Friday, March 31, 2017

வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!


வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!

என்று என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு..
என் மாணவிகளுள் தமிழ்மணி முருகன் அவர்கள் எங்கள் கல்லூரியில் வேதியியல்துறை பயின்று வருகிறார். இவருக்கு வானொலி அறிவிப்பாளராகவேண்டும் என்பது பெரிய கனவு.
அதற்கான வாய்ப்புக்காக பலமுறை என்னைச் சந்தித்தார்..
அவருக்கான வாய்ப்பை நான் அவருக்காக உருவாக்கியுள்ளேன்.
இனி நாள்தோறும் ஒரு சிந்தனையை வேர்களைத்தேடி என்னும் யுடியுப் வலைக்காட்சி வழியாக இணையத்தில் பதிவேற்றவுள்ளேன்.
உங்கள் ஊக்குவித்தலுடன் இன்று அவரது குரல் யுடியுப், முகநூல், கட்செவி உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்களிலும் ஒலிக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்மணி முருகன்!
எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்!

Tuesday, March 28, 2017

ஓட்டுநருக்கும், ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?


ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் எஸ்.இராதகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரிம் ஒரு மாணவர் எழுந்து,
“Sir, what is the difference between a rail engine driver and teacher? என்று கேட்டார்.
தொடர்வண்டி ஓட்டுநருக்கும், ஆசிரியருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. இந்தக் கேள்விக்கு இவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என யாவரும் ஆவலுடன் காத்திருந்தனர். யாரும் எதிர்பாரத பதிலை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்.
“The Driver minds the train and the teacher trains the mind இந்த பதில் யாவரையும் சிந்திக்கவைத்தது.
இன்றைய சூழலில், மாணவர்களை மதிப்பெண் எடுக்கவைப்பதும், அவர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வழிமுறைகளைக் கூறுவதும் தான் ஆசிரியர்களின் பெரிய பணியாக மாறிவிட்டது,

மாணவர்கள் நாள்தோறும் சிந்திக்க பயிற்சியளிப்பதுதான் ஆசிரியரின் முதன்மையான பணி! இதை உணராததால் தான் பட்டதாரிகள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

சில ஆயிரம் அரசுப் பணிகளை அறிவித்தால் பல லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கிறார்கள்.

முதுநிலைப் படிப்பை முடித்த மாணவர்கள் கூட தனக்குள் இருக்கும் திறமை என்ன? என்று தெரியாமலேயே வெளியில் வருகின்றனர். காரணம் அவர்கள் மனப்பாடம் செய்யக் கற்ற அளவுக்கு, சிந்திக்கக் கற்கவில்லை.

பெற்றோரும் இன்றைய ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்ப்பது, தன் குழந்தை நிறைய மதிப்பெண் வாங்கவேண்டும்! நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்றுதான் எந்தப் பெற்றோரும் தம் குழந்தை சிந்திக்கப் பழகவேண்டும். என்று நினைப்பதில்லை.

ஆசிரியப் பணி என்பது பிற பணிகளிலிருந்து வேறுபட்டது. கலை, அறிவியல், வரலாறு என எல்லாப் பணியாளர்களையும் உருவாக்கும் அரிய பணிதான் ஆசிரியப்பணி. மாணவர்களின் மனங்களை வாசித்து அவர்களை சிந்திக்கப் பயிற்சியளிக்கும் சுதந்திரத்தை ஆசிரியருக்குக் கொடுத்தால் உலகமே போற்றும் சாதனையார்களை அவர்கள் உருவாக்குவார்கள்!

கல்விச் சாலைகள் அப்போதுதான் மாணவர்களின் விருப்பத்துக்குரிய இடமாகத் திகழும்!

இன்றைய நிலை தொடர்ந்தால் கல்விச்சாலைகள் மாணவர்களின் விபத்துக்குரிய இடமாகத்தான் அது திகழும்!

Monday, March 27, 2017

ஆங்கில இலக்கிய முகவரியின் திருப்புமுனை!

 
வறுமையில் பிறந்து, 12 வயது வரை மட்டுமே பள்ளிக்குச் சென்று  இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர்!
துன்பியல், இன்பியல் என 38 நாடகங்களையும் 154 வசன கவிதைகளையும் இயற்றி ஆங்கில இலக்கியத்தின் முகவரியானவர்!
1587 ஆம் ஆண்டு 23 வயதில் பிழைப்புக்காக லன்டன் வந்து, நாடகக் கொட்டகைகளில் குதிரைவண்டிகளைக் காவல்காக்கும் வேலை பார்த்தவர்!
தம் ஆர்வத்தாலும், நினைவுத்திறனாலும், நாடக வசனங்களை மனப்பாடம் செய்தவர்!  விமர்சனம் செய்தவர்!
ஒருநாள் அரங்கம் நிறைந்த கூட்டம், நாடகத்தின் ஒரு பாத்திரம் இல்லாததால் அவசரமாக நடிகரானார்!
1592 லன்டன் மாநகரில், பிளேக் என்ற கொடிய நோய் மக்களை முடக்கியது! இரண்டு ஆண்டுகள் அனைத்து நாடகக் கொட்டகைகளும் முடங்கியது! அந்தக் காலத்தில் பல்வேறு நாடகங்களை எழுதிக் குவித்தார்.
ரோமியோ அன்ட் ஜூலியட், ஜூலியஸ் சீசர், மெகாபத், ஹேம்லெட், கிங் லியர், ஓதெல்லோ, அஸ் யூ லைக் இட் என புகழ்பெற்ற படைப்புகளை வழங்கிய ஆங்கில இலக்கியத்தின் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், என பல்வேறு சிறப்புகளுக்கும் சொந்தக்காரர் அவர்தான் வில்லியம் சேக்சுபியர்!
குதிரைவண்டிகளைக் காவல்காத்துக்கொண்டிருந்தவர் நடிகரானது இவர் வாழ்வின் முதல் திருப்புமுனை என்றால், பிளேக் நோய் வந்து நாடும், நாட்டின் நாடகக் கொட்டகைகளும் முடங்கியது இவர் வாழ்வின் இரண்டாவது பெரிய திருப்புமுனை எனலாம்.
வறுமையில் பிறந்தாலும், ஆர்வமிருந்தால், அறிவுத் தேடலிருந்தால், திருப்புமுனைகளை நன்கு பயன்படுத்திக்கொண்டால் வரலாற்றில் இடம்பெறலாம் என்பதே சேக்சுபியரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்!


தமிழ் மொழித் திருவிழா!நன்றி தமிழ் இந்து ( 27.03.17)

Sunday, March 26, 2017

உலகின் மிகப் பெரிய நூலகம்

 
3.7 கோடிப் புத்தகங்கள்! மற்றும் அச்சுப் பிரதிகள்,
35 லட்சத்துக்கும் அதிகமான ஒலிப் பதிவு ஆவணங்கள்!
1.4 கோடிப் புகைப் படங்கள்!
55 லட்சம் வரைபடங்கள், ஓவியங்கள்
470 மொழிகளில்..
16 கோடி தொகுப்புகள்!
838 மைல் நீள நூலகத்தின் புத்தக அலமாரிகள்!
இந்நூலகத்தின் கிளை அலுவலகங்கள் டெல்லி, கெய்ரோ, ரியோ டி ஜெனிரோ போன்ற உலகின் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.
என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட அமெரிக்காவின் தலைசிறந்த நூலகங்களில் ஒன்று  லைப்ரரி ஆப் காங்கிரஸ்!
நாடாளுமன்றத்துக்குப் பயனுள்ள புத்தகங் களை வாங்கிச் சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 5,000 டாலரை ஒதுக் கினார் அப்போதைய அதிபர் ஜான் ஆடம்ஸ்.
1800 ஏப்ரல் 24-ல் இந்த நூலகம் தொடங்கப் பட்டது. 12 ஆண்டுகள் கழித்து, தலைநகர் வாஷிங்டனுக்குள் நுழைந்த பிரிட்டன் இராணுவம், நகரைத் தீக்கிரையாக்கியது. இதில் இந்த நூலகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின.
முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், தனது சொந்த நூலகத்திலிருந்து புத்தகங்களைத் தந்து நூலகத்தைப் புதுப்பிக்க உதவினார். அவர் நடத்திவந்த அவரது சொந்த நூலகம்தான் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா விலேயே மிகப் பெரிய நூலகம். 2 முறை அதிபராக இருந்த காலகட்டத்தில் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகத்தை விரிவாக்கும் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர் அவர்.
1851-ல் மீண்டும் ஒரு தீவிபத்து ஏற்பட்டது. இதில் நூலகத்தின் மூன்றில் ஒரு பகுதி நூல்கள் எரிந்து நாசமாயின. தாமஸ் ஜெபர்ஸன் கொடுத்த பல நூல்களும் தப்பவில்லை. இந்த முறை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவாகச் செயல்பட்டு புத்தகங்களைச் சேகரித்து மீண்டும் புதுப்பித்தது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் புத்தகங்கள் சேகரிக்கப் பட்டன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக் காவின் அறிவிக்கப்படாத தேசிய நூலக மாகவும், உலகின் மிகப் பெரிய நூலகமாகவும் விரிவடைந்திருந்தது ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகம்.

நூலக இணையதள முகவரி  - https://www.loc.gov/

Friday, March 24, 2017

விலைகொடுத்து வாங்கமுடியாது!

விலைகொடுத்து வாங்கமுடியாது!
பட்டத்தை விலைகொடுத்து வாங்கலாம்!
அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது!

உழைப்பை விலைகொடுத்து வாங்கலாம்!
திறமையை விலைகொடுத்து வாங்கமுடியாது!

பதவியை விலைகொடுத்து வாங்கலாம்!
மதிப்பை விலைகொடுத்து வாங்கமுடியாது!

நூலை விலைகொடுத்து வாங்கலாம்!
ஆர்வத்தை விலைகொடுத்து வாங்கமுடியாது!

மருந்தை விலைகொடுத்து வாங்கலாம்!
உடல்நலத்தை விலைகொடுத்து வாங்கமுடியாது!

கடிகாரத்தை விலைகொடுத்து வாங்கலாம்!
நேரத்தை விலைகொடுத்து வாங்கமுடியாது!

ஓட்டை விலைகொடுத்து வாங்கலாம்!
மக்கள் நம்பிக்கையை விலைகொடுத்து வாங்கமுடியாது!

ஊடகங்களை விலைகொடுத்து வாங்கலாம்!
உண்மையை விலைகொடுத்து வாங்கமுடியாது!

புற அழகை விலைகொடுத்து வாங்கலாம்!
அக அழகை விலைகொடுத்து வாங்கமுடியாது!

இப்படி எதையும் விலைகொடுத்து வாங்கலாம்!

ஆனால் மனநிறைவை விலைகொடுத்து வாங்கமுடியாது!

