வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 30 மே, 2009

சங்க இலக்கியக் களஞ்சியம்

சங்க இலக்கியங்களில் இன்றுவரை பல்வேறு நோக்கங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் விவரங்கள் அடங்கிய ஆய்வடங்கல்கள் இன்றைய ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அவை இணையத்தில் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது.

எம்பில்,பிஎச்டி போன்ற பட்டங்களுக்காக ஆய்வு செய்வோர் முன்பு ஆய்வு செய்யப்பட்ட களங்களையே மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்களுக்காகவே உருவான நூல்தான்,
சங்க இலக்கியக் களஞ்சியம் ஆகும்.
இந்நூலை ச.மெய்யப்பன் அவர்கள் பதிப்பித்துள்ளார்கள்.

இந்நூல் கிடைக்குமிடம்.

மெய்யப்பன் தமிழாய்வகம்
80 புதுத்தெரு
விலை-200
பதிப்பான ஆண்டு 2000

பொருளடக்கம்

சங்க இலக்கிய நூற்களஞ்சியம்
சங்க இலக்கிய கட்டுரைகள்
சங்க இலக்கிய ஆய்வேடுகள்
சங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்
சங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்

இந்த நூலின் சிறப்பு

சங்க இலக்கிய நூற்களஞ்சியம்(789 நூல்களைப்பற்றி)
சங்க இலக்கிய கட்டுரைகள்(4007 இலக்கியக்கட்டுரைகள்)
சங்க இலக்கிய ஆய்வேடுகள்(564 ஆய்வேடுகள்)
சங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்(239 அட்டவணைகள்)
சங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்(1103 செய்திகள்)
என்பதாகும்.
ஆய்வு நூல்களின் உள்ளடக்கத்தையும் குறிப்பிட்டுள்ளமை இந்த நூலுக்கு மேலும் சிறப்பளிப்பதாகவுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் 2000 மாவது ஆண்டு வரையே எடுக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை சங்க இலக்கிம் குறித்து கல்லூரிகள் ,பல்கலைக்கழகங்களில் நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளே மீண்டும் செய்யப்படாமலிருக்கவும்,புதிய களங்களில் சங்க இலக்கியங்களை பன்முகநோக்கில் ஆயவும் இணையத்திலேயே ஆய்வடங்கல்கள் கிடைக்கும் வகை செய்யவேண்டும்..

சங்க இலக்கியங்கள் சங்க கால வரலாறாகவும் திகழும் தகைமையுடையவை.ஆகையால் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்யவிரும்பும் ஆய்வாளர்கள் இதுபோன்ற சங்க இலக்கிய ஆய்வடங்கல்களைப் பார்த்துவிட்டு பின் ஆய்வுக்குப் புகுவது நலம் பயப்பதாக அமையும்.

திங்கள், 25 மே, 2009

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது.
தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.


தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு


தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது,

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே”

(தொல்-1526)
என இயம்பியுள்ளார்.இதில் மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,

‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’

(தொல்-1526)

என வெளிப்படுத்தியுள்ளார்.


ஓர் அறிவுடையன

புல்,மரம்,செடி,கொடி ஆகிய தாவர இனங்கள் மெய்யால் உற்றறியும் இயல்புடையன என்பதை,


‘புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1527)

இந்நூற்பா சுட்டுகிறது.


ஈர் அறிவுடையன



நத்தை,மீன்,சிப்பி போன்ற உயிரினங்கள் உற்றறிதலோடு,நாவால் உணரும் இயல்பும் உடையன.இதனை,

‘நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1528)

என்ற நூற்பா இயம்புகிறது.


மூன்று அறிவுடையன
கரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை என்பதை,

‘சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1529)

என்னும் நூற்பா வழியாக அறியமுடிகிறது.


நால் அறிவுடையன

‘நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை,

‘நண்டும் தும்பியும் நான்கறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1530)

என்ற நூற்பா உணர்த்தும்.


ஐந்து அறிவுடையன

விலங்கினங்கள் அனைத்தும்,விலங்கின் இயல்புடையோரும் ஐந்து அறிவுடையன என்று,

‘மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1531)

இந்நூற்பா இயம்புகிறது.


ஆறு அறிவுடையன


மன அறிவுடைய மனிதர்கள் ஆறு அறிவுடையவர்களாவர்.இவர்களுக்கு ஐம்புலனறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை,


மக்கள் தாமே ஆறறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1532)

என்ற நூற்பா சுட்டுகிறது.


உருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)


Big Bang எனப்படும் மாவெடிப்பு நிகழ்ந்த பின் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுள் உயிர்க்கூறுகளின் தோற்றம் குறிப்பிடத்தக்கது.பூமியில் முதலில் எளிய உயிர்க் கூறுகள் தோன்றின.அவை பல்லாண்டுகால உருமலர்ச்சிக்குப் பின்னர் இன்றைய நிலையை அடைந்தன.முதலில் உருமலர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின் ஆவர்.இவருடைய கருத்துக்கு இன்று வரை அறிவியல் அடிப்படையிலான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.இவ்;வுருமலர்;ச்சிக் கொள்கையையே தொல்காப்பியரும் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையாக வெளிப்படுத்தியுள்ளார;


ஒருசெல் உயரி (புரோட்டோசோவா)

உயிர்களின் முதல் நிலை ‘செல்’ஆகும்.உயிர்த்துடிப்புள்ள உயிரணு செல் ஆகிறது. பூமியில் தோன்றிய முதல் தாவரமாக அமீபா என்னும் நீர்வாழ்த் தாவரத்தைக் குறிப்பிடுகிறோம்.இது ஒருசெல் உயிரியாகும்.இது புரோட்டோசோவா என்னும் வகை சார்ந்தது.தொல்காப்பியர் சுட்டும் ஓரறறிவுயிரி புல்லும்,மரமும் தாவர வகையே இவை உற்றறியும் தன்மையுடையன என்பது குறிப்பிடத்தக்கது.


செல்பிரிதல்

ஒரு செல்லானது பிரிதலின் போது பல்கிப்பெருகிப் பல செல்கள் உருவாகின்றன.பலசெல் உயிர்களின் ஒவ்வொரு செல் தொகுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன.அதனால் உயிர்களின் பண்பு மாறுபடுகிறது.இதனால் உருமலர்ச்சி ஏற்பட்டது. செல் பிரிதலின் போது அமீபா இரு துண்டுகளாகப் பிளந்த போது பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் தோற்றம் பெற்றன.

பல செல் உயிரி


ஒருசெல் உயிரியை புரோட்டோசோவா என அழைப்பது போல பல செல் உயிரியை மெட்டோசோவா என அழைப்பர்.பல செல் உயிரிகளை இரு வகைப்படுத்தலாம். 1.முதுகுத்தண்டற்றவை,2.முதுகுத்தண்டுள்ளவை.

முதுகுத்தண்டற்றவை.


கடற்பஞ்சு,புழுவினங்கள்,நண்டு,சிலந்தி,நத்தை,நட்சத்திர மீன்கள் போன்ற உயிரனங்கள் முதுகுத் தண்டற்றவை ஆகும்.தொல்காப்பிர் சுட்டும் கடல்வாழ் உயிரினங்களாக நத்தை,மீன் ஆகியன இவ்வகை சார்ந்தவையாக உள்ளன.இவை உற்றறிதலோடு,நாவால் உணரும் சுவையுணர்வும் கொண்டவையாக விளங்குகின்றன.

முதுகுத் தண்டுள்ளவை

கார்டேட்டா எனப்படும் வகை சார்ந்த இவற்றை நீர் வாழ்வன,நிலத்தில் வாழ்வன நீர்நில வாழ்வன என வகைப்படுத்த இயலும்.

நில வாழ்; உயிரிகளை ஊர்வன,பறப்பன,பாலூட்டிகள் எனப்பகுக்கலாம்


ஊர்வன

கரையான்,எறும்பு ஆகியன மூன்று அறிவுடையன என்பர் தொல்காப்பியர்.இவை உற்றறிதல்,சுவையுணர்வு,நுகர்ச்சி என்னும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளன.


பறப்பன

வண்டு,தும்பி போன்றன நாலறிவுடையன இவை உற்றறிதலோடு,சுவை,நுகர்ச்சி,பார்வை என்னும் பண்புகளைக் கொண்டவையாகும். உருமலர்ச்சிக் கொள்கையின்படி இரு பெரும் பாகுபாடு கொண்டவையாக அறிவியலாளர்கள் பாகுபாடு செய்துள்ளனர்.அவை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என்பதாகும்.

பல செல் உயிர்களின் உருமலர்ச்சி நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.அதன் அடிப்படையில் அவ்வுயிர்கள் பாகுபடுத்தப்பட்டன.

பாலூட்டிகள்

விலங்கினங்களும் விலங்கின் இயல்புடைய மக்களும் ஐந்தறிவுடையன எனத் தொல்காப்பியர் சுட்டுவர்.அறிவியல் அடிப்படையில் இது பாலூட்டி வகையில் அடங்குவதாகவுள்ளது.


