வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

காட்சி.


காட்சிகள் உணர்வுகளைத் தூண்டவல்லன. ஒவ்வொரு காட்சிகளும் மனதுள் ஏதோவொரு உணர்வுகளைத் தூண்டுவது இயல்பு!

ஆனால் இன்று நாம் காணும் காட்சிகள் பல எவ்விதமான உணர்வுகளையும் தூண்டாது காட்சியாக மட்டுமே அமைந்துவிடுவது வியப்பை ஏற்படுத்துவதாகவுள்ளது.

இயற்கைச் சீற்றத்தால் உண்டான அழிவு!
சாலை விபத்து!
உயிரிழப்பு!
அழகான காட்சி! ……….
என எந்தவொரு காட்சியும் எந்தவொரு உணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.

பணம் மட்டுமே மனிதன் காணவிரும்பும் காட்சியாகவுள்ளது!
காசின் ஓசை மட்டுமே மனிதன் கேட்க விரும்பும் ஓசையாகவுள்ளது!

இதற்கெல்லாம் காரணம் மனிதன் பணத்தின் மீது கொண்ட ஆசையே!

மனம் உள்ளதாலேயே மனிதர் என்று பெயர் பெற்றனர். ஆனால் மனதை இழந்தபின்னர் அந்த உடல்களுக்கு மனிதர் என்று பெயரிடுவது சரியா?

சங்ககாலத்தில் மனிதர்கள் பணம் தேடாமலில்லை! ஆனால் அவர்கள்
மனம் வாடியதில்லை!

உணர்வுகளுக்கும் வாழ்வில் சரியான இடம் கொடுத்தனர் என்பது இன்றைய மனித உடல்கள் சிந்திக்கவேண்டிய சங்ககாலக் கொள்கையாவுள்ளது.

சங்ககாலக் காட்சி ஒன்று உணர்வுகள் இரண்டு..


நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.

37. பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ


(தோழி கடிது வருவர் என்று ஆற்றுவித்தது)
தலைவன் விரைவில் வருவான் என்று தோழி தலைவியிடம் சொல்லி ஆற்றுவித்தது)


தோழி! தலைவர் உன்னிடத்தில் மிகவும் விருப்பமுடையவர். அன்பு நிறைந்தவர். அவர் உன்னைப் பிரிந்து சென்ற வழிகள்,

பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப் பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்துவதற்கு இடமாக உள்ளன.

உன்னை நீங்கிச் செல்லும் தலைவன், இடைச்சுரத்தில் காணும் இதுபோன்ற காட்சிகள் அவருக்கு உன்நினைவை அதிகப்படுத்தும். அதனால் அவர் உன்னிடம் விரைந்து வருவார்.

இயல்பாகவே தலைவிமீது பேரன்பு கொண்ட தலைவன் இதுபோன்ற அன்புமி்க்க காட்சிகளைப் பார்த்தால் பெரும்பேரன்புடையவனாய் விரைந்து மீள்வான் என்று தலைவியிடம் தோழி சொல்வதால் பிரிவுத்துயரால் வாடும் தலைவி இன்புறுவாள்.

ஆண்யானை (களிறு) தன்பசியைப் போக்கிக்கொள்ளாது, பெண்யானையின் (பிடி) பசியைப் போக்க எண்ணியதும்,

ஆண்யானை, யாமரத்தின் பட்டையைத் தன் கொம்புகளால் உரிக்காமல்த் தன் கைகளால் உரித்தது என்பதிலிருந்து அதன் மென்மையை உணரமுடிகிறது.

இப்பாடல் வழி..

தோழி கடிது வருவர் என்று ஆற்றுவித்தது என்னும் அகத்துறை விளக்கம் பெற்றது.

காட்சி ஏற்படுத்தும் மனமாற்றம் அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.

11 கருத்துகள்:

 1. நல்ல விளக்கம்.
  ••••••••••••••••••••
  எனது வலைப்பதிவில் (இலக்கியா) பொள்ளாச்சி நசன் பற்றிய இடுகை. தங்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. அந்த காலத்துக்கே கொண்டு எங்களைக் கொண்டு போய் விட்டீர்கள்!!!

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமையான விளக்கம்..!
  உங்கள் வலைப்பக்கம் படிக்க.. படிக்க.. தமிழ்தேன் இதயங்களில் இதமாக ஊற்றெடுக்கிறது..!!

  பதிலளிநீக்கு
 4. @பிரவின்குமார் தங்கள் கருத்துரை இந்த வலைப்பதிவை மேலும் பயனுள்ளதாக்கத் தூண்டுவதாகவுள்ளது நண்பா..

  பதிலளிநீக்கு
 5. மிகவும் அருமையான, பயனுள்ள விளக்கம்..!

  பதிலளிநீக்கு
 6. நல்லாயிருக்கு நண்பா ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. எனக்கு ஒரு சந்தேகம்.தப்பா நினைக்காதீங்க.சங்க இலக்கியத்தில் எல்லாமே திணை ,துறை ,பாடுபொருள்,உரிப்பொருள் அப்படின்னு ரொம்ப இறுக்கமா பிரிச்சுட்ட மாதிரி தெரியுதே.உதாரணமா பாலை என்றால் பிரிவு மட்டும்தான் பாடணுமா..பாலையில காதலும் குறிஞ்சில பிரிவும் வராதா..பாலையின் பொழுது பகலும் கோடையும்தானா .யதார்த்தம் அப்படி இல்லையே..

  பதிலளிநீக்கு
 8. @போகன் எல்லா நிலங்களிலும் எல்லாக்காலங்களும் எல்லா உணர்வுகளும் தோன்றும் நண்பரே..

  ஆயினும் சிறப்பாகத் தோன்றும் காலங்களையும் உணர்வுகளையும் காட்டுவதற்காகத்தான் இந்த பாகுபாடு.

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி போகன்..

  மேலும் விளக்கம் பெற ஐந்திணைத்திணை மூலம் என்னும் இக்கட்டுரையைப் படியுங்கள் போகன்.

  http://gunathamizh.blogspot.com/2009/05/blog-post_08.html

  பதிலளிநீக்கு