Friday, November 27, 2009

நிலம்புடை பெயரினும் (150வது இடுகை)
உலகத்தின் அழிவை முன்மொழியும் படமாக இப்போது ருத்ரம் 2012 என்னும் படம் உலகெங்கும் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப்படத்தில் உலகத்தின் அழிவு என்பது எப்படியிருக்கும் என்ற சிந்தனை மையக் கருத்தாகவுள்ளது. பைபிள், திருக்குரான் போன்ற மறை நூல்களில் இந்த உலக அழிவு முன்பே கூறப்பட்டுள்ளது என்று கூறும் இப்படத்தில் “ நில அதிர்வு, கடல்கோள் (சுனாமி), எரிமலை, வெண்ணீர் ஊற்று என பலவிதங்களில் இயற்கையின் சீற்றம் அமையும் என்ற கருத்தும் எடுத்துச் சொல்லப்படுகிறது.


“இயற்கைச் சீற்றங்களால் உலகம் அழிவதில்லை,
மனிதர்களிடம் அன்பு குறையும் போது தான் உலகம் அழிந்து போகும்”

என்ற காட்சிக்கு திரையரங்கில் பலத்த கைதட்டல் ஒலிக்கிறது.

இந்தப் படத்தில் வரும் காட்சிகள் எதிர்கால சிந்தனை கொண்டவை. இப்படியும் நடக்கலாம் என்பதை அறிவுறுத்துபவை.

உலகம் அழியப் போகிறது என்ற செய்தியை மறைநூல்கள் (பைபிள், திருக்குரான்) முன்பே சொல்லியிருக்கின்றன என்று வாதம் செய்பவை.

மறைநூல்களில் மட்டுமல்ல சங்க இலக்கியங்களிலும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன என்பதை எடுத்தியம்புவதாக இவ்விடுகை அமைகிறது. சான்றாக ஒரு பாடலைக் காண்போம்.

“ நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ- தோழி- நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிறல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூர்ப் பூநாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே?'

குறுந்தொகை-373
மதுரைக் கொல்லன் புல்லன்

அலர்மிக்க வழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.

(அலர் என்பது தலைமக்களின் காதலை ஊர்ப்பெண்டிர் புறம்பேசுதல்)


தலைவன் மீது தலைவி கொண்ட காதல் உறுதி வாய்ந்தது. அதனை வெவ்வாய்ப் பெண்டிரின் அலர் மொழியால் அழித்துவிடமுடியாது என்று கலங்கிய தலைவியிடம் கூறினாள் தோழி.


“நிலம் கீழ்மேலாகப் பெயர்ந்தாலும்
நீரின் தட்பம் நெருப்பிற்கும்
நெருப்பின் வெப்பம் நீருக்குமாக மாறினும்
பெரிய கடல் வற்றி எல்லை தோன்றினாலும், அலர் பேசும் பெண்டிரின் அலர்மொழியால் உன் காதல் அழிந்துபோகாது.

கடிய பற்களையும் நீண்ட மயிர்களையும் கொண்ட ஊகம் என்னும் குரங்கு பலாப்பழத்தைத் தோண்டுதலால் காந்தள் மணம் வீசும் ஊரெங்கும் பலாப்பழத்தின் மணம் வீசும். அத்தகைய நாடனானான தலைவனோடு நீ கொண்ட நட்பு வெவ்வாய்ப் பெண்டிர் பேசும் அலர் மொழியால் அழியாது கவலைப்படாதே!
என்று தேற்றுகிறாள் தோழி.

அகச்செய்திகள்.

1.தலைவன் மீது தலைவி கொண்ட காதலை ஊரார் அறிந்து தூற்றுவதால் கலங்கிய தலைவியிடம் தோழி இயற்கை, தன்னிலை மாறினாலும் நீ தலைவன் மீது கொண்ட காதல் அழியாது என்று காதலின் ஆழத்தை உணர்த்துகிறாள்

2.குரங்கு பலாப்பழத்தைத் தோண்டியதால் மணம் ஊரெங்கும் வீசியது என்ற குறிப்பால் தலைமக்களின் காதலை ஊரார் அறிந்தமையும் அதனால் தலைவியின் பெற்றோர் அறிந்தமையும் உணரமுடிகிறது.

3.கருங்குரங்கு பலாவினைத் தொடுதல் கண்டு அதனைக் காப்போர் குரங்கினை விரட்ட முற்படுவர். அதுபோல தலைவனிடமிருந்து தலைவியைக் காக்க எண்ணிய பெற்றோர் தலைவியை இற்செறிக்க முற்படுவர். அதனால் தலைவி அஞ்சினாள்.


அறிவியல்ச் செய்திகள்


1. நிலம் கீழ்மேலாகப் பெயரும் என்ற உண்மையை சங்கத்தமிழர்கள் அறிந்திருந்தனர். நிலநடுக்கம் குறித்த அறிவு அவர்களுக்கு இருந்ததை இச்செய்தி புலப்படுத்துகிறது.

2. நீரும் நெருப்பும் தன்னிலை மாறும் என்பதன் வாயிலாக கடல்கோள்(சுனாமி), எரிமலை பற்றியும் பண்டைத்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை அறிலாம்.

3. எல்லை காணமுடியாத கடலும் இயற்கையின் சீற்றத்தால் மாற்றத்தால் எல்லை காணும் நிலை வரும் என்ற சிந்தனையும் எண்ணி வியப்பெய்தத் தக்கதாகவுள்ளது.

26 comments:

 1. மிகவும் அருமையான நல்ல பயனுள்ள தகவல், தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 2. முன்னோர்களின் யூகித்தல் தான் இன்று உலகலாவிய அறிவியலாக வளர்ந்துள்ளது...வழமைபோல் நல்விளக்கங்கள்..

  ReplyDelete
 3. தமிழுக்கு அணி செய்த 150 முத்துக்களுக்கு நன்றி அய்யா. பல நூறுகள் தொடரட்டும்.

  ReplyDelete
 4. 150 ஐ கவனிக்காமல் விட்டு விட்டேன்...வாழ்த்துக்கள்..ஆனால் தமிழுக்கு இந்த 150 போதாது..ஆயிரங்களாக வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. வானம்பாடிகள் said...
  தமிழுக்கு அணி செய்த 150 முத்துக்களுக்கு நன்றி அய்யா. பல நூறுகள் தொடரட்டும்.//

  நன்றி ஐயா.._/\_

  ReplyDelete
 6. புலவன் புலிகேசி said...

  முன்னோர்களின் யூகித்தல் தான் இன்று உலகலாவிய அறிவியலாக வளர்ந்துள்ளது...வழமைபோல் நல்விளக்கங்கள்.//

  உண்மைதான் நண்பரே..
  கருத்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 7. Tamilparks said...

  மிகவும் அருமையான நல்ல பயனுள்ள தகவல், தகவலுக்கு நன்றி//

  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 8. ஆக்கபூர்வமான பதிவு ஐயா. உங்கள் 150 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். வலை வடிவமைப்பும் அழகாக உள்ளது

  ReplyDelete
 9. மன்னார் அமுதன் said...

  ஆக்கபூர்வமான பதிவு ஐயா. உங்கள் 150 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். வலை வடிவமைப்பும் அழகாக உள்ளது//

  மிக்க மகிழ்ச்சி அமுதன்..

  ReplyDelete
 10. மன்னார் அமுதன் said...

  ஆக்கபூர்வமான பதிவு ஐயா. உங்கள் 150 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். வலை வடிவமைப்பும் அழகாக உள்ளது//

  ஆம் நண்பரே...

  ReplyDelete
 11. தங்களின் தமிழ் சேவை மகத்தானது.. உங்களின் ஒவ்வொரு பதிவும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும்.. மேலும் தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. தமிழும் தமிழ் மணமும் பரப்பும் தங்களின் இடுகைகள் நேர்த்தியாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!!

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் குணா ஸார்.இன்னும் நிறைய நிறைய எழுதுங்கள்.தமிழ் வளரட்டும்.வரும் தலைமுறை சிறக்கட்டும்.

  ReplyDelete
 14. கிறுக்கல்கள் said...
  தமிழும் தமிழ் மணமும் பரப்பும் தங்களின் இடுகைகள் நேர்த்தியாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!!//

  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 15. சூர்யா ௧ண்ணன் said...
  தங்களின் தமிழ் சேவை மகத்தானது.. உங்களின் ஒவ்வொரு பதிவும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும்.. மேலும் தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை..வாழ்த்துக்கள்//

  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 16. பூங்குன்றன்.வே said...
  வாழ்த்துக்கள் குணா ஸார்.இன்னும் நிறைய நிறைய எழுதுங்கள்.தமிழ் வளரட்டும்.வரும் தலைமுறை சிறக்கட்டும்.//

  மகிழ்ச்சி நண்பரே...

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் உங்களுக்கும் தமிழுக்கும் உங்களால் தமிழ் மேலும் அழகாகுது

  ReplyDelete
 18. உங்கள் 150 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் குணா..தமிழ் மொழி பறைசாற்றி 150 இடுகைகள்

  ReplyDelete
 20. அருமை. ஆனால் தலைப்புதான் கொஞ்சம் தூர தள்ளி நிற்கிறது.

  150-க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. Blogger ramesh-றமேஸ் said...

  வாழ்த்துக்கள் உங்களுக்கும் தமிழுக்கும் உங்களால் தமிழ் மேலும் அழகாகுது....

  கருத்துரைக்கு நன்றி ரமேஸ்.

  ReplyDelete
 22. Blogger தியாவின் பேனா said...

  உங்கள் 150 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

  நன்றி தியா..

  ReplyDelete
 23. Blogger பிரியமுடன்...வசந்த் said...

  வாழ்த்துக்கள் குணா..தமிழ் மொழி பறைசாற்றி 150 இடுகைகள்..


  நன்றி வசந்த்.

  ReplyDelete
 24. ஊர்சுற்றி said...

  அருமை. ஆனால் தலைப்புதான் கொஞ்சம் தூர தள்ளி நிற்கிறது.

  150-க்கு வாழ்த்துக்கள்....

  பார்க்கிறேன் நண்பா..
  கருத்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 25. பல நூறுகள் தொடரட்டும்.

  ReplyDelete
 26. கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete