வேர்களைத்தேடி பதிப்பகம்

Wednesday, March 30, 2011

அறத்தொடு நிற்றல்


அறத்தொடு நிற்றல் என்பது அகத்துறைகளுள் ஒன்று. தலைவியின் காதலை பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல் என்பது இதன் பொருளாகும். இன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலை இயல்பாக தன் பெற்றோரிடம் கூறிவிடுகிறாள். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கப் பல படிநிலைகள் இருந்தன. அவற்றை இலக்கணப்படி காண்போமானால்.

பகற்குறி, இரவுக்குறி, முதலான இரு வழிகளிலும் நிகழ்ந்து வந்த தலைமக்களின் சந்திப்பு (மறைமுகக் காதல் வாழ்க்கை.) குறி இடையீட்டினால், சிற்சில இடையூறுகளால் தொடர முடியாத நிலை ஏற்படும். அந்நிலையில் தலைவன் - தலைவியர் ‘மணம்’ புரிந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ விரும்புவர். அது கருதித் தலைவியின் களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தி முறைப்படுத்தும் செயல்கள் நிகழும். அதனை அகப்பொருள் இலக்கணத்தில்
‘அறத்தொடு நிற்றல்’ என வழங்குவர்.

தலைவன், தலைவியைச் சந்திக்க வரும் (காட்டு) வழி ஆபத்து மிகுந்தது என்று தலைவி அஞ்சுதல் ; அன்புகொண்ட தலைவனை விடுத்து வேறு ஒருவனுக்குத் தலைவியை மணம் முடிக்கப் பெற்றோர் முயலுதல் ; தலைவி தலைவனைச் சந்திக்க இயலாதவாறு வீட்டுக் காவல் அதிகமாதல் முதலான காரணங்களால் அறத்தொடுநிற்றல்
நிகழும்.

தலைவி - தோழிக்கும்,
தோழி - செவிலிக்கும்,
செவிலி - நற்றாய்க்கும்,
நற்றாய் - தந்தைக்கும் தமையன்மாரிடமும் உண்மை
உணர்த்தி அறத்தொடு நிற்பர். (நற்றாய் = பெற்ற தாய்)

என அறத்தொடு நிற்றல் அமையும்.

முதலில் தலைவி தன் காதலை தன் உயிர்த்தோழிக்கு வெளிப்படுத்துவாள்,பின் தோழி, செவிலித்தாய்க்கும்,செவிலித்தாய் நற்றாய்க்கும்,நற்றாய் தந்தை மற்றும் தமையன்மாருக்கும் தலைவியின் காதலைத் தெரிவிப்பாள்....
இதுதான் சங்ககாலத்தில் காதலை வெளிப்படுத்தும் முறை...
இதற்குச் சான்றாக எட்டுத்தொகையில்,குறுந்தொகையிலிருந்து ஒரு பாடலைக் காண்போம்.....

குறிஞ்சி..(நிலம்)
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே -அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே

-ஒளவையார். (குறுந்தொகை – 23)

மேலும் படிக்க பாடலின் மீது சொடுக்கவும்.


படம் “பண்டைத் தமிழர் வாழ்க்கை“ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.இந்நூலில் “ஒருவன் ஒருத்தியை மணந்து கூடி இல்லறம் நடத்தி இன்பமடைதல் முடியவுள்ள வாழ்வியல் குறிப்புகளைச் சுருக்கிப் பன்னிரண்டு தலைப்புகளில் தரும் இனிய நூலாகத் தந்துள்ளார் திருவாளர் இளவழகனார்.

பொருளடக்கம்.
இயற்கைப் புணர்ச்சி
பாங்கற் கூட்டம்
மதியுடம்பாடு
மடல்திறம்
சேட்படை
பகற்குறி
இரவுக்குறி
ஒருவழித்தனத்தல்
அறத்தொடு நிற்றல்
திருப்பொன்னூசல்
பொருள்வயிற் பிரிவு
இல்லற வாழ்க்கை

பதிப்பு - திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி.
வெளியான ஆண்டு - 1945

சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோருக்கும். பழந்தமிழரின் அகவாழ்வியலை அறிந்துகொள்ள முயல்வோருக்கும் தக்கதொரு வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.

17 comments:

 1. அகவாழ்விலும் முத்திரை பதித்த தமிழரின் நாகரிகம் அறிந்து இன்புறத்தக்கது,

  ReplyDelete
  Replies
  1. சங்கத்தமிழ் வாசித்தமைக்கு நன்றி இராஜேஸ்வரி

   Delete
 2. சங்க கால வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்வது, சுவாரசியமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 3. எவ்வளவோ கவர்ச்சி பதிவர்களுக்கிடையில் சங்ககால இலக்கியத்தை மட்டும் விளக்கி புகழ் பெற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தொன்மைக்கு நிகரில்லை..சங்ககாலத்துக்கு பயணம் செய்கிறது கற்பனை படிக்கும் போதே..

  ReplyDelete
  Replies
  1. சங்கத்தமிழ் சுவாசித்தமைக்கு நன்றி தமிழ்

   Delete
 5. நல்லதொரு பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகசுப்ரமணியன்

   Delete
 6. சங்க இலக்கியம் தொடர்பானக் கருத்துக்கள் படத்துடன் வருவது பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா..

  ReplyDelete
 7. ஐயா வணக்கம். தாங்களைப்பற்றி இன்று முனைவர் விஜயராணி அவர்களுடன் பெசினேன்.
  உங்கள் வலைப்பதிவை நான் கண்டேன். வியப்பாக உள்ளது.

  முனைவர் துரை.மணிகண்டன்.

  ReplyDelete
 8. @மணிவானதி தங்களைப் போன்ற இணைய அறிவுடைய தமிழ் அறிஞர்களின் வருகை இணையத்தமிழுலகிற்குத் தேவை நண்பரே.

  தங்கள் வருகையும் கருத்துரையும் என்னை மேலும் கடமையுடையவனாகச் செயல்படவைக்கிறது முனைவரே.

  ReplyDelete
 9. நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் வலைத்தளம் பார்க்கிறேன்
  அதே சுவையுடன் தமிழ் இசையுடன் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள் என்றும் ..!!!

  ReplyDelete