வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 ஜூன், 2010

யாரணங்குற்றனை கடலே?


ஏங்க என்ன ஆச்சு?
ஏன் இப்படிக் கன்னத்துல கைவெச்சுக்கிட்டிருக்கீங்க?
என்ன பிரச்சனை?

என்று கேட்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்கொலையின் விழுக்காடு அதிகமாகிவருகிறது.

“வாழப் பிடிக்கவில்லையென்றால்
தற்கொலை செய்துகொள்!
ஆனால்,
தற்கொலை செய்துகொள்ளும்
துணிவிருந்தால்...

வாழ்ந்துபார்!

என்பது அலெக்சான்டர் வாக்கு.


என வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போரடிக்கொண்டிருக்கும் வாழ்வில்,

பகிர்தல்
புரிதல்

ஆகியன குறைந்துவிட்டன.

பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது.

பணத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் மனஅழுத்தமே எஞ்சிநிற்கிறது.

வாரத்தில் ஆறு நாட்கள் பணத்தின் பின்னே ஓடிச் சென்ற மனித இயந்திரம் கிடைக்கும் ஒரு நாளில் தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் சீரமைத்து அடுத்தவாரம் ஓடுவதற்குத் தயாரித்துக்கொள்கிறது.


இந்தச்சூழலில் அடுத்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இந்த வாழ்க்கையில் ஏது நேரம்..

சரி எனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்குறீங்களா?

எனக்கு ஒரு பிரச்சனையுமே இல்லைங்க!
இதுதான் பெரிய பிரச்சனை!

என்னைச் சுற்றியிருப்பவர்களிள் பிரச்சனைகளைப் பலவகைப்படுத்தலாம். பல பிரச்சனைகளையும் ஒரே சொல்லில் அடையாளப்படுத்தவேண்டுமென்றால் “பணம்“ என்று சொல்லாம்.

பணத்துக்கு அடுத்தபடியாகக் காலம் காலமாகவே தீராத பிரச்சனைகளுள் ஒன்று காதல்.

சங்க காலம் முதல் இன்றுவரை இந்தப் பிரச்சனை தீரவேயில்லை.

உடன்போக்கு,இற்செறித்தல், அலர் என அந்தப் பிரச்சனைகளின் பெயர் வேண்டுமானால் கால மாற்றத்தால் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கலாம். ஆனால் இந்த சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.


பணம் - காதல் இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்.
பணம் - காதல் இரண்டும் சிலர் பின்னால் ஓடுகின்றன.

காதலுக்குப் பல வழிகளில் பிரச்சனைகள் வரும்.

திருக்குறள் சுட்டும் தலைவியின் நிலை,


தலைவனின் பிரிவால் வாடும் தலைவி,
மாலைப் பொழுதிடம் பேசுகிறாள்….

ஏ மாலைப் பொழுதே உன் துணைவரும் என் துணைவரைப் போல வன்மனம் கொண்டவரோ?
நீயும் என்போலவே ஒளியிழந்து காணப்படுகிறாய்?

என்று கேட்கிறாள்.குறள் இதோ,

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. (திருக்குறள்)


சங்ககாலத் தலைவியின் நிலை,


தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி கடலைப் பார்க்கிறாள்.
மீன்களை உண்ணவந்த கொக்கினங்கள் பரவியிருக்கின்ற கடல் பார்ப்பதற்கு வெள்ளாடுகள் கூட்டமாகப் பரவியிருப்பது போல உள்ளது.
கடல் அலையாக வந்து கரையிலிருக்கும் வெண்மையான மலர்களைக் கொண்ட தாழையை அடித்துச் செல்கிறது. அந்த ஒலி கேட்கும் தலைவி,

ஏ கடலே..
நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றாயே?
யாரால் வருத்தமுற்றாய்?
என்று வினவுகிறாள். பாடல் இதோ,


யாரணங் குற்றனை கடலே பூழியர்

சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன

மீனார் குருகின் கானலம் பெருந்துறை

வெள்வீத் தாழை திரையலை

நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.


தலைவி கூற்று
குறுந்தொகை - 163.
அம்மூவன்.

நள்ளிரவில் தன்னுடன் தூங்காமல் விழித்துப் புலம்பிக்கொண்டிருக்கும் கடல் தன்னைப் போலவே துன்புறுவதாக எண்ணிக்கொள்கிறாள் தலைவி.

ஒப்பீடு.

திருக்குறள் சுட்டும் தலைவிக்கு மாலை - பெண்ணாகத் தெரிகிறது.
குறுந்தொகைத் தலைவிக்குக் கடல் - பெண்ணாகத் தெரிகிறது.

கடல் ஆணா? பெண்ணா?


கடலை ஆண்கடல் என்றும், பெண்கடல் என்றும் அழைப்பார்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சீற்றம் அதிகமான கடல் ஆண்கடலென்றும்,
சீற்றம் குறைவான கடல் பெண்கடலென்றும் அழைப்பார்கள்.

இதில் எனக்கு நீண்டகாலம் ஐயம் உண்டு.
அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் தானே அதிகம் பேசுகிறார்கள்..

சீற்றம் அதிகமான கடல் - அதிகமாகப் பேசும் பெண்கள்

இரண்டும் இயைபுபட்டுவருவது சி்ந்திக்கத்தக்கதாகவுள்ளது.

சரி நாம் பாடலுக்கு வருவோம்,

இரு தலைவியரிடமும் என்ன பிரச்சனை என்று கேட்க ஆளில்லை.
அதனால் மனஅழுத்தம் கொண்ட தலைவியரின் நிலை மாலைப்பொழுதிடமும், கடலிடமும் புலம்புவதுவரை சென்றுள்ளது.

ஆனால் இரு தலைவியரும் தன்னிடம் தான் யாரும் என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை என்றாலும் மாலைப்பொழுதிடமும், கடலிடமும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள்.

மனஅழுத்தம் அதிகமானால் அது மனப்பிறழ்வாக மாறும்.

இருதலைவியரின் புலம்பலை வெறும் புலம்பலாக மட்டும் கொள்ளாது..

இன்றைய வாழ்வியலுடன் உளவியல் அடிப்படையில் ஒப்புநோக்கினால்….

இந்தத் தலைவியரைவிட நாம் நம்மனதோடு எவ்வளவு சத்தத்துடன் யார்யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியும்.

○ வாய்பேசாவிட்டாலும் மனம் பேசாமல் இருப்பதில்லை….
○ வாய்விட்டுப் பேசவும், மனதோடு பேசவும் பகிர்தல் தேவை…..

இவ்வாறு பேசுவதால் மனஅழுத்தம் நீங்கும் இந்த உளவியல் கூறுகளைத் தாங்கி வரும் சங்கப்பாடல்களை நோக்கும் போது, சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு எண்ணிப்பெருமிதம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.

26 கருத்துகள்:

  1. ○ வாய்பேசாவிட்டாலும் மனம் பேசாமல் இருப்பதில்லை….
    ○ வாய்விட்டுப் பேசவும், மனதோடு பேசவும் பகிர்தல் தேவை…..


    .....நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //வாரத்தில் ஆறு நாட்கள் பணத்தின் பின்னே ஓடிச் சென்ற மனித இயந்திரம் கிடைக்கும் ஒரு நாளில் தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் சீரமைத்து அடுத்தவாரம் ஓடுவதற்குத் தயாரித்துக்கொள்கிறது.//

    அந்த ஒருநாளாவது பணத்தின் நாட்டமில்லாமல் இருக்கும்னு நினைக்கிறீங்களா. சுயதொழில் செய்வோர் பலர் அப்படியிருப்பதில்லை.

