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
கைக்கிளையின்
கைகளைப்
பற்றிக் கொண்டு
விசாரித்த
பெருந்திணை
கைவிட்டுவிட்டது
குறட்பாவுள்
இடம் கேட்டுக் கோரிக்கை
வைப்பதை.
பொருந்தாக் காமமான பெருந்திணையைப் பற்றி திருவள்ளுவர்
பேசவில்லை என்பதால் பெருந்திணை குறளில் இடம்கேட்பதை விட்டுவிட்டதாக மொழிகிறார்.
பரத்தையர்
பார்வை விழுந்து
காமத்துப்பால்
திரிந்து போகாமல் நீ
பாதுகாத்தது
சரிதான்; ஆனால்
வரைவின்
மகளிர், பெண்வழிச் சேறல்
பற்றியெல்லாம்
நீ பேசியவை சரியா?
இருமனமுடைய விலைமகளிர், கள், சூது
ஆகியன தீயோர் வழி என்று
பரத்தையர் பற்றிய திருவள்ளுவரின் சிந்தனைகள் ஏற்கத்தக்கதாக இருந்தாலும்.
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. (907)
போன்ற சில குறள்களில் ஆணாதிக்க சிந்தனை வெளிப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.
சில கேள்விகள் இருந்தாலும் அவர் அவ்வாறு கூறியதற்கு அவர் வாழ்ந்து சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம்
என்று புரிந்துகொள்ளமுடிகிறது.
இப்படி.
வினாக்கள்
எம்மிடம் இருந்தாலும்
எப்படிக்
கேட்பது உன்னை?
இசையைத்
தூக்கிலே போட்டவர்களோடு
பாடல்,
விவாதம் நடத்தச் சம்மதிக்குமா?
என்று உன்னிடம் பல கேள்விகள் இருந்தாலும் அதைக் கேட்க எங்களுக்கு என்ன
தகுதியிருக்கிறது. நீ சொன்ன எதை நாங்கள் பின்பற்றிவருகிறோம். அதனால் எங்களிடம் பேச
உனக்கு எப்படித் தோன்றும் என்பதை இசையைத் தூக்கிலிட்டவர்களுடன்
பாடல் விவாதம் நடத்த சம்மதிக்குமா என்று கேட்கிறார்.
உன்
இரண்டடிகளில்
வேர்வைத்து
வளர்ந்த வெளிச்சம்
சூரியனில்,
நிலாவில், நட்சத்திரங்களில்
வளர்கிறது
எங்கள்
வாழ்க்கையிலும்
வளர்கிறது
என்று
எப்போது
நாங்கள் சொல்வோமோ?
என்றாலும் திருக்குறள் தந்த ஞானச் சுடர் மனித குல வளர்ச்சியில் மிகப்பெரியது
என்பதை நன்றியுடன் எடுத்தியம்புகிறார்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (68)
என்று திருக்குறளின் வெளிச்சம் சூரியன், நிலவு, நட்சத்திரங்களில் வளர்கிறது
என்று மனிதகுல வளர்ச்சியில் திருவள்ளுவருக்கு செலுத்தவேண்டியை நன்றியை எப்படி செலுத்துவது
எனறு திகைத்து நிற்கிறார்.
உன்
கண்களில்
குளித்தெழுந்த
ஈரம்
பனியில்,
மழையில்,
கவிதைகளில்
இருக்கிறது.
எங்கள்
உள்ளங்களில்
இருக்கிறது
என்று
எப்போது
நாங்கள் சொல்வோமோ?
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72) என்றும்,
மனித வடித்தோடு மட்டுமின்றி மனிதத்தன்மையோடு வாழ வழிகாட்டிய திருக்குறளின்
சிந்தனைகளால் மனித உள்ளங்கள் இன்னும் ஈரத்துடன் உள்ளது என்று நன்றி கூறுகிறார் ஈரோடு
தமிழன்பன்.