புதன், 8 மார்ச், 2017

இயற்கையும்! பெண்களும்!


பெண்களும் இயற்கையும் ஒன்று!
இரண்டும் புதிரானது! புரியாதது!
நிலம், நீர், தீ, காற்று, வான்
என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் பெண்களைப் பிரதிபலிக்கின்றன!

நிலம் பொறுமைக்குப் பெயர்பெற்றது
நிலத்தை பூமாதேவி என்றுகூட அழைப்பதுண்டு!
என்ன சிலநேரம் இந்த பூமாதேவிகூட பூகம்பமாய் வெளிப்படுவதுண்டு!

நீர் எங்கும் நிறைந்தது.
பெரும்பாலும் ஆறுகளுக்குப் பெண்களின் பெயர்கள்தான் இட்டுள்ளோம்.
கடலாகவும் அதில்தோன்றும் சிறு அலையாகவும் தோன்றும் நீர்
சில நேரங்களில் பேரலையாக சுனாமியாக மிரட்டிச் செல்வதுண்டு!

வழிபாட்டில் விளக்காக ஒளிவிடும்போது தீ வணங்கப்படுகிறது!
காட்டுத்தீயாகப் பரவும்போது அச்சமூட்டுகிறது!

காற்று தென்றலாக வருடும்போது கொண்டாடப்படுகிறது!
புயலாக வீசும்போது நடுங்கச்செய்கிறது!

வான் மழையாகப் பொழியும்போது வாழ்த்தப்படுகிறது
இடியாக ஒலிக்கும்போது வருந்தச்செய்கிறது.

இப்படி  நிலம், நீர், தீ, காற்று, வான் என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் உணர்த்தும் நீதி என்ன தெரியுமா?

பலம் தான் பலவீனமாகிறது!
பலவீனம் தான் பலமாகிறது!
                         
சான்றாக ஒரு கதை…
சாவியிடம் சுத்தியல் கேட்டதாம்..
நான் பூட்டைத்திறக்க மிகவும் வருந்துகிறேன்..
நீ மட்டும் எப்படி மிக எளிதாகத் திறந்துவிடுகிறாய்? என்று
அதற்கு சாவி சொன்னதாம்..
நீ பூட்டின் தலையில் பலமாக அடித்து திறந்துவிடு என்று மிரட்டுகிறாய்…
நானோ பூட்டின் இதயத்தைத் தொட்டு திறந்துவிடு என மென்மையாகச் சொல்லுகிறேன் என்று..

இங்கு பூட்டுதான் நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள்!
சுத்தியல்தான் ஆண்கள்!
சாவிதான் பெண்கள்!

இங்கு பலம் சாதிக்க முடியாததை பலவீனம் சாதித்துவிடுகிறது!
ஏன் நம் நாட்டுக்கு சுதந்திரத்தைக்கூட பலத்தால் பெற்றுத்தரமுடியவில்லையே! பலவீனம் தானே பெற்றுத்தந்தது!

ஆம் பலம் என்பது உடல் வலிமை மட்டுமல்ல!
மனவலிமை தான் உண்மையான பலம்!

மனிதனின் படைப்பில் எதுவும் நிறைவானதோ, முழுமையானதோ கிடையாது!
இயற்கையின் படைப்பில் எதுவும் குறைவானதே கிடையாது!
பெண் ஏன் ஆண்போல இருக்கவேண்டும்?
இதைப் புரிந்துகொள்ளாதது நம் அறியாமை!

இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் இயற்கையின் கோட்பாட்டை நாம் சரியாகப் புரிந்துகொண்டவராகிறோம்.

1 கருத்து: