தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றார் திருவள்ளுவர். மனித குல
வளர்ச்சி என்பது கற்றல் கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டது.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.(395) என்றார் திருவள்ளுவர். செல்வர்
முன் வறியவர்போல பணிந்து கற்பதே சிறந்த கல்வி
என்பது இதன் பொருள். பணிவில்லாத, ஆர்வமில்லாத மாணவர்கள் சிறந்த
ஆசிரியரிடமிருந்தும் ஏதும் கற்பதில்லை.
பெற்றோருக்குப் பின் பிள்ளைகள் பார்க்கும் வழிகாட்டிகளே
ஆசிரியர்கள். ஆசான், குரு, கணக்காயர், வழிகாட்டி, நெறியாளர் என பலவாறு அழைக்கப்படும்
ஆசிரியரின் பங்கு ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்கமுடியாது. “எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்”என நறுந்தொகை, ஆசிரியரின், பெருமையை
உரைக்கிறது. இன்றைய சூழலில் ஆசிரியர்
இல்லாமலேயே செய்யறிவுக் கருவிகள் வழியாக மாணவர் கற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் மாணவர்களின் திறனறிந்து கற்பிக்கும் ஆசிரியரின் இடத்தை எந்த
தொழில்நுட்பமும் ஈடுசெய்யமுடியாது. கல்வி புகட்டும் ஆசிரியர் இல்லாத ஊரில்
வாழ்வது நன்மையில்லை என்று திரிகடுகம் உரைக்கிறது.
பாரதியாரின் குரு தரிசனம் என்ற கவிதையும் ஜெயகாந்தனின் குரு
பீடம் என்ற கதையும்,
குரு' என்பவரை
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைக்காமல்,
அறியாமையைப் போக்கி மெய்ஞானத்தை உணர்த்தும் எந்தவொரு அனுபவமும்
அல்லது மனிதர்களும் 'குரு' தான் என்பதைத்
தெளிவுபடுத்துகின்றன.
உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் உங்கள்
ஆசிரியர் என்றார் கென் கீஸ் என்ற அறிஞர். கல்விநிலையம்
செல்லாதவர்களுக்கும் தம் தொழில் வழிகாட்டிகளே ஆசிரியர்கள். பெற்றோர், நண்பர்,
உறவினர் என மனிதர்கள் மட்டுமின்றி விலங்கு, பறவை என இயற்கைக் கூறுகள் கூட நம்
வாழ்வின் ஆசிரியராகலாம். இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர் என்றார்
கார்லைஸ்.
வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா
வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா
சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா என்று பாடினார்
கண்ணதாசன்.
பாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்!
உறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்!
சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!
பறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்!
விலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்!
இயற்கையின் கூறுகள் நமக்கு என்றென்றும் ஆசிரியர்கள்!
என்றாலும் இயற்கையிடம் கற்றுக்கொள்ளும் ஆற்றல் எல்லா மனிதர்களுக்கும்
வாய்ப்பதில்லை. மேலும் இயற்கை கற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் எதையும் நிகழ்த்துவதில்லை.
ஒரு குரு தன் மாணவர்களை கடலுக்கு அழைத்துச் சென்றார். பிறகு
இன்று என்ன கற்றீர்கள் என்று சீடர்களிடம் கேட்டபோது ஒருவர், மீண்டும் மீண்டும்
வந்துசெல்லும் அலையிடமிருந்து விடாமுயற்சியைக் கற்றுக்கொண்டேன் என்றார். இன்னொரு
சீடர் எத்தனை முறை அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் கரையிடமிருந்து பொறுமையைக்
கற்றுக்கொண்டேன் என்றார்.
இயற்கையின் கூறுகள் கற்பிக்கும் பாடம் சில மணித்துளிகளின் கடந்துவிடும்.
அதைப் புரிந்துகொள் அளவுகடந்த ஆர்வமும் ஆழமான புரிதலும் தேவை. ஆனால், கல்வி நிலையங்களில்
கற்பித்தல் என்ற தொடர் நிகழ்வு, மனிதகுலத்தைத் தொடர்ந்து
சிந்திக்கச் செய்கிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும், விரைவான வளர்ச்சிக்கும்
அடிப்படையாகிறது.
கற்பித்தல் மற்ற எல்லா தொழில்களையும் உருவாக்கும் தொழில் என
மதிக்கப்படுகிறது.
நல்ல ஆசிரியரால் நல்ல மாணவனை உருவாக்கமுடியும்,
நல்ல மாணவனால் நல்ல ஆசிரியராக உயரமுடியும்.
ஆசிரியர்கள் பல வகை உண்டு.
ஒரு மனிதனுக்கு நீங்கள் எதையும் கற்பிக்க முடியாது, அதை அவனுக்குள்
கண்டுபிடிக்க மட்டுமே உதவ முடியும் என்றார் கலிலியோ. இந்த உண்மையை உணர்ந்த
ஆசிரியர்கள் சிலரே. அந்த ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்கள் தம் திறமையை எளிதில்
அறிந்துகொள்கிறார்கள்.
நான் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, என்னால் அவர்களை
சிந்திக்க வைக்க முடியும் என்றார் சாக்ரடீஸ். சிந்திக்க வைப்பதே நல்லாசிரியரின் முதன்மையான வழிகாட்டுதலாகிறது.
கற்பித்தல் என்பது புரிதலின் மிக உயர்ந்த வடிவம் என்றார் அரிஸ்டாட்டில்.
புரிந்தவர்களால் தான் புரியவைக்கமுடியும்.
ஒரு ஆசிரியரின் நோக்கம் மாணவர்களை தனது சொந்த உருவத்தில் உருவாக்குவது
அல்ல, மாறாக
தங்கள் சொந்த உருவத்தை உருவாக்கக்கூடிய மாணவர்களை உருவாக்குவது. “உண்மையில் ஞானமுள்ள
ஆசிரியர் உங்களை தனது ஞானத்தின் வீட்டிற்குள் நுழைய விடாமல் உங்களை உங்கள் மனதின் வாசலுக்கு
அழைத்துச் செல்கிறார் என்றார் கலீல் ஜிப்ரான். சராசரி ஆசிரியர்கள் தாம் கற்றதை
மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். ஆனால் கற்பித்தலைக் கடந்து மாணவர்களின் தனித்தன்மையை
அறிந்து, அவர்கள்
அத்துறையில் வளர துணை நிற்கும் ஆசிரியர்களே மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாகிறார்கள்.
கற்பித்தல் என்பது மிகவும் உன்னதமான பணியாகும், கற்பித்தலில் ஒருவரின் பாத்திரம், திறமை மற்றும்
ஒரு தனிநபரின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது, மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைத்தால், அது எனக்கு மிகப்பெரிய
கௌரவமாக இருக்கும் என்று கூறினார் அப்துல் கலாம்.
ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான்
உள்ளே நுழைய வேண்டும் என்பது சீன பழமொழி.
கற்பித்தலில் ஆசிரியர் கேட்கும் கேள்விகள், கூறும் எடுத்துக்காட்டுகள், மதிப்பெண்களைப்
பெறுவதைக் கடந்து வாழ்வியல் மதிப்புகளை உணர்த்துகின்றன.
ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவர்! துணை வேந்தர்! இந்திய அரசின் தூதர்! என,
பல உயரிய பதவிகளுக்குப் புகழ்சேர்த்தவர், சர்வபள்ளி டாக்டர்
இராதாகிருஷ்ணன் அவர்கள். அவரது பிறந்தநாளே ஆசிரியர்தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
நல்ல ஆசிரியர் என்பவர் அறிவுத் தேடலில் மாணவனுடன் சக பயணியாகப்
பயணிக்க வேண்டும் என்பது அவரது கருத்து. மகாத்மா காந்தியின் சீடராகவே தன்னைக்
கருதி வாழ்ந்தார். காந்தியின் அன்பு, அமைதி, அகிம்சை, சுதேசி கொள்கைகளில்
இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஈடுபாடு இருந்தது.
அதுபோல இராதாகிருஷ்ணன் அவர்களின் புலமை, சொல்லாற்றலை அறிந்து அவர் மீது
பெருமதிப்பு கொண்டவராகவே காந்தியிருந்தார். இராதாகிருஷ்ணன் அவர்களிடம், “நீங்கள்
எனக்கு கண்ணன் மாதிரி, நான் அர்ஜூனனாகத் தங்களிடம் பாடம் கேட்கவிரும்புகிறேன்
என்றார்“ காந்தி
அவர் மாணவராக இருந்தபோது, அவரிடம் ஆசிரியர்,
“நீ புத்திசாலியாக விரும்புகிறாயா? அறிவாளியாக விரும்புகிறாயா?” என்று கேட்டபோது, “அறிவாளிகள்
மத்தியில் புத்திசாலியாகவும்,
புத்திசாலிகள் மத்தியில் அறிவாளியாகவும் விரும்புகிறேன்” என்றார் டாக்டர் இராதாகிருஷ்ணன்,
ஆசிரியர்கள்,
தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும்
அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவு தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச்
செல்லும் திறன் படைத்தவர்களாக விளங்க வேண்டும் என்றார், டாக்டர் இராதாகிருஷ்ணன்.
“செங்கல்லையும், சுண்ணாம்பையும்
கொண்டோ, சுத்தியலையும், உளியையும் கொண்டோ
தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கமுடியாது. அவை மனிதர்களின் உள்ளத்தில் ஓசைபடாமல் வளரவேண்டும்.
கல்வி மூலமாகத்தான் இது முடியும் என திடமாக நம்பிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள்
வாழ்வின் வழியாக, ஆசிரியப் பணியின் பெருமையையும், கடமையையும், அதன் வலிமையையும்
உணர்வோம்.. ஆசிரியர்களைப் போற்றுவோம்!
முனைவர் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி கலை அறிவியல்
கல்லூரி
கோயம்புத்தூர்
9524439008

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக