வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை பிறந்தநாள்

பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடகநூலைப் படைத்தவராவார்  (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) இவரது பெயரால் இன்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. 
இவர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.



பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.
வெளியிட்ட நூற்கள்
·         நூற்றொகை விளக்கம் (1888)
·         மனோன்மணீயம் (நாடக நூல், 1891)
·         திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore, 1894)


அன்று இதே நாளில் பிறந்த பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணியை எண்ணிப் பார்ப்பதில் பெருமிதம் கொள்வோம்

(தரவுகளுக்கு நன்றி - தமிழ்விக்கிப்பீடியா)

மாநாகன் இன மணி -33



வியாழன், 3 ஏப்ரல், 2014

மட்டின்றி மகிழ்ச்சியில்லை!



அளவற்ற மகிழ்ச்சியைக் குறிப்பிட “மட்டற்ற மகிழ்ச்சி“ என்றே இன்றும் நாம் வழங்கிவருகிறோம். மட்டு என்றால் எல்லை என்றும் கள் என்றும் பொருள் உண்டு.
சங்ககாலத்தில் உணவின் ஒரு கூறாக கள் இருந்தது. கள் இன்றி மகிழ்ச்சி இல்லை என்று சங்ககால மக்கள் வாழ்ந்தனர்.

புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காண்போம்..


போர்க்களத்துக்குப் புறப்படும் வீரனைப் பார்த்துநேற்று நீ கொன்றவனுடைய தம்பி இன்று உன்னைக் கொல்வதற்காகப் பெரும் சினம் (கோபம்) கொண்டு உன்னைத் தேடித் திரிகிறான் என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

தோல்தா தோல்தா என்றி தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இற்கு ஒரில் தேருமால் நின்னே
புறநானூறு -300
பாடியவர் -அரிசில் கிழார்

கேடயத்தைக் கொண்டு வா! கேடயத்தைக் கொண்டு வா! என்று ஆரவாரம் செய்துகொண்டிருக்கிறாயேகேடயம் இருந்தால் மட்டும் நீ பிழைத்துவிடுவாயோ…?

நேற்றைய போரிலே நீ கொன்றாயே அவனுடைய தம்பி சிவந்த கண்களுடன் பெரிய ஊரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதை அறிந்த விருப்பமுடையவன் அங்கு சென்று கள் இருக்கும் கலயங்களைத் தேடுவது போன்ற வெறியோடு உன்னை வீடுவீடாகத் தேடியலைகிறான்

அதனால் போர்க்களம் செல்ல எண்ணாமல் தப்பிப் பிழைத்துக்கொள்வாயாக என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.


பாடலின் வழியே..

சங்ககால மக்களின் போர் சார்ந்த வாழ்வியலை அறியமுடிகிறது.
கள் மீது விருப்பம் கொண்டவன் கள் உள்ள கலயங்களை வெறியோடு தேடுவது போல தன் எதிரியுடன் போரிட விரும்பினான் என்ற உவமை நயமிக்கதாக உள்ளது.

அன்றும் இன்றும்

அன்றுபெரிய ஊரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதை அறிந்த வீரனொருவன் அதன் மீதுகொண்ட விருப்பத்தால் அங்கு சென்று கள் இருக்கும் கலயங்களைத் வெறியோடு தேடினான்.
இன்று –

குடிமக்கள் இவ்வாறு கள் இருக்கும் இடத்தைத் தேடி அழையக்கூடாது என்று அவர்களுக்கு அந்தத் துன்பத்தைத் தரக்கூடாது என்று தமிழக அரசு சிந்தித்து தெருவெங்கும் அரசு மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டது. 

குடிமக்களும் மட்டோடு மகிழ்ச்சியோடு உள்ளனர் அரசும் மட்டின்றி மகிழ்ச்சி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.


புதன், 2 ஏப்ரல், 2014

நிழலில் நீளிடைத் தனிமரம்

நாம் ஏன் பிறந்தோம்..?
மீண்டும் பிறக்காமலிருப்பதற்காகவே பிறந்தோம் என சமயங்கள் உரைக்கின்றன. நாம் செய்யும் நல்வினை, தீவினை அடிப்படையில் நமக்குப் பல்வேறு பிறப்புகள் உண்டு என்று சமயங்கள் அறிவுறுத்திச் செல்கின்றன. காவல்நிலையங்களும், நீதிமன்றங்களும் பல்வேறு சட்டங்களை வகுத்து மக்களை நல்வழிப்படுத்த முயற்சிசெய்கின்றன. இருந்தாலும் இந்த உலகம் சுயநலமிக்கதாகவே உள்ளது. உலகம் செல்லும் பாதையில் நாமும் செல்வோம் என்றே பலரும் செல்கிறோம். இந்த நிலையிலும் மனிதாபிமானத்தோடு, சீவகாருண்யத்துடன், பொதுநல உணர்வோடு வாழ்பவர்களைக் காணும்போது பெரு வியப்பு தோன்றுகிறது.
ஒரு நாளிதழில் ஒருவருடைய அனுபவம் படித்தேன்..

ன் தந்தையின் நினைவுநாளுக்காக ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருக்கின்றனர் அண்ணன், தம்பி இருவரும் அங்கு உள்ள முதியோருக்கு ஏதாவது தந்தையின் நினைவாகச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு..
அப்போது அங்கு முதியோரெல்லாம் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தார்களாம். இவர்களுக்கு மனதில் ஒரு எண்ணம். இந்த முதியோரின் முடிதிருத்தத்துக்கு ஆகும் செலவை நாம் ஏற்றுக்கொண்டால் என்ன? என்று தோன்றியதாம். தம் எண்ணத்தை அந்த விடுதிக் காப்பாளரிடம் கேட்டபோது அவர் சொன்னாராம்….
ஐயா இந்த முதியோர் இல்லத்துக்கு நீண்ட நாட்களாகவே முடிதிருத்தம் செய்ய வருபவர் அதற்காக பணம் எதுவும் வாங்குவதில்லை. தம் மனநிறைவுக்காக அவர் மாதம் ஒரு முறை இங்கு வந்து இலவசமாகவே முடிதிருத்தம் செய்துவிட்டுச்செல்கிறார் என்றவுடன் எங்களுக்கு வியப்பாக இருந்தது என்றுதம் அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

இப்படியும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்த மனிதாபிமானமிக்கவரின் பண்பை எண்ணி நான் மனதில் ஒப்பீடுசெய்துகொண்ட பாடல் இதுதான்,

கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!


                                        புறநானூறு, 119, பாடியவர்: கபிலர்.



பாரி இருந்த பொழுது, கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த பொழுது , யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயும் உடையதாக இருந்தது பறம்பு நாடு. நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல், முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?

பாடலின் வழியே..

தெறுழ்ப் பூக்கள் யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் பூத்தன என்ற உவமை மிகவும் நுட்பமானதாகவுள்ளது.

ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்ணும் சங்ககால உணவு மரபு சுட்டப்பட்டது.

இரவலர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய பாரியின் வள்ளல் தன்மைக்கு நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல என்ற உவமை மிகவும் ஏற்புடையதாகவுள்ளது.


தமிழ்ச்சொல் அறிவோம் :-

பெயல் = மழை
தலைஇய = பெய்த
காண்பு = காட்சி
காலை = காலம், பொழுது
வரி = புள்ளி
தெறுழ் = ஒரு கொடி
வீ = பூ
ஈயல் = ஈசல்
அளை = மோர்
யாணர் = புதுவருவாய்
நந்துதல் = கெடுதல்
பணை = முரசு


சனி, 29 மார்ச், 2014

தமிழில் குறுஞ்செயலிகள்

தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உள்ளது என்ற கருத்துக்குத் தக்க சான்று இன்றைய இணையத்தமிழ் வளர்ச்சியாகும். இன்றைய இணையதளப் பயன்பாடுகளில், கையடக்கக் கணினிகளுக்கும், திறன்பேசிகளுக்கும் சிறப்பான இடம் உண்டு. இவற்றில் பயன்படுத்தப்படும் ஆப்சு எனப்படும் குறுஞ்செயலிகள் இணையத்தில் நாம் செய்யவிரும்பும் செயல்பாடுகளை எளிமைப்படுத்தித் தருகின்றன. ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோசு வகை இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் தமிழ்க்குறுஞ்செயலிகளின் வகைப்பாடுகளையும், அவற்றின் நிறைகுறைகளையும் எடுத்துரைத்து ஆக்கபூர்வமான தமிழ்க்குறுஞ்செயலிகளை உருவாக்கும் வழிமுறைகளை இக்கட்டுரை வழியே காண்போம்.
குறுஞ்செயலிகள் அறிமுகம்
கையடக்கக் கணினிகளிலும், திறன்பேசிகளிலும் பயன்படுத்தப்படும் சிறு மென்பொருளே குறுஞ்செயலியாகும். நாம் செய்யவிரும்பும் செயலை கட்டளைகளைப் பிறப்பித்து உருவாக்கப்படும் நிரல்தொகுப்பே குறுஞ்செயலியாகும்.
குறுஞ்செயலிகள் கிடைக்குமிடம்.
https://play.google.com/store/ , http://mobogenie.com/, http://www.androidpit.com/ ஆகிய தளங்களில் இக்குறுஞ்செயலிகளைக் கட்டணத்துடனோ, இலவசமாகேவோ பெறமுடியும்.
குறுஞ்செயலிகளை உருவாக்க உதவும் தளங்கள்
         யுடியுப் தளத்தில் காணொளி வழியாக குறுஞ்செயலிகளை உருவாக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
http://www.apps-builder.com/, http://www.appsgeyser.com/ ,http://www.appyet.com/, http://ibuildapp.com/login.php  போன்ற பல தளங்களும் இலவசமாகக் குறுஞ்செயலிகளை உருவாக்குவதற்குத் துணைநிற்கின்றன.

குறுஞ்செயலிகளின் வகைப்பாடு.
தமிழ்த் தட்டச்சு, தமிழ் கற்றல் பயிற்சி, விடுகதைகள்,சித்த மருத்துவ நூல்கள், கவிதைகள், தமிழ் அகராதிகள், தமிழ்ப் பொது அறிவுக் கையேடுகள், ஆன்மீக நூல்கள், சோதிடம், சமையல்குறிப்புகள், தமிழ்ச் செய்தித்தாள்கள், தமிழ் மாதங்கள்தமிழ்ப் பொன்மொழிகள், திரைப்படங்கள், பழமொழிகள் (ஆங்கில விளக்கத்துடன்), சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், விடுகதைகள், ஊரின் சிறப்புகள், நீதி நூல்கள், காப்பியங்கள், தண்டியலங்காரம், சிலம்பு, மணிமேகலை, கம்பராமாயணம், வளையாபதி, குண்டலகேசி, தமிழ்விடு தூது, நாக குமார காவியம், உதயணகுமார காவியம், யசோதரகுமார காவியம், நீலகேசி என தமிழில் பல்வேறு துறைசார்ந்த குறுஞ்செயலிகளைக் காணமுடிகிறது.

குறுஞ்செயலிகளின் இயல்பு.
ஒவ்வொரு குறுஞ்செயலிகளும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் தனித்துவமுடையனவாகத் திகழ்கின்றன. எழுத்து, ஒலி, ஒளி, அசைவூட்டம் என பல்வேறு வசதிகளுடன் உள்ளன. குறுஞ்செயலிகளில் திருக்குறள் தொடர்பாக நிறைய குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக திருக்குறளின்1330 குறள்களையும் அதற்கான சிறப்பான மூன்று உரைகளுடன் ஆங்கில மொழிபெயர்ப்பு வசதியுடன் திருக்குறள்என்ற செயலி வழங்குகிறது.
குறுஞ்செயலிகளின் தாக்கம்
ஆங்கில மொழி மோகத்தாலும், தமிழ் மொழிக் கல்வியில் ஏற்பட்ட பின்னடைவாலும் இன்று தமிழ் வாசித்தல், பேசுதல் ஆகிய மரபுகள் குறைந்து வருகின்றன. இளம் தலைமுறையினரிடம் இந்தக் குறுஞ்செயலிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழர் மரபையும், பண்பாட்டையும் இக்குறுஞ்செயலிகளின் வழியாக எளிதாக எடுத்தியம்ப முடியும்.
தேவையான தமிழ்க்குறுஞ்செயலிகள்
கலைச்சொல்லாக்கம், மெய்பாடு, முதல்-கரு-உரி, குறிஞ்சிப்பாட்டில் வரும் 99 மலர்கள், கடையேழு வள்ளல்கள், பழந்தமிழர் இசைக்கருவிகள், சங்கஇலக்கியம் சுட்டும் விலங்குகள், பறவைகள், செடிகொடிகள், பழந்தமிழர் அறிவியல், விளையாட்டுகள், சங்கஇலக்கியப் பொன்மொழிகள், இலக்கியங்கள் சுட்டும் உவமைகள், கட்டிடக்கலைச்சிறப்பு, நாயன்மார்கள், ஆழ்வார்கள், சிற்றிலக்கியங்கள், தமிழாய்வுத் தலைப்புகள், தமிழ்ச்சான்றோர் நிழற்படங்கள், தமிழறிஞர்கள் பிறந்த தினங்கள் என தமிழின் பல்வேறு சிறப்புகளையும் குறுஞ்செயலிகள் வழியாக எடுத்தியம்பத் தேவையான விரிவான களங்கள் தமிழில் உள்ளன.
தமிழ்க்குறுஞ்செயலிகளும் சிக்கல்களும்
திறன்பேசிகளில் தமிழ் எழுத்துருச்சிக்கல் இன்னும் முழுமையாக தீரவில்லை.
தட்டச்சுக்குப் பயன்படும் குறுஞ்செயலிகள் பல விசைமரபுகளைக் கொண்டிருப்பதால், எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என சராசரி மனிதர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
குறுஞ்செயலிகளை உருவாக்கும் வழிமுறைகள் ஆங்கிலத்திலும் கடினமான கணினி மரபுகளிலும் இருப்பதால் தமிழ்த்துறை சார்ந்தவர்கள் அதை உருவாக்கமுடியாத நிலை உள்ளது.
இன்றைய சூழலில் நிறையவே தமிழ்க் குறுஞ்செயலிகள் பயன்பாட்டிலிருந்தாலும். கணினி அறிவும், தமிழறிவும் ஒன்றாகப் பெற்றவர்களால் இவை உருவாக்கப்படவில்லை என்பது அதன் குறைபாட்டுக்குக் காரணமாக அமைகிறது.
உருவாக்கிய குறுஞ்செயலிகளைப் பயன்பாட்டுக்குக்  கொண்டுவருவதற்கு 25டாலர் பணம் பதிவுக்கட்டணமாகச் செலுத்தவேண்டும் என்பது சோதனை முறையில் உருவாக்குவோருக்குத் தடையாகவுள்ளது. இலவசமாக வழங்கும் குறுஞ்செயலிகளையாவது இலவசமாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என்ற நிலை வந்தால் இதன் பயன்பாடு இன்னும் அதிகமாகும்.
சிறந்த குறுஞ்செயலிகளுக்கான தகுதிகள்
குறைவான கொள்ளளவு கொண்டதாகவும், விரைவான செயல்திறனுடையதாகவும், பயன்படுத்த எளிமையானதாகவும், இணைய இணைப்பின்றியும் பயன்படுத்தவல்லதாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்தவர் மட்டுமின்றி படிப்பறிவில்லாதவர்களும் பயன்படுத்த எளிமையானதாக இருப்பதே சிறந்த குறுஞ்செயலியாகும். இந்த அளவீடுகளைத் தமிழ்க்குறுஞ்செயலிகளை உருவாக்குவோர் நினைவில் கொள்ளவேண்டும்.
                                விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
                                சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648) என்ற வள்ளுவரின் வாக்குப்படி
நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை ஒழுங்காக சேர்த்து கணினி நிரல்களாக இனிதாகச் சொன்னால் அதை ஏற்று குறுஞ்செயலிகள் நம் ஏவலைக் கேட்டு நடக்கும் அதை இந்த உலகமும் ஏற்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
நிறைவாக,
கணினிகளிலும், கையடக்கக் கணினிகளிலும்,திறன்பேசிகளிலும் நாம் செய்யவிரும்பும் செயல்பாடுகளை முழுக்க முழுக்க தமிழிலேயே செய்யத்தேவையான வசதிகள் இன்று இலவசமாகவே கிடைக்கின்றன.
இதுவரை வந்த எல்லாத் தொழில்நுட்பங்களையும் தம்முள் அடக்கியவையாகத் திகழும் திறன்பேசிகளில் தமிழ் இன்று காலடியெடுத்து வைத்திருப்பது நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.
திறன்பேசிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் தமிழில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு குறுஞ்செயலிகள் தமிழின் பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
தமிழ்மொழியின், தமிழரின் பல்வேறு மரபுகளை தமிழ்க்குறுஞ்செயலிகளின் வழியாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல சிறந்த வாய்ப்பாக இந்த வசதி விளங்குகிறது.
கணினி பற்றிய அடிப்படை அறிவுடையவர் கூட தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்கமுடியும் என்ற தன்னிறைவான நிலையை இன்று நாம் அடைந்திருக்கிறோம்.
இணையதளம், மின்னூல், விளையாட்டு, படம், ஒலி, காணொளி, அசைபடம் என பல்வேறு வடிவங்களையும் குறுஞ்செயலிகளாக மாற்றமுடியும் என்ற கட்டற்ற சுதந்திரம் இதன் உருவாக்கப் பின்னணியில் இருப்பதால் நாள்தோறும் புதிய புதிய தமிழ்க்குறுஞ்செயலிகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
ஆங்கில மோகத்தால் கல்விச்சாலைகளில் பின்தங்கியுள்ள தமிழ்மொழியை இவ்வாறு இன்றைய தொழில்நுட்பத்துடன் குறுஞ்செயலிகளாக வழங்குவது  நமது கடமையாகவுள்ளது.

புதன், 26 மார்ச், 2014

தமிழில் திருமண அழைப்பிதழ் மாதிரி

தமிழில் வடிவமைக்கப்பட்ட அழகான திருமண அழைப்பதழை  இணையத்தில் உலவும் போது பார்த்தேன். அதனை இங்கு வெளியிட்டிருக்கிறேன். மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு இணையத்தில் வெளியிட்டமைக்கு நன்றியையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.