ஞாயிறு, 12 மார்ச், 2017

எது மதிப்புமிக்கது?மிளகுப் பொதிகளை ஏற்றுமதி செய்து! அதற்குப் பதிலாக தங்கத்தை இறக்குமதி செய்தனர்!
மிகுந்த பொருள்களைப் பணிந்து வந்து கொடுத்து மணம் வேண்டிப் பெண் கேட்டாலும் தன் தகுதிக்கு ஒத்தவராக இல்லாவிட்டால் அப்பெண் அவரை மணந்துகொள்ளமாட்டாள்!
தன் மகளுக்குப் பிடிக்கவில்லை என்றால் பெண்கேட்டு வந்தவர் அரசனாகவே இருந்தாலும் எதிர்த்துப் போரிடத் தயங்கமாட்டார் அவளின் தந்தை!
ஆம் இந்த மரபுகள் எல்லாம் சங்ககாலத்தில் இருந்தன.
மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பின் மனை மறுக்குந்து
மனை குவைஇய கறி மூடையால்
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து
கலம் தந்த பொற் பரிசம்
கழித் தோணியான் கரை சேர்க்குந்து
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து வருநர்க்கு ஈயும்
புனல் அம் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி அன்ன
நலம்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் – வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே – பருந்து உயிர்த்து
இடைமதில் சேர்க்கும் புரிசை
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே
- புறநானூறு 343
மகட்பாற் காஞ்சி, பரணர் பாடியது
     மீனை விற்று, அதனால் பெற்ற நெல்லைக் குவித்து ஏற்றிக்கொண்டு, நீரின்மேல் தோணிகள் ஏற்றிவந்த பொருள்கள் வீடுகள்தோறும் நிறைந்து காணப்படும்.
     வீடுகளில் குவித்து வைக்கப்பட்ட மிளகுப் பொதிகளால், மிக்க முழக்கத்தையுடைய கடற்கரைப் பகுதிகள் ஆரவாரமுடையனவாகத் திகழும்
     பெரிய மரக்கலங்களில் ஏற்றிக்கொண்டு வரப்பட்ட பொன்னாலான பரிசுப் பொருள்கள், உப்பங்கழிகளில் உள்ள தோணிகளின் உதவியால் கரையில் கொண்டு சேர்க்கப்படும்.
     மலையில் கிடைக்கும் பொருள்களும், கடலில் கிடைக்கும் பொருள்களும் கலந்து தன்னை நாடி வந்த இரவலர்க்கு வழங்குவோன் குட்டுவன்.
     அவன் பொன்னாலான மாலையை அணிந்தவன். அவனுடைய முழங்குகின்ற கடலைப்போல முரசு ஒலிக்கின்ற ஊர் முசிறி. இவ்வூர் கடல்நீர்போலக் கள்ளின் மிகுதியை உடையது. அம்முசிறியைப் போன்ற நன்மை நிறைந்த மிகுந்த பொருள்களைப் பணிந்து வந்து மணம் வேண்டி பெண் கேட்டாலும் தன் தகுதிக்கு ஒத்தவராக இல்லாவிட்டால் இவள் மணம் செய்துகொள்ளமாட்டாள்.

     தன் மகளின் மனநிலை அறிந்து தந்தையும் மணம் முடிக்க உடன்படாததால், பருந்துகள் இடைமதில் தங்கி இளைப்பாறுகின்றன. மதிலகத்தே தம்மை எதிர்த்து வந்தோர் அகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏணிகளையுடைய படைகள் தம்முள் கலந்து போர்புரியும் அவ்வீரனுடைய நெடிய நல்ல ஊர், வருந்துவது கொல்லோ.

மிளகு மதிப்பானதா?
தங்கம் மதிப்பானதா?

அன்றும் இன்றும் நாம் தங்கமே மதிப்பானது என்று எண்ணிவருகிறோம். அதனால்தான் நாம் ஆங்கிலமருந்துகளுக்கு இன்னும் அடிமையாகவே இருக்கிறோம்..

அன்று மணமகன்கள் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வரதட்சணை வழங்கினர். இன்று பெண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்கின்றனர்.

அன்று பெண் கேட்டு வந்தது அரசனாகவே இருந்தாலும் தன் மகளுக்கு அவரைப் பிடித்திருக்கிறதா என்று அவளிடம் கருத்துக்கேட்டனர். அவளுக்குப் பிடிக்காவிட்டால் வந்தவரை எதிர்த்துப் போரிடவும் அவர்கள் தயங்கியதில்லை.

சங்கப்பாடல்களை வாசிக்கும்போது நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வை எண்ணி பலநிலைகளில் பெருமிதம் கொள்ளவும் சிலநேரங்களில் அவர்களின் அறியாமையை எண்ணி வருத்தமும் தோன்றுகிறது.

பெருமிதம் அவர்களின் வளமான வாழ்வை எண்ணி!
வருத்தம் அவர்களின் தங்கமோகத்தை எண்ணி!

12 கருத்துகள்:

 1. நல்ல பாடல்...
  நல்ல விளக்கம்..
  தங்க மோகத்தை அன்று தொடங்கி வச்சிட்டுப் பொயிட்டாங்க இன்னும் விடாமல் துரத்துகிறது.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பகிர்வு. தங்க மோகம் பற்றி என்ன சொல்வது... இன்னமும் தீரவில்லையே....

  பதிலளிநீக்கு
 3. புறநானூறு 343 பாடல் விளக்கம்
  பலருக்கு நல்ல உரைக்கும்
  வழிகாட்டலே!

  பதிலளிநீக்கு