ஆசிரியர்களைப் போற்றுவோம்..
கண்டிப்பான ஆசிரியர்கள் உன்னைக் கண்டிப்பது
நீ துன்பப்படவேண்டும் என்பதற்காக அல்ல!
நீ..... உன் வாழ்நாளில்
வேறு யாராலும் கண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்!
வேடிக்கையாகப் பேசும் ஆசிரியர்கள்
உன்னை மகிழ்விப்பது
நீ சிரிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல
உன்னைப் பார்த்து யாரும் சிரித்துவிடக்கூடாது..
சிரிப்புக்கு இடையே நீ சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான்!
எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடையணிவது
தன்னடக்கத்தைக் காட்டுவதற்காக அல்ல!
வாழ்நாளில் நீ
எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்
பகட்டை விரும்பக்கூடாது என்பதற்காகத்தான்.
சில ஆசிரியர்கள் சொன்னதையே
மீண்டும் மீண்டும் சொல்வது நீ
தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல!
நீ வாழ்வில் மதிப்புடையனாக உயரவேண்டும் என்பதற்காகத்தான்!
இந்த உண்மையை உணர்வோம் நம் வாழ்வின் நீங்காத நினைவுச் சின்னங்களான
ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவோம்..
கவிதையை எழுதியவர்.
வ. கீர்த்தனா
முதலாமாண்டு கணிதவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி