வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 2 மே, 2009

சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

இன்றைய நிலையில் தமிழாய்வில் செய்யப்பட்ட ஆய்வுகளே திரும்பவும் செய்யப்படும் நிலை உள்ளது. அதற்குக் காரணம் தமிழாய்வுகள் குறித்த ஆய்வடங்கல்கள் குறைவு . இன்றுவரை தமிழகத்திலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகளை தொகுத்து வரையறை செய்யவில்லை. அதனால் திரும்பத்திரும்ப ஒரே ஆய்வுத் தலைப்புகளைப் பலரும் ஆய்வுசெய்யும் நிலை உள்ளது. ஒரே தலைப்பில் வெவ்வேறு உள்ளடக்கங்கள் இருக்கலாம். எனினும் இனி வரும் ஆய்வடங்கல்களில் ஆய்வுத்தலைப்பு , அதன் உள்ளடக்கம் என வரையறைசெய்து தொகுத்தால் எதிர்காலத்தில் தமிழாய்வு மேலும் சிறக்கும். ஆய்வடங்கல் தயாரிப்பது என்பது தனிநபர் செய்யத்தக்க பணியன்று அதற்கு செம்மொழி ஆய்வு நிறுவனம்,பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியமாகும். அரசு உதவி பெற்று இதுவரைத் தொகுக்கப்பட்ட ஆய்வடங்கல்கள் கூட ஆய்வுத் தலைப்பு, ஆய்வாளர் நெறியாளர், கல்வி நிறுவனம் , ஆய்வு செய்யப்பட்ட ஆண்டு என்ற அடிப்படையில் தான் உள்ளது. அதோடு அவ்வாய்வின் உள்ளடக்கமும் குறிப்பிடப்பட்டால் நலமாக இருக்கும் .ஏனென்றால் தமிழில் சில களங்கள் மேலும் மேலும் ஆய்வு செய்யத்தக்கனவாக இருக்கும் .


அந்த அடிப்படையில் சங்க இலக்கியம் வழி ஆய்வுசெய்வோருக்காக இப்பகுதியில் சங்கத்தமிழாய்வு நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. நான் முனைவர் பட்டம் செய்த போது(ஐந்து வருடங்களுக்கு முன்பு) இணையத்தில் சங்கத்தமிழாய்வு நூல்களைத் தேடினேன் அப்போது கிடைத்த செய்தி மிகவும் குறைவு. இன்றும் அந்நிலையே உள்ளது. இணையம் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில்,பல்வேறு பதிப்பகங்களும் நூல்களைப் பட்டியலிட்டுள்ளன. அவையும் உள்ளடக்கங்களோடு பட்டியலிடப்பட்டால் நன்றாக இருக்கும்.


கல்விப்புலம் சார்ந்த தமிழன்பர்கள் பலரும் இன்று வலைப்பதிவு பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தாமறிந்த ஆய்வு நூல்களைத் தங்கள் வலைப்பதிவில் உள்ளடக்கங்களோடு குறிப்பிட்டுச் சென்றால் இனிவரும் தமிழாய்வாளர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். ஒரே தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளும் நிலை மாறவும் தமிழாய்வு மேலும் சிறப்புறவும் இது அடிப்படையாக அமையும்.

(சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
மயிலை.சீனி.வேங்கடசாமி)


சங்க இலக்கியங்கள் வழி அறியப்படும் செய்திகளை சங்ககால வரலாறாக அறிய முடிகிறது. அவ்வடிப்படையில் இந்நூல் சங்க கால வரலாற்றில் சில பகுதிகளை ஆழமாக ஆய்ந்து எடுத்தியம்புகிறது.

உள்ளுறைI தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்

1.தொல்காப்பியர் காலம்
2.தொல்காப்பியர் காலம்- வேங்கடம்
3.தொல்காப்பியர் காலம்-ஓரை
4.தொல்காப்பியர் காலம்-பாண்டியரின் தமிழ்ச்சங்கம், வச்சிரநந்தியின் திரமிள சங்கமும்.
5.தொல்காப்பியர் காலம்- தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும்.
6.இணைப்பு – எழினி – யவனிகா

II. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை1. ஐயர் யாத்தனர் கரணம்
2. வேந்தனும் வருணனும்
3. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்
4. சங்க காலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும்
5. தொல்காப்பிய ஆய்வுரை
6. நடுகல் என்னும் வீர வணக்கம்
7. பெரும்படை
8. வான் மண்ணுதல்
9. கழுதை ஏர் உழுதல்
III. சங்க காலத்து நகரங்கள்

1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டணம்
2. சங்க காலத்து மதுரை மாநகரம்
3. இணைப்பு ஆல் – நீர்

நூல் வெளியீட்டகம்

பாவை பப்ளிகேசன்
142 ஜானி ஜான் கான் சாலை
இராயப்பேட்டை, சென்னை

நூல் வெளியான ஆண்டு
2005

5 கருத்துகள்:

  1. ஒரு விரிவுரையாளரை வலையுலகில் முதன்முதலில் சந்திக்கிறேன். :)

    இதுபோன்று தகவல்கள் நிச்சயமாக இணையத்தில் தேடும் வருங்காலத்தினருக்கு உதவும். தாங்கள் இதைத் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்தினைச் சொன்னீர்கள் முனைவர் ஐயா. இலக்கியத்தில் இறை என்ற தலைப்பில் என்ன என்ன ஆய்வுகள் இதுவரை தமிழில் நடந்திருக்கின்றன என்று படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. ஆனால் நிறைய நூல்கள் கிடைக்கவில்லை; வெளிநாட்டில் வசிப்பதாலும் பொறியியலாளன் என்பதாலும் தமிழறிஞர் தொடர்பும் இல்லை; இணையத்தைத் தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இணையம் மூலமாகக் கிடைக்கும் தமிழறிஞர் தொடர்பினைக் கொண்டு என்னால் இயன்ற வரையில் இத்தலைப்பில் படித்து வருகிறேன். இன்னும் ஆய்வு என்று இறங்குபவர்களுக்கு ஏற்ற அளவு உதவிகள் இல்லை என்றே சொல்லவேண்டும். அதனால் பல ஆய்வுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படலாம்; வாய்ப்பிருக்கிறது.

    வேங்கடசாமி ஐயா எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. தமிழகம் செல்லும் போது வாங்க வேண்டிய பொத்தகப் பட்டியலில் இந்த நூலையும் குறித்து வைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்,

    முனைவர், இளமுனைவர் பட்ட ஆய்வேடுகளை இணையம் வழி தொகுப்பதற்கும் காட்சிப்படுத்தவும் விருபா இணையதளத்தின் முந்தைய பதிப்பில் தனியான ஒரு இணையச் செயலியை இணைத்திருந்தேன். அதில் ஒரு ஆய்வேட்டின் உள்ளடக்கம், ஆய்வுச் சுருக்கம் போன்றவற்றையும் தொகுக்கும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு இருந்தது. 2007 இல் இணைக்கப்பட்ட இப்பகுதிக்கு ஆய்வுகளைச் செய்தவர்கள் தரவுகளைத் தருவதற்கு முன்வராத காரணத்தினால் விருபா புதிய பதிப்பில் அப்பகுதியை முற்றாக நீங்கிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் அவசியமான பதிவு.
    இதற்கு நாம் ஒருங்கிணைந்து முற்படல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. உண்மையில் அவசியமான பதிவு.
    இதற்கு நாம் ஒருங்கிணைந்து முற்படல் வேண்டும்.

    பதிலளிநீக்கு