வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 ஜூலை, 2010

இரு பேராண்மைகள் (250வது இடுகை)


ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான்.

ஆண் தனக்குள் இருக்கும் பெண்வடிவத்தை காதலிக்கிறான்.
பெண் தனக்குள் இருக்கும் ஆண்வடிவத்தைக் காதலிக்கிறாள்

என்கிறது உளவியல்.


ஆண்களுக்குப் பெண்தன்மை அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு ஆண்தன்மை அதிகரித்து வருகிறது.

என்கிறது அறிவியல்.

ஆண்போல வீரம் நிறைந்த பெண்களையும்,
பெண் போல அச்சம் நிறைந்த ஆண்களையும் நடைமுறை வாழ்க்கையில் நாம் காணமுடிகிறது.

100 விழுக்காடு ஆண்தன்மையுள்ள ஆண்களும்,
100 விழுக்காடு பெண்தன்மையுள்ள பெண்களும், இல்லை என்கிறது மருத்துவம்.

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் தீராது நடந்து வருகிறது. இந்தப் போருக்குப் பெயர் காதல்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் சார்ந்த போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். மனம் சார்ந்த போர் உயிர்உள்ள காலம் வரை தீராது வரும்.

இந்தப் போர் மனம் என்னும் ஆயுதம் தாங்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொல்லும் கொடுமையான போர்.


மற்ற போருக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.


○ பிற போர்களில் வாழ்வு - சாவு இரண்டில் ஒன்று கிடைக்கும்.

○ காதலர்களுக்கான போரில் - வாழ்ந்துகொண்டே சாகவும், செத்துக்கொண்டெ வாழவும், தினம் தினம் சாகவும் முடியும்.
இந்தக் கொடுமையை (சுகமான வலியை) அனுபவிக்க முடியாதவர்கள் தாங்களே தற்கொலை செய்துகொள்வர்.

○ பிற போர்களில் உடல் காயப்படும்.
○ காதல்ப் போரில் மனம் காயப்படும்.


○ பிற போர்களுக்கான நோக்கம் மண்,பெண்,பொன் என பல்வேறு ஆசைகள் இருக்கலாம். ஆனால், காதல்ப் போரின் நோக்கம் அன்பில் உயந்து நிற்பது நீயா? நானா? என்பது தான்.

○ பிற போர்களில் யாரோ ஒருவர் தான் வெற்றியோ, தோல்வியோ அடைவர். ஆனால் காதல்ப் போரில் இருவரும் வெற்றிபெறவும், தோல்வியடையவும் முடியும்.


○ பிற போர்களில் விட்டுக்கொடுத்தவர் தோற்றுப் போவார். ஆனால் காதல் போரில் விட்டுக்கொடுப்பதே வெற்றியின் அடிப்படையாக அமைகிறது.

○ பிற போர்களில் ஒருவரையொருவர் எதிர்த்துப் போர்புரிவர். காதல்ப் போரில் ஒவ்வொருவரும் தம் மனதை எதிர்த்துப் போரிடுவர். ஆனால் இந்தப் போராட்டமே தன் இருவருக்கும் வலி தருவதாக அமையும்.



○ நீ பார்த்ததால் தான் நான் மெலிகிறேன் என்று உடல் கண்ணிடம் முறையிடும்!

நீ மெலிவதால் நான் தூக்கம் தொலைந்தேன் என்று கண் உடலிடம் எதிர்வாதம் செய்யும்!

சும்மா பேசிக்கிட்டே இருக்காதீங்க நீங்க செய்த தவறுக்கு என்னை நானே அடித்துக்கொள்கிறேன் என தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் இதயம்!

கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் எனக்கு வலியில்லை என்று நினைத்துவிட்டீர்களா? என்று இந்த சண்டைக்கிடையே பாவமாகக் கேட்கும் மனம்!

என்னடா இது குடியிருக்கலாம்னு வந்தா இந்த வீடு சரியில்லையே நான் வீட்டைவிட்டுப் போறேன் என்று உடலிடம் உயிர் சொல்லும்!


நான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா?
நான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்துச்சிப்பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.


கண், உடல், இதயம், மனம், உயிர் எல்லாம் மூளையின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பதால் தான் இன்னும் ஆண், பெண் இன்னும் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறார்கள்.




என்றும் தீராத காதல்ப் போரை நானறிந்தவரை, உணர்ந்தவரை சொல்லிவிட்டேன்..

இன்னும் விளக்கமாக, அழகாக, ஆழமாக, ஔவையார் சொல்கிறார்………..


“செல்வார் அல்லர்“ என்று யான் இகழ்ந்தனனே
“ஒல்வாள் அல்லள்“ என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இருபேர் ஆண்மை செய்த பூசல்
நல் அராக் கதுவியாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.

குறுந்தொகை - 43 (பாலை)
என்கிறார் ஔவையார்

பிரிவிடை மெலிந்த கிழத்தி (தலைவி) சொல்லியது.


தலைவன் தன் மீது மிகுந்த அன்பு கொண்டவன் அதனால் தன்னை விட்டுப் பிரியமாட்டான் என நினைத்தாள் தலைவி!
அதனால் அவன் பிரிவினைத் தடுக்கும் எண்ணமின்றி இருந்தாள்.


பிரிவு என்றால் இதுதான் என்று அறியாதவள் தன் காதலி. அதனால் பிரிவினை உரைத்தாள் இவள் தாங்கமாட்டாள் என்ற எண்ணம் கொண்டிருந்தான் தலைவன்.


இவ்வாறு இருவரும் தம் மனதுக்குள் பேராற்றல் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது,

ஒருவரை மட்டும் பாம்பு கடித்து, அதனை நஞ்சு தலைக்கு ஏறி அறிவிப்பது போல,

தலைவியின் உடல் மெலிந்தது, அதற்கு தலைவனின் பிரிவே காரணம் என்று உடல் மாற்றம் அறிவித்தது.

பாம்பு கடித்தவர் தம் உயிர்போகும்வரை துன்புறுத்துவது போல
தலைவனின் பிரிவு தலைவியின் உயிர்போகும் வரை துன்புறுத்துவதாகவுள்ளது.

“அவர் நம்மைப் பிரியமாட்டார் என்ற தலைவியின் ஊக்கம்!
இவளுக்குச் சொல்லாமலே பிரிவோம் என்ற தலைவனின் துணிவு!“

இருவரின் பேராண்மைகளுக்குச் சான்றாகும்.

பிரிவால் துன்பமும்
அறியாமையால் கலக்கமும் கொண்ட தலைவியின் மனநிலை முழுவதையும் எடுத்தியம்புதாக “அலமலக்குறுமே“ என்னும் சொல் அமைகிறது.


பாடல் வழியே….

v ஆண்மை - பெண்மை இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்றே பலரும் எண்ணிவருகின்றனர். இப்பாடல் இக்கருத்தாக்கத்தில் புதிய சிந்தனையைத் தூண்டுவதாகவுள்ளது.

v இருபேராண்மை என்ற சொல்லாக்கம் பெண்ணுக்குள் இருக்கும் ஆண் தன்மையை, ஆற்றலை உணர்த்துவதாகவுள்து.

v தலைவியின் மனம் தாங்காது என்ற தலைவியின் மனநிலையை ஆழ்ந்துநோக்கும் தலைவனின் பண்பு தலைவனுக்குள் இருக்கும் பெண்மைக்கு மென்மைக்குச் சான்றாகவுள்ளது.

v தலைவி ஆற்றலுடையவளாக இருந்தாலும் பாம்பு கடித்தது போன்ற உயிர்வலியைக் கடைசியில் பெறுகிறாள். ஆற்றலுடன் போர்புரிந்தாலும் மென்மைகாரணமாகத் தோற்றுப்போகிறாள். அதனால்தான் தலைவி பெண் வடிவத்துடனும் பெண் மனதுடனும் இருக்கிறாள்.


v தலைவியின் நிலையை நன்கு உணர்ந்த இவன் நம்பிரிவை ஏற்கமாட்டாள் என்பதை அறிந்தவனாயினும், பிரிவு வாழ்க்கைத்தேவைகளை நிறைவு செய்வது என்று துணிந்து தலைவியைப் பிரியும் பண்பு அவன் ஆணாகவே இருப்பதற்கு அடிப்படையாகவுள்ளது.

v காதல் உடல்மட்டும் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது. உடல் சார்ந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். மனம் சார்ந்த போராட்டம் காலம் உள்ளவரை மனிதர் வாழும் வரை தீராது என்கிறார் ஒளவையார்.

v பிரிவிடை மெலிந்த கிழத்தி (தலைவி) சொல்லியது என்னும் அகத்துறை தலைவனைப் பிரிந்த தலைவி தன் உடல் மெலிந்து தோழிக்குச் சொல்லியது என்ற அகத்துறைக்குத் தக்க சான்றாகவும் அமைகிறது.

புதன், 28 ஜூலை, 2010

தூண்டில்




² தூண்டிலில் தொங்கிக்கொண்டிருக்கிறது

மீனின் சாவும்!

மனிதனின் வாழ்வும்!



² தேசிய நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த பொன்மொழி.

“நீங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினால்…
அதை இங்கே செய்ய வேண்டாம். இரத்த சேமிப்பு வங்கியில் செய்யுங்கள்”


² உன் குரலில் ஒலி அளவை உயர்த்துவதைவிட
உன் சொல்லின் ஆழத்தைக் கூட்டுவதே சிறந்தது!



² மனிதனால் முடியாதது எதுவுமில்லை.
ஆனால்..
மனிதனால் முடியாதது…….
மனிதனாக இருப்பது தான்!


² குறை இல்லாத மனிதனும் இல்லை
குறை இல்லாதவன் மனிதனும் இல்லை -அதை
குறைக்க முடியாதவன் மனிதனும் இல்லை!



² உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை
நீயும் சிரிக்க வை!

உன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்க வை!



² உலகம் உன்னை அறிமுகம் செய்யும் முன்னர்
உலகத்துக்கு உன்னை நீயே அறிமுகம் செய்து கொள்!
-சச்சின்.


² உன் மீது பாசம் வைக்கும்
இதயத்தை நேசி!

உன்னைக் கோபப்படுத்தும் இதயத்தை
அதிகமாக நேசி!

-அன்னை தெரசா.
(நான் படித்து மகிழ்ந்த குறுந்தகவல்கள் உங்களுக்காக...)

செவ்வாய், 27 ஜூலை, 2010

பொருளில்லாருக்கு...




அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கு
இவ்வுலகம் இல்லை (குறள் - 247)


என்பார் வள்ளுவர். அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை என்றவுடன் அவ்வுலகம் என்பது சொர்க்கம் தானே!!
என்றெல்லாம் கற்பனை செய்துகொள்ளவேண்டாம்..

அவ்வுலகம் என்பது எங்கோ இல்லை. நாம் வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையே!

மகிழ்ச்சி என்பது நம் மகிழ்ச்சி மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களும், சுற்றியுள்ளவர்களும் சேர்ந்த மகிழ்ச்சி!!

நம்மைச் சுற்றியிருப்போர் வருந்த நாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால்
நாம் வாழும் இடம் நரகம்!

பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்ற கருத்து எக்காலத்துக்கும் ஏற்புடையது.

பொருள் சேர்ப்பது பெரிய செயல் அல்ல…
பொருளை நேர்வழியில் சேர்ப்பது மிகப்பெரிய செயல்!!

பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல…
சேமித்த பொருளை நல்ல வழியில் செலவுசெய்வது அரிய செயல்!

பொருளின் மதிப்பைவிட..
அந்தப் பொருள்வழி மதிப்புமிக்க உறவுகளைச் சேமிப்பதுதான் மதிப்பு!!


சரி சங்ககாலத்தில் பொருள் குறித்த சிந்தனையைப் பார்ப்போம்…



ஒரு தலைவியின் புலம்பல்….

பொருள் தேடச் சென்றான் தலைவன். அதனால் உடல்வேறுபாடு கொண்டு வருந்தினாள் தலைவி. அவளைத் தேற்றினாள் தோழி. அப்போது தோழியிடம் இவ்வாறு சொல்கிறாள் தலைவி...

அழகிய அணிகன்களை அணிந்தவளே!

எக்காலத்தும் தவறான வழியில் செல்லாத வாழ்க்கை,
பிறர் வீட்டு வாசலில் சென்று நின்று வேண்டாத சிறப்பு,

இவ்விரண்டும் பொருளால் கிடைக்கும் என்று நமது இருளை ஒத்த கூந்தலைத் தடவியவாறு நம் தலைவர் கூறினார்….


பாற்பசுக்கள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பலவிடங்களிலும், அப்பசுக்கள் நீர் உண்ணும் பொருட்டு நீண்ட சீழ்க்கை ஒலி எழுப்பும் கோவலர், தாம் தோண்டிய கிணற்றினின்றும் வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீர், ஒழுகிச் சென்று சிறுகுழியில் நிரம்பியது. கதிரவன் காய்ந்தமையால் அந்நீரும் வற்றிக் குழியும் காய்ந்தது.


நீருண்ண வந்த பெரிய யானை நீ்ர் இல்லாது சிறிது ஈரத்துடன் காணப்பட்ட குழியைக் கண்டு வருத்தமுற்றுத் தன் நீர் வேட்கையைத் தணித்துக்கொள்வதற்கு வேறுஇடம் காணப்பெறாது அக்குழியினை மிதித்துக்கடந்து சென்றது.

பின் அங்கு சென்ற பெரிய புலி, யானையின் அடிச்சுவட்டில் கால்வைத்து நடந்து சென்றது. யானையின் அடிச்சுவட்டில் பதிந்த புலியின் கால்சுவடு குற்றமற்ற நாவினையுடைய கூத்தர், தம் தோளின் பின்புறத்தே காட்டிய மார்ச்சனை பூசிய மத்தளத்தின் கண்ணிடத்தே விரல் பதிந்த வடுப்போலக் காணப்படும். அத்தகைய கானகத்தே மரலும் வாடுகின்ற இடங்களையுடைய மாலையைக் கடந்து நம் காதலர் சென்றுள்ளார்.



அவரது பிரிவால் நாம் நோயுற்று வருந்துவோமாயினும்,
அவர் தமது பொருளீட்டும் வினையியை முடித்தபின் வருவாராக.


தாம் வருந்துவதால் தலைவனின் பொருளீட்டும் முயற்சி தடைபடுமோ என்று கருதிய தலைவி தாம் நோயுற்றாலும் தலைவன் செய்வினை முடிக்கவேண்டும் என்று வாழ்த்தினாள்.



பாடல் இதோ…

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
5 நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
10 நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
15 விரல் ஊன்று வடுவின் தோன்றும்
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.

அகநானூறு 155. பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

பொருளீட்ட வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்தான். அப்பிரிவினை ஆற்றாத உடல் வேறுபட்ட தலைவியைத் தோழி தெளிவுறுத்த அப்போது தோழியை நோக்கித் தலைவி கூறியது.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

○ எக்காலத்தும் தவறான வழியில் செல்லாத வாழ்க்கை,
பிறர் வீட்டு வாசலில் சென்று நின்று வேண்டாத சிறப்பு,
இவ்விரண்டும் பொருளால் கிடைக்கும் என்ற கருத்து,

சங்ககால மக்களின் மாண்பை அறிவுறுத்துவதாகவுள்ளது.



○ அங்கு சென்ற பெரிய புலி, யானையின் அடிச்சுவட்டில் கால்வைத்து நடந்து சென்றது. யானையின் அடிச்சுவட்டில் பதிந்த புலியின் கால்சுவடு குற்றமற்ற நாவினையுடைய கூத்தர், தம் தோளின் பின்புறத்தே காட்டிய மார்ச்சனை பூசிய மத்தளத்தின் கண்ணிடத்தே விரல் பதிந்த வடுப்போலக் காணப்படும் என்ற செய்தி அழகிய ஓவியம் போல நிழற்படம் போல கண்முன் தோன்றுகிறது.

இக்காட்சியை இவ்வளவு அழகுறச் சொல்லிய புலவரின் ஆற்றல் வியப்பிற்குரியதாகவுள்ளது.

வெள்ளி, 23 ஜூலை, 2010

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.


○ நீ இறக்கும் வரையில் உன் மதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று


ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன்,

“ஆம்…. மரணம் உண்மையை உரைக்கக் கூடியது. அப்போது, நான் சொன்னதைவிட செய்தது அதிகம் என்றும், செய்ததைவிட செய்யவிரும்பியது அதிகம் என்றும் தெரியவரும் என்றான்.


○ நினைவு கூர்தலும் ஒருவகை சந்திப்புதான்.


○ மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை…
அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது..!


○ நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை….
நான் அப்படிப் பேசுவதற்குக் காரணம்….
“மீதிப் பாதியாவது உங்களைச் சென்று அடையவேண்டும்..! என்ற ஆதங்கத்தில் தான்.

○ நேற்றைகளின் கடன்களை அடைக்க நாளைகளிடம் நாம் கடன் வாங்குகிறோம்!

புதன், 21 ஜூலை, 2010

தீர்ப்பு


ஒரு பெரிய மாதா கோயில்..
புயல் வீசிக் கொண்டிருக்கும் காலை..
கிறித்தவ மதம் சாராத பெண்மணியொருத்தி, பேராயர் முன்பு நின்று புலம்பிக்கொண்டிருந்தாள்..

“நான் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவள் அல்ல..
எனக்கு நரகத்திலிருந்து கதிமோட்சம் கிடைக்குமா? “

அதற்கு அந்தப் பேராயர்..
“பெண்ணே, மோட்சம் என்பது கிறித்தவர்களாக ஞானஸ்ஞானம் செய்தவர்களுக்கு மட்டுமே கிட்டும்“ என்றார்.

இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கையில் இடி இடித்தது. வானத்திலிருந்து மின்னல் கோயில் மீது விழுந்தது. கோயிலே எரியத் தொடங்கியது.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினர்…

பாவம்..
அந்தப் பேராயரைக் காப்பாற்ற முடியவில்லை..!

அவர் தீக்கு இரையானார்.

(கலீல் ஜிப்ரானின் இக்கதை உண்மையைச் சத்தமிட்டுச் சொல்கிறது...

அதனால் உங்களோடு பகிர்ந்துகொண்டேன்)

செவ்வாய், 20 ஜூலை, 2010

அறிவுள்ள நாய்!


ஒருநாள் சில பூனைகளும், ஒரு விவேகமான நாயும் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அந்த நாய் பூனைகளை நெருங்கி வருகையில், அவை அந்த நாயைக் கவனிக்காமல் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தன.

இந்தப் பூனைகள் கூட்டத்தில், ஒரு பூனை துனிச்சலுடன் எழுந்து பேசியது,

“சகோதரர்களே ……

எவ்வித சந்தேகமும் இல்லாமல் இறைவனை மீண்டும் மீ்ண்டும் வேண்டினால் நிச்சயமாக சுண்டெலிகள் மழையாகக் கொட்டும்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த நாய்,
தனக்குள்ளே சிரித்துக்கொண்டு ஒரு பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தது

” ஓ அறிவு கெட்ட குருட்டுப் பூனைகளே..

எனக்குத் தெரிந்தவரை, என் மூதாதையர்களுக்குத் தெரிந்தவரை பிரார்த்தனை மூலமும், வழிபாடுகள் மூலமும் சுண்டெலிகள் மழையாகப் பொழியாது…

மாறாக எலும்புகள் தான் மழையாகப் பொழியும்..


(கலீல் ஜிப்ரானின் இந்த தத்துவக்கதை ஒவ்வொருவரின் உலகத்தையும் அதில் அவர்களின் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பதாகவுள்ளது.)

சனி, 17 ஜூலை, 2010

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும்!


கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்றார் வள்ளுவர்…

இன்றைய மாணவன் சொல்கிறான்…

கற்க கசடற கற்பவை கற்றபின்
விற்க பாதி விலைக்கு

என்று..!

இலக்கியங்கள் வேறு வாழ்க்கை வேறு இல்லை. வாழ்வியல்ப் பதிவுகளே இலக்கியங்கள் ஆகும். இலக்கியங்கள் என்றால் திருக்குறளும், சிலப்பதிகாரமும் மட்டுமல்ல…


வாழ்க்கையின் தேவையை, இலக்கை, அனுபவத்தை இயம்பும் எந்தவொரு நூலையும் இலக்கியம் எனலாம். வேண்டுமானால் இவ்விலக்கியத்தை,

கலை இலக்கியம்
வாழ்க்கை இலக்கியம் என்றுவேண்டுமானால் பகுத்துக்கொள்ளலாம்.

அறம்,பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்வியற்கூறுகளை இயம்புவதையே இலக்காகக் கொண்டவை இலக்கியங்களாகும்.


இலக்கியங்கள் இல்லையென்றால் இன்றும் நாம் கற்கால மனிதர்களாகத் தான் கல்லை ஆயுதமாகக் கொண்டு காடுகளில் அழைந்துகொண்டிருப்போம்.

இலக்கியங்கள் சமகால அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளன.

அத்தகைய ஏட்டுச்சுரைக்காய் எப்போது கறிக்குதவும்?


இலக்கியங்கள் சுட்டும் வாழ்வியல் அனுபவங்களை உள்வாங்கி தம்வாழ்வில் பயன்படுத்தும் போது….

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவும்!


சீனக் கதையொன்று…….

எலி பிடிப்பது எப்படி என்று நூலொன்று வெளியிடப்பட்டது. அழகான ஓவியங்களுடன் புத்தகம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

ஒருநாள் தம் வீட்டின் சமையலறையில் அந்தப் புத்தகத்தை வைத்தார் வீட்டுக்காரர். அவர் இல்லாத நேரத்தில், சில எலிகள் வந்தன. அந்தப் புத்தகத்தைச் சுற்றி நின்றன.

புத்தகத்துக்கு அவமானமாகப் போய்விட்டது. புத்தகம் எலிகளைப் பார்த்துக் கேட்டது…..

“முட்டாள் எலிகளே! நான் யார் தெரியுமா?

எலிகள் சொன்னன,

தெரியுமே! நீ ஒரு புத்தகம்!

புத்தகம் சொன்னது…

“நான் சாதரணமான புத்தகம் இல்லை. எலியைப் பிடிப்பதில் சிறப்பான நுட்பங்களை அள்ளித்தரும் புத்தகம். நீங்கள் சாவுக்குத் தயாராகிறீர்கள் என்று நினைக்கிறேன்.“ என்றது.

எலிகள் புத்தகத்தின் பேச்சைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அந்தப் புத்தகத்தை ருசிபார்க்கத்தொடங்கின.சிறிது நேரத்தில் அந்தப் புத்தகம் சுக்கல் சுக்கலாக சிதைந்து போனது. அந்தப் புத்தகத்தைப் பற்றி எலிகள் கவலைப்படவில்லை.

காரணம்…..

நூல் எவ்வளவுதான் சிறப்புடையதாக இருந்தாலும். அச்சடித்த எழுத்துக்களால் எந்தப் பயன் ஏதுமில்லை.

நடைமுறைப்படுத்தினால் தான் பயன்!

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதாவது என்பது எலிகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது!!

புதன், 14 ஜூலை, 2010

முல்லை சிரித்தது.

இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி நாம் நம்மைவிட நம்மைச் சுற்றியிருப்பவர்களையே அதிகம் சிந்தித்துப்பார்ப்போம். ஆம். அவர்கள் நம்மைப் பார்ப்பார்களே என்றே நினைத்துப்பார்ப்போம்.

கீழே விழுந்த ஒருவன் தன் வலியைவிட
தன்னை யாரும்
பார்த்துவிட்டார்களோ?
சிரித்துவிட்டார்களோ?
என்பதிலேயே விழிப்புடனிருப்பான். அதுபோல,

நம்மை யாரும் பார்க்கவிட்டாலும், எல்லோரும் நம்மை மட்டுமே பார்க்கிறார்கள் என்பது போன்ற மனவுணர்வு சில நேரங்களில் நமக்கு வருவதுண்டு.

அந்த நேரத்தில் வெட்கம் வந்து நம்மைக் கவ்விக்கொள்ளும். தலை கவிழ்ந்து மண்ணைத் தவிர யாரையும் பார்க்கத் தோன்றாது.


இங்கே ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடந்துவிட்டது.

மகிழ்ச்சியின் திறவுகோலான சிரிப்பு இவளுக்கு துன்பத்தின் திறவுகோலாகிவிட்டது!

மனிதர்கள் சிரித்துவிடுவார்களோ என்று வருந்துவோர்கள் பலரிருக்க,
இங்கு இந்தப் பெண் தன்னைப் பார்த்து முல்லை சிரித்துவிட்டதே என்று வருந்துகிறாள்.

தலைவி தோழியிடம் சொல்கிறாள்………..

செல்வத்தை விரும்பி என்னைப் பிரிந்து சென்ற தலைவர், என்னிடமும் அவரிடமும் உள்ள இளமையை எண்ணிப்பார்க்கவில்லை. இங்கு இன்னும் வந்துசேரவில்லை. அவர் இப்போது எவ்விடத்தில் உள்ளாரோ என பசுமையான முல்லை தம் அழகிய பற்கள் தோன்ற என்னைப் பார்த்து சிரிக்கின்றது.

(முல்லையின் அரும்புகள் தலைவிக்குக் தலைவன் வருவதாகச் சொல்லிச்சென்ற கார்கால வருகையை அறிவித்தன.
முல்லையின் அரும்புகள் தோன்றுதல் கார்காலம் சிரிப்பதாக உவமிக்கப்பட்டது.
தலைவன் பிரியும் முன்னர் முல்லையின் அரும்புகளைக் காட்டி இதே போல அடுத்த கார்காலத்தில் முல்லை மலரும்போது நான் வந்துவிடுவேன் என்று கூறியதை இப்போது தலைவி எண்ணிப்பார்த்தாள்.
முல்லைக்கு மழையைத் தந்து காத்த மேகம் இப்போது தனக்குப் பகையாய் வந்து வருத்துதை எண்ணி துன்பமடைந்தாள் தலைவி.
கார்காலம் வந்தபின்னும் தலைவன் வரவில்லை. இந்நிலையிலும் தலைவி உயிருடன் உள்ளாள் என்பதை எண்ணியே கார்காலமும் முல்லையும் தன்னைப் பார்த்து சிரிப்பதாகத் தலைவி வருந்துகிறாள்.)

இளமை - செல்வம் என்னும் இரு வாழ்வியல் கூறுகளை ஒரு மனிதன் வாழ்வில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

செல்வம் நிலையற்றது எப்போது வேண்டுமானலும் அதனைத் தேடிக்கொள்ளலாம். ஆனால் இளமை கழிந்தால் மீளாது என்ற கருத்தை எடுத்தியம்புவதாக இப்பாடல் உள்ளது.

பாடல் இதோ,



இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.
-ஒக்கூர் மாசாத்தியார்

குறுந்தொகை -126. முல்லை - தலைவி கூற்று
பருவம் கண்டு அழிந்த தலைமகள் (தலைவி) தோழிக்குச் சொல்லியது.


காதலித்துப் பார் என்னும் கவிதைத் தலைப்பில் வைரமுத்து எழுதிய...

காக்கை கூட
உன்னைக்
கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே
உன்னைக் கவனிப்பதாய்
உணர்வாய்…..

என்னும் கவிதைக்கு மேற்கண்ட குறுந்தொகைப் பாடல்கூட ஒரு தாக்கமாக இருந்திருக்கலாம்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

காட்சி.


காட்சிகள் உணர்வுகளைத் தூண்டவல்லன. ஒவ்வொரு காட்சிகளும் மனதுள் ஏதோவொரு உணர்வுகளைத் தூண்டுவது இயல்பு!

ஆனால் இன்று நாம் காணும் காட்சிகள் பல எவ்விதமான உணர்வுகளையும் தூண்டாது காட்சியாக மட்டுமே அமைந்துவிடுவது வியப்பை ஏற்படுத்துவதாகவுள்ளது.

இயற்கைச் சீற்றத்தால் உண்டான அழிவு!
சாலை விபத்து!
உயிரிழப்பு!
அழகான காட்சி! ……….
என எந்தவொரு காட்சியும் எந்தவொரு உணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.

பணம் மட்டுமே மனிதன் காணவிரும்பும் காட்சியாகவுள்ளது!
காசின் ஓசை மட்டுமே மனிதன் கேட்க விரும்பும் ஓசையாகவுள்ளது!

இதற்கெல்லாம் காரணம் மனிதன் பணத்தின் மீது கொண்ட ஆசையே!

மனம் உள்ளதாலேயே மனிதர் என்று பெயர் பெற்றனர். ஆனால் மனதை இழந்தபின்னர் அந்த உடல்களுக்கு மனிதர் என்று பெயரிடுவது சரியா?

சங்ககாலத்தில் மனிதர்கள் பணம் தேடாமலில்லை! ஆனால் அவர்கள்
மனம் வாடியதில்லை!

உணர்வுகளுக்கும் வாழ்வில் சரியான இடம் கொடுத்தனர் என்பது இன்றைய மனித உடல்கள் சிந்திக்கவேண்டிய சங்ககாலக் கொள்கையாவுள்ளது.

சங்ககாலக் காட்சி ஒன்று உணர்வுகள் இரண்டு..


நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.

37. பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ


(தோழி கடிது வருவர் என்று ஆற்றுவித்தது)
தலைவன் விரைவில் வருவான் என்று தோழி தலைவியிடம் சொல்லி ஆற்றுவித்தது)


தோழி! தலைவர் உன்னிடத்தில் மிகவும் விருப்பமுடையவர். அன்பு நிறைந்தவர். அவர் உன்னைப் பிரிந்து சென்ற வழிகள்,

பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப் பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்துவதற்கு இடமாக உள்ளன.

உன்னை நீங்கிச் செல்லும் தலைவன், இடைச்சுரத்தில் காணும் இதுபோன்ற காட்சிகள் அவருக்கு உன்நினைவை அதிகப்படுத்தும். அதனால் அவர் உன்னிடம் விரைந்து வருவார்.

இயல்பாகவே தலைவிமீது பேரன்பு கொண்ட தலைவன் இதுபோன்ற அன்புமி்க்க காட்சிகளைப் பார்த்தால் பெரும்பேரன்புடையவனாய் விரைந்து மீள்வான் என்று தலைவியிடம் தோழி சொல்வதால் பிரிவுத்துயரால் வாடும் தலைவி இன்புறுவாள்.

ஆண்யானை (களிறு) தன்பசியைப் போக்கிக்கொள்ளாது, பெண்யானையின் (பிடி) பசியைப் போக்க எண்ணியதும்,

ஆண்யானை, யாமரத்தின் பட்டையைத் தன் கொம்புகளால் உரிக்காமல்த் தன் கைகளால் உரித்தது என்பதிலிருந்து அதன் மென்மையை உணரமுடிகிறது.

இப்பாடல் வழி..

தோழி கடிது வருவர் என்று ஆற்றுவித்தது என்னும் அகத்துறை விளக்கம் பெற்றது.

காட்சி ஏற்படுத்தும் மனமாற்றம் அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.

இதுதான் வறுமை என்பதா?


ஒரு தந்தை தன் மகனுக்கு வறுமை என்றால் என்ன என்று புரியவைப்பதற்காக ஏழைகள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்..

ஏழைகளின் பல்வேறு வாழ்வியல் கூறுகளைப் பார்த்துத் திரும்பிய பின்னர்,
தந்தை மகனிடம் கேட்டார் இப்போது தெரிகிறதா வறுமை என்றால் என்ன?
என்று கேட்டார்.

மகன் சொன்னான்…

ஓ நன்றாகத் தெரிந்துகொண்டேன் அப்பா..

○ நாம் ஒரு நாய் தான் வளர்க்கிறோம். ஆனால் அவர்கள் 4 நாய் வைத்திருக்கிறார்கள்.
○ நம்மிடம் ஒரே ஒரு சிறிய நீச்சல் குளம் தான் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் மிக நீண்ட பெரிய ஆறே நீச்சல் குளமாக இருக்கிறது.
○ நம்மிடம் சில விளக்குகள் இருக்கின்றன, ஆனால் அவர்களிடம் பல நட்சத்திரங்களே விளக்குகளாகவுள்ளன.
○ நாம் சிறிய அளவிலான நிலப்பகுதியில் தான் வாழ்கிறோம், ஆனால் அவர்கள் பெரிய அளவிலான நிலப்பகுதியல் வாழ்கிறார்கள்.
○ நமக்குப் பணியாளர்கள் தான் உணவு பரிமாறுகிறார்கள், ஆனால் அவர்கள் அவர்களுக்குள்ளேயே உணவு பரிமாறிக்கொள்கிறார்கள்.
○ நாம் உணவுப் பொருள்களை வாங்குகிறோம். ஆனால் அவர்கள் தேவையான உணவுப்பொருள்களை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
○ நமது வீட்டுக்குக் காவல் வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நண்பர்களாக இருப்பதால் அவர்கள் வீட்டுக்குக் காவல் தேவைப்படுவதில்லை.


என்று தான் கண்ட வறுமையைத் தந்தையிடம் எடுத்துச்சொன்னான் மகன்.

தந்தை பேச்சின்றி நின்றார்.

மகன் தந்தையிடம் சொன்னான்..

நாம் எப்படி வறுமையுடன் வாழ்கிறோம் என்பதை எனக்குப் புரியவைத்ததற்கு நன்றி அப்பா என்றான்.

