வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 1 ஜனவரி, 2010

தழைக்குமா தமிழ்…?




பிறமொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது தமிழ்மொழி. ஆனால் தமிழன் வாயில் தமிழ்படும் பாடு கொஞ்சமல்ல. பிறமொழிசார்ந்தோர் தமிழ்மொழியைபேசும் அளவுக்குக் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் தமிழ் பேசுவதில்லை என்பது உண்மை. ஆங்கிலத்தோடு தமிழைக் கலந்து பேசுவதில் தமிழனுக்கு அளவுகடந்த ஆர்வம். பிறமொழிக்கலப்பில்லா தமிழ் பேசுவோரைக் காணுதல் அரிதாகவே உள்ளது.

தமிழா நீ பேசுவது தமிழா….

என்று இன்றைய தமிழன் பேசும் தமிழின் நிலையை தமிழன் சிந்திக்கும் வகையில் சொன்னார் உணர்ச்சிப் பாவலர். காசியானந்தன் அவர்கள்..

கவிஞர் வேழவேந்தன் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். அவர்தம் கவிதையில் தமிழன் பேசும் தமிழின் நிலையை அழகாக எடுத்தியம்பி பிறமொழியின் துணை எதற்கு..?
அழகுத்தமிழில் பேசலாமே என்ற சிந்தனையைத் தூண்டியுள்ளார்..
கவிதை இதோ…


“டாடி என்றே அழைக்காதீர் இனிமை தோய
தண்டமிழில் அப்பாவென்றே அழைத்திடுங்கள்

மீடியா என மொழிய வேண்டா ; நல்ல
மென்றமிழில் ஊடகங்கள் எனக்கூறுங்கள்

மூடில்லை எனப் பேசல் வேண்டா மூளை
முனைப்பில்லை எனத் தமிழில் பேசிடுங்கள்

பாடி என்றே சொல்லாதீர்! அழகாய் நந்தம்
பழந்தமிழில் உடலமென்றே கூறிடுங்கள்

சூப்பர் என்றே ஏன் கூறல் வேண்டும்? சொந்தச்
சுவைத்தமிழில் மிக நன்றே என்றால் என்ன?

பேப்பர் என்றே ஏன் மொழிதல் வேண்டும்?
பேசும் பேச்சினிலே“தாள்“ என்றால் தவறா? நாமும்

சாப்ட் என்றே ஏன் பேசல் வேண்டும்? நந்தம்
தாய்மொழியில் மென்மை என்றால் புரிந்திடாதா?

சேப்டி இல்லை எனப்புலம்பும் நீங்கள் தூய
தென்தமிழில் காப்பில்லை என்றால் என்ன?

மம்மி என்றே பெற்றவளைப் பிணமாக்காமல்
மதுத்தமிழில் அம்மா என்றழைத்தால் தப்பா?

டம்மி என்று கூறுவதை மாற்றி நந்தம்
தண்டமிழில் போலி எனச் சொல்லக்கூடாதா?

செம்மொழியாய் நம்மொழியை அறிவித்தென்ன?
சேய்த்தமிழர் தாய்மொழியை மிதித்துவிட்டுத்

தம்மொழியாய்த் தேம்ஸ் மொழியைத் தலையில் வைத்தால்
சாகாமல் தீந்தமிழ் வாழ்வதெங்கே?

(கவிஞர்.வேழவேந்தன்)

இன்றைய நிலையில் எல்லா அறிவியல்த்துறைகளையும் தமிழ்வழி கற்கும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளோம். மருத்துவக்கல்வி, கணினி, அறிவியல் என எந்தத்துறையாக இருந்தாலும் அந்தத்துறையைத் தமிழில் படிக்க இயலும். அந்த அளவுக்கு கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன, உருவாக்கப்பட்ட வருகின்றன.
சான்றாக தமிழ் இணையப்பல்கலைக்கழகம் என்ற இணையதளத்தில் பல்வேறு துறைகளுக்கான கலைச்சொற்களை இலட்சக்கணக்கில் தொகுத்தளித்துள்ளனர். தமிழன் சிந்திக்கவேண்டிய நேரமிது.

6 கருத்துகள்:

  1. மாற்றம் என்பது மனதளவில் நிகழனும்.... தமிழன் சிந்திக்க வேண்டிய நேரமிது சரியாக சொன்னீங்க..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குணா..

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்...

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழத்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாய் செய்ய வேண்டிய அவசர பணி.......

    நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்......


    புத்தாண்டில் நல்லதோரு இடுகை


    வாழ்த்துக்கள் முனைவர் குணசீலன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி நண்பரே..
    தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு