வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 20 ஜனவரி, 2010

மொத்தம் தமிழ் மூன்றல்ல - வைரமுத்து



இயல், இசை, நாடகத்தோடு, அறிவியல்தமிழ் நான்காம் தமிழாக வளர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. உலகில் பல மொழிகள் இருந்தாலும் அறிவியல் எல்லா மொழிகளையும் இணைக்கிறது. பழந்தமிழர் அறிவியலில் முன்னோடியாக இருந்தனர். இன்றைய தமிழர் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு தமிழில் பெயரிட்டுக்கொள்வதோடு தம் பங்கு முடிந்துவிட்டது என்று எண்ணுவது அவலத்திற்குரிய ஒன்றாகும்.

அறிவியலின் முன்னோடியாக இருந்த தமிழன்..
இன்று அறிவியலின் பின்னோடியாக மாறியதற்கு அடிப்படைக் காரணம் தாய்மொழியான தமிழைப் புறக்கணித்ததே ஆகும்.

நான்காம் தமிழான அறிவியல்த் தமிழின் தேவையைக் கவிஞர் வைரமுத்து இவ்வாறு கூறுகிறார்.



'தமிழை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளத் தமிழர்கள் இரண்டு கத்திகள் வைத்திருக்கிறார்கள்.
தொல்காப்பியத்தோடு தமிழ் முடிந்துவிட்டது அல்லது திருக்குறளோடு தீர்ந்துவிட்டது என்பவர்களின் கையில் துருப்பிடித்த கத்தி.
தமிழில் என்ன இருக்கிறது…. விஞ்ஞானம் மனிதனுக்கு இறக்கைகள் தயாரித்துக்கொண்டிருக்கும் போது இந்த தமிழ் என்னும் தள்ளுவண்டியால் யாது பயன் என்று சலித்துக்கொள்கிறவர்களின் கையில் சாணைபிடித்த கத்தி.

இந்த இரண்டு கத்திகளுமே பயங்கரமானவை. பறிமுதல் செய்யப்பட வேண்டியவை.
துருப்பிடித்த கத்தியைத் தூக்கி நிற்பவர்களே! உங்களைக் கேட்கிறேன்- தமிழுக்கு ஏன் தாழ்பாள் போடுகிறீர்கள்?
வானத்துக்கு ஏன் வரப்பு கட்டப் பார்க்கிறீர்கள்?
வைர வைடூரியங்கள் வைத்திருக்கும் தமிழின் கருவூலத்தில் ஒரு கம்யூட்டர் வைக்க இடமில்லையா?
‘எல்லாப் பொருளும் இதன் பாலுள“ என்று நாம் திருக்குறளைச் சொல்லியதையே திருத்தியாகவேண்டும்.
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி“ என்ற மேற்கோளை வைத்து அணுவை அப்போதே துளைத்தாகிவிட்டது என்று ஆனந்தங்காணுகிறவர்களே!
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி… என்ற குறளை வைத்து, ஏகே 47 அப்போதே இருந்தது என்று இருமாந்து போகிறவர்களே!
“வலவன் ஏவா வான ஊர்தி“ என்பதை வைத்து ஏவுகணையுகத்தைத் தமிழன் எப்போதோ துவங்கிவிட்டான் என்று இன்பக்களி கொள்கிறவர்களே!
உங்களைக் கேட்கிறேன் -

தொப்பையே கர்ப்பமென்று எண்ணி மகிழ்ந்திருந்தால் நம் வீ்ட்டில் தூளியாட முடியுமா?
தமிழ் பக்தியாளர்களே!
நீங்கள் கோபுரங்களிலேயே குடியிருக்க முடியாது ; இறங்கி வாருங்கள்!
நம்மை விட்டுவிட்டு பூமி விரைவாய் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கவேயில்லை.
உலகத்தின் எல்லாக் கரைகளிலும் அறிவியல் சமுத்திரத்தின் அலைகள் அடிக்க ஆரம்பித்துவிட்டன.
நமது இனமும் அலையில் காலை நனைத்திருக்கிறது என்று கூட சொல்லமாட்டேன்.
அடித்த அலையின் வேகத்தில் நமது இனமும் கொஞ்சம் நனைந்திருக்கிறது. என்று சொல்லுவேன்.
உலக விஞ்ஞானம் மண்ணைத் துழாவியும் வி்ண்ணை அளாவியும் காலத்தின் தேவைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது.
நாம் குறைந்தபட்சம் அந்தப் பொருள்களின் பெயர்களையாவது தமிழில் கண்டுபிடித்தோமைா?
தமிழைக் காவியமொழி என்று சொல்லியே கழித்துவிடாதீர்கள்
தமிழை நீதி மொழி என்று சொல்லியே நிறுத்திவிடாதீர்கள்.
தமிழ் நீட்சி கொண்டது நீங்கள் தான் நீட்டிக்கத் தயாராக இல்லை.
சற்றே தமிழுக்குச் சுதந்திரம் கொடுங்கள்.

தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.

அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
துருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.

தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே!


நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.
முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.

நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.


ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்காள மொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக் குளிக்கவே இல்லை.
பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாய் லிபிகள் இல்லை.
ஆனால் உலகத்தில் விரல்விட்டுச் சொல்லக்கூடிய மொழிகளில் குரல்விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
ஊர்ச்சொற்கள் அனைத்திற்கும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்.

பக்தி இலக்கியத்திலும் கூட விஞ்ஞானத்திற்குப் பங்களிப்பு செய்யக்கூடியது தமிழ்.
ஆரவாரமில்லாத பழமைதான் நிகழ்காலத்திற்கும் அஸ்திவாரம்.
வளர்வதற்குத் தமிழ் தயாராக இருக்கிறது வளர்ப்பதற்குத் தான் தமிழன் தயாராகயில்லை. இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த சுளுக்கு இன்னும் எடுக்கப்படவேயில்லை.
அய்யகோ மாறாத மரபாளர்களே!

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் திருக்குறளையும், தேவாரத்தையும் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டே இருப்பீர்கள்?
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் “கொல்“ “அரோ“ என்னும் செத்துப்போன அசைச்சொற்களை பெய்த தகவல் பலகைகலாய் அகவல் எழுதுவீர்கள்?
சோதனைக் குழாய்க் குழந்தைக்குமா நீங்கள் பிள்ளைத்தமிழ் பாடுவீர்கள?
நமக்குக் கனவுகாணக் கூடத் தெரியவில்லை.
நம்பிக்கையின் மீது கூட நம்பிக்கையில்லை.

கம்பன் மறைந்தபோது சரஸ்வதி இன்றோடு மங்கல நூல் இழந்து போனாள் என்று ஒரு புலவன் புலம்பியதை நயமாகக் கொள்ளமுடியுமே தவிர நியாயமாகக் கொள்ளமுடியாது.

தமிழ் யாரோடும் முடிந்துவிடுவதில்லை.
மேதைகளும்,ஞானிகளும், யோகிகளும், அறிஞர்களும், கவிஞர்களும், சேமித்துவைத்த தமிழை நாம் செலவு செய்யவேண்டும்.
அந்தச் செலவிலிருந்து புதிய வரவு காணவேண்டும்.
இந்தச் சூளுரையோடு திரும்பிப்பார்க்கிறேன்.
மனசு சுருங்கிப் போகிறது.
அறிவியலுக்கென்று தமிழில் எல்லோரும் அறியும் ஏடுகள் இல்லை.
சில ஏடுகள் தவிர, அறிவியலுக்குப் பக்கங்கள் ஒதுக்கப் பத்திரிக்கைகள் இல்லை.

அழுத்துப் போன கருத்துக்களுக்கும், புழுத்துப்போன விருத்தங்களுக்குமே பரிசு கிடைக்கிறது.

நம்மவர்கள் ஒரு கருத்தை மொழிபெயர்த்து முடிப்பதற்குள் அதன் முடிவே மாறிவிடுகிறது.
பழைய தமிழில் நாரெடுத்து புதிய விஞ்ஞானத்தில் பூத்தொடுத்து இந்த இனத்தின் தோளுக்கு அணிவிக்கிற நாளுக்கு ஏங்குகிறேன்.
நம் வரலாறு வணக்கத்திற்குரியது
உலகப் பண்பாட்டுக்கு அள்ளிக்கொடுத்தோம். உலகுக்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்தோம்.
அவர்களுக்கு இல்லாததை நாம் கொடுத்தோமே.. நமக்கு இல்லாத நவீன உலகத்தை நாம் இறக்குமதி செய்தோமா?
முத்துக்களையும் மிளகையும் ஏற்றுமதி செய்த இனம் இன்று போதை மாத்திரைகளை இறக்குமதி செய்வதா?

ஒன்று சொல்கிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிற உலகம் நம்மைத் திரும்பிப்பார்க்காது.
திரும்பிப்பார்த்தாலும் அதற்குத் தெரிகிற தூரத்தில் இப்போது நாம் இல்லை.
இனி ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் விஞ்ஞான விளக்கை ஏற்றிவையுங்கள்.
துருப்பிடித்துப்போன படைப்பிலக்கியங்கள் விஞ்ஞானத்தில் தம்மைத் துலக்கிக்கொள்ளட்டும்.
புலன்களை நீவிவிடுகிற பொழுதுபோக்கிலிருந்து விஞ்ஞான சாதனங்கள் சற்றே விடுபடட்டும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.

நம்வாழ்க்கை வாக்கியம் இனி இதுவாகத்தான் இருக்கவேண்டும்

“ஓ விஞ்ஞானமே!
அறிவு கொடு!
ஏ தமிழா!
உணர்வு கொடு!


(இதனால் சகலமானவர்களுக்கும்-வைரமுத்து பக்கம் 29-34)

செவ்வாய், 19 ஜனவரி, 2010

கொற்றவள்ளை





இன்றைய சமூகம் கல்விக்கு முதன்மையளிப்பது போல, சங்க காலத்தமிழர்கள் வீரத்துக்கு முதன்மையளித்தனர். “காதலும், வீரமும்” அவர்களின் இரு கண்களாகத் திகழ்ந்தன. காதல் “களவு, கற்பு“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. புறம் “போர், கொடை“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இன்று கல்வி கற்றவர் பெறும் மதிப்பும் புகழும் அன்று போரில் வெற்றி பெற்றவர் பெற்றார். போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வெட்டி வீழ்த்துபவனுக்குப் “பரணி“ பாடினர் “ஈதல் இசைபட வாழ்தலே“ சிறந்த வாழ்க்கை என்று வாழ்ந்தனர் நம் முன்னோர்.

வாழ்வியலுக்கான இலக்கணங்களாக அகமும், புறமும் திகழ்ந்தன. அகத்தை அகத்திணையென்றும், அகத்துறையென்றும் பாகுபாடு செய்தனர். திணையென்பது வாழ்வியல் ஒழுக்கமாகும். துறையென்பது திணையின் உட்கூறு ஆகும்.

புறவாழ்வை இயம்ப புறத்திணைகளும், புறத்துறைகளும் பயன்பட்டன.

“வஞ்சி“ என்னும் புறத்திணையையும் “கொற்றவள்ளை“ என்னும் துறையையும் விளக்குவதாக இன்றைய இடுகை அமைகிறது.

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.


திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.

சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும் கூறுதல்.


மன்னன் ஒருவன் மாற்றான் மேல் படையெடுத்துச் செல்லுதலைக் கூறுவது வஞ்சித்திணையாகும். இப்பாடல் இளஞ்சேட் சென்னியின் படையெழுச்சி கூறியதால் வஞ்சித்திணையாகும்.

துறை விளக்கம்.


மன்னனது புகழைக் கூறி பகைவர் நாட்டின் அழிவிற்கு இரங்குதல் கொற்றவள்ளை ஆகும்.
கொற்றம் என்பது வீரத்தையும், புகழையும் குறிக்கும். வள்ளை என்பது ஒருவகைப் பாடலாகும். மன்னனை வாழ்த்திப்பாடுவதால் கொற்றம்+வள்ளை கொற்றவள்ளை ஆனது..

பாடல் இதோ...

'
வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
'

இப்பாடலில் தாயில்லாத குழந்தை போல நின் பகைவர் நாடு ஓவாது கூவும் என்றதால் கொற்றவள்ளையானது.

பாடல் விளக்கம்.


வாள்கள் வெற்றியைத் தருமாறு குருதிக்கறை படிந்தன. ஆதலால் சிவந்த வானத்தின் வனப்பினைப் போன்றன.

வீரக்கழலை அணிந்த கால்கள் காவல் தொழிலை அறிவிப்பதால் கொல்லும் இயல்புடைய ஆனேற்றின் கொம்புகளைப் போன்றன.

கேடயங்கள் தைத்த அம்புகளால் துளைபெற்றன, அவை நிலையில் தப்பாத இலக்கினைப் போன்றன.

குதிரைகள் எதிரிகளை வீழ்த்தும் காலம் நேர்ந்த போது இடம் வலம் என்று காட்டுவதால் முகம் சேணத்துடன் உராய்ந்து சிவந்த வாயைப் பெற்றன. ஆதலால் அவை விலங்குகளின் கழுத்தைக் கவ்விய புலி போன்றன.

ஆண்யானைகள் மதிற்கதவுகளை முறித்துச் சினமுடன் திரிந்து கூர்முனை மழுங்கிய கொம்புகளை உடையனவாதலால் உயிரை உண்ணும் எமனைப் போன்றனவாயின.



நீ அசையும் தலையாட்டமுடைய விரைந்தியங்கும் குதிரைகளுடன் பொன்னாலான தேர்மீது பொலிவுடன் காட்சியளிக்கிறாய். அதனால் பெரிய கரிய கடலின் நடுவே உயர்ந்து சிவந்து காணப்படும் ஞாயிறு போலத் தோன்றுகிறாய்.

இவ்வாறு விளங்குவதால் உன்னைப் பகைத்தவர் நாடுகள் தாயில்லாததால் உணவுண்ணாமல் அழும் குழந்தை போல் ஓயாது அழுவனவாயின.
என்று சோழனைப் பாடுகிறார் பரணர்.

இப்பாடல் வழியாக…


² வஞ்சி என்னும் புறத்திணை விளக்கம் பெறுகிறது.
² கொற்றவள்ளை என்னம் புறத்துறை உணர்த்தப்படுகிறது.
² சோழனின் வீரமும் அதனால் பகைவர் நாடு படும் துயரும் உணர்த்தப்படுகிறது.
² சங்கத்தமிழர் வீரத்துக்கு எந்த அளவுக்கு வாழ்வில் பங்களித்தனர் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

தமிழ்மணம் விருது(09) நன்றி நவிலுதல்.





தமிழ்மணம் விருதுகள் 2009 தேர்வில், எனது “டமிலன் என்றொரு அடிமை“ என்ற இடுகை முதல்பரிசுக்குரிய இடுகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணங்களை உடனுக்குடன் உலகுக்கு எடுத்துச்சொல்லும் ஊடகங்களில் தனித்துவத்துடன் திகழும் இணையம் தமிழ்மணம். தமிழ்மணத்தில் இந்தவார நட்சத்திரம், ஓட்டளித்தல், கருவிப்பட்டை எனப் பல வசதிகள் இருந்தாலும், தமிழ்மணம் என்றவுடன் என் நினைவுக்கு வருவது மறுமொழிதிரட்டிதான்.


இந்தவார நட்சத்திரமாக உலகிற்கு என்னை அடையாளப்படுத்திய தமிழ்மணம் தற்போது 2009 ஆம் ஆண்டு பதிவுகளில் “தமிழ்மொழி, கலாச்சாரம்,வரலாறு, தொல்லியல்“ என்னும் பிரிவில் எனது பதிவை முதல் பரிசுக்குரிய இடுகையாக அடையாளப்படுத்தியுள்ளது. அதற்காக தமிழ்மணம் இணையதளத்தாருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் போல விருது பெற்ற வலைப்பதிவு நண்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பழந்தமிழ் இலக்கியத்துக்கு முதன்மைதந்து எழுதிவரும் எனது பதிவு முதல் பரிசு பெற அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் வலைப்பதிவு நண்பர்களாவர்.

இணையம் இந்த உலகத்தையே சிறு கிராமமாக்கியது என்றால் இந்த வலைப்பதிவுலகம் ஒரே வீடு போல ஆக்கிவிட்டது.

கூட்டுக்குடும்பத்தில் வாழ்வது போன்ற உணர்வு இந்த வலைப்பதிவுலகத்தால் எனக்குக் கிடைத்தது. வலைப்பதிவர் சந்திப்புகளில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் போது இந்த உறவும், உணர்வும் மேலும் வளர்கிறது.

எனது எழுத்துக்களுக்கு ஒவ்வொருமுறை அடையாளம் கிடைக்கும் போதும் நான் நன்றியோடு எண்ணிப்பார்ப்பது வலைப்பதிவு நண்பர்களைத் தான்.

என்னை எழுதத் தூண்டி, கருத்துரையளித்து, ஓட்டளித்து பின்தொடர்ந்து வரும் வலைப்பதிவு நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


_/\_ நன்றி நன்றி நன்றி _/\_

புதன், 13 ஜனவரி, 2010

மண்திணிந்த நிலனும் (போரும் சோறும்!)



இயற்கை ஐந்து கூறுகளால் ஆனது.
அணுக்களால் செறிந்த நிலமும்,
நிலத்தின் கண் ஓங்கியிருக்கும் வானமும்,
வானளவு பொருந்தித் தடவி நிற்கும் காற்று,
காற்றினால் பெருகும் தீ,
தீயுடன் மாறுபட்ட நீர்,
என ஐந்து வகையான பெரிய ஆற்றல்களைக் கொண்டது இயற்கை!

அவ்வியற்கைக்கு ஒப்பான ஆற்றல்களைக் கொண்டவன் சேரன்.

அவன்.
தன்னைப் போற்றாத பகைவர் தம்பிழையை, நிலம் போலப் பொறுத்திருக்கிறான்!

அப்பகைவரை அழிக்க அவன் வானளவு சிந்திக்கிறான்!

பகைவரை அழிக்க அவன் கொண்ட நால்வகைப்படைகளும் காற்றுக்கு ஒப்பான வலிமையுடையன!

பகைவரை அழிக்கும் அவன் திறன் தீயிற்கு ஒப்பானது!

இவ்வாறு இயற்கையின் ஐம்பெரும் கூறுகளின் தன்மைகளையும் தம்மகத்தே கொண்டவனாக விளங்குகிறான் சேரன் என்று புகழ்கிறார் முரஞ்சியூர் முடிநாகராயர்.

மேலும்,

உன் கடலில் பிறந்த ஞாயிறு மீண்டும் நின் மேற்கு கடலில் மூழ்கும்!
புதுவருவாய் நிறைந்த பல நல்ல ஊர்களைக் கொண்ட நாட்டுக்கு அரசனே!
வானத்தை எல்லையாகக் கொண்டவனே!

அசையும் தலையாட்டத்தைக் கொண்ட பாண்டவர் ஐவர்,
அவருடன் பகைத்த கௌரவர் ஆகிய இரு பெரும் படையினரும் போரிட்ட போது அவ்விருபடையினருக்கும் உணவளித்து “பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்“ என்று பெயர்கொண்டவனே!!

பக்க மலையில் சிறிய தலையமைந்த குட்டிகளுடன் பெரிய கண்ணமைந்த மான்கள் தங்கும் மாலை வேளையில் அந்தணர் செய்வதற்கரிய வேள்வியில் ஆவுதியிடுவர். அந்த ஒளியில் மான்கூட்டங்கள் இனிது உறங்கும். இத்தீக்கு அஞ்சிப் புலிகள் வராது ஆகையால் மான்கள் இனிது உறங்கின. சேரனுக்கு அஞ்சிப் பகைவர் வாரார் ஆகையார் மக்கள் இனிது உறங்கினர் என்பது குறிப்பாகும்.

அவ்வாறு துயிலுதல் அமைந்த பொற்சிகரங்களையுடையன இமயமலையும், பொதியமலையும் ஆகும்.

பால் கெட்டுத் தன் இனிய சுவைகுன்றிப் புளிப்பினும்,
கதிரவன் ஒளிகுன்றி இருண்டாலும்,
நால்வேதங்கள் சொல்லிய ஒழுக்கங்கள் மாறுபடினம்,
நல்ல அமைச்சர்களின் சுற்றத்துடன்,
நடுக்கின்றி அமைந்த இமையமும், பொதியமும் போன்றே நீயும் வாழ்வாயாக என்று சேரனை வாழ்த்துகிறார் புலவர்.பாடல் இதோ,


பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.

மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

சேரனின் வீரமும் கொடையும் ஆகிய பண்புகள் கூறப்பட்டதால் இது பாடாண் திணையாகியது..
மன்னன் மனம் கொள்ளும் விதமாக புலவர் அருகமைந்து சொல்லியதால் இப்புறத்துறை செவியறிவுறூஉ“ ஆனது.


இப்பாடல் வழி அறிவன…
.

○ ஐம்பெரும் இயற்கையின் ஆற்றல்களும் ஒன்றை ஒன்று சார்ந்தன! ஒன்றை நீங்கி ஒன்று இயங்கும் தன்மையற்றன.

○ ஐம்பெரும் இயற்கையின் ஆற்றல்களைக் கொண்டவனே மனிதன்! ஐம்பெரும் கூறுகளால் ஆனதே மனித உடல்! ஆகையால் ஐம்பெரும் ஆற்றல்களும் அவனுக்குள் உள்ளன. என்னும் பழந்தமிழரின் அறிவியல் அறிவை அறிந்து கொள்ள முடிகிறது.

○ பாண்டவருக்கும், கௌரவருக்கும் அளவற்ற உணவளித்ததால் சேரன் “பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்“ என்ற பெயர் பெற்றான் என்ற தொன்மச் செய்தியையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கணினியில் ஏற்பட்ட பிழைகள்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு..



ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்
சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்
கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.



1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
முயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்
கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்
செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்
சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு
கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து
சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன்
இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்
அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி
அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று
தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்
என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத்
தாருங்கள்.



6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog
தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?



8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய
குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer"
ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு போல்டர் உள்ளது.
அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்
போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி
"Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

வெள்ளி, 8 ஜனவரி, 2010

கொட்டம்பலவனார்.



கண்ணுக்குத் தெரியாத மனம் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.
மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனான் ஆனால் சுயநலம் கொண்ட சில மனிதர்களைப் பார்க்கும் போது இவர்களுக்கெல்லாம் மனம் என்றவொன்று இருக்கிறதா?
என்ற எண்ணம் தோன்றுகிறது.
மனம் இல்லாத இவர்கள் எப்படி மனிதராவர்கள்?
என்றும் தோன்றுகிறது.

மனதைப் பறிகொடுத்துவிட்டேன்!!

என பல சூழல்களில் நாம் சொல்வதுண்டு.

மனது எப்போது பறிபோகக் கூடும் என்பது யாருக்குத் தெரியும்?

பறிபோன மனதைத் திரும்பப் பெறுவது எப்படி?


மழலையின் சிரிப்பிலோ!
மழையின் சாரலிலோ!
காற்றின் உரசலிலே!
மலரின் வாசத்திலோ!
மேகத்தின் வடிவத்திலோ!
காகத்தின் கரைதலிலோ!
மயிலின் ஆடலிலோ!
குயிலின் கூவலிலோ!

இன்னும் இயற்கையின் பற்பல விந்தைகளில் ஏதோ ஒன்றிலோ மனதைப் பறிகொடுத்தால் சில நிமிடங்களில் பறிகொடுத்த மனதைப் பறிமுதல் செய்து கொள்ளலாம். ஆனால் இங்கு ஒரு தலைவன் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பப் பெற இயலாது தவிக்கிறான்.பாடல் இதோ,


“கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
5 1கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக்
குன்றகத் ததுவே 2 கொழுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்¢க் கொடிச்சி
கொடிச்சி கையத் ததுவேபிறர்
10 விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே.

நற்றிணை - 95.

கொட்டம்பலவனார்
திணை : குறிஞ்சி.
துறை : இது, தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்தென உரைத்தது.



நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட எம் தலைவியிடம் சிக்குண்டது என் மனது. அவளன்றி யாராலும் என் மனதை விடுவிக்க இயலாது என்று தலைவன் தன் நண்பனிடம் கூறுகிறான்.


பக்கத்திலே குழல் ஒலிக்க, பல இசைக்கருவிகள் முழங்க கயிற்றின் மீது கழைக்கூத்தி நடந்தாள். அந்தக் கயிற்றின் மேல் அத்திப்பழம் போல் சிவந்த முகத்தையும், பஞ்சு போன்ற தலையையும் கொண்ட குரங்கு ஆடியது. அதனைக் கண்டு குறவர்குல சிறுவர்கள் பெரிய பாறையின் மீது மூங்கிலின் மீது ஏறி நின்று தாளம் கொட்டுவர்.

அந்தக்குன்றகத்தில் வளம் நிறைந்த காவற்காடு ஒன்று உள்ளது. அங்கு நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட கொடிச்சி (குறிஞ்சி நிலப்பெண்) ஒருத்தி உள்ளாள். அவளிடம் சிக்குண்டது எனது நெஞ்சம். அவளிடம் சிக்கிய எனது நெஞ்சை அவளே மனம் வந்து விடுவித்தால் தான் உண்டு. அன்றி வேறு யாரும் விடுவிக்க இயலாதவாறு சிக்கிக்கொண்டது.

இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில்,

இப்பாடலில்
“தாளங்கொட்டுமென்ற சொல் சிறப்பினாலேயே இவ்வாசிரியர் கொட்டம்பலவனாரெனப் பெயர் பெற்றார்.

உட்பொருள்


ஆடுகள மகளான கூத்தி நடந்த கயிற்றின் மேல் மந்தியின் குட்டி ஏறி ஆடியது என்பது நேர்வழியில் வாழ்ந்துவரும் எனது நெஞ்சத்தில் கொடிச்சி (தலைவி) சென்று தங்குவதனை அறிந்த நீ கைகொட்டிச் சிரிக்கிறாய் (நகை) என்று பாங்கனை (நண்பனை) பார்த்து தலைவன் உரைப்பது உட்பொருளாகவுள்ளது.

மெய்ப்பாடு
- வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனிடத்துரைத்தல்.

இப்பாடலின் வழியாக,

கொட்டம்பலவனார்
என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், வருத்தம் பற்றி வந்த இளிவரல் என்னும் மெய்பாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் கயிற்றின் மேல் நின்றாடும் கழைக்கூத்தர்கள் இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் இருக்கிறார்கள் என்பதை ஒப்பு நோக்கமுடிகிறது..

அவர்கள் பொழுதுபோக்காக கயிற்றில் ஆடவில்லை!
தம் வயிற்றுப்பாட்டுக்காகத் தான் கயிற்றில் ஆடுகிறார்கள்!

என்ற உண்மையையும் மறுக்கமுடியாது.