(எனக்கு ஆங்கிலத்தில் வந்த குறுந்தகவல் இது. படித்து மகிழ்ந்தேன்..

தங்களுடன் பகிர்ந்துகொண்டதால் என் மகிழ்ச்சி இருமடங்கானது)

புதன், 7 ஜூலை, 2010

தமிழ்தோட்டத்துக்கு வாங்க..


கருத்துச்சுதந்திரம் நிறைந்தது இன்றைய உலகம். நமது கருத்தை பூமிப்பந்தின் பல்வேறு திசைகளிலிருப்பவர்களுக்கும் சில மணித்துளிகளில் எடுத்துச்செல்ல இன்றைய தொழில்நுட்பம் பயன்படுவதாகவுள்ளது.

இணையம் - வலையுலகம் இவ்விரண்டும் இன்றைய தகவல்தொடர்பின் இரு பெரும் வாயில்களாகவுள்ளன.

வலையுலகம் இணையத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்துவருகிறது.

வலைப்பதிவர்களின் கருத்துக்களை தமிழிஷ் , தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி என பல்வேறு திரட்டிகளும் தொகுத்துத் தருகின்றன. இந்த திரட்டிகள் ஒவ்வொன்றும், மறுமொழிகளைத் திரட்டித்தருதல், விருது தருதல், இந்த வார நட்சத்திரம், பிரபல இடுகை எனப் பதிவர்களை ஊக்குவிக்க பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன.

தமது இடுகை பிரபல இடுகையாகவோ, அதிக ஓட்டுகளைப் பெற்ற இடுகையாகவோ, அதிக கருத்துரைகளைப் பெற்ற இடுகையாகவோ ஆனால் போதாது தமது கருத்து பலரால் விவாதிக்கப்பட வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?

அப்படியென்றால் உங்களைத் தமிழ்த்தோட்டத்துக்கு வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்..


(இத்தளம் செல்ல “தமிழ்த்தோட்டம்“ இங்கு சொடுக்கவும்)


கவிதைப் பூக்கள், நகைச்சுவை, இன்றைய எஸ்எம்எஸ், பொன்மொழிகள், கதைகள், இலக்கியக்கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள், பாடல்கள், புத்தக மதிப்புரை, கணினித் தகவல்கள், யோகா, உடற்பயிற்சி எனப் பல்வேறு துறைகளில் உங்கள் கருத்துக்களை முன்வைத்து விவாதத்தில் பங்குபெறலாம்.

இத்தளத்தில் தாங்கள் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி்க்கொள்ளவும். (இலவசமாகவே) பிறகு,தாங்கள் இந்த பயனர் கணக்கைக் கொண்டு உள்நுழைந்து,

தங்கள் படைப்புக்களின் வழி தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். இணைப்பில் உள்ளவர்களுடன் உரையாடலாம்(சாட்டிங்)
விவாதத்தில் பங்குபெறலாம்.

கலந்துரையாடவும் கருத்துக்களை உள்ளீடு செய்யவும எளிமையாக இத்தளம் வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகவுள்ளது.

சனி, 3 ஜூலை, 2010

சங்ககாலத் தொழில்நுட்பம்….


வீட்டைவிட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்பி வந்தால் தான் உண்டு.
அந்த அளவுக்கு வெளியே ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன.

சாலை விபத்து
திருடர் பயம்
இயற்கை சீற்றங்கள்
தீவிரவாதிகளின் தாக்குதல்….

என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் நம் உறவினர்களோ, நண்பர்களோ எங்கும் சென்றால் அவர்கள் சென்றவுடன் நல்லபடியாகச் சென்றுசேர்ந்துவிட்டோம் என்பதைத் தெரிவிக்கச்சொல்லுவோம். அல்லது நாமாவது அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்வோம்.

இன்றைய தகவல் பரிமாற்றத்துக்கு…

அலைபேசி
இணையவழி பேசி (ஒலி - ஒளி)

ஆகியன பெரிதும் பயன்படுகின்றன…

கொஞ்ச காலம் பின்னோக்கிச் சென்றுபாருங்கள்..

பேஜர் - தொலைபேசி - கடிதம் - தூதன் - புறா - அன்னம் ………………


எத்தனை படிநிலைகளைக் கடந்து நாம் வந்துள்ளோம்.

சங்ககாலத்தில் இதே தகவல் பரிமாற்றத்துக்கு என்ன பயன்படுத்தியிருப்பார்கள்?


◊ வழிதவறியவாறு காட்டில் சிக்கிக்கொண்டவர்கள் சேர்ந்து இசைக்கருவிகளை முழக்குவர்.

◊ மதம்பிடித்த யானையின் வருகை, கரைகடந்து வரும் ஆற்றுவெள்ளம் மற்றும் போர்தொடர்பான அறிவிப்புகளை முரசரைந்து தெரிவி்த்தனர்.


சரி அன்பு கலந்த தகவல்தொடர்புப் பரிமாற்றம் ஒன்றைக் காண்போம்..

தலைவியை மணந்துகொள்ளும் எண்ணமின்றி நாள்தோறும் துன்பம் நிறைந்த காட்டுவழியில் தலைவன் இரவுக்குறியின்கண் வந்துவந்து தலைவியைச் சந்தித்து மீண்டான். அதுகண்ட தோழி,

இரவில் வரும்போது அவன் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து எடுத்துக்கூறி இனி இரவில் வராதே என இரவுக்குறியை மறுத்துத் தலைவியை மணந்துகொள்ளமாறு வற்புறுத்தினாள்.


மலையிலிருந்து ஓடிவரும் அருவியின் ஒலியுடன், வண்டின் ஒலி சேர்ந்தது. முழவின் ஒலியுடன் யாழ் ஒலி சேர்ந்து ஒலிப்பதுபோல இம்மென்று ஒலிக்கும், மேலான வெற்றியினையும், அகன்ற இடத்தினையும் உடைய எல்லோருக்கும் பயன்கொடுக்கும் மலையையுடைய தலைவனே!

நீ கடந்து வரும் காடோ சிறுவழிகளையுடையது.
விலங்குகள் செல்லும் அவ்வழிகளில் யானைகளும் திரியும்.
வானத்தின் மீது இடிமுழங்கும். மேலும்,
அச்சம் தரும் பாம்பும் புலியும் அவ்வழிகளில் அதிகமாக இருக்கும்.
இத்தகைய வழியில் நீ இரவில் தனியாக வருகின்றாய்….

நீ தலைவியை மணந்துகொள்ள விரும்பினால் அதற்குத் தடையேதும் இல்லை! நீ விரும்பிய வாறே மணந்துகொள்ளலாம்.

“ஆதலால் இன்றுமுதல் இரவில் இங்கு அவ்வாறு வருதல் வேண்டாம்!
அவ்வாறு நீ வந்தால் நீ வரும்,செல்லும் வழிகுறித்து அஞ்சியிருக்கும் எங்கள் துன்பம் தீரும் பொருட்டு உன் மலையை நீ அடைந்தபின்னர்,

வேடுவர்கள் நாயை அழைக்க ஊதும், ஊதுகொம்பினை நீ சற்றே ஊதுதல் வேண்டும்.“

என்கிறாள் தோழி.

கான மான் அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனி உரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
5 வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே,
10 ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
15 நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!


கபிலர்


அகநானூறு 319. பாலை

இரவுக்குறி வந்த தலைமகனை வரவுவிலக்கி வரைவு கடாயது.

வரவு விலக்குதல் - வருகையை நிறுத்துதல்
வரைவு கடாவுதல் - திருமணத்துக்குத் தூண்டுதல்.

பாடல் வழி…

○ வரைவு விலக்குதல், வரைவு கடாவுதல் என்னும் அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.

○ நம் அன்புக்குரியவர்கள் எப்போதும் துன்பமின்றி வாழவேண்டும் என்றே நம் மனது நினைக்கும். ஆனால் வெளியே சென்றால் துன்பம் எந்த வடிவத்தில் வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர்களின் நலத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதாவதொரு தகவல்தொடர்புக் கருவிகள் தேவைப்படுகின்றன.

இன்று நம் நலனை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவி்ட்டன. ஆனால் அன்புகலந்த விசாரிப்புகள் குறைந்துவிட்டனவோ என்று நான் சில நேரங்களில் எண்ணுவதுண்டு.


இப்பாடலில் தலைவன் மீது தலைவி கொண்ட அன்பு.
அவன் வரும் வழிகுறித்த அச்சம் ஆகியன நீங்க அவர்கள் கடைபி்டித்த தொழில்நுட்பம் - ஊதுகொம்பு ஊதுதல் ஆகும்.

தொழில்நுட்ப வசதி மிகவும் பழமையானதாக இருந்தாலும் அன்பு கலந்து இதனைப் பார்க்கும் போது நெகிழ்வாகவுள்ளது.

இப்படியெல்லாம் படிநிலைகளைக் கடந்துதான் நாம் வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இப்பாடல்வரிகள் துணைநிற்கின்றன.

வெள்ளி, 2 ஜூலை, 2010

இந்தப் பணத்தை என்ன செய்வீங்க?



வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஒரு கருத்தை எடுத்துச்சொல்வதற்காக மாணாக்கர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

உங்கள் கையில் ஒருலட்சம் ரூபாய் கொடுத்துவிட்டேன். இந்தப் பணத்தை வெச்சு உங்க வீட்டை நிறைவாக்க வேண்டும் அதற்கு என்ன செய்வீர்கள் ?

என்று கேட்டேன்.

மாணவன்-1 - வீடு முழுக்க மண்ணைக் கொட்டி நிறைத்துவிடுவேன்.
மாணவன்-2- வீடு முழுக்க குப்பையைக் கொட்டி நிறைத்துவிடுவேன்.
மாணவன்-3 - வீடு முழுக்க பொருள்களை வாங்கி நிறைத்துவிடுவேன்.

மாணவன்-4- நானே பணம் முழுவதையும் வைத்துக்கொள்வேன். வீட்டுக்கு ஒன்றும் செய்ய மாட்டேன். ஏனென்றால் வீடே காற்றால் தானே நிறைந்திருக்கிறது என்றான் ஒரு மாணவன்.

இப்படி எதிர்பாராத பதிலளித்துத் திகைக்கச் செய்தான் அந்த மாணவன்.

சரி கதைக்கு வருவோம்..


இப்படித்தான் ஒருமுறை தர்மனுக்கும், துரியோதனனுக்கும் போட்டி வைத்தார்களாம்..

துரியோதனன் தன்னிடமிருந்த பணத்துக்கு வீடு முழுக்க வைக்கோலை வாங்கி நிறைத்துவிட்டானாம்..

தர்மனோ ஒரு சிறிய விளக்கேற்றி வைத்தானாம். வீடு முழுக்க ஒளியால் நிறைந்ததாம்..

உளவியல் உண்மை.

வீடு என்பது மனம்..
வீட்டில் நிறைப்பதாக மாணவர்கள் சொன்னது அவர்கள் மனம் முழுக்க நிரம்பியிருப்பது என்பதை அவர்களுக்கு உணரச்செய்தேன்..

சரி இப்ப சொல்லுங்க..

இந்தப் பணத்தை வெச்சு நீங்க என்ன செய்வீங்க?