Thursday, March 23, 2017

தொப்பிக்காரன் கதை


ஒரு தொப்பிக்காரன் ஊர் ஊராய் தொப்பி விற்று வந்தான். ஒருநாள் மதிய உணவு உண்பதற்காக ஒரு மரத்தின் நிழலில் தங்கினான். உண்ட மயக்கத்தில் தூங்கிவிட்டான். எழுந்து பார்த்தால், அவனுடைய தொப்பிகளை அந்த மரத்திலிருந்த குரங்குகள் வைத்து விளையாடிக்கொண்டிருந்தன. சிந்தித்த அந்தத் தொப்பிக்காரன் தன் அப்பா தந்துசென்ற நாட்குறிப்பேட்டை எடுத்துப் படித்துப்பார்த்தான். அதில் அவனுடைய அப்பா சொல்லியிருந்தார், குரங்குகள் நாம் செய்வதை அப்படியே செய்யும். நீ உன் தலையில் தொப்பியை மாட்டி அதை எடுத்து கீழே போட்டால் அவையும் போடும். நீ எடுத்துவந்துவிடலாம் என்று எழுதியிருந்தது. அவ்வாறே அவனும் செய்தான். ஆனால் அந்த மரத்திலிருந்து இறங்கிவந்த ஒரு குட்டிக்குரங்கு அவன்போட்ட அந்தத் தொப்பியையும் எடுத்துச் சென்றுவிட்டது. ஏமாந்த அந்தத் தொப்பிக்காரன் மரத்தின் மேல் பார்த்தான். குரங்குகள் கைகளில் திறன்பேசி இருப்பதை அறிந்து அதிர்ந்துபோனான். ஆம் அக்குரங்குகள் முகநூலில் அரட்டையடித்துக்கொண்டிருந்தன. அப்போது அவனுக்குப் புரிந்தது. என் அப்பா கொடுத்த நேற்றைய நாட்குறிப்பு என்கையில், ஆனால் இந்தக் குரங்குகள் கையில் இன்றைய தொழில்நுட்பம்! என்று அவன் வியந்துபோனான்.
இந்தக்கதை உணர்த்தும் நீதி!
காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப அறிவுடன் வாழவேண்டும். இல்லாவிட்டால் ஏமாந்துபோவோம்! என்பதுதான்.

இந்தக் கதைக்கும் தொப்பி சின்னத்துக்கும் ஆர்.கே நகர் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Wednesday, March 22, 2017

ப்ளாக்கரின் புதிய தீம்கள்ப்ளாக்கரின்   அறிமுகமாக அதன் புதிய தீம்கள்

 வெளியிடப்பட்டுள்ளன. வலைப்பதிவர்களையும், 

பார்வையாளர்களையும் ஈர்க்கும் தன்மையில் இவ்வடைப்பலகை 

வடிமைப்புகள் அமைந்துள்ளன.

Tuesday, March 21, 2017

நேரம் கிடைத்திருந்தால்..

புத்தகம் என்ற சொல்லுக்கு, புத்தி அகம் என்று பொருள் கொள்வது நலம்.
புத்தகம் எழுதுவது என்பது பலருக்கும் கனவு!
அந்தக் கனவு பலருக்கும் கனவாகவே போய்விடும்!
ஏனென்றால் அவர்களுக்குக் கனவுகாண நேரம் கிடைக்கும்!
அதை செயல்படுத்த நேரம் கிடைக்காது!
சிலர் புத்தகம் எழுதுவதற்கென நேரம் ஒதுக்கி எழுதுவதும் உண்டு. சிலர் எண்ணிலடங்கா பக்கங்களை எழுதிக் குவித்துவிடுவதும் உண்டு.
அதனால்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள் போலும்..
“ கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான் ” என்று.
கண்டதை என்றால் கண்ணில் படும் எதையும் என்று பொருள் கொள்வதைவிட பயனற்ற பல நூல்களைக் கண்டு அதில் சிறந்த நூலைக் கண்டு அதைக் கற்றவன் பண்டிதனாவான் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும்.
நேரம் கிடைத்திருந்தால்…
நான் அதைச் செய்திருப்பேன், இதைச் செய்திருப்பேன் என நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழலில் சொல்லியிருப்போம்..
பிரிட்டன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் 40 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதைப் படித்த ஒருவர், “ தாங்கள் இந்தப் புத்தகத்தை இன்னும் அதிக பக்கங்களில் எழுதியிருக்கலாமே… நேரம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில் அவர்கள், “எனக்கு இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இதையே நான் ஐந்து பக்கங்களில் சுருக்கி எழுதியிருப்பேன்” என்றார்.

இந்த எதிர்பாராத பதில் புத்தகம் எழுத விரும்பும் ஒவ்வொருவருக்கும் தேவையான அறிவுரையாகவே அமைகிறது.
நல்ல பேச்சு என்பது…
சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது மட்டுமல்ல!
எந்த வார்த்தை பேசக்கூடாது என்று உணர்ந்து பேசுவதே!
அதுபோல நல்ல நூல் என்பது..
சிறந்த கருத்தை தேர்ந்தெடுத்துச் சொல்வது மட்டுமல்ல!
தேவையில்லாத கருத்துக்களை எழுதாமல் இருப்பதும் தான்!


எனக்கு மட்டும் நேரம் இருந்திருந்தால் இதை ஐந்தே வரிகளில் சொல்லியிருப்பேன்..!

Sunday, March 19, 2017

மொழி ஞாயிறு!


ஞாலமுதல்மொழி தமிழ்!
திராவிட மொழிகளின்  தாய்மொழி தமிழ்!
ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி தமிழ்! என வாதிட்டவர்!
கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது தமிழ் என  நிறுவியவர்!
40 க்கும் மேலான மொழிகளைக் கற்று சொல்லாராய்ச்சி செய்தவர், மறைமலையடிகளார் வழி நின்று தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தெடுத்தவர்,
அவர்தான் தேவநேயப் பாவாணர்!
சொல்லாராய்ச்சி முறையில் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் உலகறியச் செய்தவர்!
தேவமொழியென்று ஏமாற்றித் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்ட வடமொழியாலேயே தமிழ்மொழி தாழ்ச்சியடைந்தது,
அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். எனவே,
தமிழன் மீண்டும் முன்னேற வேண்டுமானால்,
தமிழ்மொழி வடமொழியினின்று விடுதலையடைதல் வேண்டும்என்று எண்ணினார் பாவாணர்.
இவர் வாழ்வின் திருப்புமுனை,
பாவாணர் ஒருமுறை திருப்பனந்தாள் மடத்திற்குச் சென்றிருந்தார். அங்குப் பாவாணரும் வேறு சில தமிழரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கெல்லாம் தங்குவதற்கு உள்ளே அறைகள் கொடுக்கப்பட்டிருந்ததுமல்லாமல், நண்பகல் உணவு பிராமணர்க்கு முதலில் பரிமாறப்பட்ட பின்னரே தமிழர்க்குப் பிற்பகல் மூன்று மணிக்குப் பரிமாறப்பட்டது. காலத்தாழ்வு ஏற்பட்டதைக் குறித்து வினவியபோது, அங்குள்ளோர் அப்போதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவித்துள்ளனர். அப்போது, பாவாணர் தமிழர் குமுகாயம் அந்த அளவிற்குத் தாழ்ந்துபோன நிலை கண்டு, மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார்.

நாடு தமிழ்நாடு! மடம் தமிழர் மடம்! சமயம் தமிழர் சமயம்! பணம் தமிழர் பணம்!” அங்ஙனமிருந்தும், தமிழன் நாய் போல் நடத்தப்படுவது இன்றும் தொடர்கின்றதென்றால், தமிழனைப் பிராமண அடிமைத் தனத்திலிருந்து மீட்டே ஆக வேண்டுமென்று மனம் குமுறுகின்றார் பாவாணர். தமிழனை மீட்கும் பணியிலும் ஈடுபடுகின்றார்

  “தமிழை வடமொழியினின்றும் தமிழனை ஆரியனிடமிருந்தும் மீட்க வேண்டும். அதற்காகவே ஏறத்தாழ அறுபதாண்டு காலமாக மொழியாராய்ச்சியில் ஈடுபட்டேன். தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும் தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கு இல்லை. இதற்காகவே இறைவன் என்னைப் படைத்தார்என்று உரைக்கின்றார் பாவாணர்.