மனித நிலை

உயிர்களின் வளர்ச்சி நிலையில் மனிதன் என்னும் நிலையே உயரிய வளர்ச்சி நிலையாகும். ‘மனதை’ உடையவன் மனிதன் எனப்படுகிறான்.ஆறாவது அறிவான ‘மனம்’ மனிதனை உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.இதனையே தொல்காப்பியரும் இயம்புகிறார்.

முடிவுரை

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டின்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றன என்பதை அறியமுடிகிறது.

செல் பிரிதலின் மூலம் உயிர்கள் உருமலர்ச்சி பெறுகின்றன.

செல் தொகுப்புகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உயிர்களின் பண்பு அமைகிறது என்ற உருமலர்ச்சிக் கொள்கை தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையோடு இயைபுற்று அமைகிறது.

அறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது.இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.

தொல்காப்பியரின் உயிரியல் கோட்பாடு அவர் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இ;து தமிழ் மொழியும் தமிழர் தம் சிந்தனையும் பழங்காலந்தொட்டே செம்மையுற்று இருந்தமை உணர்த்துவதாக உள்ளது

செவ்வாய், 19 மே, 2009

ஆற்றுப்படை




கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் ஆட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்


தொல்காப்பியம்-1037
என்பது தொல்காப்பிய நூற்பா இதில் ஆற்றப்படையின் இலக்கணம் கூறப்படுகிறது.ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்துதல் என்பதைக் குறிப்Gதாகும். சங்க காலத்திலேயே தனிப்பெரும் இலக்கியமாக ஆற்றுப்படை வளர்ச்சி பெற்றிருந்தது.

கூத்தர் ( கூத்தாடக் கூடிய கலைஞர்கள்)
பாணர் (யாழ்கொண்டு பண் இசைக்கக் கூடியவர்கள்
சிறு யாழை வாசித்தால் சிறுபாணர் என்றும்,
பேரியாழை வாசித்தால் பெரும் பாணர் என்றும் பெயர் பெறுவர்.)
பொருநர் ( ஏர்களம்இபாடுநர்,போரக்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகைப்பட்ட பொருநர்கள் இருந்தனர்)
விறலி (விறல் பட – மெய்பாடு தோன்ற – உணர்வுகளை வெளிப்படுத்தி திறம்பட ஆடும் ஆடல்மகள்))

கூத்தர், பாணர், பொருநர்,விறலி ஆகியோரை சங்க காலத்தில் வாழ்ந்த
கலைஞர்களாக அறிய முடிகிறது. இவர்கள் பாடல் இசைத்தல்,கூத்தாடுதல், ஆடுதல் எனப் பல்வேறு திறன்களையும் பெற்றிருந்தனர்.

வறுமை காரணமாக அரசனைப் பார்த்து தம் திறன்களை வெளிப்படுத்தி பரிசில் பெற்று வருவதற்காக நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்வர்.
அப்போது தம்மைப் போல் வறுமை காரணமாக அரசனை நாடிப் பரிசில் பெற்றுத் திரும்பி வரும் கலைஞர்களைக் காண்பர்.

அவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர் ஒருவர் பெறவிருக்கும் கலைஞரை ஆற்றுப்படுத்துத் ஆற்றுப்படையாகும்.

அந்த அரசனிடம் எவ்வாறு செல்வது,அவன் என்னென்ன பரிசில் தருவான் எனப் பல்வேறு செய்திகளை பரிசில் பெற்ற கலைஞர் சொல்வதுண்டு.

சிறுபாணன் -சிறு பாணனை ஆற்றுப்படுத்தினால் அது சிறுபாணாற்றுப்படை எனப்படும்.
பெரும்பாணன்- பெரும்பாணனை ஆற்றுப்படுத்தினால் அது பெரும்பாணாற்றப்படை எனப்படும்.
கூத்தர்- கூத்தரை ஆற்றுப்படுத்தினால் அது கூத்தராற்றுப்படை எனப்படும்.
விறலி – விறலியை ஆற்றுப்படுத்தினால் அது விறலியாற்றுப்படை எனப்படும்.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படைகள் உள்ளன.


திருமுருகாற்றுப்படை
( முருகனிடம் வீடு பேறு பெற்ற பக்தன் வீடு பேறு
பெறவிருக்கும் ஒருவனை ஆற்றுப்படுத்துதல்)
சிறுபாணாற்றுப்படை (சிறுபாணர்- சிறுபாணர்)
பெரும்பாணாற்றப்படை (பெரும்பாணர்- பெரும்பாணர்)
பொருநராற்றுப் படை( பொருநர் – பொருநர்)
கூத்தராற்றுப்படை (கூத்தன் – கூத்தன்)

இந்த ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக சங்க காலத்தில் அரசனுக்கும் கலைஞர்களுக்கும் இருந்த உறவு நிலைகளை அறிய முடிகிறது.சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும்
ஆற்றுப்படைத் துறை அமைந்த சிறுசிறு பாடல்கள் இருப்பதைக்
காண முடிகிறது.

ஞாயிறு, 17 மே, 2009

புள்ளோப்புதல்

சங்க காலத்தில் பெண்களின் பணிகளில் புள்ளோப்புதல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. புள்ளோப்புதல் என்றால் பறவைகளை விரட்டுதல் ஆகும்.(புள்ளினம்- பறவையினம்) . இதனை சங்ககால மகளிர் விளையாட்டாகவும் கொண்டிருந்தனர். தானியங்களை உண்ண வரும் கோழி உள்ளிட்ட புள்ளினங்களை, குளிர்,தழல்,தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு விரட்டினர். இந்தக் கருவிகளுக்குக் கிளிகடி கருவிகள் என்பது பெயராகும். இவ்வாறு புள்ளினங்களை விரட்டும் போது ஆலோ என்று சொல்லி விரட்டுவது மரபாகும்.

நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும்


சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் பட்டினப்பாலையில் சங்க கால மகளிர் புள்ளோப்புதல் பற்றி குறிப்பு உள்ளது. சங்க காலமகளிர் தானியங்களைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தங்கள் காவலையும் மீறி அங்கு தங்கிவிடும் புள்ளினங்களை மகளிர் தம் காதில் அணிந்திருந்த பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு விரட்டினர். அவ்வாறு புள்ளினங்களை விரட்டுவதற்காக எறிந்த பொன்னாலான அணிகலன்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன. அவ்வாறு சிதறிக் கிடந்தமையால் சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்கள் (முக்கற்சிறுதேர்- சிறு வண்டி) செல்வதற்குத் தடை ஏற்பட்டது. என்பது இப்பாடலடிகளின் பொருளாகும்.

இப்பாடலடிகள் வழியாக புள்ளோப்புதல்,
தங்கத்துக்கு சங்க காலத்தில் இருந்த மதிப்பு,
சங்க காலச்செல்வ நிலை,
சிறுவர்கள் சிறுதேர் ஓட்டுதல் உள்ளிட்ட பல மரபுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.


இன்றைய சூழலில்….

புள்ளினங்களையே அனிமல் பிளானட்,டிஸ்கவரி சேனல்களில் தான் காணமுடிகிறது. ஏனென்றால் நாம் வாழும் ஒலி நிறைந்த நகர(நரக) வாழ்வு அப்புள்ளினங்களுக்குப் பிடிப்பதில்லை.

சங்க காலத்தில் தங்கத்தை ஒரு அணிகலனாக மட்டுமே எண்ணினார்கள்.இன்று தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு மனிதர்களுக்குக் கூட இருப்பதில்லை....
குழந்தைகள் சங்க காலத்தில் முக்காற் சிறு தேர் ஓட்டினார்களாம். இன்று எந்தக் குழந்தையாவது அப்படி ஓட்டுகிறதா. இவையெல்லாம் நமது தமிழர் தம் மரபுகள் என்றாவது அறிந்து கொள்வோம்.

வியாழன், 14 மே, 2009

அறத்தொடு நிற்றல் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 23

குறுந்தொகை 23


தலைவியின் காதலை பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல்  என்பது இதன் பொருளாகும். 
இன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலை இயல்பாக தன் பெற்றோரிடம் கூறிவிடுகிறாள். 
ஆனால் சங்க காலத்தில் ஒரு பெண் தன் காதலைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கப் பல படிநிலைகள் இருந்தன. அவற்றை இலக்கணப்படி காண்போமானால்.

பகற்குறி, இரவுக்குறி, முதலான இரு வழிகளிலும் நிகழ்ந்து வந்த தலைமக்களின் சந்திப்பு (மறைமுகக் காதல் வாழ்க்கை.) குறி இடையீட்டினால், சிற்சில இடையூறுகளால் தொடர முடியாத நிலை ஏற்படும். அந்நிலையில் தலைவன் - தலைவியர் ‘மணம்’ புரிந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ விரும்புவர். அது கருதித் தலைவியின் களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தி முறைப்படுத்தும் செயல்கள் நிகழும். அதனை அகப்பொருள் இலக்கணத்தில் ‘அறத்தொடு நிற்றல்’ என வழங்குவர்.