வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 20 மார்ச், 2010

தலைப்புணைக் கொளினே
“தோழிமார்கதை“

என்னும் தலைப்பிலான கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை தோழிகளின் நட்பின் ஆழத்தையும் வாழ்வியல் இயல்பையும் அழகுறச் சொல்லும் கவிதையாகும்,

'ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிறுவாட்டுக்காசெடுத்து
கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்

போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!


இந்தக் கவிதையின் படைப்பாக்கத்தில் சங்கப்பாடலின் தாக்கம் தெரிகிறது.

சங்கஇலக்கியத்தில் குறுந்தொகைப் பாடல் ஒன்று இருபெண்களின் நட்பை அழகுறச் சொல்லுகிறது.இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் ( தலைவியை முதலில் இயல்பாகப் பார்த்துக் காதல் கொண்ட தலைவன். அவளைச் சந்தித்து மீண்டும் பேச எண்ணுகிறான். தலைவியோடு மிகுந்த நெருக்கம் கொண்டு விளங்குபவள் தோழி. அதனால் தோழியின் துணை கொண்டு தான் தலைவியைச் சந்திக்கலாம் என்று முடிவுசெய்கிறான்.

(தலைவியின் விருப்பத்துக்குரிய தோழி ஆதலால் பெட்டவாயில் ஆனால் தோழி. தோழியின் வாயிலாகத் தலைவன் தலைவியைச் சந்திக்க எண்ணுவதால் இத்துறை பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுத்தல் ஆனது)

தலைவிக்கும் தோழிக்குமான நட்பைப் பார்த்து வியக்கிறான் தலைவன்..


பித்திகத்திற்கு மழைப்பருவமும், தளிருக்கு மழைத்துளியும் போலத் தலைவிக்கு இத்தோழி இன்றியமையாதவள். தளிரைப் போன்ற மென்மையானவள் தலைவி.

தலைவியும் தோழியும் ஒற்றுமையாக இருக்கின்றனர். இருவரும் நீராடச் சென்றால் தோழி நீர் மிதவையின் மேல்பகுதியைப் பற்றினால் தலைவியும் நீர்மிதவையின் மேல்பகுதியைப் பற்றுகிறாள். தோழி நீர்மிதவையின் கீழ்ப்பகுதியைப் பற்றினாள் தலைவியும் நீர்மிதவையின் கீழ்ப்பகுதியைப் பற்றுகிறாள்.


(தலைப்புணைக் கொளினே - நீர்மிதவையின் மேல்பகுதியைப் பற்றினாள்)

தோழி, நீர் மிதவையின் (புணையின் கடைப்பகுதியைப் )கீழ்பகுதியைப் பற்றினாள் தலைவியும் மிதவையின் கடைப்பகுதியைப் பற்றுவாள்.

மிதவையின் மேல்ப்பகுதியையும், கீழ்ப்பகுதியையும் விட்ட தோழி நீரோடு அடித்துச் செல்லப்பட்டால் தோழியை நீரிலிருந்து மீட்பதற்காக தலைவியும் செல்வாள் போலும் என்று பார்த்து தலைவிக்கும் தோழிக்குமான நட்பைப் பார்த்து வியக்கிறான் தலைவன்.


இதனை,

தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட்
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே.குறுந்தொகை .222. குறிஞ்சி - தலைவன் கூற்று
-சிறைக்குடி யாந்தையார்.


என்னும் பாடல் விளக்கும்.

பாடல் வழி அறியலாகும் செய்திகள்

◊ பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல் - என்னும் அகத்துறையென்பது தோழியின் துணையால் தலைவியைத் தலைவன் சந்திக்க எண்ணுதல் என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
◊ தலைவிக்கும் தோழிக்குமான நட்பு மிக அழகாகச் சொல்லப்படுகிறது.
◊ நீராடும் மகளிர் வாழைமரத்துண்டு போன்ற எதையாவது பற்றிக்கொண்டு நீராடும் வழக்கம் இப்பாடல் வழி அறியலாம். இதனை,

“நறுவீ நாகமு மகிலு மாரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகி“

(சிறுபாண்-116-7)

என்னும் சிறுபாணாற்றப்படை வழியாகவும் அறியமுடிகிறது.

◊ கவிஞர்.வைரமுத்து அவர்களின் தோழிமார்கதை என்னும் கவிதையின் கருவாக இந்த சங்கப்பாடல் கூட அமைந்திருக்கலாம்.

18 கருத்துகள்:

 1. நல்லா இருக்கு நண்பா உங்களால் கொஞ்சம் நானும் தமிழ் படிக்கிறேன் ஆவலாய் இருக்கிறது


  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  பதிலளிநீக்கு
 2. அருமையான் பகிர்வு நன்றி குணசீலன்

  பதிலளிநீக்கு
 3. "கருவாட்டுப்பானையில சிறுவாட்டுக்காசெடுத்து
  கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
  நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
  கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட"

  என்ன ஒரு அழகான கற்பனை

  பதிலளிநீக்கு
 4. முதல் கவிதை ரொம்ப நல்லா இருந்தது!
  சங்கப் பாடலின் பொருள் மிக வியப்பு தருகிறது.
  தோழிகள் திருமணம் ஆனபின் அக்காலத்தில் எப்படி?

  பதிலளிநீக்கு
 5. எல்லா புது கவிகள்ளிலும் பழைய சங்க கால பாடல்கள் ஒரு படும் படாமளும்ம் இருக்கும் இதுக்கு வைர முத்து மட்டும் விதி விளக்கு இல்லை போலும்  காளமேக புலவர் பாடல் பற்றி எனது பதிவு

  நேரம் இருந்தால் வந்து பாருங்கள்

  http://sangarfree.blogspot.com/2010/03/3-in-1.html

  பதிலளிநீக்கு
 6. அருமை நண்பரே..

  பதிலளிநீக்கு
 7. அருமையான பகிர்வில் அசத்திட்டீங்க....... !

  பதிலளிநீக்கு
 8. வாய்விட்டு படித்தால் நோய் விட்டு போகும்ங்க.

  பதிலளிநீக்கு
 9. @நாளும் நலமே விளையட்டும்

  கருத்துரைக்கு நன்றி நண்பரே.
  நட்பு என்பதன் வாழ்வியல் பொருள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபடுகிறது நண்பா.

  பதிலளிநீக்கு
 10. @A.சிவசங்கர்

  ஆம் நண்பரே.

  தங்கள் தளம் பார்த்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 11. @padaipali

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

  பதிலளிநீக்கு