வடமொழியினின்று தமிழை மீட்பதே தமது வாழ்க்கைக் குறிக்கோளாகக் கருதி, தமிழ், தமிழர் நலம் காப்பதையே தமது உயிர் மூச்சாகக் கொண்டார் கொண்டு வாழ்ந்த மொழிஞாயிறு பாவாணரின் தமிழ்ப் பணியைப் போற்றுவோம்!
தமிழின் பெருமையை உணர்வோம்!
பிறமொழிகளையும் கற்போம்!
என்றாலும்,
தனித்தமிழில் பேசுவோம்!
தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம்!Thursday, March 16, 2017

பில்கேட்சு என்னும் நிரலாளர்!


உலக கோடிசுவரர்கள் பட்டியலில் 12 ஆண்டுகளாக முதலிடம்!
13 வயதில் கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றவர்.
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உருவாக்கி ஹார்வர்டு பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியில் விட்டவர். என்றாலும் அவரது உழைப்பு அவருக்கு அதே பல்கலைக்கழகத்திடமிருந்து  டாக்டர் பட்டத்தைப் பெற்றுத்தந்தது. ஆம் அவர்தான் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்சு.
இயங்குதளம், ஆபீசு தொகுப்புகள், உலவி, தேடுபொறி என பல துறைகளிலும் இவரின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் காலத்துக்கு ஏற்ப தம் தயாரிப்புகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் இவரின் திறனே இவர் இத்துறையில் மாபெரும் சாதனையாளராக இருப்பதன் அடிப்படையாக உள்ளது.

1999 ல் இவர், The Road Ahead, Business @ the Speed of Thought என்ற நூலை எழுதினார் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் இந்நூல் விற்பனையாகிறது.
1975 ல் ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி இருக்கவேண்டும் என ஆசைப்பட்டார் பில்கேட்சு. அவரது கனவின் உயரமே இன்று அவரின் சாதனையின் உயரம்!

இன்று அவரது நிறுவனத்தில், 85 நாடுகளில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகிறார்கள்
பள்ளியில் படித்த காலத்தில் கணக்கு மற்றும் அறிவியல் துறையின் மீது அளவுகடந்த ஆர்வமிருந்தது. இருந்தாலும் தந்தையைப் போல வழக்கறிஞராக ஆகவேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.
 13 வயதில் கணினி மீது இவருக்கு ஏற்பட்ட காதலும் இவருக்கு நண்பராக வாய்த்த பால் ஆலன் என்பவரும் இவர் வாழ்வின் திருப்புமுனை எனலாம்.
“பில்கேட்சின் போட்டியாளர்கள் குறிவைப்பது
பெரிய பெரிய நிறுவனங்களை,
ஆனால் பில்கேட்சு குறிவைப்பதே
சராசரி மக்களையும் அவர்களின் தேவையையும்!”
சமூக மாற்றத்தை உற்றுநோக்குதல், மக்களின் தேவையைப் புரிந்துகொள்தல் அதற்கான தீர்வுகளை யாராவது கண்டுபிடிப்பார்கள் என்று காத்திருக்காமல் தாமே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்ற பண்புகளை பில்கேட்சின் வாழ்க்கை தரும் பாடமாக நாம் கொள்ளலாம்.


Tuesday, March 14, 2017

இந்தியா – வியப்பளிக்கும் புள்ளிவிவரங்கள்!
வாய்மையே வெல்லும் என்பதுதான் இந்தியாவின் குறிக்கோள். என்றாலும், ஊழல் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம். வியட்நாம் இரண்டாம் இடத்தையும், தாய்லாந்து மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.

ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் கடைசியில்தான் முதலிடம் பிடிப்போம் என்றாலும், கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்.  இரண்டாவது இடத்தில் ஆத்ரேலியாவும் மூன்றாவது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் உள்ளன.