    கருத்தும் சரி.. எடுத்தியம்பிய பாடலும் சரி மன அழுத்தத்தை குறைத்துவிடுகிறது. சிறந்த பகிர்வு...

    பதிலளிநீக்கு
  3. காலங்கள் மாறினாலும் மனிதனின் அடிப்படை உளவியல் பிரச்சனைகள் மாறுவதில்லை நண்பரே.

    திருக்குறள் குறுந்தொகை ஒப்பீடு அழகு.

    பதிலளிநீக்கு
  4. //வாரத்தில் ஆறு நாட்கள் பணத்தின் பின்னே ஓடிச் சென்ற மனித இயந்திரம் கிடைக்கும் ஒரு நாளில் தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் சீரமைத்து அடுத்தவாரம் ஓடுவதற்குத் தயாரித்துக்கொள்கிறது.//

    என்னை பற்றி எழுதன மாதிரி எனக்கு தோணுது நண்பா . சரியா சொல்லி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  5. இன்றைய காலச்சூழலை அன்றைய குறுந்தொகையொடு ஒப்பிட்டுச் சொல்லிய விதம் அருமையாயிருக்கிறது.

    *சீற்றம் அதிகமான கடல் - அதிகமாகப் பேசும் பெண்கள்*

    ஆனாலும் குணா...உங்க சிந்தனைதான் !

    பதிலளிநீக்கு
  6. நண்பருக்கு வணக்கம்,

    "சத்தமில்லாமல் ஓசை" இம்மொழி உமக்கு பொருத்தமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

    "செம்மொழியாம் எம்மொழி, தரணிக்கே மூத்த மொழியாம் நம் தாய் மொழி, சங்கங்கள் கண்ட‌ மொழியாம் தமிழ் மொழி"-‍க்கு சிறப்பு சேர்க்க ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நீவீர் சொல்ல வந்த வாழ்வியல் உளவியல் கோட்பாடுகளை,

    ○ வாய்பேசாவிட்டாலும் மனம் பேசாமல் இருப்பதில்லை….
    ○ வாய்விட்டுப் பேசவும், மனதோடு பேசவும் பகிர்தல் தேவை…..

    என்ற இரு வரிகளை மட்டுமே பதிவை முடித்திருந்தால் கூட கேட்பதற்கு யாருமில்லை.

    ஆனால் குறள் மற்றும் குறுந்தொகை வழியின் ஊடுருவிச் சென்று சான்று கொடுத்தமை சாலசிறந்தது.

    திருக்குறள் தலைவிக்கும், குறுந்தொகைத் தலைவிக்கும் பெண்ணாக தோற்றமளிக்கும் ஒப்பீடும் என்னை கவர்ந்தது.

    ஐயா உமது தமிழ்ப்பணி (சத்தமில்லாத ஓசை) மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    தமிழார்வன்.

    பதிலளிநீக்கு
  7. திருக்குறள், குறும்தொகை ஒப்புமை வெகு அருமை!இலக்கண,இலக்கியமும்,
    யதார்த்தமாய் நாம் வாழும் வாழ்க்கைக்கும் வித்யாசமில்லை என்று உங்கள் இடுகைகள் நிரூபிக்கின்றன. உரிச்சொற்கள் கூறுக என்ற கேள்விக்கு.
    ’சால,உறு,தவ, நனி,கூர்,கழி’ என்று
    எழுதிவிட்டு பெருமையாக நாம் வீட்டிற்கு வருகிறோம்..ஆஹா..தமிழ் இலக்கணத்தை நாம் கரைத்துக் குடித்து விட்டோம் என்கிற இறுமாப்பும் சேர்ந்து!!இது எங்கே உபயோகப்படிகிறது என்று தெரியாமலே!!
    ஆனால் ஒரு காய்கறி விற்கும் கிழவியோ, ‘இது தவப் பிஞ்சும்மா’ என்று வெகு அனாயாசமாய் கூறிச்
    சென்றாள்!!!

    பதிலளிநீக்கு
  8. “வாழப் பிடிக்கவில்லையென்றால்
    தற்கொலை செய்துகொள்!
    ஆனால்,
    தற்கொலை செய்துகொள்ளும்
    துணிவிருந்தால்...

    வாழ்ந்துபார்!//

    மிக தெளிவான கவிதை.

    அதை குறுந்தொகை.... திருக்குறளோடு ஒப்பிட்டு எழுதி விளக்கிய விதம் மிக அருமை.

    பாராட்டுக்கள் முனைவரே!

    பதிலளிநீக்கு
  9. /////////வாழப் பிடிக்கவில்லையென்றால்
    தற்கொலை செய்துகொள்!
    ஆனால்,
    தற்கொலை செய்துகொள்ளும்
    துணிவிருந்தால்...

    வாழ்ந்துபார்!
    /////////



    நம்பிக்கைக்கு உயிர் கொடுக்கும் வார்த்தைகள் . சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  10. ஓடிக் களைத்து எஞ்சிய ஆறாவது நாள் இறுதியில்,சிற்றுண்டி விடுதி சென்று,’ஆனியன் தோசை’ஆர்டர் செய்தேன்! எதிரில் இரு இளைஞர்கள்! ஒருவர் முண்டாசுக் கவிஞனின் ‘கண்ணன் என் சேவகனை’ வரிக்கு வரி ரசித்துச் சொல்ல, பக்கத்து இளைஞர் மெய்மறந்து அதில் லயிக்க..ஆர்டர் செய்த ஆனியன் தோசை வர, பேச்சு
    இப்போது திசை மாறி, காள மேகம் ஆய்ச்சியிடம் சொன்ன வானத்தில் அது நீர்..உன் மண் கலயத்தில் அது மோர் என்பதை அவர் சுவை பட சொல்ல ஆஹா..எம் இளைஞர்கள் ராபின் சர்மா..மைக்கேல் ஜாக்ஸன் தான் தெரியும் என்று நினைத்தேன்..தமிழையும் ரசிக்கிறார்களே என்ற நினைப்பில் உள்ளே சென்ற தோசை விள்ளல் கல்கண்டாய் இனிக்க ...
    அன்பன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  11. பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது.

    பணத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் மனஅழுத்தமே எஞ்சிநிற்கிறது.

    வாரத்தில் ஆறு நாட்கள் பணத்தின் பின்னே ஓடிச் சென்ற மனித இயந்திரம் கிடைக்கும் ஒரு நாளில் தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் சீரமைத்து அடுத்தவாரம் ஓடுவதற்குத் தயாரித்துக்கொள்கிறது.


    இந்தச்சூழலில் அடுத்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இந்த வாழ்க்கையில் ஏது நேரம்.//

    என்னைப்போன்று சுயதொழில் செய் பவர்களுக்கு அந்த ஒரு நாளும் இல்லையே...என்ன செய்வது?
    நல்ல கருத்து நண்பரே்...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  12. @ஹேமாவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  13. @தமிழார்வன் தங்கள் கருத்துரைக்கு நன்றி தமிழார்வன்..

    தாங்கள் தமிழின் மீது கொண்ட பற்றால் எனது பதிவை அதிகமாகவே புகழ்ந்துவிட்டீர்கள்..

    எனது எழுத்துக்களான கடமை கூடுகிறது..

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  14. @ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி உண்மைதான் அன்பரே வட்டார் வழக்கில் இன்னும் மொழியின் தொன்மை வாழ்கிறது..

    பதிலளிநீக்கு
  15. @வேலன். உண்மைான் நண்பரே..
    இரவு தூக்கம் தொலைத்தவர்களும் சிந்திக்கத்தக்கவர்கள்தான்..

    பதிலளிநீக்கு
  16. அருமை. ப‌கிர்வுக்கு ந‌ன்றி

    பதிலளிநீக்கு