சீனா கடைபிடிக்கும் மொழிக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, தொழில்நுட்பப் புரட்சி என எதையுமே போட்டியாக நினைக்காதவர்கள் இந்தியர்கள் இருந்தாலும் சீனாவின் மக்கள் தொகையோடு மட்டும் போட்டிபோட்டு வருகிறோம். அதனால்
உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் இந்தியாவுக்கு, சீனா முதலிடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகள், வானொலிகள், சமூகத் தளங்கள் என அதன் வளர்ச்சிக்கு ஒன்றும் குறையில்லை. என்றாலும்,
பொய்யான செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகம் உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. மூன்றாவது இடத்தில் அயர்லாந்து 

வன்பொருள், மென்பொருள், திறன்பேசி என பெரிதும் நம்  நாட்டின் கண்டுபிடிப்புகள் கிடையாது. என்றாலும்,
இணையப் பயன்பாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இந்தியா, முதலிடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

ஒருவனுக்கு ஒருத்தி என்போம்! கற்பில் சிறந்தவள் யார் என்று பட்டிமன்றங்கள் வைப்போம் என்றாலும்,
எச்..வி. பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா
தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், நைஜீரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.


பெண்கள் நாட்டின் கண்கள் என்போம், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் என்போம், இருந்தாலும், உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.


சங்ககாலம் தொடங்கிய ஏறுதழுவுதல் முதல் பல விளையாட்டுகளைக் கொண்ட நாம் கிரிக்கெட் மட்டுமே பெரிதெனக் கொண்டாடுகிறோம். அதனால் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் உலக அளவில் நான்காவது இடத்தில் இந்தியா. முதலிடத்தில் தென்ஆப்பிரிக்காவும் இரண்டாவது இடத்தில் ஆத்ரேலியாவும் உள்ளன.

·         உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் 41 வது இடத்தில் இந்தியா, முதலிடத்தில் ஜெர்மனியும், இரண்டாவது இடத்தில் பெல்ஜியமும் உள்ளன.

·         தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்கள் எழுந்து நடந்தால், கல்லூரிகள், விரைந்து நடந்தால் பல்கலைக்கழகங்கள் என எங்கும் வணிகமான கல்வி இருந்தாலும், எழுத்தறிவில் இந்தியா 233 நாடுகளுள் 168 வது இடத்தில்! 82 விழுக்காடு ஆண்களும் 65 விழுக்காடு பெண்களும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்தியாவின் மொத்த எழுத்தறிவு 73.8 விழுக்காடு பின்லாந்து, கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் 100 விழுக்காடு பெற்றுள்ளன

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் 81 வது இடத்தில் இந்தியா.

மேற்கண்ட இந்தியா பற்றிய புள்ளிவிவரங்கள் உங்களுக்கு வியப்பளிக்கலாம்.
இந்தியர்களின் பலம் மனிதவளம்,
பலவீனம் அம்மனித வளத்தை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமலிருப்பது.
ஆம் இந்தியா வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எத்தனை எத்தனை போர்க்களங்கள் எல்லாம் நம் நாட்டின் வளத்துக்கான படையெடுப்புகள்! இன்றும் அந்தப் படையெடுப்புகள் தொடர்கின்றன. அதன் வடிவங்கள் தான் மாறியிருக்கின்றன.

நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் நாம் யாருக்கும் அடிமையில்லை என்று சொல்லிக்கொண்டாலும் இன்னும் நம் நாட்டில் நடப்பது பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஆட்சிதான்!

மெக்காலே கல்வி என்றபெயரில் நம் குருகுலக்கல்விமுறையை ஒழித்து தாய்மொழியைப் பறித்து நம்மை இன்னும் ஆங்கில மொழிக்கு அடிமைகளாக, சுயசிந்தனையற்றவர்களாக வைத்திருப்பதில் இருக்கிறது நாம் ஏன் அடிமையானோம் என்ற கேள்விக்கான பதில்!